“ஜுன் மாதத்தில் SDM (துணை பிரிவு மாஜிஸ்திரேட்) வந்து, ‘வெளியேற்றத்துக்கான நோட்டீஸ் இது’ எனக் கொடுத்தார்.’”

வழக்கமாக மக்கள் கூடும் பெரிய ஆலமரத்தை பாபுலால் ஆதிவாசி கஹ்தாரா கிராமத்தின் நுழைவாயிலில் சுட்டிக் காட்டுகிறார். இந்த கிராமத்து மக்களின் எதிர்காலம் அங்குதான் மாற்றப்பட்டது.

மத்தியப்பிரதேசத்தின் பன்னா புலிகள் சரணாலயத்துக்குள்ளும் சுற்றியும் இருக்கும் 22 கிராமங்களிலுள்ள ஆயிரக்கணக்கானோர், தங்களின் வீடுகளையும் நிலங்களையும் அணைக்காகவும் ஆறு இணைப்பு திட்டத்துக்காகவும் விட்டுக் கொடுத்து வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இறுதி சுற்றுச்சூழல் அனுமதிகள் 2017ம் ஆண்டிலேயே கிடைத்துவிட்டது. தேசியப் பூங்காவில் மரம் வெட்டும் வேலை தொடங்கப்பட்டு விட்டது. உடனடி வெளியேற்றத்துக்கான சூழல் வேகம் பெற்றுவிட்டது.

இருபது வருடங்களாக பணியில் இருந்த 44,605 கோடி ரூபாய் ( முதல் கட்டம் ) மதிப்பிலான திட்டம், கென் மற்றும் பெத்வா ஆறுகளை 218 கிலோமீட்டர் நீள கால்வாய் கொண்டு இணைக்கவிருக்கிறது.

கடும் எதிர்ப்பை இத்திட்டம் எதிர்கொண்டது. “இத்திட்டத்துக்கான நியாயம் என எதுவும் இல்லை. நீரியியலில் கூட இத்தகைய ஒரு திட்டத்தை ஆதரிக்க முடியாது,” என்கிறார் நீர்த்துறையில் 35 வருடங்களாக இயங்கி வரும் அறிவியலாளர் ஹிமான்ஷு தக்கர். “முதலில், கென்னில் உபரி நீர் இல்லை. நம்பிக்கைக்குரிய ஆய்வோ இலக்குடன் கூடிய ஆராய்ச்சியோ நடத்தப்படவில்லை. எல்லாம் முன்னனுமானங்கள்தான்,” என்கிறார் அவர்.

தெற்காசிய அணைகள், ஆறுகள், மக்கள் வலைப்பின்னல் அமைப்பின் (SANDRP) ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் தக்கர். 2004ம் ஆண்டு நீர்வளத்துறையால் (தற்போது ஜல் ஷக்தி) ஆறுகளை இணைக்கவென உருவாக்கப்பட்ட வல்லுனர் குழுவில் உறுப்பினராக இருந்தவர் அவர். திட்டத்தின் அடிப்படையை அதிர்ச்சிக்குரியது என்கிறார் அவர். “ஆறுகள் இணைப்பு என்பது காடு, ஆறு, பன்மையச் சூழல் ஆகியவற்றின் மீது பாரிய அளவில் சூழலியல் ரீதியாகவும் சமூகரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தவல்லது. இங்கும் பந்தென்ல்காந்த் மற்றும் பிற இடங்களிலும் மக்களை வறுமைக்கு தள்ளும்.”

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: பன்னா மாவட்டத்திலுள்ள கஹ்தாராவின் நுழைவாயிலிலுள்ள ஆலமரம். இங்கு நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில்தான், ஆறு இணைப்பு திட்டத்துக்காக கிராமத்தை வனத்துறை எடுத்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. வலது: கஹ்தாராவை சேர்ந்த பாபுலால் ஆதிவாசி சொல்கையில் தாங்கள் ஆலோசிக்கப்படாமல், வெளியேற்றப்படும் தகவல் மட்டுமே சொல்லப்பட்டதாக கூறுகிறார்

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: மகாசிங் ராஜ்போர், அணை வந்தால் மூழ்கிவிடும் சுக்வாகா கிராமத்தை சேர்ந்த கால்நடை மேய்ப்பர். வலது: கிராமத்து பெண்கள் விறகுகள் சேகரித்து வீடு திரும்புகின்றனர்

77 மீட்டர் உயர அணை, 14 கிராமங்களை மூழ்கடித்து விடும். புலிகளின் மைய வசிப்பிடத்தையும் அது மூழ்கடித்து விடும். முக்கிய வன உயிர் பகுதிகளை துண்டித்து விடும். பாபுலாலின் ஊரைப் போல எட்டு பிற கிராமங்களும் அரசால் வனத்துறைக்கு கையளிக்கப்பட்டிருக்கிறது.

எதுவும் புதிதாக நடக்கவில்லை. லட்சக்கணக்கான கிராமப்புற இந்தியர்கள் குறிப்பாக பழங்குடிகள், சிறுத்தைகளுக்காகவும் புலிகளுக்காகவும் புத்தாற்றலுக்காகவும் அணைகளுக்காகவும் சுரங்கங்களுக்காகவும் வெளியேற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.

ப்ராஜக்ட் டைகர் 51வது வருடத்தில் 3682 புலிகளுடன் பெற்றிருக்கும் அற்புதமான வெற்றி என்பது இந்திய பழங்குடி சமூகங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்பிலிருந்து பெறப்பட்டது ஆகும். இந்த சமூகங்கள்தான் நாட்டிலேயே மிகவும் ஒடுக்கப்பட்ட குடிமக்கள் ஆவர்.

1973ம் ஆண்டில் ஒன்பது புலிகள் சரணாலயங்கள் இந்தியாவில் இருந்தன. இன்று 53 இருக்கிறது. 1972ம் ஆண்டிலிருந்து கூடிய ஒவ்வொரு புலிக்கும், சராசரியாக 150 பழங்குடிகளை காடுகளிலிருந்து வெளியேற்றி இருக்கிறோம். இதுவும் குறைவான மதிப்பீடுதான்.

இன்னும் முடியவில்லை. ஜுன் 19, 2024ல் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) வெளியிட்ட கடிதம் 591 கிராமங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை வெளியேற்றக் கேட்டுக் கொண்டது.

பன்னா புலிகள் சரணாலயத்தில் (PTR) 79 புலிகள் இருக்கின்றன. அணையால் காட்டின் மையப்பகுதி மூழ்கடிக்கப்படுகையில், அதற்கு இணையான இடம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். பாபுலாலின் நிலமும் கஹ்தாராவில் உள்ள வீடும் புலிகளுக்கு விட்டுக் கொடுக்கப்பட வேண்டும்.

எளிதாக சொல்வதெனில், வனத்துறைக்குதான் ஈடு கொடுக்கப்படுகிறது. வெளியேற்ற்றப்பட்டு நிரந்தரமாக தங்களின் வசிப்பிடங்களை இழக்கும் பழங்குடிகளுக்கு அல்ல.

PHOTO • Raghunandan Singh Chundawat
PHOTO • Raghunandan Singh Chundawat

ஐநாவின் பன்மையப்பகுதிகளில் இடம்பெற்றிருக்கும் பன்னா புலிகள் சரணாலயத்தில் பல பாலூட்டிகளும் பறவைகளும் வசிக்கின்றன. அறுபது சதுர கிலோமீட்டர் மையக் காட்டுப் பகுதி, அணை மற்றும் ஆற்று நீர் இணைப்பு திட்டத்திலும் சென்றுவிடும்

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: பன்னா புலிகள் சரணாலயத்துக்குள் விவசாயிகளும் மேய்ப்பர்களும் வசிக்கும் 14 கிராமங்கள் அழிந்து போகும். வலது: மேய்ச்சல் முக்கியமான வாழ்வாதாரம். சுக்வாகாவில் வசிக்கும் பெரும்பாலான குடும்பங்கள், கால்நடைகளை வைத்திருக்கின்றனர்

“மீண்டும் மரங்கள் நடுவோம்,” என்கிறார் பன்னா தொடரின் துணை வனத்துறை அதிகாரியான அஞ்சனா திர்கி. “புல்வெளியாக்கி வன உயிர்களை பராமரிப்பதுதான் எங்களின் வேலை” என்கிறார் அவர், அப்பணியின் நீரியயல் மற்றும் சூழலியல் விளைவுகளை பற்றி கருத்து கூற விரும்பாமல்.

பெயர் சொல்ல விரும்பாத அதிகாரிகள், மூழ்கடிக்கப்படக் கூடிய 60 சதுர கிலோமீட்டர் அடர் பன்மயக் காடுகளை ஈடுகட்டும் வகையில் தோட்டப்பயிர்களைதான் வளர்த்தெடுக்க முடியும் என ஒப்புக் கொண்டார்கள். பன்னா பகுதியை உலக பன்மயப் பகுதி களில் ஒன்றாக யுனெஸ்கோ பட்டியலிட்ட இரண்டாம் வருடத்தில் இது நடக்கிறது. இயற்கை காடுகளிலிருந்து 46 லட்சம் மரங்கள் (2017ம் ஆண்டில் நடந்த வனத்துறை ஆலோசனைக் கமிட்டிக் கூட்டத்தில் சொல்லப்பட்ட கணக்கு) வெட்டுவதால் ஏற்படக்கூடிய நீரியியல் விளைவு என்னவாக இருக்கும் என்பதும் ஆராயப்படவில்லை.

புலிகள் மட்டும் துரதிர்ஷ்டமான விலங்குகள் இல்லை. இந்தியாவிலுள்ள மூன்று கரியல் (முதலை) சரணாலயங்களில் ஒன்று, வரவிருக்கும் அணையிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில்தான் இருக்கிறது. அருகி வரும் பறவைகளுக்கான IUCN-ன் சிவப்பு பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இந்திய வல்லூறுகளின் முக்கியமான இனவிருத்திப் பகுதியும் இப்பகுதி ஆகும். இவையன்றி பல தாவரப்பட்சிணிகளும் அசைவப்பட்சிணிகளும் தம் வசிப்பிடங்களை இழக்கும்.

சில பிகா மானாவாரி நிலத்தை குடும்பத்தின் வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் சிறு விவசாயி, பாபுலால். “வெளியேறவென எந்தத் தேதியும் சொல்லப்படாததால், எங்களுக்கென சோளம் பயிரிட்டுக் கொள்ளலாம் என நினைத்தோம்.” ஆனால் அவரும் கிராமத்திலுள்ள பிறரும் தம் நிலங்களை தயார் செய்த பிறகு, வன ரேஞ்சர்கள் வந்தார்கள். “எங்களை நிறுத்த சொன்னார்கள். ‘கேட்காவிட்டால், ட்ராக்டரை கொண்டு வந்து உங்கள் நிலத்தை அழித்துவிடுவோம்’ என்றார்கள்.”

தன்னுடைய தரிசு நிலத்தை காட்டி, “வெளியேறும் வகையிலான முழு நிவாரணமும் கொடுக்கவில்லை. இங்கேயே வசிக்கவிட்டு, விவசாயம் பார்க்கவும் விடவில்லை. எங்களின் கிராமம் இருக்கும் வரையேனும் விவசாயம் பார்க்க வேண்டுமென அரசாங்கத்திடம் கேட்கிறோம். வேறு எப்படிதான் நாங்கள் சாப்பிடுவது?” என புலம்புகிறார்.

பூர்விக வீடுகளை இழப்பது இன்னொரு பெரும் இடி. கலக்கத்துடன் இருக்கும் சுவாமி பிரசாத் பரோகர், தன்னுடைய குடும்பம் 300 வருடங்கலாக கஹ்தாராவில் வாழ்வதாக சொல்கிறார். “விவசாய வருமானமும் வருடம் முழுக்க இலுப்பை போன்ற காட்டுற்பத்தியும் எங்களுக்கு இருந்தது. இனி எங்கு செல்வோம்? எங்கு நாங்கள் சாவோம்? எங்கு மூழ்குவோம்? ஒன்றும் தெரியவில்லை.” 80 வயதாகும் அவர், காட்டு பரிச்சயத்தை வரும் தலைமுறைகள் இழந்து விடும் என கவலை கொள்கிறார்.

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: வெளியேற்றப்படுவதால் விவசாயம் மறுக்கப்பட்டிருக்கும் தன் நிலத்தை கஹ்தாராவில் காட்டுகிறார் பாபுலால் ஆதிவாசி. வலது: சுவாமி பிரசாத் பரோகர் (வலது ஓரம்), முழு நிவாரணம் எப்போது கிடைக்குமென தெரியவில்லை என சொல்லும் கிராமவாசிகள் (இடதிலிருந்து வலது) பரமலால், சுடாமா பிரசாத், ஷரத் பிரசாத் மற்றும் பிரேந்திரா பதக் ஆகியோருடன்

*****

ஆறு இணைப்பு திட்டம்தான் வளர்ச்சியின் பெயரில் அரசு செய்திருக்கும் சமீபத்திய நில அபகரிப்பு.

அக்டோபர் 2023ல் கென் - பெத்வா இணைப்புக்கான இறுதி அனுமதிகள் கிடைத்ததும், அப்போதைய பாஜக முதலமைச்சரான ஷிவ்ராஜ் சிங் சவுஹான் உற்சாகத்துடன் வரவேற்றார். “பின்தங்கியிருக்கும் பந்தேல்காண்ட் மக்களுக்கான அதிர்ஷ்டகரமான நாள்” என அவர் வர்ணித்தார். ஆயிரக்கணக்கான விவசாயிகள், மேய்ப்பர்கள், வனவாசிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் அடையக் கூடிய பாதிப்பை பற்றி அவர் பேசவில்லை. மேலும் பன்னா புலிகள் சரணாலயத்துக்கு வெளியே மின்சார உற்பத்தி நடக்குமென்ற அடிப்படையில் வனத்துறை அனுமதி கொடுத்தும், மின்சார உற்பத்தி சரணாலயத்துக்குள் தற்போது நடக்கிறது என்பதை அவர் கண்டுகொள்ளவில்லை.

உபரி ஆறுகளை, பற்றாக்குறை ஆற்றுப் படுகைகளுடன் இணைக்கும் யோசனை 1970ல் தொடங்கியது. தேசிய நீர் மேம்பாட்டு ஆணையம் உருவானது. நாட்டின் ஆறுகளை 30 இடங்களில் இணைக்கும் சாத்தியத்தை அந்த அமைப்பு ஆராய்ந்தது.

கென் ஆறு மத்திய இந்தியாவின் கைமூர் மலைகளில் தோன்றும் கங்கை படுகையை சேர்ந்த ஆறு ஆகும். உத்தரப்பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் யமுனையுடன் இணையும். 427 கிலோமீட்டர் நீள பயணத்தில், பன்னா புலிகள் சரணாலயத்தையும் அது கடந்து செல்கிறது. பூங்காவுக்குள் இருக்கும் தோதான் கிராமம்தான் அணைக்கான இடம்.

கென்னுக்கு மேற்குப் பக்கமாக ஓடும் ஆறு, பெத்வா. இணைப்பு திட்டம், உபரி ஆறான கென்னிலிருந்து நீரெடுத்து பற்றாக்குறையில் இருக்கும் பெத்வாவுக்கு மேலே அனுப்புவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இந்த இணைப்பினால் 343,000 ஹெக்டேருக்கு நீர் தட்டுப்பாடு இருக்கும் வாக்கு வங்கிப் பகுதியான பந்தேல்காண்டுக்கு பாசனம் கிடைக்குமென நம்பப்படுகிறது. ஆனால் இத்திட்டம் பந்தேல்காண்டுக்கும் வெளியே பெத்வாவுக்கு மேலே உள்ள பகுதிகளுக்கு நீரை கொண்டு செல்லுமென அறிவியியலாளர்கள் கூறுகின்றனர்.

PHOTO • Courtesy: SANDRP (Photo by Joanna Van Gruisen)
PHOTO • Bhim Singh Rawat

இடது: கென்னில் அணையினால் மூழ்கடிக்கப்படவிருக்கும் ஆறேழு கிலோமீட்டர் பகுதி. புகைப்பட உதவி: SANDRP (புகைப்படம் எடுத்தவர் ஜோன்னா வான் க்ரூசன்). வலது: புலிகள் சரணாலயத்தில் உள்ள விலங்குகள் மட்டுமின்றி கென்னின் கரையில் இருக்கும் மேய்ச்சல் குழுக்களும் தங்களின் விலங்குகளுக்கு அந்த நீரை சார்ந்துதான் இருக்கின்றன

PHOTO • Courtesy: SANDRP and Veditum
PHOTO • Courtesy: SANDRP and Veditum

இடது: அமன்கஞ்சருகே இருக்கும் பாண்டவனில், ஏப்ரல் 2018ல் கென் வறண்டு கிடக்கிறது. ஆற்றுக்கு நடுவே ஒருவர் நடந்து செல்ல முடியும். வலது: பவாயில் பல மைல்களுக்கு கென் வறண்டிருக்கிறது

கென்னில் உபரி நீர் இருக்கிறது என்கிற தன்மையை முதலில் கேள்வி கேட்க வேண்டும் என்கிறார் டாக்டர் நாச்சிகெட் கெல்கார். பரியார்பூர், கங்காவ் மற்றும் பவாய் என கென்னில் ஏற்கனவே இருக்கும் அணைகள் நீர்ப் பாசனம் கொடுத்திருக்க வேண்டும். “பண்டாவுக்கு அதன் சுற்றுப்புறத்துக்கும் சில வருடங்களுக்கு முன் நான் சென்றபோது, நீர் பற்றாக்குறை பற்றிதான் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன்,” என்கிறார் வன உயிர் பாதுகாப்பு அறக்கட்டளையை சேர்ந்த இந்த சூழலியலாளர்.

2017ம் ஆண்டில் முழு ஆற்றையும் ஆய்வு செய்த SANDRP-ன் ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கை யில், “...கென் எல்லா இடங்களிலும் வற்றாத ஆறாக இல்லை. பெரும்பகுதிக்கு அது நீரின்றிதான் கிடக்கிறது,” எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

கென் ஆற்றுக்கே பாசன பற்றாக்குறை இருக்கையில், பெத்வாவுக்கு அதனால் என்ன கொடுக்க இயலும் என கேட்கிறார் பன்னாவில் வாழும் நிலேஷ் திவாரி. உத்தரப்பிரதேசத்துக்கு நலனை கொடுத்து மத்தியப் பிரதேச மக்களை நிரந்தரமாக வறுமைக்குள் தள்ளுவதால் அணை பலருக்கு கோபம் தரும் விஷயமாக இருப்பதாக சொல்கிறார் அவர்.

“அணை லட்சக்கணக்கான மரங்களையும் ஆயிரக்கணக்கான விலங்குகளையும் மூழ்கடித்து விடும். வனவாசிகள் தங்களின் சுதந்திரத்தையும் வீடுகளையும் இழந்து விடுவார்கள். மக்களிடம் கோபம் இருக்கிறது. எனினும் அரசாங்கம் கண்டுகொள்வதாக இல்லை,” என்கிறார் திவாரி.

“எங்கேயே அரசாங்கம் தேசியப் பூங்காவையும் எங்கேயோ இந்த ஆற்றில் அணையையும் கட்டுகிறதாம். அதனால் மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள்…” என்னும் ஜன்கா பாயின் உம்ரவான் வீடு விரிவடைந்த புலிகள் சரணாலயத்தால் 2015ம் ஆண்டில் விழுங்கப்பட்டது.

ஐம்பது வயதுகளில் இருக்கும் கோண்ட் பழங்குடியான அவர், பத்தாண்டுகளாக நிவாரணத்துக்கு போராடி வருகிறார். “எங்களின் எதிர்காலத்தைப் பற்றி அரசுக்கு கவலை இல்லை. எங்களை அவர்கள் முட்டாள்களாக்கி விட்டார்கள்,” என்கிறார் அவர் புலிகளுக்கு என எடுக்கப்பட்ட நிலத்தில் தற்போது ரிசார்ட் வரவிருப்பதை சுட்டிக் காட்டி. “இங்கு பாருங்கள், எங்களை வெளியேற்றிய பிறகு, சுற்றுலாவாசிகளை வரவழைத்து தங்க வைக்க அவர் தயார் செய்த நிலம் இதுதான்.”

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: கணவர் கபூர் சிங்குடன் ஜன்கா பாய். வலது: உம்ரவானிலுள்ள ஷாஸ்கி பிராத்மிக்‌ஷாலாவில் (அரசாங்க ஆரம்பப் பள்ளி) மாணவர் வருகை குறைந்து விட்டதாக ஆசிரியர்கள் கூறுகிறார்கள்

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: ஜன்கா பாயும் உம்ராவனின் பிற பெண்களும் மின்சார ட்ரான்ஸ்ஃபார்மரை எடுத்து சென்ற அரசு ட்ராக்டரை மறித்து போராடிய இடம். வலது: சுர்மிலா (சிவப்பு புடவை), லீலா (ஊதா புடவை) மற்றும் கோனி பாய் ஆகியோருடன் ஜன்கா பாயும் அரசு ஆணைகளை மீறி தொடர்ந்து உம்ராவனில் வசித்து வருகிறார்

*****

டிசம்பர் 2014-ல் கென் - பெத்வா ஆறுகள் இணைப்பு, ஒரு கருத்துக் கேட்கும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் உள்ளூர்வாசிகள் அத்தகைய கருத்து கேட்பு கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை என உறுதியாக கூறுகின்றனர். வெறும் வெளியேற்ற நோட்டீஸ்களும் வாய் வார்த்தைகளும்தான் அளிக்கப்பட்டன என்கின்றனர். நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான நிவாரணத்துக்கான உரிமைக்கான சட்டப்படி இது விதிமீறல் ஆகும். ”கையகப்படுத்தப்படும் நிலம் குறித்த தகவல் அரசிதழ், உள்ளூர் பத்திரிகைகள் போன்றவற்றிலும் உள்ளூர் மொழிகளிலும் அரசாங்க இணையதளங்களிலும் வெளியிடப்பட வேண்டும்,” என்பது இச்சட்டப்படி அவசியம். செய்தி வெளியிடப்பட்ட பிறகு, கிராம சபையில் கூட்டம் நடத்தி அது குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்.

“சட்டம் குறிப்பிடும் எந்த வகையிலும் அரசாங்கம் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. நாங்கள் பல முறை ‘எந்த சட்டத்தின் கீழ் இதை செய்கிறீர்கள் என சொல்லுங்கள்’ எனக் கேட்டு விட்டோம்,” என்கிறார் செயற்பாட்டாளரான அமித் பட்நாகர். இந்த வருட ஜூன் மாதத்தில் ஆட்சியர் அலுவலகத்துக்கு முன், கிராம சபை ஒப்புதல் அளித்த ஆவணத்தைக் காட்டக் கோரி போராட்டம் நடத்தினார். தடியடி நடத்தப்பட்டது.

“முதலில் எந்த கிராம சபை கூட்டம் நடத்தினீர்கள் என சொல்லுங்கள். ஏனெனில் அப்படி எதையும் நீங்கள் நடத்தவில்லை,” என்கிறார் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரான பட்நாகர். “இரண்டாவதாக, சட்டம் சொல்வது போல, இத்திட்டத்துக்கு மக்களின் ஒப்புதல் வேண்டும். அது உங்களுக்கு இல்லை. மூன்றாவதாக, அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் எனில், எங்கு அவர்களை அனுப்புகிறீர்கள்? அதையும் சொல்லவில்லை. எந்த நோட்டீஸும் தகவலும் இது குறித்து கொடுக்கவில்லை.”

சட்டம் பொருட்படுத்தப்படாதது மட்டுமின்றி, அரசு அதிகாரிகள் பொது வெளிகளில் வாக்குறுதிகளும் கொடுத்திருக்கின்றனர். தோடனில் வசிக்கும் குருதேவ் மிஷ்ரா சொல்கையில் அனைவரும் ஏமாற்றப்பட்டதாக உணர்வதாக சொல்கிறார். “’உங்கள் நிலத்துக்கு ஈடாக நிலமும் வீட்டுக்கு பதிலாக ஒரு காரை வீடும், வேலைவாய்ப்பும் கொடுப்போம். வீட்டுப் பெண்ணை அனுப்பி வைப்பது போல் அனுப்பி வைப்போம்’ எனப் பேசினார்கள் அரசதிகாரிகள்.”

ஒரு ஊர் கூட்டத்தில் முன்னாள் ஊர்த் தலைவர் நம்மிடம் பேசினார். “அரசாங்கமும் ஆட்சியரும் முதலமைச்சரும் அதிகாரிகளும் கொடுத்த வாக்குறுதிகளைதான் நாங்கள் கேட்கிறோம்,” என்கிறார் அவர். “அவற்றில் எதையும் அவர்கள் செய்யவில்லை.”

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: தோடனின் அணை கென் ஆற்றில் வரவிருக்கும் இடத்தில் மேய்ப்பர் பிகாரி யாதவுடன் அமித் பட்நாகர் பேசுகிறார். வலது: ஆறுகள் இணைப்பு திட்டத்தால் தோடன் கிராமமும் சுற்றுவட்டாரமும் மூழ்கி விடும்

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: தோடன் கிராமத்தின் குருதேவ் மிஷ்ரா, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு குறித்த வாக்குறுதிகளை நிர்வாகம் ஏன் காப்பாற்ற மறுக்கிறது எனக் கேட்கிறார். வலது: அணையிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் வாழும் கைலாஷ் ஆதிவாசியிடம் நில உரிமை ஆவணங்கள் இல்லாததால், நிவாரணம் மறுக்கப்படுகிறது

கிழக்கு பக்கம் உள்ள கஹ்தாராவில் நிலை வேறாக இருக்கிறது. “நீங்கள் இருப்பதை போலவே உங்களுக்கு மறுநிர்மாணம் செய்து தருகிறோம் என்றார் ஆட்சியர். உங்களின் வசதிக்கு அது இருக்கும். இந்த கிராமத்தை உங்களுக்கு மறுகட்டுமானம் செய்து தருகிறோம் என்றனர்,” என்கிறார் முதியவர் பரோகர். ”எதுவும் நடக்கவில்லை. இப்போது எங்களை வெளியேற சொல்கின்றனர்.”

நிவாரணத் தொகையும் தெளிவாக தெரியவில்லை. 12-லிருந்து 20 லட்சம் ரூபாய் வரை 18 வயதுக்கு மேலிருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. “தலா ஒருவருக்காக அல்லது ஒரு குடும்பத்துக்கா? பெண்கள் தலைமை வகிக்கும் குடும்பங்களுக்கு என்ன நிலை? எங்களுக்கு தனியாகவும் நிலத்துக்கு தனியாகவும் நிவாரணம் வழங்குவார்களா? விலங்குகளுக்கு என்ன செய்வார்கள்? எதைப் பற்றியும் தெளிவான தகவல் இல்லை,” என்கின்றனர் மக்கள்.

பொய்த் தகவல்கள் மற்றும் அரசின் வெளிப்படையற்றதன்மை ஆகியவற்றால் எந்த கிராமத்திலும் எவருக்கும் எங்கு வெளியேற்றப்பட இருக்கிறார்கள் என்பது குறித்தோ என்ன நிவாரணம் என்பது குறித்தோ எந்த வகையில் நிவாரணம் அளிக்கப்படும் என்பது பற்றியோ எந்த தகவலும் தெரியவில்லை. 22 கிராமங்களின் மக்களும் குழப்பத்துடன் வாழ்கிறார்கள்.

அணையால் மூழ்கடிக்கப்படும் இடத்தில் தோடனில் இருக்கும் வீட்டுக்கு வெளியே அமர்ந்திருக்கும் கைலாஷ் ஆதிவாசி கவலையுடன் ரசீதுகளையும் நில உரிமை ஆவணங்களையும் காட்டுகிறார். “என்னிடம் பட்டா இல்லை என்கிறார்கள். ஆனால் இந்த ரசீதுகள் என்னிடம் இருக்கின்றன. என் தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை என அனைவரிடமும் இந்த நிலம் இருந்தது. எல்லா ரசீதுகளும் என்னிடம் இருக்கின்றன.”

பட்டா, ஒத்தி என உள்ளாட்சி அல்லது அரசுத்துறை வழங்கிய எந்த ஆவணத்தையும் நில உரிமையாக மாற்றிக் கொள்ளும் அனுமதியை பழங்குடிகளுக்கு 2006ம் ஆண்டின் வன உரிமை சட்டம் வழங்குகிறது.

ஆனால் கைலாஷின் ஆவணங்கள் ‘போதுமானதாக இல்லை’ என நிவாரணம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. “இந்த நிலம், வீடு ஆகியவற்றின் மீது எங்களுக்கு உரிமை இருக்கிறதா என இப்போது எங்களுக்கு தெரியவில்லை. நிவாரணம் வழங்கப்படுமா என்றும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. எங்களை விரட்டி விட அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். யாரும் கவனிப்பதாக இல்லை.”

காணொளி: ‘போராட்டத்துக்கு நாங்கள் தயார்’

அணை 14 கிராமங்களை மூழ்கடித்து விடும். வேறு எட்டு கிராமங்களை நிவாரணமாக வனத்துறைக்கு அரசு வழங்கியிருக்கிறது

பக்கத்து கிராமமான பல்கோஹாவில் ஜுகல் பழங்குடி தனியாக பேச விரும்புகிறார். “ஊர்த்தலைவர் எங்களிடம் பட்டா இல்லை என சொல்லி விட்டார்,’ என்கிறார் அவர். “கிட்டத்தட்ட பாதி பேர் ஓரளவுக்கு நிவாரணம் பெற்று விட்டனர். மற்றவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.” வருடாந்திர புலப்பெயர்வை தொடங்கினால், நிவாரணம் தவறவிடப் பட்டுவிடுமோ என அவர் அஞ்சுகிறார். ஏழு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் பதற்றம் அவரிடம் வெளிப்படுகிறது.

“சிறுவனாக இருந்தபோது நிலத்தில் வேலை பார்த்தேன். காட்டுக்குள்ளும் சென்றோம்,” என நினைவுகூருகிறார். ஆனால் கடந்த 25 வருடங்களில், புலிகள் சரணாலயமாக காடு ஆக்கப்பட்ட பிறகு அவரைப் போன்ற பழங்குடிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தினக்கூலி வேலைக்கு புலம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலையில் அவரை போன்றோர் இருக்கின்றனர்.

பெண்களும் நிவாரணம் பெற வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றனர். “பிரதமர் மோடி எப்போதும் ‘இந்த திட்டம் பெண்களுக்கானது… அந்த திட்டம் பெண்களுக்கானது’ என்று சொல்வார். எங்களுக்கு அதெல்லாம் வேண்டாம். எங்களின் உரிமைகள்தான் எங்களுக்கு வேண்டும்,” என்கிறார் பல்கோஹாவை சேர்ந்த ரவிதாஸ் (தலித்) சமூகத்தை சேர்ந்த விவசாயியான சுனி பாய்.

“ஏன் ஆண்கள் மட்டுமே எப்போதும் நிவாரணம் பெறுகிறார்கள்? எந்த அடிப்படையில் அரசாங்கம் இந்த விதியை உருவாக்கியது?” எனக் கேட்கிறார் ஒரு மகன் மற்றும் இரு மகள்களின் தாய். “ஒரு பெண்ணும் கணவரும் பிரிந்து விட்டால், எப்படி குழந்தைகளுக்கு அவள் உணவு போடுவாள்? சட்டம் இதையெல்லாம் யோசிக்க வேண்டும். நாங்களும்தானே ஓட்டு போடுகிறோம்?”

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: சதர்பூர் மாவட்டத்தின் பல்கோஹாவை சேர்ந்த ஜுகல் ஆதிவாசி போராட்டக்காரர்கள் பயன்படுத்தும் பதாகைகளை காட்டுகிறார். வலது: சுனி பாய் மகன் விஜய் மற்றும் மகள்கள் ரேஷ்மா (கறுப்பு குர்தா) மற்றும் அஞ்சலி ஆகியோருடன். பெண்களுக்கு நிவாரணம் யோசிக்கப்படுவதே இல்லை என்கிறார் அவர்

*****

“நீர், வாழ்வாதாரம், காடுகள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றுக்காகதான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்,” என்கின்றனர் இங்குள்ள மக்கள்.

தோடனின் குலாப் பாய், பெரிய முற்றத்தைக் காட்டி, நிவாரணத் தொகை முற்றங்களையும் சமையலறைகளையும் தவிர்த்து விடுவதாக கூறுகிறார். 60 வயதாகும் அவர் பின் வாங்குவதாக இல்லை. “என்னைப் போன்ற பழங்குடிகள் நிர்வாகத்திடமிருந்து எதையும் பெறவில்லை. இங்கிருந்து போபால்வரை (தலைநகரம்) நான் போராடுவேன். எனக்கு வலிமை உண்டு. அங்கு நான் சென்றிருக்கிறேன். எனக்கு பயமில்லை. போராட்டத்துக்கு நான் தயார்.”

ஆறு இணைப்பு திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் 2017ம் ஆண்டில் ஊர்க் கூட்டங்களாக சிறிய அளவில் தொடங்கின. ஜனவரி 31, 2021 அன்று சதார்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே 300 பேர் திரண்டு நடத்திய போராட்டத்தில்தான் எதிர்ப்பு இயக்கம் வேகம் பிடித்தது. 2023ம் ஆண்டின் குடியரசு தினத்தன்று, மூன்று நீர் சத்தியாகரகப் போராட்டங்களில் புலிகள் சரணாலயத்தின் 14 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, தங்களின் அரசியல் சாசன உரிமைகள் பாதிக்கப்படுவதாக புகார் கூறினர்.

தங்களின் துயர் மோடிக்கும் தெரியும் என்கின்றனர் உள்ளூர்வாசிகள். அதன் விளைவாகத்தான் தோடனில் அணையை திறந்து வைக்க அவர் வரவில்லை என குறிப்பிடுகின்றனர். எனினும் அத்தகவலை உறுதிபடுத்த முடியவில்லை.

இத்திட்டத்தை சுற்றி இருக்கும் சர்ச்சையால், 2023ம் ஆகஸ்ட் மாதத்தில் நடந்த திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளி கோரல் பாதிப்படைந்தது. யாரும் இத்திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளியை கோர முன் வரவில்லை. எனவே ஆறு மாதங்களுக்கு தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

PHOTO • Priti David

தோடன் கிராமத்தின் குலாப் பாய், நிவாரணத்துக்கான போராட்டத்துக்கு தயார் என்கிறார்

பொய்த் தகவல்கள் மற்றும் அரசின் வெளிப்படையற்றதன்மை ஆகியவற்றால் எந்த கிராமத்திலும் எவருக்கும் எங்கு வெளியேற்றப்பட இருக்கிறார்கள் என்பது குறித்தோ என்ன நிவாரணம் என்பது குறித்தோ எந்த வகையில் நிவாரணம் அளிக்கப்படும் என்பது பற்றியோ எந்த தகவலும் தெரியவில்லை

*****

“மத்திய இந்தியாவில் பலர் காலநிலை மாற்றம் குறித்து பேசுவதில்லை. ஆனால் அதன் தாக்கம் இருக்கிறது. கடும் மழைப் பொழிவு, பஞ்சம் என காலநிலை நிகழ்வுகள் இங்கு நேர்கின்றன,” என சுட்டிக் காட்டுகிறார் சூழலியலாளர் கேல்கர். “மத்திய இந்தியாவின் பெரும்பாலான ஆறுகள் காலநிலை மாற்றத்தால் கரைபுரண்டு ஓடுகின்றன. ஆனால் அது நீடிக்காது. இந்த போக்கால், அவை உபரி நீர் கொண்டிருப்பது போல தோன்றலாம். ஆனால் காலநிலை மாற்ற அனுமானங்களின்படி, இது குறைந்த கால அளவே இருக்கும்.”

இந்த குறுகிய கால மாற்றங்களை காரணம் காட்டி ஆறுகள் இணைக்கப்படுமெனில், இப்பகுதி இன்னும் அதிக பஞ்சத்தை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுமென அவர் எச்சரிக்கிறார்.

மேலும் தக்கர், பெரும் அளவிலான இயற்கை காடு அழிக்கப்படுவதால் ஏற்படும் நீரியியல் தாக்கம் என்பது கொடுந்தவறாக மாறும் என்றும் எச்சரிக்கிறார். “உச்சநீதிமன்றத்தின் மத்திய அதிகாரமளிக்கும் குழுவின் அறிக்கை இதை குறித்து பேசுகிறது. ஆனால் உச்சநீதிமன்றம் அந்த அறிக்கையை பொருட்படுத்தவில்லை.”

Nature Communication இதழில் 2023ம் ஆண்டு வெளியான மும்பை ஐஐடியின் ஆய்வறிக்கை யும் எச்சரிக்கிறது. “இடமாற்றம் செய்யப்படும் நீரால் செய்யப்படும் அதிக பாசனம், செப்டமபர் மாத சராசரி மழையை இந்தியாவில் ஏற்கனவே மழை குறைவாக இருக்கும் பகுதிகளில் 12% அளவுக்கு குறைக்கும்… விளைவாக மழைக்காலத்துக்கு பிறகு ஆறுகள் காய்ந்து, நீர் பஞ்சத்தை நாடு முழுக்க பரப்பி, ஆறு இணைப்பையே செயலற்றதாக்கி விடும்.”

PHOTO • Priti David
PHOTO • Priti David

இடது: கோடைகாலங்களில் சில இடங்களில் கென் ஆறு வறண்டு போகும். வலது: புலிகள் சரணாலயத்துக்கு அருகே இருக்கும் கென் ஆறு 2024 மழைகளுக்கு பிறகு. இத்தகைய நீரோட்டங்களை கொண்டு உபரி நீரென தீர்மானித்துவிட முடியாது

தேசிய நீர் மேம்பாட்டு முகமை (NWDA) அளித்த தரவுகளின் அடிப்படையில்தான் இத்திட்டம் உருவாக்கப்பட்டதென சொல்லப்படும் நிலையில், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி அத்தரவுகள் அறிவியலாளர்களுக்கு பகிரப்படுவதில்லை என்கிறார் ஹிமான்ஷு தக்கர்.

2015ம் ஆண்டில் அணைக்கான சாத்தியம் நிறுவப்பட்ட பிறகு, தக்கரும் பிறரும் பல கடிதங்களை சுற்றுச்சூழல் தாக்க கமிட்டிக்கு எழுதினர். ’கென் பெத்வா சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடின் தவறு மற்றும் மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் விதிமீறல்’ என தலைப்பிடப்பட்ட கடிதம் ஒன்றில், “இத்திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அடிப்படையிலேயே தவறானது. முழுமை பெறாதது. இதற்கென நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டங்களில் பல விதிமீறல்கள் நடந்துள்ளன. இத்தகைய திட்டத்துக்கு அனுமதி கிடைப்பதென்பது தவறு மட்டுமின்றி சட்டவிரோதமும் கூட,” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவற்றுக்கிடையில் 15-20 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. மக்களை வெளியேற்றுவதற்கான மிரட்டலும் நீடிக்கிறது. நிவாரணம் பற்றி ஒரு தகவலும் இல்லை. விவசாயம் நின்று விட்டது. நிவாரணத்தை தவற விட்டு விடக் கூடாதென தினக்கூலி வேலைக்கான புலப்பெயர்வும் ஒத்திப் போடப்பட்டு வருகிறது.

சுனி பாய் தெளிவாக சொல்லி முடிக்கிறார்: “எல்லாவற்றையும் நாங்கள் இழந்து கொண்டிருக்கிறோம். எல்லாவற்றையும் அவர்கள் பறிக்கிறார்கள். எங்களுக்கு அவர்கள் உதவ வேண்டும். ஆனால் அவர்கள் ‘இது உங்களுக்கான நிவாரணம், இங்கு கையெழுத்து போடுங்கள், பணத்தை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்,’என்கிறார்கள்.”

தமிழில்: ராஜசங்கீதன்

Priti David

प्रीति डेविड, पारी की कार्यकारी संपादक हैं. वह मुख्यतः जंगलों, आदिवासियों और आजीविकाओं पर लिखती हैं. वह पारी के एजुकेशन सेक्शन का नेतृत्व भी करती हैं. वह स्कूलों और कॉलेजों के साथ जुड़कर, ग्रामीण इलाक़ों के मुद्दों को कक्षाओं और पाठ्यक्रम में जगह दिलाने की दिशा में काम करती हैं.

की अन्य स्टोरी Priti David
Editor : P. Sainath

पी. साईनाथ, पीपल्स ऑर्काइव ऑफ़ रूरल इंडिया के संस्थापक संपादक हैं. वह दशकों से ग्रामीण भारत की समस्याओं की रिपोर्टिंग करते रहे हैं और उन्होंने ‘एवरीबडी लव्स अ गुड ड्रॉट’ तथा 'द लास्ट हीरोज़: फ़ुट सोल्ज़र्स ऑफ़ इंडियन फ़्रीडम' नामक किताबें भी लिखी हैं.

की अन्य स्टोरी पी. साईनाथ
Translator : Rajasangeethan

चेन्नई के रहने वाले राजासंगीतन एक लेखक हैं. वह एक प्रमुख तमिल समाचार चैनल में बतौर पत्रकार काम करते हैं.

की अन्य स्टोरी Rajasangeethan