“நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்று தனது கடுமையான குரலில், ஆர்வமாக அவர் கேட்டார்.
நான் அவரைக் கண்டடைந்த அந்த ஆற்றின் உயரமான கரைப்பகுதிக்கு பலரும் சென்றதில்லை என்பதை உடனடியாக உணர்ந்தேன்.
கரையிலிருந்து ஆற்றின் ஓரத்தில் இறங்கிய அனிருத்தா சிங் படார், திடீரென நின்று, என்னை நோக்கித் திரும்பி எச்சரித்தார். “அந்த பகுதியில் இறந்தவர்களின் சடலங்களை எரித்துள்ளனர். நேற்று ஒருவர் இறந்தார். அங்கே நிற்க வேண்டாம். என்னைப் பின் தொடருங்கள்.”
அவரின் அறிவுறுத்தல் நியாயமானது என்றும் இறந்தவர்கள் அவர்கள் அடைந்த தனிமையில் ஓய்வெடுக்கட்டும் என்றும் நான் நினைத்தேன்.
மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள காங்சபதி ஆற்றில், இரண்டு மீட்டர் உயரமுள்ள ஆற்றங்கரையில், முழங்கால் அளவு நீரில் அவர் சாமர்த்தியமாக நடப்பதை கண்டேன். அவருக்கு இணையாக வேகமாக நடக்க என்னால் முடிந்த அளவு முயற்சித்து கரையோரம் நடந்தேன்.
தன்னுடைய வயதை நம்பாமல், திறமையை நம்பும் அவரது சுறுசுறுப்பு பிரமிக்க வைக்கிறது. 50 வயதைக் கடந்த அந்த மனிதரிடம், “ஆற்றில் என்ன செய்கிறீர்கள்?” என்று என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை.
அவர், தன் இடுப்பில் பையாகப் பயன்படுத்திய வெள்ளைத் துணியைத் தளர்த்தி, ஒரு இறாலை லாவகமாக எடுத்து, “இந்த இறால், எங்கள் குடும்பத்தின் இன்றைய மதிய உணவாக இருக்கக்கூடும். வரமிளகாய் மற்றும் பூண்டுடன் இந்த இறாலை வறுத்து, சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்” என்றார்.
மீன் மற்றும் இறாலைப் பிடிக்கும் அவரிடம் மீன்பிடி வலைகள் இல்லாதது வெளிப்படையாகத் தெரிந்தது. “நான் மீன்களை பிடிக்க ஒருபோதும் வலைகளை பயன்படுத்தியதில்லை” என்று அவர் கூறினார். “நான் என் கைகளை பயன்படுத்துகிறேன். மீன்கள் எங்கே ஒளிந்திருக்கிறது என்று எனக்குத் தெரியும்” என்றார். ஆற்றை சுட்டிக்காட்டி, “இந்த கற்களின் விளிம்புகளையும், ஆற்றின் அடியிலுள்ள பாசிகளையும் பார்க்கிறீர்களா? இவைதான் இறால்களின் வீடுகள்.” என அவர் கூறினார்.
அனிருத்தா குறிப்பிட்ட, ஆற்றுக்குள் உள்ள களைகள் மற்றும் பாசிகளில் மறைந்திருந்த இறால்களை, நான் எட்டிப்பார்த்தேன்.
தொடர்ந்து, அவரது மதிய உணவிற்கான அரிசி எங்கிருந்து கிடைக்கிறது என்ற உரையாடலைத் தொடர்ந்தோம். “எங்கள் நிலத்தில் நெல் விளையக்கூடிய சிறிய இடத்தில், நான் கடினமாக உழைத்து, எங்கள் குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கு தேவையான அரிசியை எப்படியாவது விளைவித்து விடுவேன்” என்றார்.
பூமிஜ் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இவரின் குடும்பமானது, மேற்கு வங்கத்தில் புருலியா மாவட்டத்தின் புஞ்சா தொகுதியில் உள்ள கைரா கிராமத்தில் வசித்து வருகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-இன்படி, இந்த கிராமத்தில் வசிக்கும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆதிவாசிகள் (2249 பேர்). இவர்கள் உணவுக்காக ஆற்றைதான் நம்பியுள்ளனர்.
அனிருத்தா தான் பிடிக்கும் இறால்களை விற்காமல் தனது குடும்பத்தின் தேவைக்காக கொண்டு செல்கிறார். மீன்பிடித்தல் என்பது வேலை இல்லை, அது நான் விரும்பும் ஒன்று என்று அவர் கூறுகிறார். எனினும் கலங்கிய குரலோடு, “பிழைப்பிற்காக பல்வேறு இடங்களுக்கு செல்கிறேன்” என்கிறார். வேலைக்காக மகாராஷ்டிரம் மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு செல்லும் அவர், கட்டிட தொழில் மற்றும் பிற வேலைகளை செய்கிறார்.
2020ஆம் ஆண்டு பொதுமுடக்கத்தின் போது, அவர் நாக்பூரில் சிக்கிக் கொண்டார். “நான் ஒப்பந்த முறையில் ஒரு கட்டிட வேலைக்காக சென்றிருந்தேன். அந்த நாட்களை கடந்தது மிகவும் சிரமமாக இருந்தது” என்று நினைவு கூர்ந்தார். “ஓராண்டிற்கு முன்புதான் திரும்பி வந்தேன். தற்போது வயதாகிவிட்டதால், திரும்பி அங்கு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்” என்றார்.
புருலியா மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், கேரளம் போன்ற பிற மாநிலங்களுக்கும் மாநிலத்துக்குள் இருக்கும் பிற மாவட்டங்களுக்கும் வேலை தேடி செல்வதாக கைராவில் வசிக்கும் அமல் மஹதோ தெரிவித்தார். “விவசாயம் செய்ய வாங்கிய கடனை திரும்பிச் செலுத்துவதற்காக வெளிமாநிலங்களுக்கு அவர்கள் செல்வதாகவும், அவர்கள் இல்லாத நிலையில், குடும்பங்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய பெண்கள் வயல்களில் விவசாயப் பணிகளிலும் ஈடுபடுகின்றனர். சிறிய நிலங்களை வைத்திருக்கும் ஆதிவாசி குடும்பங்களுக்கு இது ஒரு மாய சுழற்சியாகும். அவர்கள் பெரும் பணக்காரர்களிடம் கடன் வாங்குகிறார்கள்” என்று அமல் விளக்கினார்.
உரம் மற்றும் விதை போன்ற விவசாயப் பொருள்களுக்காக வாங்கிய கடன்களை அனிருத்தா திருப்பிச் செலுத்த வேண்டும். நாக்பூரில் அவர் சிமெண்ட் மற்றும் காரைக் கலவை செய்வது மற்றும் அதிக எடையுள்ள மூட்டை சுமப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு, நாளொன்றுக்கு 300 ரூபாய் சம்பாதித்தார். ஆனால், கைராவில் பார்க்கும் கூலி வேலையில் பெரிய வருமானம் இல்லை. "வேலை இல்லை என்றால் சும்மா அமர்ந்திருக்க வேண்டும்," என்கிறார். நடவு மற்றும் அறுவடை காலங்களில் அவரால் சில வேலைகளை மேற்கொள்ள முடியும். அப்போது 200 ரூபாய் அல்லது அதற்கும் குறைவாகவே அவருக்குக் கூலி கிடைக்கும். "சில நாட்கள், ஆறுகளில் மணல் எடுக்கும் ராயல்ட்டியுடன் லாரியை எடுத்து வருவார்கள். அப்போது ஆற்றிலிருந்து மணல் எடுத்து லாரியில் ஏற்ற எனக்கு ஒருநாளைக்கு 300 ரூபாய் கிடைக்கும்" என்கிறார்.
ராயல்டி என்றால் கங்கசாபதி ஆற்றுப் படுகையில் மணல் எடுக்க குத்தகைக்கு விடப்படுவது என்கிறார் அனிருத்தா. கிராமத்தினர் கூறுகையில், "பாரபட்சமின்றி மணல் எடுக்கப்படும். அடிக்கடி மணல் எடுப்பதற்கான வழிமுறைகள் மீறப்படும். அரசியலில் சக்திவாய்ந்த நபர்களுக்குத் தொடர்புடையவர்களின் உதவியுடன், ஆற்றுப் படுகையில் மணல் கடத்தல் உக்கிரமாக நடைபெறும்" என்கின்றனர். ஆனால், இது சட்டவிரோதமானது என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் அனிருத்தா சிங் படாரைப் போன்ற கிராமத்தினருக்கு சில நாட்கள் கூலி வேலையை இது உறுதி செய்கிறது.
இருந்தபோதிலும், இந்த "ராயல்டி முறை" சூழலியலில்
ஏற்படுத்தக்கூடிய பாதகமான தாக்கத்தை அவர் உணர்ந்திருக்கிறார். இது ஆற்றுக்கு கேடு என்கிறார்.
"ஆண்டாண்டு காலமாக உருவான மணலை அவர்கள் எடுக்கின்றனர்.”
“ஆற்றில் நிறைய மீன்கள் இருந்தது," எனத் தொடர்ந்து பேசிய அனிருத்தா, பான் (விலாங்கு), ஷோல் (விரால்) மற்றும் மாகூர் (கெளிறு) என நிறைய மீன்களின் பெயர்களைப் பட்டியலிட்டார். அவை தற்போது இங்கு வருவதில்லை என்கிறார். மேலும், சுற்றுலா வரும் நபர்கள் ஆற்றங்கரையில் பிளாஸ்டிக் (நெகிழி), காலி பாட்டில்கள் மற்றும் தெர்மாகோலால் ஆன தட்டுகளை வீசி மாசுபடுத்துவதாகவும் கோபித்துக் கொள்கிறார்.
அவர் ஆற்றில் இறால்களைத் தேடித் திரிந்திருக்கிறார். இது பற்றி அவர் கூறுகையில், "நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது ஆற்றில் நிறைய இறால்கள் இருந்தன. எனது தந்தை, இறால் இருக்கும் இடத்தை எப்படிக் கண்டறிய வேண்டும், வெறும் கைகளால் எப்படிப் பிடிக்க வேண்டும் என எனக்கு கற்றுத் தந்துள்ளார். எனது தந்தை மிகச் சிறந்த மீனவர்," என்கிறார்.
ஒவ்வொரு இறாலையும் எடுத்தபடி பேசிய அவர், "இறால்களை சுத்தம் செய்ய நிறைய வேலை செய்ய வேண்டும் என்றாலும் அவை அதிகச் சுவை கொண்டவை," என்கிறார். மேலும் அவர், “இருப்பினும், ஆறோ அல்லது இறாலோ இப்போது ஒரே மாதிரியாக இல்லை,” என்கிறார். “கடுகு மற்றும் நெல் பயிரிடும் ஆற்றின் அருகே உள்ள வயல்களைப் பார்த்திருக்கிறீர்களா? அங்கு அவர்கள் பயிர்களின் மீது அனைத்து வகையான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்துவிட்டு அந்த பூச்சிமருந்து டப்பாக்களை இந்த ஆற்று நீரில் கழுவுகின்றனர். இதனால் அசுத்தமாகும் நீர் மீன்களை அழிக்கிறது. இறால்கள் அரிதாகி வருகின்றன…”
கைராவிலிருந்து 5 முதல் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிர்ரா கிராமத்தில் இருந்து ஆற்றில் குளிக்க வந்த சுபாங்கர் மஹதோ, அனிருத்தாவின் வார்த்தைகளையே எதிரொலித்து பேசினார். "ஒரு காலத்தில் ஆறுகள், அருகில் வசிக்கும் நிலமற்ற, சிறு மற்றும் குறு நிலத்தை உடைய ஆதிவாசிகளுக்கு வாழ்வாதாரமாகவும், புரதம் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் ஆதாரமாகவும் விளங்கின. ஆறுகள் இல்லையெனில் அவர்களால் உணவு தானியங்களை வாங்க முடியாது," என்றார். மாநிலத்தின் ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றாக புருலியா இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
2020ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி மேற்குவங்கத்தில் இருக்கும் அதிகபட்ச வறுமை நிறைந்த மாவட்டம் புருலியாதான். இங்கு 26 சதவிகிதக் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகின்றன. “குடும்பங்கள் காடுகளையும், ஆறுகளையுமே தங்களது உணவுக்காக சார்ந்திருக்கின்றனர். ஆனால் தற்போது இந்த இயற்கை வளங்கள் அரிதானவையாக மாறியுள்ளன,” என்கிறார் ஆசிரியரான சுபாங்கர்.
அனிருத்தாவிடம் அவரது குடும்பத்தைக் குறித்து கேட்டபோது அவர் அதிகப்படியான இறால்களை தேடிக் கொண்டிருந்தார். அவர் தனது குடும்பத்திற்காக மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் கணுக்காலிகளை சேகரித்து வருகிறார். “எனது மனைவி வீட்டை கவனித்துக் கொண்டு பண்ணையில் வேலை செய்து வருகிறார். எனது மகனும் எங்களது நிலத்தில் வேலை செய்கிறார்,” என்கிறார் அனிருத்தா. அவர் தனது குழந்தைகள் குறித்து பேசும்போது மகிழ்ச்சியுடன் இருந்தார். “என்னுடைய மூன்று பெண் பிள்ளைகளுக்கும் திருமணமாகிவிட்டது. இப்போது என்னுடன் ஒரே ஒரு மகன் மட்டுமே இருக்கிறார். அவரை வேலைக்காக எங்கும் நான் அனுப்பவில்லை. நானும் தொலைதூர இடங்களுக்கும் செல்வதில்லை,” எனத் தெரிவித்தார் அனிருத்தா.
அனிருத்தாவிடம் இருந்து பிரியும் போது, அவர் தனது குடும்பத்துடன் வீட்டில், உழைத்து சம்பாதித்த உணவை உண்பதாக கற்பனை செய்து பார்த்தேன். “எங்கெல்லாம் ஆறு செல்கிறதோ அங்கே ஒவ்வொரு உயிரினத்தையும் அது வாழச் செய்யும். அங்கு நிறைய மீன்களும் இருக்கும்,” என்ற பைபிள் வசனம் நினைவுக்கு வந்தது.
தமிழில்: அன்பில் ராம்