ரொம்ப காலத்துக்கு முன் கூட இல்லை. மகாராஷ்டிராவின் கொல்ஹாப்பூர் மாவட்ட ஹத்கனங்க்ளே தாலுகாவின் கோச்சி கிராம விவசாயிகள், ஒரு ஏக்கர் நிலத்தில் யார் அதிகமாக கரும்பு விளைவிப்பது என்பதில் போட்டி போட்டனர். அச்சடங்கு 60 வருட பழமையானது எனக் கூறுகின்றனர் கிராமவாசிகள். அனைவருக்கும் அற்புதமான பலன்களை அளிக்கக்கூடிய ஆரோக்கியமான போட்டி அது. சில விவசாயிகள் வழக்கமான அறுவடையை விட 1.5 மடங்கு அதிகமாக 80,000லிருந்து 100,000 கிலோ வரை விளைவித்திருக்கிறார்கள்.
ஆனால் அந்த பழமையான பாரம்பரியத்தை, 2019ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் கிராமத்தின் பல பகுதிகளை பாதித்த வெள்ளம் தடுத்து நிறுத்தியது. கிராமத்தின் பல பகுதிகள் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு நீரில் மூழ்கியிருந்தது.கரும்பு பயிர் பாதிப்பைக் கண்டது. இரண்டு வருடங்கள் கழித்து ஜூலை 2021-ல் கனமழையும் வெள்ளமும் மீண்டும் பெரிய அளவிலான அழிவை கோச்சியின் கரும்பு மற்றும் சோயாபீன் பயிர்களுக்கு விளைவித்தது.
“இப்போது விவசாயிகள் போட்டி போடுவதில்லை. பதிலாக கரும்பு பயிரில் பாதியாவது தங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றனர்,” என்கிறார் 42 வயது கீதா பாடில். கோச்சியில் வசிக்கும் குத்தகை விவசாயி அவர். ஒருகாலத்தில் கரும்பு உற்பத்தியை பெருக்குவதற்கான எல்லா நுட்பங்களையும் கற்றுக் கொண்டு விட்டதாக நம்பிய கீதா, இரண்டு வெள்ளங்களிலும் 8 லட்சம் கிலோவுக்கும் அதிகமான கரும்பை இழந்திருக்கிறார். “ஏதோவொன்று தப்பாகிவிட்டது,” என்கிறார் அவர். காலநிலை மாற்றத்தை அவர் யோசிக்கவில்லை.
”கனமழை பாணி முற்றிலும் (2019 வெள்ளத்திலிருந்து) மாறிவிட்டது,” என்கிறார் அவர். 2019 வரை அவர் ஒரு முறையை பின்பற்றினார். ஒவ்வொரு கறும்பு அறுவடைக்கும் பிறகு, அக்டோபர் - நவம்பர் காலத்தில், சோயாபீன், வேர்க்கடலை, நெல்லின் வகைகள், மரபின சோளம் ல்லது கம்பு போன்றவற்றை விதைத்து, மண் சத்து சேரச் செய்வார். அவரின் வாழ்க்கைக்கும் வேலைக்கும் என நிலையான பரிச்சயப்பட்ட ஒரு ஓர்மை இருந்தது. இனி அது கிடையாது.
“”இந்த வருட (2022) பருவ மழை ஒரு மாதம் தாமதித்து வந்தது. மழை பொழியத் தொடங்கி ஒரு மாதத்துக்குள் நிலங்களுக்குள் வெள்ளம் வந்துவிட்டது.” ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் பெரும் நிலங்கள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு நீருக்கடியில் இருந்தன. அதிக நீர் பயிரின் வளர்ச்சியை தடுத்து அழிவை கொடுத்ததால், கரும்பு விதைத்திருந்த விவசாயிகள் பெரும் நஷ்டங்களை சந்தித்தனர். நீர்மட்டம் அதிகமானால் வீடுகளை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு பஞ்சாயத்து அழைப்பு கூட விடுத்தது.
நல்லவேளையாக ஒரு ஏக்கரில் கீதா விளைவித்திருந்த நெல் தப்பித்தது. நல்ல அறுவடைக்கும் அக்டோபர் மாதத்தில் நல்ல வருமானத்துக்கும் அவர் காத்திருந்தார். ஆனால் அக்டோபர் மாதம் எதிர்பாராத மழைகளை (இப்பகுதி மக்கள் அதை மேகவிரிசல் எனக் குறிப்பிடுகின்றனர்) கொண்டு வந்தது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கை யின்படி, கொல்ஹாப்பூர் மாவட்டத்தில் மட்டும் 78 கிராமங்களில் கிட்டத்தட்ட 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவுக்குள்ளாகி இருக்கிறது.
“பாதி நெல் விளைச்சலை நாங்கள் இழந்தோம்,” என்கிறார் கீதா. கனமழையைத் தாண்டியும் நின்ற கரும்புகளில் அறுவடை குறைவாக இருந்தது. அவரின் துன்பங்கள் முடிந்துவிடவில்லை. “குத்தகை விவசாயிகளாக நாங்கள் 80 சதவிகித விளைச்சலை நிலவுரிமையாளருக்கு தர வேண்டும்,” எனச் சுட்டிக் காட்டுகிறார் அவர்.
கீதாவும் அவரது குடும்பமும் நான்கு ஏக்கர் நிலத்தில் கரும்பு விதைத்தனர். வழக்கமான நேரங்களில் விளைச்சல் குறைந்தபட்சம் 320 டன்கள் கிடைக்கும். அதில் 64 டன்களை அவர்கள் வைத்துக் கொண்டு மிச்சத்தை நிலவுரிமையாளரிடம் கொடுத்து விடுவார்கள். 64 டன் என்பது கிட்டத்தட்ட 1,79,200 ரூபாய். 15 மாதம் குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களும் கடினமாக உழைத்து ஈட்டும் தொகை அது. உற்பத்தி செலவை மட்டும் செய்யும் நிலவுரிமையாளர் மிச்ச 7,16,800 ரூபாய் எடுத்துக் கொள்வார்.
2019 மற்றும் 2021ம் ஆண்டுகளில் மொத்த கரும்பு விளைச்சலையும் மழை வெள்ளம் அழித்த பிறகு, கீதாவின் குடும்பத்துக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. கரும்பு விதைத்த உழைப்புக்குக் கூட அவர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை.
கரும்புகள் கொடுத்த நஷ்டங்களைத் தாண்டி, 2019ம் ஆண்டு வெள்ளங்களின்போது ஒரு பாதி வீடு நொறுங்கியதில் அவர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர். “அதை சரிசெய்ய கிட்டத்தட்ட 25,000 ரூபாய் செலவானது,” என்கிறார் கீதாவின் கணவரான தானாஜி. “அரசாங்கம் வெறும் 6,000 ரூபாய்தான் நஷ்ட ஈடு கொடுத்தது.” வெள்ளங்களுக்கு பிறகு அதீத பதற்றம் தானாஜிக்கு இருப்பது கண்டறியப்பட்டது.
மீண்டும் அவர்களது வீட்டை 2021ம் ஆண்டு வெள்ளம் சேதப்படுத்தியது. பக்கத்து ஊருக்கு எட்டு நாட்கள் சென்று அவர்கள் வசிக்க வேண்டியிருந்தது. இம்முறை வீட்டை சரி செய்ய அவர்களிடம் பணம் இல்லை. “இப்போது கூட நீங்கள் சுவர்களை தொட்டால் சரிந்துவிடும்,” என்கிறார் கீதா.
அகச்சிக்கல் வெகுசமீபமாகதான் நேர்ந்திருக்கிறது. “மழை பெய்து கூரையில் நீர் ஒழுகும்போதெல்லாம், ஒவ்வொரு துளியும் வெள்ளத்தை எனக்கு நினைவுபடுத்தும்,” என்கிறார் அவர். “அக்டோபரில் (2022) கனமழை பெய்தபோது என்னால் ஒரு வாரத்துக்கு சரியாகத் தூங்க முடியவில்லை.”
1,60,000 மதிப்பிலான இரு மெஹ்சானா எருமைகளையும் குடும்பம் 2021ம் ஆண்டின் வெள்ளங்களில் இழந்தது. “பால் விற்று வரும் அன்றாட வருமானமும் பறிபோனது,” என்கிறார் அவர். 80,000 ரூபாய்க்கு ஒரு ஜோடி எருமைகளை வாங்கினார்கள். “உங்களுக்கு போதுமான அளவுக்கு வேலை நிலத்தில் (வெள்ளத்தால்) கிடைக்கவில்லை எனில், மாட்டுப் பால் மட்டும்தான் வருமானத்துக்கான ஒரே வழி,” என சிரமத்தினூடாக மாடுகள் வாங்கியதற்கான காரணத்தை அவர் விளக்குகிறார். விவசாயத் தொழிலாளராகவும் பணிபுரிய அவர் முயலுகிறார். ஆனால் வேலை ஏதுமில்லை.
கீதாவும் தானாஜியும் 2 லட்ச ரூபாய் வரை சுய உதவிக் குழுக்கள், தனியார் வட்டிக்கடைக் காரர்கள் உள்ளிட்ட பல இடங்களில் கடனாக வாங்கியிருக்கின்றனர். வெள்ளத்தால் விளைச்சல் தொடர்ந்து ஆபத்தில் இருப்பதால், அவர்கள் வாங்கியக் கடனை திரும்ப அடைக்க முடியுமா என அவர்களுக்கு தெரியவில்லை. வட்டி கூடும்.
மழை, அறுவடை மற்றும் வருமானம் ஆகியவற்றில் இருக்கும் நிச்சயமற்றதன்மை கீதாவின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
“ஜூலை 2021ம் ஆண்டின் வெள்ளங்களுக்குப் பிறகு தசை பலவீனம், மூட்டு இறுக்கம், மூச்சுத்திணறல் போன்றவற்றை உணரத் தொடங்கினேன்,” என்கிறார் அவர். காலப்போக்கில் சரியாகி விடுமென்ற நம்பிக்கையில் நான்கு மாதங்களாக அவர் அறிகுறிகளை பொருட்படுத்தவில்லை.
“ஒருநாள் மிகவும் முடியாமல் போய் மருத்துவரிடம் சென்றேன்,” என்கிறார் அவர். ஹைபர் தைராய்டு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவரின் மன அழுத்தம் நோயை மோசமடைய வைப்பதாக மருத்துவர் கூறினார். ஒரு வருடமாக மாதந்தோறும் மருந்துகளுக்கு அவர் 1,500 ரூபாய் செலவு செய்கிறார். அடுத்த 15 மாதங்களுக்கு சிகிச்சை தொடரும்.
கொல்ஹாப்பூரில் வெள்ளம் பாதித்த சிகாலி கிராமத்தின் சுகாதாரத்துறை அதிகாரியாக இருக்கும் டாக்டர் மாதுரி பன்ஹல்கலர் சொல்கையில், அதிகரிக்கும் எண்ணிக்கையில் இங்குள்ள மக்கள் வெள்ளத்தால் ஏற்பட்ட துயரம் குறித்தும் அதிகரிக்கும் பொருளாதார மற்றும் அகரீதியான அழுத்தம் குறித்தும் பேசுகின்றனர் என்கிறார். நீர் மட்டம் உயர்ந்தால் மூழ்கும் முதல் கிராமம் கர்விர் தாலுகாவிலேயே இதுதான்.
கேரளாவின் 2019ம் ஆண்டு வெள்ளம் பாதித்த ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 374 குடும்பத் தலைவர்களை சந்தித்து நான்கு மாதங்களுக்கு பின் ஒரு கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதிகமாக அனுபவிக்கப்பட்ட கையறுநிலையை (முதலில் ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக மீண்டும் அதே போல் நேரும் ஓர் எதிர்மறையான சூழலை அமைதியாக ஏற்பது) ஒரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரைக் காட்டிலும் அவர்கள் அதிகம் வெளிப்படுத்துவதாகக் கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது.
“எதிர்மறையான உளவிளைவுகள், பேரிடர்களால் தொடர்ந்து பாதிக்கப்படுவோருக்கு ஏற்படாமலிருக்கு தனிப்பட்ட கவனம் கொடுக்கப்பட வேண்டும்,” என ஆய்வு முடிகிறது.
கொல்ஹாப்பூரின் கிராமங்களில் - சொல்லப்போனால் கிராமப்புற இந்தியாவில் வசிக்கும் 83 கோடியே 30 லட்சம் பேருக்கும் கூட, மனநல மருத்துவத்தை எட்டுவது சுலபமான காரியம் அல்ல. “மனநலச் சிக்கல்கள் கொண்ட நோயாளிகளை மாவட்ட மருத்துவமனைக்கு நாங்கள் அனுப்புகிறோம். ஆனால் அனைவராலும் அவ்வளவு தூரம் செல்ல முடிவதில்லை,” என்கிறார் டாக்டர் பன்ஹல்கர்.
கிராமப்புற இந்தியாவில் 764 மாவட்ட மருத்துவமனைகளும் 1,224 துணை மாவட்ட மருத்துவமனைகளும் (கிராமப்புற சுகாதார புள்ளிவிவரம் 2020-21) இருக்கின்றன. அங்குதான் மனநல மருத்துவர்களும் மனநல ஆலோசகர்களும் நியமிக்கப்படுவர். “துணை மையத்தில் இல்லையென்றாலும் ஆரம்ப சுகாதார மையத்திலாவது மனநல மருத்துவப் பணியாளர்கள் இருக்க வேண்டும்,” என்கிறார் மருத்துவர். 2017ம் ஆண்டு வெளியான உலக சுகாதார நிறுவன அறிக்கை யின்படி 1 சதவிகிதத்துக்கும் குறைவான (0.07) மனநல மருத்துவர்தான் 1 லட்சம் இந்தியர்களுக்கு இருக்கிறார்கள்.
*****
62 வயது ஷிவ்பாய் காம்ப்ளே நகைச்சுவை உணர்வுக்கு அர்ஜுன்வாடில் பெயர் பெற்றவர். “முகத்தில் புன்னகையுடன் பணிபுரியும் ஒரே விவசாயத் தொழிலாளர் அவர்தான்,” என்கிறார் கொல்ஹாப்பூரின் சுகாதாரச் செயற்பாட்டாளரான ஷுபாங்கி காம்ப்ளே
2019 வெள்ளம் நேர்ந்த மூன்று மாதங்களிலேயே அவருக்கு அதீத பதற்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டது. “கிராமத்தில் உள்ள அனைவரும் ஆச்சரியத்துக்குள்ளாகினர். குறிப்பாக அவர் எப்போதும் பதற்றம் கொள்ள மாட்டார் என்பதே ஆச்சரியத்துக்கான காரணமாக இருந்தது,” என்கிறார் சுகாதாரச் செயற்பாட்டாளரான ஷுபாங்கி. அவருக்கு எப்படி இந்த நோய் நேர்ந்தது என்பதை கண்டறிய ஷுபாங்கி முனைந்தார். பிறகுதான் 2020ம் ஆண்டில் ஷிவ்பாயுடன் விரிவான உரையாடல் அவருக்கு நேர்ந்தது.
“முதலில் அவரின் பிரச்சினைகளை சொல்லவில்லை. எப்போதுமே புன்னகைத்துக் கொண்டிருந்தார்,” என நினைவுகூருகிறார் ஷுபாங்கி. எனினும் கிறுகிறுப்பும் காய்ச்சலும் அவருக்கு அடிக்கடி நேரத் தொடங்கியதும் ஆரோக்கியத்தில் இருக்கும் பிரச்சினை தெரிய வந்தது. பல மாதங்கள் நடந்த உரையாடலின் முடிவாக, தொடர்ந்து ஏற்படும் வெள்ளங்கள்தான் அவரின் நிலைக்கு காரணம் என சுகாதாரச் செயற்பாட்டாளர் கண்டுபிடித்தார்.
செங்கற்களாலும் காய்ந்த கரும்பு இலை, சோளம் மற்றும் வைக்கோல் ஆகியவற்றால் கட்டப்பட்ட ஷிவ்பாயின் வீடு 2019ம் ஆண்டு வெள்ளத்தால் சேதத்துக்குள்ளானது. பிறகு அவரது குடும்பம், வெள்ளத்தையும் தாண்டி நீடிக்குமென்ற நம்பிக்கையில் ஒரு தகரக் கூரை போட்ட குடிலை 1,00,000 ரூபாய் செலவழித்துக் கட்டினர்.
குடும்பத்தின் வருமானத்தில், வேலைநாட்கள் குறைந்ததால் நேர்ந்த தொடர் சரிவும் பிரச்சினையை இன்னும் மோசமாக்கியது.செப்டம்பர் நடுவே தொடங்கி 2022ம் ஆண்டின் அக்டோபர் இறுதி வரை, வயல் வேலை எதுவும் ஷிவ்பாய்க்குக் கிடைக்கவில்லை. நிலங்கள் நீரில் மூழ்கிக் கிடந்தன. மேலும் பயிர் நாசமானதில் வேலைக்கு ஆள் அமர்த்த விவசாயிகளுக்கும் முடியவில்லை.
“இறுதியாக தீபாவளிக்கு (அக்டோபரின் கடைசி வாரம்) முந்தைய மூன்று நாட்கள் வேலை பார்த்தேன். ஆனால் மீண்டும் மழை வந்து அந்த வேலையையும் பறித்துக் கொண்டது,” என்கிறார் அவர்.
வருமானம் சரியாக இல்லாததால், ஷிவ்பாயால் சிகிச்சையைத் தொடர முடியவில்லை. “பல நேரங்களின் நான் மருந்துகளை பணமில்லாத காரணத்தால் தவிர்த்திருக்கிறேன்,” என்கிறார் அவர்.
அர்ஜுன்வாடின் சுகாதார அதிகாரியான டாக்டர் ஏஞ்சலினா பேக்கர் சொல்கையில், அதீத பதற்றம், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை கடந்த மூன்று வருடங்களில் அதிகரித்திருப்பதாக சொல்கிறார். 2022ம் ஆண்டில் மட்டும், 5,641 பேர் (கணக்கெடுப்பு 2011) வசிக்கும் அர்ஜுன்வாடிலிருந்து மட்டும் நீரிழிவு மற்றும் அதீத பதற்ற நோய் 255 பேருக்கு பாதித்ததாக சொல்கிறார்.
“உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். பலர் பரிசோதனைக்கு முன் வருவதில்லை,” என்கிறார் அவர். தொற்றா நோய் பாதிப்பு எண்ணிக்கை கூடுவதற்கு, வெள்ளங்கள் ஏற்படுத்தும் அழுத்தமும் குறையும் வருமானமும் சத்துக் குறைபாடும்தான் காரணங்கள் என்கிறார். (உடன் படிக்க: கொல்ஹாப்பூரில் சுகாதாரச் செயற்பாட்டாளர் சொல்லும் துயரக் கதை ).
“வெள்ளம் பாதித்த பல பகுதிகளின் முதியோர் பலர் தற்கொலை மனநிலையில் உழலுகின்றனர். எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது,” என்கிறார் மருத்துவர் பேக்கர். தூக்கமின்மை பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிப்பதாக சொல்கிறார்.
விவசாயத் தொழிலாளராகவும் குத்தகை விவசாயிகளாகவும் பணிபுரியும் பெற்றோரின் மகனும் அர்ஜுன்வாடைச் சேர்ந்த பத்திரிகையாளரும் ஆய்வுப் படிப்பு படிப்பவருமான சைதன்யா காம்ப்ளே சொல்கையில், “தவறாக வகுக்கப்பட்டக் கொள்கைகளாலும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பு விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் குத்தகை விவசாயிகள் மீதுதான் விழுகிறது. ஒரு குத்தகை விவசாயி, விளைச்சலின் 75-80 சதவிகிதத்தை நிலவுரிமையாளருக்குக் கொடுக்கிறார். வெள்ளம் எல்லாவற்றையும் அழித்து விட்டால், நிவாரணம் பெறுவதும் நிலவுரிமையாளர்தான்,” என்கிறார்.
கிட்டத்தட்ட அர்ஜுன்வாடின் எல்லா விவசாயிகளும் தங்களின் பயிர்களை வெள்ளத்துக்கு இழக்கின்றனர். “மீண்டும் ஒரு நல்ல விளைச்சல் கிடைக்கும் வரை, வெள்ளத்தில் பயிர்கள் பறிபோன சோகம் மறைவதில்லை. ஆனால் வெள்ளங்கள் எங்கள் பயிர்களை தொடர்ந்து அழித்து வருகிறது,” என்கிறார் சைதன்யா. “இவற்றால் ஏற்படும் அழுத்தத்தை கட்ட முடியாமல் அதிகமாகும் கடன்கள் இன்னும் கூட்டுகிறது.”
மகாராஷ்டிரா அரசாங்கத்தின் விவசாயத்துறையின்படி, 2022ம் ஆண்டின் ஜூலையிலிருந்து அக்டோபர் மாதம் வரை இயற்கைப் பேரிடர்களால் 24.68 லட்ச ஹெக்டேர் நிலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் 22 மாவட்டங்களில் 7.5 லட்ச ஹெக்டேர் நிலம் பாதிக்கப்பட்டது. அக்டோபர் 28, 2022 வரை மாநிலத்தில் 1,288 மிமீ மழை பெய்துள்ளது. சராசரி மழைப்பொழிவைக் காட்டிலும் 120.5 சதவிகிதம் அதிகம். அதிலும் 1,068 மிமீ மழை ஜூன் மாதத்திலிருந்து அக்டோபர் வரை பெய்துள்ளது. (உடன் படிக்க: மழை பெய்தால், துயரத்தைப் பொழிகிறது )
பம்பாயின் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் சிவில் எஞ்சினியரிங் பேராசிரியராகவும் உலக நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான காலநிலை மாற்றக் குழுவின் அறிக்கைக்கு பங்களிப்பவருமான சுபிமால் கோஷ் சொல்கையில், “காலநிலை விஞ்ஞானிகளான நாங்கள் கணிப்புகளை மேம்படுத்துவது குறித்து பேசுகிறோம். ஆனால் காலநிலைக் கணிப்புகளை சரியான கொள்கை முடிவுகளாக மாற்றுவதில் நாங்கள் தோற்றுக் கொண்டே இருக்கிறோம்,” என்கிறார்.
துல்லியமாக கணிப்பதில் இந்திய வானிலை மையம் சிறப்பாக மேம்பட்டிருக்கிறது என்கிறார் அவர். “எனினும் அதை கொள்கை முடிவுகளாக மாற்ற அவர்களால் முடிவதில்லை.”
விவசாயிகளின் பிரச்சினைகளை சரியாக புரிந்து கொண்டு, காலநிலை நிச்சயமின்மைக்கு சரியான எதிர்வினை வகுக்கவென பங்குபெறும் பாணியிலான ஒரு மாதிரியை பேராசிரியர் கோஷ் முன்வைக்கிறார். “வெள்ளத்துக்கான வரைபடம் தயாரிப்பது மட்டுமே பிரச்சினையை தீர்த்துவிடாது,” என்கிறார் அவர்.
“நம் நாட்டைப் பொறுத்தவரை, தகவமைப்பு மிக மிக முக்கியம். ஏனெனில் காலநிலை மாற்றத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் தன்மை பெரும்பான்மையான மக்கள்தொகைக்குக் கிடையாது,” என்கிறார் அவர். “தகவமைப்பை நாம் வலுப்படுத்த வேண்டும்.”
*****
45 வயது பார்தி காம்ப்ளேவின் உடல் எடை பாதியாக குறைந்தபோதுதான் ஏதோ பிரச்சினை இருப்பதை அவர் உணர்ந்தார். அர்ஜுன்வாடில் வசித்து வந்த விவசாயத் தொழிலாளரைச் சென்று மருத்துவரைப் பார்க்கச் சொன்னார் சுகாதார செயற்பாட்டாளரான ஷுபாங்கி. அவருக்கு மார்ச் 2020-ல் ஹைபர் தைராய்டு கண்டறியப்பட்டது.
கீதா மற்றும் ஷிவ்பாய் போலவே பார்தியும் வெள்ளத்தால் ஏற்பட்ட அழுத்தம் கொடுத்த ஆரம்ப அறிகுறிகளை பொருட்படுத்தவில்லை. “2019 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நேர்ந்த வெள்ளத்தில் எங்களின் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். நிவாரண முகாமிலிருந்து நான் திரும்பியபோது ஒரு தானியத்தைக் கூட பார்க்க முடியவில்லை. வெள்ளத்தில் எல்லாமே போய்விட்டது,” என்கிறார் அவர்.
2019ம் ஆண்டு வெள்ளத்துக்குப் பிறகு சுய உதவி குழுக்கள் மற்றும் வட்டிக்காரர்கள் ஆகிய இடங்களிலிருந்து 3 லட்ச ரூபாய் கடன் பெற்று அவர் வீட்டை மீண்டும் கட்டினார். வட்டி ஏறுவதை தவிர்க்க, 16 மணி நேரங்கள் வேலை பார்க்க வேண்டுமென்பதுதான் திட்டம். ஆனால் மார்ச் - ஏப்ரல் 2022-ல் ஷிரோல் தாலுகா கிராமங்களில் நேர்ந்த வெப்ப அலைகள் அவருக்கு பெரும் பின்னடைவை தந்தது.
“சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து என்னைக் காத்துக்கொள்ள ஒரே ஒரு பருத்தி துண்டுதான் இருந்தது,” என்கிறார் அவர். அதனால் பெரிய பயனில்லை. விரைவிலேயே அவர் கிறுகிறுப்பு உணரத் தொடங்கினார். விடுப்பு எடுக்க வாய்ப்பில்லாததால் தற்காலிக நிவாரணத்துக்காக அவர் வலி நிவாரணிகள் எடுத்துக் கொண்டார். அப்போதுதான் வயல்களில் தொடர்ந்து வேலை பார்க்க முடியும்.
அடுத்த பருவகாலத்தில் அபரிமிதமான பயிர்களுடன் நிறைய வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். “ஆனால் மூன்று மாதங்களில் (ஜூலை 2022 தொடங்கி) 30 நாட்களுக்குக் கூட எனக்கு வேலை கிடைக்கவில்லை,” என்கிறார் அவர்.
எதிர்பாராத மழைப்பொழிவு பயிர்களை அழிப்பதால், கொல்ஹாப்பூரின் வெள்ளம் பாதித்த பகுதிகளின் விவசாயிகள் செலவை குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். “விவசாயத் தொழிலாளர்களுக்கு பதிலாக களைகொல்லிகளை பயன்படுத்துகின்றனர்,” என்கிறார் சைதன்யா. “விவசாயத் தொழிலாளருக்கான கூலி 1,500 ரூபாய் ஆகும் நிலையில், களைகொல்லி 500 ரூபாய்க்கும் குறைவாக இருக்கிறது.”
இதனால் பல கொடும் விளைவுகள் நேர்ந்தன. தனிப்பட்ட அளவில், பொருளாதார ரீதியாக சிக்கல்கள் கொண்டிருக்கும் பார்தி போன்றோருக்கு வேலையிழப்பு பெரும் சிக்கல். பாதுகாப்பின்மை கொடுத்த கூடுதல் கவலை அவரது ஹைபர் தைராய்டு நோயை இன்னும் மோசமாக்கியது.
நிலத்துக்கும் பாதிப்பு இருக்கிறது. ஷிரோலின் விவசாயத்துறை அதிகாரி ஸ்வப்னிதா படல்கர் சொல்கையில், தாலுகாவின் 9,402 ஹெக்டேர் நிலத்தில் 2021ம் ஆண்டு உப்புத்தன்மை கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடுகளில் கட்டுப்பாடின்மை, முறையற்ற பாசன முறைகள், ஒரே வித பயிர் விதைப்பு போன்றவை இதற்குக் காரணங்கள் என்கிறார் அவர்.
2019ம் ஆண்டின் வெள்ளங்களிலிருந்து கொல்ஹாப்பூரின் ஷிரோல் மற்றும் ஹட்கனங்க்ளே தாலுகாக்களின் விவசாயிகள் பலர், ரசாயன உர பயன்பாட்டை பெருமளவுக்கு அதிகரித்திருக்கின்றனர். “வெள்ளத்துக்கு முன்பே விளைச்சல் எடுத்துவிடத்தான் இந்த ஏற்பாடு,” என்கிறார் சைதன்யா.
டாக்டர் பேக்கரை பொறுத்தவரை அர்ஜுன்வாடின் மண்ணில் ஆர்சினிக் ரசாயனம் கடந்த சில வருடங்களில் அதிகரித்திருக்கிறது. “ரசாயன உரங்கள் மற்றும் விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்ததே பிரதானக் காரணம்,” என்கிறார் அவர்.
மண்ணே விஷமாகும்போது மக்கள் எம்மாத்திரம்? “விளைவாக அர்ஜுன்வாடில் மட்டும் 17 புற்றுநோயாளிகள் இருக்கின்றனர். மரணத் தறுவாயில் இருப்போரின் எண்ணிக்கை சேர்க்காமல் இந்த எண்ணிக்கை,” என்கிறார் அவர். மார்பகப் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய் ஆகியவை இதில் அடக்கம். “தீவிர நோய்கள் அதிகரித்தாலும் அறிகுறிகள் தென்பட்டும் மக்கள் மருத்துவரை சந்திப்பதில்லை,” என்கிறார் அவர்.
கோச்சியை சேர்ந்த விவசாயத் தொழிலாளரான சுனிதா பாடில் 40 வயதுகளில் இருக்கிறார். 2019ம் ஆண்டிலிருந்து தசை மற்றும் மூட்டு வலி, பலவீனம், கிறுகிறுப்பு ஆகியவை அவருக்கு இருக்கிறது. “எதனால் வருகிறதென தெரியவில்லை,” என்கிறார் அவர். ஆனால் அவரின் அழுத்தம் நிச்சயமாக மழைகளுடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்கிறார். “கனமழை பெய்த பிறகு, என்னால் தூங்க முடிவதில்லை,” என்கிறார் அவர். அடுத்த வெள்ளம் குறித்த பயம் அவரை தூங்க விடாமல் செய்கிறது.
மருத்துவ விலைகளுக்கு அஞ்சி சுனிதா மற்றும் பிற விவசாயப் பெண் தொழிலாளர்கள் வலி நிவாரணிகளை சார்ந்திருக்கின்றனர். “நாங்கள் என்ன செய்வது? மருத்துவரிடம் செல்லுமளவுக்கு வசதி இல்லை. எனவே நாங்கள் விலை குறைந்த, 10 ரூபாய்க்குள் வரும் வலி நிவாரணிகளை சார்ந்திர்க்கிறோம்,” என்கிறார் அவர்.
வலி நிவாரணிகள் தற்காலிக தீர்வைக் கொடுத்தாலும் கீதா, ஷிவ்பாய், பார்தி, சுனிதா போல் ஆயிரக்கணக்கானோர் நிச்சயமின்மை மற்றும் அச்சம் நிறைய வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
“இன்னும் நாங்கள் மூழ்கிவிடவில்லை. ஆனால் வெள்ளம் குறித்த அச்சத்தில் அன்றாடம் நாங்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம்,” என்கிறார் கீதா.
இண்டெர்நியூஸ் எர்த் ஜர்னலிசம் நெட்வொர்க்கின் சுயாதீன இதழியல் மானியம் பெற்று செய்தியாளர் எழுதிய ஒரு பகுதியே இக்கட்டுரை.
தமிழில்: ராஜசங்கீதன்