தாதர் நிலையத்தை ரயில் அடையும் போது, தனது பழைய புடவைகளில் கட்டி வைத்த இரண்டு பெரிய இலை மூட்டைகளை ஒவ்வொன்றாக நடைபாதையில் ரயில் நிற்பதற்குள் வீசுகிறார். ஒவ்வொன்றும் தலா 35 கிலோ எடை இருக்கும். “ரயில் நிற்பதற்குள் சரக்கை நாங்கள் வீசாவிட்டால் அவ்வளவு சுமையை தூக்கிக் கொண்டு இறங்குவது சிரமம். ஏராளமானோர் ரயிலில் ஏற காத்திருப்பார்கள்,” என்கிறார் அவர்.
நடைபாதையில் வீசிய கட்டுகளில் ஒன்றை துளசி வேகமாக சென்று தலைக்கு மேல் சுமந்து நிலையத்திற்கு வெளியே உள்ள பூச்சந்தையை நோக்கி கூட்டத்தில் இடிபட்டுக் கொண்டு செல்கிறார். அங்கு அவர் வழக்கமாக வைக்கும் இடத்தில் ஒரு கட்டை வைக்கிறார். மீண்டும் உள்ளேச் சென்று இரண்டாவது கட்டையும் எடுத்து வருகிறார். “ஒரே நேரத்தில் என்னால் ஒரு கட்டைத் தான் சுமந்து வர முடியும்,” என்கிறார் அவர். இரு கட்டுகளையும் பூச்சந்தைக்கு கொண்டு வருவதற்கு அவருக்கு சுமார் அரை மணி நேரம் ஆகிறது.
துளசியின் அன்றாட 32 மணி நேர தொடர் பணிகளில் இது ஒரு சின்ன விஷயம். இச்சமயத்தில் அவர் குறைந்தது 70 கிலோவை கிட்டதட்ட 200 கிலோமீட்டர் மொத்தமாக பயணித்து, கொண்டு வருகிறார். 32 மணி நேர தொடர் வேலையின் இறுதியில் அவருக்கு ரூ.400 கிடைக்கிறது.
வடக்கு மும்பை நகரில் உள்ள தானே மாவட்டத்தின் முர்பிசப்படாவில், வீட்டின் அருகே உள்ள வனப்பகுதிகளுக்கு காலை 7 மணிக்குச் செல்லும் போது வேலை தொடங்குகிறது. மதியம் 3 மணியளவில் வீடு திரும்பியதும் அவர் பிள்ளைகளுக்கு உணவு தயாரிக்கிறார் (“நேரமிருந்தால் நான் சாப்பிடுவேன், என்னால் பேருந்தை தவறவிட முடியாது”), இலைகளை அழகாக அடுக்குகிறார், பிறகு தனது கிராமத்திலிருந்து சுமார் 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அசங்கான் நிலையத்திற்குச் செல்ல பேருந்து (பேருந்தை தவறவிட்டால், ஷேர் டெம்போ) ஏறுகிறார். அங்கிருந்து இரவு 8.30 மணியளவில் சென்ட்ரல் லைன் ரயிலை பிடிக்கிறார்.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, அசாங்கனிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெற்கு – மத்திய மும்பையில் உள்ள தாதர் நிலையத்திற்குச் செல்கிறார். அப்போது இரவு 11 மணி ஆகிவிடும். அங்கு தானே, பல்கார் மாவட்டங்களின் பல்வேறு குக்கிராமங்களில் இருந்து வந்துள்ள அவரைப் போன்ற பல பெண்களுடன் தெருவில் அமர்ந்து கொள்கிறார்.
அங்கு இலைகளை கொத்தாக அடுக்கி வைத்துக் கொண்டு காத்திருக்கிறார். அதிகாலை 4 மணியளவில் வாடிக்கையாளர்களான பூக்கள், குல்ஃபி, பெல் விற்கும் வியாபாரிகள் வரத் தொடங்குகின்றனர். அவர்கள் இந்த இலைகளை பொட்டலம் கட்டுவதற்கு அல்லது கிண்ணங்கள் செய்யவும் பயன்படுத்துகின்றனர். 80 இலைகள் கொண்ட ஒவ்வொரு கொத்தும் ரூ.5க்கு விற்பனையாகும், சில சமயங்களில் அதுவும் சிறிது குறையும். 80 கட்டுகள் என மொத்தம் 6,400 இலைகளை துளசி விற்கிறார். எல்லாம் விற்று காலை 11 மணியளவில் தீர்ந்தவுடன் அவர் முர்பிசப்படாவிற்கு மீண்டும் ரயிலேறி மாலை 3 மணிக்கு வீடு திரும்புகிறார்.
மாதத்திற்கு 15 முறை இப்படி 32 மணி நேர சுழற்சியில் வேலை செய்து துளசி சுமார் ரூ.6000 சம்பாதிக்கிறார். இதில் பேருந்து, டெம்போ, ரயில் பயணங்களுக்கு ரூ.60 செலவிடுகிறார்.
சிலசமயம் மழை பெய்யும்போது, அவரது கிராமத்திலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாசாய் கிராமச் சந்தைக்கு இலைகளை எடுத்துச் செல்கிறார். அங்கு வாங்குபவர்கள் மிகவும் குறைவு. 32 மணி நேர தொடர் வேலையின் முடிவில் அவர் ‘இடைவேளை‘ எடுத்துக் கொண்டு வீட்டு வேலைகளை முடிக்கிறார். அங்கிருந்து தனது படாவின் அருகில் உள்ள வயல்களில் மிளகாய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை பறிக்கும் வேலைக்குச் செல்கிறார்.
மழைக்காலங்களில், அவர் வயல் வேலைகளை அதிகம் செய்கிறார். ரூ.300 தினக்கூலிக்கு மாதத்தில் 10 நாட்கள் வயல் வேலைகளை அவர் செய்கிறார். “மழைக் காலத்தில் [தாதர் சந்தையில்] எங்களால் உட்கார முடியாது. எல்லாம் நனைந்துவிடும்,” என்கிறார் அவர். “எனவே ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் அரிதாகவே அங்கு செல்கிறேன்.”
200 குடும்பங்கள் வாழும் முர்பிசப்படாவிலும், அருகில் உள்ள கிராமங்களிலும் கிட்டதட்ட 30 பிற பெண்கள் புரசு இலைகளை சேகரித்து விற்கின்றனர். அவர்கள் காட்டில் கிடைக்கும் வேப்பிலைகள், பெர்ரிக்கள், புளி போன்ற பிற வகையான பொருட்களையும் ஷாஹாபூர் அல்லது தாதரில் உள்ள சந்தைகளில் விற்கின்றனர். இக்கிராமங்களில் உள்ள பெரும்பாலானோர் விவசாய தொழிலாளர்கள், கட்டுமானம் அல்லது மீனவத் தொழிலாளர்களாக உள்ளனர்.
துளசிக்கு இப்போது 36 வயதாகிறது, 15 வயதில் அவர் புரசு இலைகளை சேகரிக்கும் வேலையைத் தொடங்கினார். அவர் தனது தாய், மூத்த சகோதரி இலைகளை பறித்து கட்டுவதற்கு உதவியுள்ளார். “நான் பள்ளிக்குச் சென்றதில்லை, இதுவே எனது கல்வி, இதுவே எனது கற்றல், என் தாய் வாழ்நாள் முழுவதும் இந்த வேலை செய்வதை பார்த்திருக்கிறேன்,” என்கிறார் அவர்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் துளசி தாதருக்கு தனது முதல் பயணத்தை தொடங்கினார். “எனக்கு அப்போது என்ன வயது என்று நினைவில் இல்லை, என் தாயுடன் நான் சென்றேன். என்னால் இலைகளின் பாரத்தை சுமக்க முடியாது என்பதால் உணவு மற்றும் கதிர் அரிவாள் இருந்த பையை மட்டும் எடுத்துக் கொண்டேன்,” என அவர் நினைவுகூர்கிறார். “அதற்கு முன்பு நான் பேருந்தில் மட்டுமே பயணித்து இருந்தேன். ரயிலில் இருந்த பெண்கள் எங்களைப் போன்று இல்லாமல் வேறு மாதிரி இருந்தனர். இது எம்மாதிரியான உலகம் என நான் வியந்தேன். தாதர் ரயில் நிலையத்தில் எங்கும் மனிதர்கள். நான் பயந்தேன், மூச்சடைப்பது போன்று உணர்ந்தேன். என் தாயின் புடவை முந்தியை பிடித்துக் கொண்டு நடந்தேன். கூட்டத்தில் என்னால் நடக்கக் கூட முடியவில்லை. நாளடைவில் இதற்கு பழகிக் கொண்டேன்.”
17 வயதில் திருமணமான பிறகு துளசி முர்பிசப்படாவிற்கு வந்தார். விவசாயத் தொழிலாளர்களான அவரது பெற்றோர் சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவகல்வாடி கிராமத்தில் வசிக்கின்றனர். 1971-72ஆம் ஆண்டு பட்சா நீர்ப்பாசன திட்டத்திற்காக மறுகுடியமர்த்தப்பட்ட 97 மா தாகூர் பழங்குடியின குடும்பங்களில் அவரது கணவர் குடும்பமும் ஒன்று. ( ' பல குடும்பங்கள் மறைந்துவிட்டன ' எனும் கட்டுரையை பாருங்கள்.)
2010ஆம் ஆண்டு துளசிக்கு 28 வயதிருந்தபோது, உடல்நல குறைவால் அவரது கணவர் சந்தோஷ் இறந்துபோனார். கணவருக்கு மூலம் இருந்ததாக அவர் சொல்கிறார். முர்பிசப்படாவில் ஆரம்ப சுகாதார நிலையம் எதுவுமில்லை, அருகில் உள்ள அரசு மருத்துவமனை 21 கிலோமீட்டர் தொலைவில் ஷாஹாபூரில் உள்ளது. அவர் எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை. “அவர் எனக்கு மிகப்பெரும் பலமாக பொருளாதார ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் இருந்தார்,” என்கிறார் அவர். “அவருக்குப் பிறகு எங்களை பார்த்துக் கொள்ள யாருமில்லை. அவர் இறந்தபிறகு பலவீனமாக அல்லது ஆதரவற்ற நிலையில் இருக்க நான் விரும்பவில்லை. தனியாக இருக்கும் பெண் வலிமையாக இருக்க வேண்டும். இல்லாவிடில் என்னாவது?”
துளசி தனது நான்கு பிள்ளைகளையும் தனியாகவே வளர்க்க வேண்டும் – கவனித்துக் கொள்ள தயாராக இல்லாத கணவரின் சகோதரரிடம் பிள்ளைகளை படாவில் (குழந்தையாக இருந்தபோதே கணவரின் பெற்றோர் இறந்துவிட்டனர்) விட்டுவிட்டு அவர் வேலைக்கு சென்றார்.
இப்போது 16 வயதாகும் துளசியின் மூத்த மகள் முன்னி சொல்கிறார், “நாங்கள் அம்மாவை அரிதாகவே வீட்டில் பார்ப்போம். ஒருநாள் கூட ஓய்வெடுத்தோ, சோர்வடைந்தோ நான் பார்த்ததில்லை. அவர் எப்படி இவ்வாறு உழைக்கிறார் என்று நாங்கள் வியக்கிறோம்.” முன்னி 10ஆம் வகுப்பு படிக்கிறார். “நான் செவிலியராக விரும்புகிறேன்,” என்கிறார் அவர். அவரது இளைய மகள் கீதா 8ஆம் வகுப்பு படிக்கிறாள். இளைய மகன் மகேந்திரா 6ஆம் வகுப்பு படிக்கிறான்.
18 வயதாகும் மூத்த மகன் காஷிநாத் ஷாஹாபூர் டோல்கம்பில் உள்ள நியூ இங்கிலீஷ் உயர்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கிறான். அவன் அங்கு விடுதியில் தங்கியிருக்கிறான். “என் படிப்பை முழுவதுமாக படித்து நல்ல சம்பளத்திற்கு வேலைக்குப் போக விரும்புகிறேன்,” என்கிறார் அவர். அவனது பள்ளிக்கான ஆண்டு கட்டணம் ரூ.2000, ஆண்டிற்கு இருமுறை நடக்கும் தேர்வுகளின் போது கூடுதலாக ரூ.300 செலுத்த வேண்டும். “என்னால் காஷிநாத்தின் கட்டணங்களை மட்டுமே செலுத்த முடியும். மற்ற பிள்ளைகள் சில்லா பரிஷத் பள்ளியில் [முர்பிசப்படாவிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாரங்காபுரி கிராமத்தில் உள்ளது] படிக்கின்றனர்,” என்கிறார் துளசி. “அவர்களின் படிப்பு செலவு பற்றி எனக்குக் கவலையாக இருக்கிறது. ஆனால் என் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும். அதுவே எங்களை இந்நிலையில் இருந்து வெளியேற உதவும்.”
2011 இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அவரது குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, துளசி மீண்டும் இலைகளை பறிக்கச் செல்ல கதிர் அரிவாள், இலைகளை கட்டுவதற்கு பழைய புடவைகள் கொண்ட துணிப் பையுடன் தயாரானார்.
இரவு 8.30 மணிக்கு இரண்டு மணி நேர ரயில் பயணம் செய்து மீண்டும் தாதர் செல்கிறார். அங்கு பூச்சந்தை தெருவில் அமர்ந்து இலைகளை இரவில் அடுக்கி வைக்கத் தொடங்குகிறார். அச்சாலையில் போதிய தெரு விளக்குகள் இல்லை. கடந்துசெல்லும் வாகனங்களின் முகப்பு விளக்குதான் வெளிச்சம். “நாங்கள் [பெண்கள்] வெளியே அமர்கிறோம் [முக்கிய சந்தையிலிருந்து தள்ளி], சந்தைக்குள் இரவு நேரத்தில் பாதுகாப்பாக நாங்கள் உணர்வதில்லை,” என்கிறார் அவர். “கார்கள், கூட்டங்கள், துர்நாற்றங்கள், புகைகள் போன்ற இந்த நெருக்கடிகளும் எனக்கு வசதியாக இருப்பதில்லை. எங்கள் படா சிறிதாக இருந்தாலும் திறந்திருக்கும், வீடு போன்ற உணர்வை அளிக்கும். ஆனால் பணமின்றி எங்களால் எப்படி சமாளிக்க முடியும்? எனவே நாங்கள் இந்நகருக்கு வந்து தான் ஆகவேண்டும்.”
தாதர் சந்தையின் சக தொழிலாளர்களுடன் துளசி தங்கும்போது ரூ.7க்கு ஒரு கோப்பை தேநீர் வாங்கிக் கொள்கிறார். வீட்டிலிருந்து பக்ரி, பாஜியை எடுத்துச் செல்கிறார். சில சமயம் தோழிகளிடமும் சிறிது உணவு வாங்கிக் கொள்கிறார். அடுத்தநாள் காலையில் அவர் இலைகள் விற்றுத் தீரும் வரை காத்திருக்கிறார். “என்னால் இச்சுமையை வீட்டிற்கு திரும்பி எடுத்துச் செல்ல முடியாது,” என்கிறார் அவர்.
பிறகு மீண்டும் இரண்டு மணி நேரம் ரயிலில் பயணம் செய்து அசாங்கான் செல்கிறார். “நாங்கள் நான்கு பெண்கள் கொண்ட குழு [ஒன்றாக வேலைசெய்து பயணிக்கின்றனர்]. பயணங்களின் போது எங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்வோம். வீட்டில் நடப்பது, எதிர்கால திட்டங்கள் பற்றி ஆலோசிப்போம்,” என்கிறார் துளசி. “அதுவும் அதிக நேரம் நீடிப்பதில்லை. சோர்வாக இருப்பதால் நாங்கள் உறங்கிவிடுகிறோம்.”
தமிழில்: சவிதா