82 வயதாகும் ஆரிஃபா வாழ்வின் அனைத்தையும் பார்த்தவர். 1938ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அவர் பிறந்ததாக ஆதார் அட்டை சொல்கிறது. ஆரிஃபாவிற்கு தனது வயது சரியானதா என்பது நினைவில் இல்லை. ஆனால் தனது 16ஆவது வயதில் 20 வயது கடந்த ரிஸ்வான் கானுக்கு இரண்டாவது மனைவியாகி ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தின் பிவான் கிராமத்திற்கு வந்தது மட்டும் நினைவில் உள்ளது. “பிரிவினையின் போது நிகழ்ந்த கலவரத்தில் என் மூத்த சகோதரியும் (ரிஸ்வானின் முதல் மனைவி), அவரது ஆறு குழந்தைகளும் கொல்லப்பட்டதால் ரிஸ்வானுக்கு என்னை என் தாயார் திருமணம் செய்து வைத்தார் என நினைவு கூர்கிறார் ஆரிஃபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என மகாத்மா காந்தி மேவாத் கிராமத்திற்கு வந்து மியோ இஸ்லாமியர்களிடம் கேட்டுக் கொண்டதையும் அவர் லேசாக நினைவில் வைத்துள்ளார். ஒவ்வொரு டிசம்பர் 19ஆம் தேதியையும் ஹரியாணாவின் நுஹ்ஹில் உள்ள காசிரா கிராமத்தில் காந்திஜியின் வருகையை மேவாத் திவாஸ் என மியோ இஸ்லாமியர்கள் அனுசரித்து வருகின்றனர். (2006ஆம் ஆண்டு வரை நுஹ், மேவாத் என்று தான் அழைக்கப்பட்டது).

ரிஸ்வானை ஏன் மணக்க வேண்டும் என தாயார் கீழே உட்கார்ந்து கொண்டு விளக்கியதையும் ஆரிஃபா மிகத் தெளிவாக நினைவு கூர்கிறார். அவரிடம் எதுவுமில்லை என்று கூறிவிட்டு என்னை அவரிடம் என் தாயார் ஒப்படைத்தார் என நினைவுகளைப் பகிரும் ஆரிஃபா தான் பிறந்த கிராமமான ரித்தோராவிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிவான் கிராமத்திற்கு வந்த கதையை அசைபோடுகிறார். இரண்டு கிராமங்களுமே ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவை. நாட்டின் மிகவும் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமாக அது உள்ளது.

தேச தலைநகரிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் ஹரியாணா, ராஜஸ்தான் எல்லைகளின் ஆரவல்லி மலை அடிவாரத்தின் ஃபெரோசிப்பூர் ஜிர்கா தொகுதியில் உள்ளது இந்த பிவான் கிராமம். டெல்லியிலிருந்து நுஹ் செல்லும் சாலை தெற்கு ஹரியாணாவின் குருகிராம் வழியாக செல்கிறது. இந்தியாவிலேய தனி நபர் வருமானம் அதிகமுள்ள மூன்றாவது நகரமாக நிதி மற்றும் தொழிற்துறை மையமாக உள்ளது குருகிராம். நாட்டின் 44ஆவது பின்தங்கிய மாவட்டமாக நுஹ் இருக்கிறது. இங்கு பச்சை புல்வெளிகள், உலர்ந்த குன்றுகள், மோசமான உள்கட்டமைப்பு, தண்ணீர் தட்டுப்பாடு போன்றவை ஆரிஃபா போன்ற பலரது வாழ்வின் அடையாளத்தை பதிக்கிறது.

ஹரியாணாவின் இப்பகுதியிலும், அண்டை மாநிலமான ராஜஸ்தானிலும் மியோ இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். நுஹ் மாவட்டத்தில் 79.2 சதவீத இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர் ( கணக்கெடுப்பு 2011).

1970களில் ஆரிஃபாவின் கணவர் ரிஸ்வான் பிவானிலிருந்து நடக்கும் தொலைவில் உள்ள மண், கல், சிலிக்கான் சுரங்கங்களில் வேலை செய்ய தொடங்கினார். அப்போது ஆரிஃபாவின் உலகமே அந்த மலை குன்றுக்குள் மட்டுமே இருந்தது. தண்ணீர் கொண்டு வருவது தான் அவரது முதன்மை பணி. 22 ஆண்டுகளுக்கு முன் ரிஸ்வான் இறந்த பிறகு, ஆரிஃபா வயலில் கூலி வேலை செய்து தினமும் ரூ. 10 முதல் 20 என கிடைத்த சொற்ப பணத்தில் தனது எட்டு குழந்தைகளையும் வளர்த்தெடுத்தார். “எவ்வளவு குழந்தைகள் பெற்றுக் கொள்கிறோமோ, அவ்வளவு செல்வத்தை அல்லா கொடுப்பார் என்று எங்கள் மக்கள் சொல்வார்கள்“ என்கிறார் அவர்.

Aarifa: 'Using a contraceptive is considered a crime'; she had sprained her hand when we met. Right: The one-room house where she lives alone in Biwan
PHOTO • Sanskriti Talwar
Aarifa: 'Using a contraceptive is considered a crime'; she had sprained her hand when we met. Right: The one-room house where she lives alone in Biwan
PHOTO • Sanskriti Talwar

ஆரிஃபா: 'கருத்தடை சாதனத்தை பயன்படுத்துவது குற்றம்'; நாங்கள் சந்தித்தபோது அவர் கை சுளுக்கியிருந்தது. இடது: பிவானில் ஒற்றை அறை கொண்ட அந்த வீட்டில் அவர் தனியாக வசித்து வருகிறார்

அவரது நான்கு மகள்களும் வெவ்வேறு கிராமங்களில் திருமணமாகி வசித்து வருகின்றனர். அவரது நான்கு மகன்கள் அவரவர் குடும்பத்தினருடன் அருகிலேயே வசித்து வருகின்றனர். அவர்களில் மூவர் விவசாயியாகவும், ஒருவர் தனியார் நிறுவனத்திலும் வேலை செய்கின்றனர். ஆரிஃபா தனது ஒற்றை அறை வீட்டில் தனியாக வசிப்பதையே விரும்புகிறார். அவரது மூத்த மகனுக்கு 12 பிள்ளைகள். அவரைப் போன்றே அவரது மருமகள்களும் கருத்தடையை எந்த வகையிலும் அனுமதிக்கவில்லை என்கிறார் ஆரிஃபா. "12 பிள்ளைகள் பிறந்த பிறகு குழந்தைப் பேறு தானாகவே நின்றுவிட்டது" என்று சொல்லும் அவர், “எங்கள் மதத்தில் கருத்தடை பயன்படுத்துவது குற்றமாகும்” என்கிறார்.

வயோதிகம் அடைந்து ரிஸ்வான் இறந்த நிலையில் மேவாட் மாவட்டத்தில் பல பெண்களும் தங்களது கணவன்களை காசநோய்க்கு பலி கொடுத்துள்ளனர். பிவானில் வசிப்பவர்களில் 957 பேர் காசநோயால் இறந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பஹரின் கணவர் டானிஷூம் ஒருவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிவானில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் அவர் 2014ஆம் ஆண்டு காசநோயால் தன் கணவரின் உடல்நிலை மோசமடைவதை கண்டார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அடிக்கடி இருமலுடன் இரத்தத்தை கக்குவார் என்கிறார் அவர். இப்போது சுமார் 60 வயதாகும் பஹருக்கு இரு சகோதரிகள். அவர்கள் அவருடைய வீட்டிற்கு அருகே வசிக்கின்றனர்.  அவர்களின் கணவர்களும் காசநோயால் அதே ஆண்டு உயிரிழந்தனர். “எங்கள் தலைவிதியால் இப்படி நிகழ்ந்ததாக மக்கள் சொல்கின்றனர். ஆனால் இந்த குன்றுகள் தான் இதற்கு காரணம். இந்த குன்றுகள் எங்களை சீரழித்துவிட்டன.”

(ஃபரிதாபாத் மற்றும் அண்டை பகுதிகளில் சுரங்கப் பணிகளால் பெருமளவில் பேரழிவு ஏற்பட்டதை அடுத்து 2002ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. சுற்றுச்சூழல் மாசிற்கு மட்டுமே உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. காச நோய் பற்றி குறிப்பிடவில்லை. காச நோயையும், சுரங்கப் பணிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சில அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.)

நுஹ் மாவட்டத் தலைநகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் பிவானிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு 2019ஆம் ஆண்டு காச நோயில் இறந்த 45 வயது வெய்ஸ் என்பவரின் பதிவேட்டை காட்டுகிறார் சுகாதார நிலைய பணியாளர் பவன் குமார். பதிவேட்டின்படி பிவானில் மேலும் ஏழு ஆண்களுக்கு காச நோய் உள்ளது. “இன்னும் நிறைய பேர் இருக்கலாம். அவர்கள் எல்லாம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதில்லை“ என்கிறார் குமார்.

40 வயதாகும் ஃபைசா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் கணவர் வைஸ். “எங்கள் நவுகன்வா கிராமத்தில் வேலைவாய்ப்பே கிடையாது என்கிறார்“ அவர். ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ளது நவுகன்வா. சுரங்கத்தில் வேலை கிடைத்ததால் என் கணவர் பிவானுக்கு சென்றுவிட்டார். ஓராண்டிற்கு பிறகு நானும் அவருடன் சென்றுவிட்டேன். எங்கள் வீட்டையும் இங்கு தான் கட்டினோம். ஃபைசா 12 பிள்ளைகளை பெற்றுள்ளார். அவற்றில் நான்கு குறை பிரசவத்தில் பிறந்து இறந்தன. “ஒரு குழந்தை உட்கார தொடங்கியதும், அடுத்த குழந்தை பிறந்துவிடும்“ என்கிறார் அவர்.

அவரும், ஆரிஃபாவும் விதவைகளுக்கான ஓய்வூதியமாக மாதம் ரூ. 1800 பெறுகின்றனர். அவ்வப்போது ஏதேனும் வேலை கிடைக்கும். “நாங்கள் போய் வேலை கேட்டால், நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்கள் என்பார்கள். இது 40 கிலோ இருக்கும், [உங்களால் தூக்க முடியுமா? ] என்று எங்களிடம் கேட்பார்கள்” என்கிறார் 66 வயதாகும் விதவையான ஹாதியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தான் அடிக்கடி காதில் கேட்கும் கேலி வார்த்தைகளை சொல்லிக் காட்டுகிறார். ஓய்வூதியத்தின் ஒவ்வொரு ரூபாயையும் சேமிக்கிறேன். நுஹ்ஹில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வதற்காக ஒரு ஆட்டோ பிடித்தால் 10 ரூபாய் செலவிட வேண்டும். மிக அடிப்படை மருத்துவ தேவைகளுக்கு கூட நடந்து தான் சென்று வருகிறேன். “மருத்துவரை பார்க்க விழையும் அனைத்து பெண்களையும் நாங்கள் ஒன்று திரட்டுகிறோம். பிறகு சேர்ந்து நடக்கிறோம். பல இடங்களில் அமர்ந்து ஓய்வெடுத்துவிட்டு பிறகு தான் நடக்கிறோம். ஒரு நாளே இப்படி போய்விடும்“ என்கிறார் ஹாதியா.

Bahar (left): 'People say it happened because it was our destiny. But we blame the hills'. Faaiza (right) 'One [child] barely learnt to sit, and I had another'
PHOTO • Sanskriti Talwar
Bahar (left): 'People say it happened because it was our destiny. But we blame the hills'. Faaiza (right) 'One [child] barely learnt to sit, and I had another'
PHOTO • Sanskriti Talwar

பஹர் (இடது) : 'எங்கள் தலைவிதி தான் காரணம் என்று மக்கள் சொல்கின்றனர். ஆனால் நாங்கள் இந்த குன்றுகளை தான் குற்றஞ்சாட்டுவோம்'. ஃபைசா (வலது) 'ஒன்று [குழந்தை] உட்கார தொடங்கியதும், அடுத்து ஒன்று பிறந்துவிடும்'

குழந்தைப் பருவத்தில் ஹாதியா ஒருபோதும் பள்ளிக்குச் சென்றதில்லை. ஹரியாணாவின் சோனிபட் வயல்வெளிகளில் வேலை செய்த அவரது தாய் தான் அனைத்தும் சொல்லிக் கொடுத்ததாக அவர் சொல்கிறார். 15 வயதில் ஃபஹித் என்பவருடன் அவருக்கு திருமணம் நடந்தது. ஆரவல்லி குன்றுகளில் வேலை செய்ய தொடங்கியதும், அவரது மாமியர் வெட்டுக் கருவியை கொடுத்து வயல்களில் களையெடுக்குமாறு கூறியுள்ளார்.

2005ஆம் ஆண்டு ஃபாஹித் இறந்த பிறகு, ஹாதியாவின் வாழ்க்கை முழுவதும் வயல் வேலைகளிலும், கடன் வாங்குவது, கடனை செலுத்துவது என கழிந்தது. “பகலில் வயல்வெளிகளில் வேலைக்கும், இரவில் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கும் பழகி இருந்தேன். என் வாழ்க்கையே கூலி வேலைகளில் முடிந்துவிட்டது“ என்கிறார் அவர்.

“திருமணமான ஆண்டிலேயே எனக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டது. மற்றவர்கள் ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்றாண்டு இடைவேளையில் பிறந்தனர். [முன்பு எல்லாம் சுத்தமாக இருந்தது]” என்கிறார், நான்கு மகன்கள், நான்கு மகள்களை பெற்ற அவர். அவரது காலத்தில் கருத்தடை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதது பற்றியும், குழந்தை பெற்றெடுப்பது குறித்தும் அமைதி காப்பார்கள் என்கிறார்.

நுஹ்ஹில் உள்ள சமூக சுகாதார மையத்தில், மூத்த மருத்துவ அலுவலர் கோவிந்த் ஷரணும் அந்நாட்களை நினைவுக் கூர்கிறார். முப்பதாண்டுகளுக்கு முன்பு, குடும்ப கட்டுப்பாடு குறித்து இங்கு பேசுவதற்கு மக்கள் கூச்சப்படுவார்கள். இப்போது அப்படி இல்லை. ”குடும்பக் கட்டுப்பாடு பற்றி பேசினாலே முன்பெல்லாம் குடும்பத்தினர் கோபம் கொள்வார்கள். இந்த மியோ சமூகத்தில், இப்போது காப்பர் டி சாதனத்தை பெரியவர்களுக்கு தெரியாமல் பயன்படுத்த தம்பதிகள் விரும்புகின்றனர். இதுபற்றி மாமியாரிடம் தெரிவிக்க வேண்டாம் என பெண்கள் கேட்டுக் கொள்வார்கள்” என்கிறார் சரண்.

தேசிய சுகாதார குடும்ப நலன் கணக்கெடுப்பு-4 (2015-16) படி, நுஹ் மாவட்டத்தில் (கிராமப்புறம்) 15-49 வயதிலான திருமணமான பெண்களில் 13.5 சதவீதத்தினர் தான் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை பயன்படுத்துகின்றனர். நுஹ் மாவட்டத்தின் மொத்த கருவுறுதல் சதவிகிதம் 4.9 (2011 கணக்கெடுப்பு) ஒப்பிடும் போது ஹரியானா மாநிலத்தில் அது 2.1. நுஹ் மாவட்டத்தின் கிராமப்புறங்களில் 15-49 வயதிலான பெண்களில் 33.6 சதவீதத்தின் தான் படிப்பறிவு பெற்றவர்கள். 20-24 வயதிலான திருமணமான பெண்களில் கிட்டதட்ட 40 சதவீதம் பேர் 18 வயதிற்கு முன்பே திருமணமானவர்கள். 36.7 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்கின்றனர்.

நுஹ் மாவட்ட கிராமப்புறங்களில் வெறும் 1.2 சதவீத பெண்கள் மட்டுமே காப்பர் டி போன்ற உடலுக்குள் செலுத்தும் சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர். காப்பர் டி  போன்ற சாதனங்கள் அந்நியமாக பார்க்கப்படுவதே இதற்கு காரணம். “ஒருவரின் உடலில்  அந்நிய பொருளை செலுத்துவதே தங்களின் மதத்திற்கு புறம்பானது என அவர்கள் அடிக்கடி சொல்வார்கள்“ என்கிறார் நுஹ் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் துணை செவிலியர் சுனிதா தேவி.

Hadiyah (left) at her one-room house: 'We gather all the old women who wish to see a doctor. Then we walk along'. The PHC at Nuh (right), seven kilometres from Biwan
PHOTO • Sanskriti Talwar
Hadiyah (left) at her one-room house: 'We gather all the old women who wish to see a doctor. Then we walk along'. The PHC at Nuh (right), seven kilometres from Biwan
PHOTO • Sanskriti Talwar

ஹாதியா (இடது) தனது ஒற்றை அறை வீட்டில்: மருத்துவரை பார்க்க விழையும் அனைத்து வயோதிக பெண்மணிகளையும் ஒன்று திரட்டுவோம். பிறகு சேர்ந்து நடப்போம். நுஹ்ஹில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் (வலது), பிவானிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

NFHS-4 புள்ளிவிவரப்படி, அப்பெண்கள் குடும்ப கட்டுப்பாடு, கருத்தடை சாதனங்களை பயன்படுத்தாவிட்டாலும் குழந்தை பிறப்பிற்கு இடையே இடைவெளியை விரும்புவது அல்லது குழந்தை பெற்றுக் கொள்வதை நிறுத்தி வைப்பது 29.4 சதவீதமாக (கிராமப்புறங்களில்) உள்ளது.

சமூக, பொருளாதார காரணங்களால், நுஹ்ஹில் அதிக எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் இருப்பது குடும்ப கட்டுப்பாடு எப்போதும் இங்கு குறைவாக உள்ளதையே காட்டுகிறது. இதனால் தீர்வு காணப்படாத பிரச்னைகள் இங்கு அதிகம். கலாச்சார காரணிகளும் முக்கிய பங்காற்றுகின்றன. குழந்தைகள் இறைவனின் பரிசு என்ற அவர்கள் சொல்வார்கள் என்கிறார் ஹரியாணாவின் குடும்ப நல மருத்துவ அலுவலர் டாக்டர் ருச்சி (அவர் முதல் பெயரை மட்டுமே பயன்படுத்துகிறார்). கணவன் ஒத்தழைத்தால் தான் மனைவியால் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ள முடியும். காப்பர்-டி பற்றி பேசவே முடியாது. ஊசி மூலம் செலுத்தப்படும் கருத்தடையான அந்தரா அறிமுகம் செய்யப்பட்ட பிறகு நிலைமை இப்போது முன்னேறியுள்ளது. இந்த குறிப்பிட்ட முறையில் ஆண்களின் தலையீடு இல்லை. பெண்கள் தனியாக வந்து ஊசி போட்டுக் கொண்டு செல்கின்றனர்.

அந்தரா எனும் கருத்தடை ஊசி ஒரு முறை செலுத்தினால் மூன்று மாதங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. ஹரியாணாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஊசி மூலம் கருத்தடை செய்யும் முறையை 2017ஆம் ஆண்டு ஏற்ற முதல் மாநிலம் ஹரியாணா. இப்போது வரை 16,000க்கும் மேற்பட்ட பெண்கள் இவற்றை பயன்படுத்தியுள்ளனர் என்கிறது ஒரு செய்தி அறிக்கை. 2018-19ஆம் ஆண்டிற்குள் 18,000 பேரை அடையும் இலக்கில் 92.3 சதவீதம் பூர்த்தியாகியுள்ளது.

ஊசி மூலம் செய்யப்படும் கருத்தடை ஓரளவு மதநம்பிக்கைக்கு எதிராக இல்லாவிட்டாலும், குடும்பக் கட்டுப்பாட்டு சேவைகள் சிறுபான்மையின சமூகத்தினரிடையே சென்றடைவதில்லை. சுகாதாரப் பணியாளர்களின் வேறுபட்ட நடத்தைகள், சுகாதார வசதிக்காக அதிக நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியது போன்றவையும் பெண்கள் கருத்தடை குறித்த ஆலோசனையை பெற முடியாமல் தடுக்கிறது.

2013ஆம் ஆண்டில் CEHAT (மும்பையைச் சேர்ந்த சுகாதாரம் மற்றும் தொடர்புடைய கருத்துகள் குறித்த சந்தேகங்களுக்கான மையம்) நடத்திய ஆய்வில் , வெவ்வேறு சமூக பெண்களின் பார்வையில் சுகாதார வசதிகளில் மதம் சார்ந்த பாகுபாடுகள் உள்ளதாக சொல்கிறது. அவர்கள் சார்ந்த வகுப்பிற்கு ஏற்ப பாகுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  குடும்ப கட்டுப்பாட்டை தேர்வு செய்தல், தங்கள் சமூகம் பற்றிய எதிர்மறை கருத்துகள், பிரசவ அறைகளில் மோசமாக நடத்தப்படுவது போன்றவற்றை இஸ்லாமிய பெண்கள் அனுபவித்துள்ளனர்.

Biwan village (left) in Nuh district: The total fertility rate (TFR) in Nuh is a high 4.9. Most of the men in the village worked in the mines in the nearby Aravalli ranges (right)
PHOTO • Sanskriti Talwar
Biwan village (left) in Nuh district: The total fertility rate (TFR) in Nuh is a high 4.9. Most of the men in the village worked in the mines in the nearby Aravalli ranges (right)
PHOTO • Sanskriti Talwar

நுஹ் மாவட்டத்தில் உள்ள (இடது) பிவான் கிராமம்: மொத்த பிறப்பு விகிதம் அதிகபட்சமாக 4.9 என உள்ளது. பிவானில் உள்ள பெரும்பாலான ஆண்கள் ஆரவல்லி மலைத் தொடர்களுக்கு அருகில் உள்ள சுரங்கங்களில் தான் வேலை செய்தனர் (வலது)

CEHAT ஒருங்கிணைப்பாளர் சங்கீதா ரெஜி பேசுகையில், அரசின் திட்டங்களில் கூடை நிறைய கருத்தடை திட்டங்கள் உள்ளது தான் பிரச்சனையே. கருத்தடை என்பதை எல்லா சமூக பெண்களுக்கும் பொதுவானதாக சுகாதாரப் பணியாளர்கள் பார்க்கின்றனர். இஸ்லாமிய சமூக பெண்கள் சந்திக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஏற்ற கருத்தடை முறையை தேர்வு செய்வதற்கு ஆலோசனை அளிக்க வேண்டும்.

NFHS-4 (2015-16) புள்ளி விவரப்படி, நுஹ் கிராமப்புறங்களில் 7.3 சதவீதம் பெண்களை குடும்பக் கட்டுப்பாடு குறித்து ஆலோசிக்க சுகாதாரப் பணியாளர்கள் சந்தித்தாலும் கருத்தடை சாதனங்களை ஒருபோதும் அவர்கள் பயன்படுத்தவில்லை என்கிறது.

28 வயதாகும் ஆஷா பணியாளர் சுமன், கடந்த 10 ஆண்டுகளாக பிவானில் வேலை செய்கிறார். குடும்பக் கட்டுப்பாடு குறித்து பெண்களையே முடிவு எடுக்க சொல்லி விடுகிறோம். பிறகு அவர்களின் முடிவை எங்களிடம் தெரியப்படுத்துவார். சுகாதாரத் திட்டங்கள் சென்றடைவதற்கு அப்பகுதியின் மோசமான உள்கட்டமைப்பு தடையாக உள்ளது என்கிறார் சுமன். இது பெண்களை குறிப்பாக முதியவர்களை அதிகம் பாதிக்கிறது.

“நுஹ்ஹில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அடைவதற்கு ஆட்டோ பிடிக்க நாங்கள் மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டும்“ என்று சொல்லும் சுமன், “குடும்பக் கட்டுப்பாடு, உடல் சார்ந்த எந்த தொந்தரவிற்கும் இங்கு யாரையும் வரவழைப்பது மிகவும் கடினமானது. அவர்கள் நடப்பதற்கு அலுத்துக் கொள்கின்றனர். நான் உதவியின்றி தவிக்கிறேன்.” என்கிறார்.

பத்தாண்டுகளாகவே இங்கு இப்படித்தான் நடக்கிறது, எதுவும் பெரிதாக மாறவில்லை என்கிறார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கிராமத்தில் வசிக்கும் பஹர். அவரது ஏழு குழந்தைகள் குறை பிரசவத்தில் இறந்துள்ளன. அதை தொடர்ந்து பிறந்த ஆறு பிள்ளைகள் உயிர் பிழைத்தன. “அப்போது மருத்துவமனைகள் கிடையாது“ என்கிறார் அவர். “இப்போதும் எங்கள் கிராமத்தில் சுகாதார மையம் கிடையாது.”

முகப்பு ஓவியம்: ப்ரியங்கா போரர் தொழில்நுட்பத்தில் பல விதமான முயற்சிகள் செய்வதன் மூலம் புதிய பொருட்களையும் வெளிப்பாடுகளையும் கண்டடையும் நவீன ஊடக கலைஞர். கற்றுக் கொள்ளும் நோக்கிலும் விளையாட்டாகவும் அவர் அனுபவங்களை வடிவங்களாக்குகிறார், அதே நேரம் பாரம்பரியமான பேப்பர் பேனாவிலும் அவரால் செயல்பட முடியும்

பாப்புலேஷன் ஃபுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் ஆதரவுடன் பாரி மற்றும் கவுண்டர் மீடியா டிரஸ்ட்டின் இந்த தேசிய அளவிலான செய்தி சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பதின் வயது மற்றும் இளம் பெண்களின் வாழ்வியலை அவர்களது குரல்கள் மற்றும் அனுபவங்களின் வாயிலாக பதிவு செய்வதே இதன் நோக்கம்.

இக்கட்டுரையை மீண்டும் பிரசுரிக்க வேண்டுமா? [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் எழுதி அனுப்புங்கள்.

தமிழில்: சவிதா

Anubha Bhonsle

अनुभा भोंसले एक स्वतंत्र पत्रकार हैं, और साल 2015 की पारी फ़ेलो रह चुकी हैं. वह आईसीएफ़जे नाइट फ़ेलो भी रही हैं, और मणिपुर के इतिहास और आफ़्स्पा के असर के बारे में बात करने वाली किताब ‘मदर, व्हेयर्स माई कंट्री’ की लेखक हैं.

की अन्य स्टोरी Anubha Bhonsle
Sanskriti Talwar

संस्कृति तलवार, नई दिल्ली स्थित स्वतंत्र पत्रकार हैं और साल 2023 की पारी एमएमएफ़ फेलो हैं.

की अन्य स्टोरी Sanskriti Talwar
Illustration : Priyanka Borar

प्रियंका बोरार न्यू मीडिया की कलाकार हैं, जो अर्थ और अभिव्यक्ति के नए रूपों की खोज करने के लिए तकनीक के साथ प्रयोग कर रही हैं. वह सीखने और खेलने के लिए, अनुभवों को डिज़ाइन करती हैं. साथ ही, इंटरैक्टिव मीडिया के साथ अपना हाथ आज़माती हैं, और क़लम तथा कागज़ के पारंपरिक माध्यम के साथ भी सहज महसूस करती हैं व अपनी कला दिखाती हैं.

की अन्य स्टोरी Priyanka Borar
Series Editor : Sharmila Joshi

शर्मिला जोशी, पूर्व में पीपल्स आर्काइव ऑफ़ रूरल इंडिया के लिए बतौर कार्यकारी संपादक काम कर चुकी हैं. वह एक लेखक व रिसर्चर हैं और कई दफ़ा शिक्षक की भूमिका में भी होती हैं.

की अन्य स्टोरी शर्मिला जोशी
Translator : Savitha

Savitha is a Thanjavur based translator. She had worked as a journalist with several leading Tamil News Channels for about seven years before turning into a fulltime translator in 2015.

की अन्य स्टोरी Savitha