ரபீக் பாபாபாய் ஷேக் தங்கத்தை பார்த்தவுடனே அளவிட்டு விடுகிறார். “என் கையில் ஒரு தங்க நகையை வைத்தால் எவ்வளவு கேரட் பெறுமானம் உள்ளது என்று உடனே சொல்லிவிடுவேன்.” என்கிறார். “நான் ஜோஹரி (நகை செய்பவர்-தட்டான்) ஆக்கும்.” என்கிறார் அவர். புனே-சத்தாரா நெடுஞ்சாலையில் உள்ள பாட்வி கிராமத்தில் நின்றபடி அவர் பேசுகிறார். இங்கே மீண்டும் அவர் பொன்மகளை கண்டுவிட்டதாகவே தோன்றுகிறது.
புனேவின் தவுன்ட் தாலுகா வழியாக நாங்கள் பயணம் செய்துகொண்டிருந்த பொழுது புனே மாவட்ட விளிம்பில் அதை நாங்கள் கடந்தோம். பளீரெண்டு காட்சியளிக்கும் குடிசை போன்ற ஒரு அமைப்பாக அது தெரிந்தது. பச்சை, சிவப்பு நிறங்களில ‘ஹோட்டல் செல்பி’ என்று அது தன்னைத்தானே பறைசாற்றிக் கொண்டது. அங்கே வண்டியை நிறுத்தினோம்.
“என் மகனுக்காக தான் இந்த உணவகத்தை துவங்கினேன். நான் நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறேன். இதில் ஏன் அவனுக்காக இறங்கிப்பார்க்க கூடாது என்று யோசித்தேன். இந்த நெடுஞ்சாலையில் மக்கள் தேநீர், உணவுக்காக நிற்கிறார்கள்.” என்கிறார் ரபீக். மற்ற நெடுஞ்சாலை கடைகளை போல இல்லாமல், சாலையின் விளிம்பில் கடையை அமைக்காமல் தள்ளியே கடையை வைத்திருக்கிறார். மக்கள் வண்டியை நிறுத்தவும், எடுக்கவும் வசதியாக இந்த ஏற்பாடு என்று ரபீக் தெரிவிக்கிறார்.
ரபீக் ஷேக், உணவக முதலாளி, ஆபரண கைவினைஞர். இல்லை, இது செல்பி இல்லை!
இந்த உணவகத்தின் பெயரான செல்பி பலரை அதை நோக்கி ஈர்க்கும் என்று சொன்னதும் அகமகிழ்ந்து போகிறார். சத்தாராவில் ஒரு கூட்டத்துக்கு அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்த எங்களை அந்த உணவகத்தின் பெயரே ஈர்த்தது என்று சொன்னதும், “நான் அப்பவே சொன்னேன் இல்லை! பார்த்துக்கோ மகனே!” என்பது போல தன்னுடைய மகனிடம் கண்களாலே கதை பேசுகிறார் ரபீக். ரபீக்கே இந்த பெயரை தேர்வு செய்தார்.
ரபீக் தன்னுடைய சிறிய உணவகத்தின் முன் செல்பி எடுப்பது போன்ற படத்தை நாங்கள் கிளிக் செய்யவில்லை. அது நீங்கள் எதிர்பார்த்தபடியே சலிப்பான ஒன்றாக இருந்திருக்கும். அது முதன்முதலில் ஒரு உணவகத்துக்கு ‘செல்பி’ என பெயர் சூட்டிய அவரின் சாதுரியத்தை கவனப்படுத்தாமல் போகக்கூடும். நாங்கள் பார்த்தவரை தன்னுடைய உணவகத்துக்கு ‘செல்பி’ என முதன்முதலில் பெயரிட்டவர் அவர்தான். (கிராமப்புற இந்தியாவில் பெரும்பாலான உணவகங்கள், உண்ணும் இடங்கள், தாபாக்கள், டீக்கடைகள் எல்லாவற்றுக்கும் ‘ஹோட்டல்’ என்றே பெயர் சூட்டப்பட்டிருப்பதை கவனத்திருக்கலாம்.)
இந்த உணவகம் திறக்கப்பட்டதும் பயணிகள், சுற்றுலாவாசிகள் செல்பி எடுக்க அலைமோத போகிறார்கள். தின்பண்டங்களை விட செல்பிக்காகவே அவர்கள் வரப்போகிறார்கள். இந்த கடையின் தேநீரை நீங்கள் மறந்துவிடலாம், ஆனால், இங்கே வந்ததன் நினைவாக ஒரு செல்பியை நிச்சயம் எடுத்துக்கொள்வீர்கள். Great old Eagles' பாடல் வரிகளான: வேண்டும் பொழுது நீ போகலாம், ஆனால் நீ விட்டுப்பிரிய முடியாது! நினைவுக்கு வருகிறது.
ரபீக் ஷேக்கின் ஹோட்டல் செல்பியை கூட்டத்தால் நிரம்பி வழியப்போகிறது. ரபீக் தங்கத்தை கண்டுகொள்வதில் விற்பன்னர் இல்லையா?