கலாவதி பண்டர்கர் தனது ஐந்து மகள்களின் பிரசவத்தை வீட்டிலேயே அவரது கண்காணிப்பிலேயே நடத்தியிருக்கிறார், திருமணமான அவரது ஐந்து மகள்களும் அவரைப் போலவே வறுமையில் இருப்பவர்கள். மருத்துவ செலவுகளை தவிர்ப்பதற்காக இப்படி செய்திருக்கிறார். நாங்கள் அவரை சந்திக்க சென்றிருந்த போது வீட்டில் 10 பேர் தங்கி இருந்தனர். இவர்கள் அனைவரையும் கவனித்துக் கொள்வதோடு பெரும் இழப்புகளுடன் ஒன்பது ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்தும் வருகிறார். அதோடு மற்றவர்களின் நிலங்களில் வேலை செய்வதன் மூலம் தினக் கூலியாக ரூ.30/ பெறுகிறார். பருவகாலம் அல்லாத மாதங்களில் விறகுகள் சேகரித்து விற்பனை செய்வதன் மூலம் ரூ.20/ வருவாய் ஈட்டுகிறார். அவருக்கான ஒரே நிரந்தர வருவாய் என்பது அவருக்கு சொந்தமான எருமை மூலம் கிடைக்கும் பாலை விற்பனை செய்வதால் கிட்டுவது மட்டுமே.
அவரது நான்காவது மகளது திருமணத்தை எந்த செலவுகளும் இல்லாமல் நடத்தியதாகவும், ஐந்தாவது மகளுக்கு மிகவும் குறைந்த செலவில் திருமணம் செய்ய முயற்சி செய்வதாகவும் தெரிவித்தார். விதர்பா பகுதியின் யவத்மால் மாவட்டத்தின் ஜால்கா கிராமத்தில் வசிக்கும் கலாவதிக்கு ஏழு பெண், இரண்டு ஆண் வாரிசுகள் உள்ளனர். கடந்த பதினான்கு ஆண்டுகளில் விவசாயத்தில் வருமானமின்றி தற்கொலை செய்து கொண்ட ஒரு விவசாயியின் மனைவி.
கிடைக்காத இழப்பீடு
“அரசிடமிருந்து எந்த ஒரு இழப்பீடும் இதுவரை கிடைத்தவில்லை”, என்கிறார் புன்னகை மாறாத, யதார்த்தவாதியான இந்த பாட்டி. காரணம், இவர் விவசாயம் செய்து வரும் ஒன்பது ஏக்கர் நிலமும் இவருக்கு உரிமையானதல்ல, குத்தகை நிலம் மட்டுமே. விவசாயத்தில் நஷ்டம் ஏற்ப்பட்ட போது அதனை தாங்கும் சக்தியின்றி அவரது கணவர் பரசுராம் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். விவசாயம் செய்த நிலம் அவரது சொந்த நிலம் அல்லாததால் அரசு விதிமுறைப்படி விவசாயி தற்கொலை என அவரது மரணம் அங்கீகரிக்கப்படவில்லை. விதர்பா மக்கள் பாதுகாப்புக் குழு மட்டுமே இவர் குடும்பத்திற்க்கு சிறிய நிவாரணம் வழங்கியது.
“மாதம் ரூ.20/ கட்டுவது கூட சிரமம் என்பதால் எந்த சுய உதவி குழுவிலும் நான் உறுப்பினராக இணையவில்லை”, என அவரது பொருளாதார நெருக்கடியை விளக்கினார். “எனது நான்கு மகள்களின் திருமணத்தை நடத்தியாகிவிட்டது. மூவரின் திருமணம் பரசுராமின் மரணத்திற்கு முன்பு நடைபெற்றது. ஆனால் ஒரு மகள் கணவரிடமிருந்து பிரிந்து வீடு திரும்பிவிட்டார்”, என வருந்தினார். மேலும் மூவர் பிரசவத்திற்காக இவரது வீட்டில் உள்ளனர்
“நானும் எனது மகள் மால்தா ஆகிய இருவர் மட்டுமே வருவாய் ஈட்டுகிறோம்”, என்றார். தற்போது விறகுகள் சேகரித்து விற்பது மூலம் தினமும் ரூ.40/ கிடைக்கிறது.
எருமை பால் விற்பதன் மூலம் கலாவதியின் குடும்பத்திற்க்கு ஓரளவு உத்தரவாதமான வருவாய் கிடைக்கிறது. “ரூ.60 முதல் 80/ வரையோ அல்லது கொஞ்சம் அதிகமாகவோ வருவாய் வரும்”, என்றார். இந்த வருவாய் கொண்டு தான் பத்து பேர் கொண்ட கலாவதியின் குடும்பம் வாழ வேண்டும். மூத்த மகள் மால்தாவிற்க்கு 25 வயதும், கடைசி மகளான சைதன்யாவிற்க்கு 8 வயதும் நிரம்பியுள்ளது. இவர்கள் அனைவரும் பள்ளி கல்வியை இடையிலேயே நிறுத்தியவர்கள். இத்தனை நெருக்கடிகளிருந்தும் அக்கிராமத்தில் மகிழ்ச்சியான குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் இவர்களுக்கு சொந்தமான எருமை மாட்டினை பராமரிக்கும் பணியையும் வேறு ஒருவரிடமே ஒப்படைத்துள்ளார். “வருவாயை விட பராமரிப்பு செலவுகள் அதிகமாகும்”, என்பதால் தொழில் ரீதியாக மாடு வளர்க்கும் ஒருவரிடம் மாதம் ரூ.40/ என்ற கட்டணத்தில் பராமரிப்பு பணியை ஒப்படைத்துள்ளனர். எருமை எருவை அந்த பராமரிப்பாளருடன் பகிர்ந்து கொள்கிறார்.
தடுமாறும் முறை
அரசுகளின் விசித்திரமான நல உதவி திட்டத்தின் மூலம் இந்த எருமை இவர்களுக்கு கிடைக்கவில்லை. அரசு வழங்கும் விலை உயர்ந்த மாடுகளை இவர்கள் அதிக பராமரிப்பு செலவின் காரணமாக பெற்றுக்கொள்ள தயங்குகின்றனர். கலாவதி தற்போது பின்பற்றும் முறை எப்போது வரை அவருக்கு பலன் தரும் என கூற இயலாது. அவரது எருமைக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் அவரது குடும்பத்தை பாதுகாக்கும் வருமானத்தை அவர் இழக்கும் அபாயம் உருவாகும். வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கு கூட தராமல், கிடைக்கும் மொத்த பாலையும் விற்பனை செய்யும் நிலையிலிருக்கிறது இக்குடும்பம். “எனது இரு மகள்கள் சமீபத்தில் பிரசவித்தவர்கள் என்பதால் இப்போதைக்கு அவர்களால் வேலைக்கு செல்ல இயலாது”, என்கிறார்.
சொந்த நிலமில்லாத காரணத்தால் விவசாயியாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் எந்த உதவித் தொகைகளையும் பெற இயலாத நிலை தொடர்கிறது. கலாவதியின் பெற்றோர் பெயரில் சந்திராபூர் மாவட்டத்தில் 3.5 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளதென்றாலும் இவரது பெயருக்கு மாற்றப்படாததால் இவர் விவசாயியாக அங்கீகரிக்கப்பட இன்னும் காத்திருக்க வேண்டும். “இந்த ஒன்பது ஏக்கர் நிலத்திற்க்கு ஆண்டுக்கு ரூ.10,000/ குத்தகை தொகை வழங்க வேண்டும். குத்தகை தொகை இவ்வளவு குறைவாக இருப்பதிலிருந்த இந்த நிலத்தின் வளம் எவ்வாறு இருக்கும் என நீங்கள் புரிந்து கொள்ளலாம்”, என புன்முறுவலோடு கூறுகிறார்.
இத்தனை இழப்புகளை சந்தித்த பின்னும் தனது வாரிசுகளும் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்பதே கலாவதியின் விருப்பம். நகர்ப்புறங்களை நோக்கு வேலை தேடி புலம்பெயர்பவர்கள் அதிகரிக்கும் வேளையில் கலாவதி போன்றோர் ஆபூர்வமானவர்களே. கலாவதி அடுத்த சாகுபடிக்கு தயாராகிவிட்டார். “நான் விவசாயம் செய்யவே விரும்புகிறேன். அதையே தொடர்ந்து செய்வோம்”, என்றார்.
இந்த கட்டுரையின் ஒரு வடிவம் 24/05/2007 தேதியிட்ட தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியானது http://www.hindu.com/2007/05/24/stories/2007052402321100.htm