மார்ச் 6-ம் தேதியன்று நாசிக்கில் விவசாயிகள் போராட்டம் தொடங்கியபோது அதன் முன்னணியில் நின்றவர் 60 வயதான ருக்மாபாய் பெண்ட்குலே. டிண்டோரி தாலுகா, டொண்டேகான் கிராமத்தைச் சேர்ந்த அவர் கையில் சிகப்புக் கொடியை அசைத்து ஆடினார். பல்லாயிரக்கணக்கான பெண்கள் மும்பையை நோக்கி நடந்தார்கள். ஏறத்தாழ 180 கிலோமீட்டர்கள்... கொளுத்திய வெயிலில் காலணிகள் இல்லாமல், குழந்தைகளையும், பேரக் குழந்தைகளையும் வீட்டில் விட்டுச் செல்ல முடியாமல் அவர்களை அழைத்துக்கொண்டும், சுமந்துகொண்டும் பெண்கள் நடந்தார்கள்.
நாசிக், பல்கர், தஹானு, அஹ்மெத்நகர் மற்றும் இதர மாவட்டங்களிலிருந்து ஆதிவாசி பெண் விவசாயிகளும், மராத்வாடா, விதர்பாவைச் சேர்ந்த பெண் விவசாயிகளும் மோர்ச்சாவில் அதிக அளவில் கலந்துகொண்டார்கள். மிகச் சிறிய நிலங்களைக் கொண்ட குடும்பங்களிலிருந்து வரும் ஆதிவாசி பெண் விவசாயிகள், மற்றவர்களின் நிலங்களில் கூலியாட்களாக வேலை பார்ப்பவர்களாக இருப்பார்கள். ஒரு வாரம் முழுதும் நடந்த இந்த பேரணியில் கலந்துகொண்டதன் மூலமாக மாத வருமானத்தில் நான்கில் ஒரு பகுதியை இழந்திருந்தார்கள்.
”பெரும்பாலான விவசாய வேலைகள் (விதைப்பது, நாற்று நடுவது, அறுவடை, நெல் பிரித்தல், நெல்லை வயலிலிருந்து வீட்டுக்கு கொண்டு செல்லுதல், உணவு தயாரித்தல், கால்நடை வளர்ப்பு) என அனைத்தையும் செய்வது பெண்கள்தான்” என்கிறார் பி.சாய்நாத், கிராமப்புற இந்திய மக்கள் குறித்த தகவல் காப்பகத்தின் நிறுவனர் (PARI). ”ஆனால் - சட்ட நடைமுறைக்கு எதிராக - பெண்களுக்கு நில உரிமை தரமறுத்து அவர்களை விவசாயிகளாக ஏற்க மறுக்கிறோம்.” என்கிறார் அவர்.
அகில பாரதீய கிசான் சபா ஒருங்கிணைத்த பேரணி, விவசாயிகள், ஆண்கள், பெண்கள் அனைவரையும் சாலைக்கு அழைத்துவந்து, தாங்கள் உழும் நிலத்தின் மீதானஉரிமையைப் பெற்றுத்தரும் வன உரிமைச் சட்டம் 2006 உட்பட அனைத்தையும் கோர வைத்தது.
சில பெண் விவசாயிகளை இங்கு ஆவணப்படுத்துகிறோம்: