ப்ளாஸ்டிக் பையை கீழே வைத்துவிட்டு, ஊன்றி சற்று மூச்சு விட்டுக்கொள்கிறார் ஷங்கர் வாகரே. பிறகு மண்டியிட்டு கண்களை கொஞ்சம் மூடிக்கொள்கிறார். 15நிமிடங்களுக்கு கண்களை மூடியபடியே இருந்தார். அந்த 65 வயது மனிதருக்கு அது அத்தனை பெரிய நடை. அவரைச்சுற்றி அந்த இருட்டில் 25000 விவசாயிகள் இருந்தார்கள்.
இகாத்புரியின் ரைகாத்நகர் பகுதியில் நாசிக்-ஆக்ரா சாலையில் உட்கார்ந்தபடி அவர் சொல்கிறார்: ’நாம் நமது உரிமைகளுக்காக போராட வேண்டும்’. அந்த பரபரப்பான செவ்வாய்க்கிழமை பிற்பகல் நேரத்தில், மார்ச் 6இல் தொடங்கிய மோர்ச்சா பேரணி முதன்முறையாக கொஞ்சம் ஓய்வெடுத்தது. மார்ச் 11ம் தேதி மும்பையை அடைந்து, சட்டமன்ற பேரவை கட்டடத்தை முற்றுகையிட்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மாநில அரசு தோல்வியடைந்ததை எதிர்த்து போராடுவதுதான் அவர்களுடைய திட்டம். (பார்க்க: Long March: Blistered feet unbroken spirit மற்றும் பேரணிக்குப் பிறகு )
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய முன்னணியான அகில பாரதீய கிசான் சபாதான் இந்த நீண்ட பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தாது. பேரணியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கிசான் சபாவின் பொது செயலாளர் அஜீத் நவாலே அரசு வெற்று வார்த்தைளைச் சொல்லி ஏமாற்ற முடியாது என்கிறார். ’2015-இல், வன நிலத்தின் உரிமைக்கும், பயிர்களின் நல்ல விலைக்கும், கடன் தள்ளுபடி போன்றவற்றுக்கும் போராடினோம்’ என்றார் அவர். ’அரசு, அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றித் தருவதாக நடிக்கிறது. இம்முறை இப்படியான நடிப்பை நம்பமுடியாது’ என்றார்.
பேரணி முன்னே செல்லச் செல்ல, மராத்வாடா, ரெய்காட், விதர்பா மற்றும் பல மாவட்டங்களிலிருந்தும் மஹராஷ்டிராவின் பல பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான மக்கள் இணைந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொடங்கிய புள்ளியிலிருந்து 180 கி.மி தொலைவில் இருக்கும் மும்பையை சென்று அடையும் போது பேரணி மிக பெரிதாகியிருக்கும். இப்போதைக்கு நாசிக் மாவட்டம் மற்றும் பல பகுதிகளிலிருந்தும் குறிப்பாக ஆதிவாசி சமூகங்களிலிருந்து ஏற்கனவே பல விவசாயிகள் வந்துவிட்டிருந்தார்கள். (பார்க்க: விளைவிக்கிறார்கள், போராடுகிறார்கள் )
நாசிக்கின் டிண்டோரா தாலுக்காவின் நாலேகான் கிராமத்திலிருந்து, வந்த வாகரே, கோலி மஹாதேவ் சமூகத்தைச் சேர்ந்தவர். அதிகாலையில், நாசிக்கின் சிபிஎஸ் சவுக்கிற்கு நாலேகானிலிருந்து 28 கிலோமீட்டர் நடந்தே வந்திருக்கிறார். அன்று பிற்பகலில் இருந்து மும்பையை அடையும் பேரணி துவங்கியது.
’எத்தனை காலமாக நாங்கள் நிலத்தை உழுது காப்பாற்றி வந்தாலும், வனத்துறைக்கு அடியில்தான் அந்த நிலத்தின் உரிமை இருக்கிறது’ என்கிறார். ’வாக்குறுதிகள் இருக்கிறது. ஆனால், நிலத்தின் உரிமை எங்களிடம் இல்லை’ என்று சொல்கிறார் அவர். வாகரேவின் கிராமத்தில் பெரும்பாலும் பலரும் நெல் பயிரிடுகிறார்கள். ’ஒரு ஏக்கருக்கான தயாரிப்பு விலை 12000 ரூபாய். மழை நன்றாக இருந்தால் எங்களுக்கு 15 க்விண்டால் அரிசி கிடைக்கும்’ என்று சொன்னார். இந்த பேரணியைப் பற்றி அவருக்கு தெரியவந்தபோது, எவ்வளவு சிரமமாக இருந்தாலும் இதில் கலந்துகொள்ளவேண்டும் என அவர் முடிவு செய்துவிட்டதாகக் கூறினார்.
1 மணிக்கு சிபிஎஸ் சவுக்கை அடைந்தபோது, கூட்டம் குறைவாகதான் இருந்தது. இன்னும் கூட அடர்த்தியாக காத்துக்கொண்டிருந்தது. ஜீப் முழுவதும் வந்த விவசாயிகள் சிவப்பு கொடிகளுடனும், தொப்பிகளுடனும் குவிந்து கொண்டிருந்தார்கள். வெயிலிருந்து காக்க ஆண்கள் கைக்குட்டையை வைத்தும், பெண்கள் சேலையை வைத்தும் தலையை மறைத்துக்கொண்டிருந்தார்கள். பலரும் பிளாஸ்டிக் பைகளையும், ஒரு வாரத்திற்கு தேவையான தானியங்களை துணிப்பைகளிலும் வைத்திருந்தார்கள்.
2.30 மணிக்கு, கொண்டு வந்திருந்த பைகளில் இருந்து சப்பாத்திகளையும், அதற்கான சப்ஜிகளையும் சாப்பிடத் தொடங்கினர். சாலைகளில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள் அவர்கள். அருகிலேயே ஆதிவாசி விவசாயிகள் சிலர் தங்கள் பாட்டுக்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள். நாசிக் மாவட்டத்தின் சுர்குணா தாலுக்காவின் பங்கர்ணே கிராமத்தைச் சேர்ந்த பாலு பவார், விஷ்ணு பவார் மற்றும் யேவாஜி பித்தே ஆகியோரும் நிகழ்ச்சி நடத்தினர். போலிசாரால் மறிக்கப்பட்டிருக்கும் பகுதியில் அமர்ந்து கொண்டு பாலு டுண்டுனாவும் (டுண்டுனா மராத்திய நாட்டுப்புற கலைஞர்கள் பயன்படுத்தும் ஒரு இசைக்கருவி) விஷ்ணு டாஃப்லியும் (டாஃப்லி – பறை போன்ற ஒரு இசைக்கருவி) யேவாஜி ஜால்ராவும் வாசித்தார்கள். என்ன பாடுகிறீர்கள் என்று கேட்டேன். ”எங்களின் தெய்வம் கந்தரேயாவிற்காக பாடுகிறோம்” என்றார்கள்.
மூன்று பாடகர்களும் கோலி மஹாதேவ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய பிரச்சனையும் வாகரேவின் பிரச்சனையைப் போன்றதுதான். ’நான் ஐந்து ஏக்கர் நிலத்தை உழுதுகொண்டிருக்கிறேன்’ என்றார் விஷ்ணு. ’சொல்லப்போனால் அது என்னுடையது. ஆனால், நான் வனத்துறை அதிகாரிகளின் கருணையில்தான் இந்த வேலையை செய்து வருகிறேன். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் வந்து எங்களை அப்புறப்படுத்தலாம். பக்கத்து கிராமத்தில், விவசாயிகள் பயிரிட்டிருந்த இடத்தை தோண்டி மரம் நட்டிருக்கிறார்கள். அடுத்து எங்களிடம் வருவார்கள்’ என்றார்.
சஞ்சய் போராஸ்தேவும் பேரணிக்கு வந்தார். நாசிக்கிலிருந்து 26 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் டிண்டோரி கிராமத்திலிருந்து வந்திருந்தார். அவருக்கு 8லட்சத்திற்கும் மேலாக கடன் இருந்தது. ’அரசு, முதலில் கடன் தள்ளுபடியை அறிவித்தபோது, எனக்கு விடுதலை கிடைக்கும் என நம்பினேன்’ ஆனால் முதலமைச்சர் அதற்கு அசலாக 1.5 லட்சத்தை விதித்திருக்கிறார். 48 வயதான போராஸ்தே தனது 2.5 ஏக்கரில் பூசணிக்காயை பயிரிட்டிருக்கிறார். ’ஒரு கிலோவுக்கு இரண்டு ரூபாய் என விற்கவேண்டியிருந்தது’ என்று கூறினார். ‘விலை தடுமாற்றமடைந்தது. பூசணிக்காய் விற்றுத் தீர்ந்தாகவேண்டிய பயிர்’ என்றார்.
கடந்த ஒரு வருடமாக மராத்வாடாவில் செய்தி சேகரிக்கும் போதெல்லாம் விவசாயிகள் தொடர்ந்து இவற்றைப் பற்றி பேசி வந்திருக்கிறார்கள். கடன் தள்ளுபடியைக் குறித்தும், சுவாமிநாதன் கமிஷனின் குறைந்தப்பட்ச ஆதரவுத் தொகையை அமல்படுத்துவதுப் பற்றியும், சரியான பாசனத்தைப் பற்றியும் பேசினார்கள். இதெல்லாம் முக்கியம்தான் ஆனால் நாசிக்கிலிருந்து வந்தவர்களில் பெரும்பாலானோரின் முக்கிய கோரிக்கை நில உரிமையைப் பற்றியதாக இருந்தது. பேரணி முன்னகர்ந்து செல்ல, கூடும் விவசாயிகளின் பிரச்னைகள் மாறுபடும்.
3 மணிக்கு, விவசாயிகளிடம் விவசாயத் தலைவர்கள் பேசத் தொடங்கினார்கள். 4 மணிக்கு நாசிக் ஆக்ரா நெடுஞ்சாலை வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் நடக்கத் தொடங்கினர். முன்னணியில் 60 வயதான ருக்மாபாய் பெண்ட்குலே கொடியை வீசி நடந்துக்கொண்டிருந்தார். டிண்டோரி தாலுகாவின் டொண்டேகான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி அவர். நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் சம்பாதிக்கும் அவர், வார வருமானமான 600 ரூபாயை இழந்துவிட்டு பேரணிக்கு வந்திருக்கிறார். ’எனக்கு சொந்த நிலம் இல்லை என்றாலும், என் கிராமத்தில் இருக்கும் மக்கள் அவர்களது நிலத்தை (வனத்துறையிடம்) இழந்துவிட்டால் எனக்கும் வேலை கிடைக்காது’ என்கிறார். அரசு இறங்கி வருமா என்று அவரிடம் கேட்டேன். அரசுக்கு வேறு வழி இருக்கிறதா என்ன என்று திருப்பிக் கேட்டார் அவர்.
நவாலே, இந்த மாதிரியான போராட்டங்கள் விளைவை ஏற்படுத்தும் என்கிறார். ’நாங்கள் பேசும் பிரச்சனைகள் பேசு பொருள்களாகி இருக்கின்றன. பல எச்சரிக்கைகளை கையாண்டு அரசு கடனை தள்ளுபடி செய்திருக்கலாம். அதை நாங்கள் லூட் வப்சி என்று அழைக்கிறோம். எங்கள் முன்னோரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டிய வளத்தை அவர்கள் மூலம் படிப்படியாக பெறுவதாக நினைக்கிறோம்’ என்றார் அவர்.
வழியில் பல விவசாயிகள் தங்களது ப்ளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். ஐந்து மணி நேரம் கழித்து இரவு ஒன்பது மணி அளவில் ரைகாத்நகரை சென்றடையும் வரை அவர்கள் எடுத்துக்கொண்ட இடைவேளை அது மட்டும்தான். வால்தேவி அணைக்கு அருகே இருந்த அந்த இடத்தில்தான் வானம் பார்த்த நிலத்தில் அவர்கள் இரவைக் கழித்தார்கள்.
சப்பாத்திகளும் காய்கறிகளும் உணவாக உண்டபிறகு, சில விவசாயிகள் பேரணியுடன் வந்த லாரியிலிருந்த இருந்த ஸ்பீக்கர்களில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த இரவில் நாட்டுப்புற பாடல்கள் வெளியெங்கும் எதிரொலிக்கின்றன. கைகளை பின்னால் கட்டிக்கொண்டு வட்டமாக நின்று அவர்கள் நடனமாடத் தொடங்குகிறார்கள்.
போர்வையால் தன்னை இறுக்கமாக போர்த்தியிருந்த வாகரேவுக்கு அவர்களது உற்சாகம் வேடிக்கையாக இருந்தது. ‘ எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. கால்கள் வலிக்கிறது’ என்கிறார். அடுத்த ஆறு நாட்களுக்கும் தொடர்ச்சியாக உங்களால் நடக்கமுடியுமா என்று கேட்டால், ‘கண்டிப்பாக நடப்பேன். ஆனால் இப்போது தூங்க வேண்டும்’என்றார்.
இதையும் பார்க்க: I am a farmer; I walk this long journey மற்றும் From fields of despair, a March with hope