சத்யஜித் மொராங், அசாமிலுள்ள பிரம்மபுத்திராவின் தீவுகளில் தன் எருமை மந்தைக்கு தேவையான மேய்ச்சல் நிலங்களை தேடிப் பயணிக்கிறார். “ஓர் எருமை யானை அளவுக்கு உண்ணும்!,” என்கிறார் அவர். ஆகவே அவரும் அவரைப் போன்ற மேய்ப்பர்களும் தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கின்றனர்.
அவருக்கும் அவரது விலங்குகளுக்கும் அவரது இசை துணையாக இருக்கிறது.
“மாடுகளை மேய்க்க நான் ஏன் செல்கிறேன், அன்பே.
உன்னை பார்க்க முடியவில்லை எனில் என்ன பயன் அன்பே?
கரங் சபாரியின் கிராமத்திலுள்ள வீடு மற்றும் குடும்பத்திடமிருந்து தூர இருக்கையில் பாரம்பரிய ஒய்னிடோம் பாணி இசையில், சொந்த பாடல் வரிகளைப் போட்டு காதல் மற்றும் ஏக்கம் குறித்து அவர் பாடுவார். “புல் எங்கிருக்கும் என எங்களுக்கு தெரியாது. எனவே நாங்கள் எங்களின் எருமைகளை மேய்த்து சென்று கொண்டே இருக்கிறோம்,” என்கிறார் அவர் இக்காணொளியில். “நூறு எருமைகளை இங்கு 10 நாட்களுக்கு வைத்திருந்தால், அதற்குப் பிறகு அவற்றுக்கு புல் இங்கு இருக்காது. புதிய புல்வெளி தேடி நாங்கள் மீண்டும் நகர வேண்டும்.”
அசாமின் பழங்குடி இனமான மிஸிங் சமூகத்தின் இசைதான் ஒய்னிடோம் பாணி இசை ஆகும். மாநில அரசு ஆவணங்களில் மிஸிங் என்பது ‘மிரி’ என குறிப்பிடப்பட்டு பட்டியல் பழங்குடியாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. அரசு குறிப்பிட்டிருக்கும் பெயர் இழிவான வார்த்தை எனக் கூறுகின்றனர் அச்சமூகத்தினர்.
சத்யஜித்தின் கிராமம் அசாமிலுள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தின் வடகிழக்கு ஜோர்ஹாட் ஒன்றியத்தில் இருக்கிறது. பால்ய பருவத்திலிருந்தே அவர் எருமை மேய்த்து வருகிறார். பிரம்மபுத்திரா மற்றும் துணை ஆறுகள் சேர்ந்த 1,94,413 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தோன்றி மறைந்து மீண்டும் தோன்றும் தீவுகளுக்கும் மணல்திட்டுகளுக்கும் இடையே மாறி மாறி அவர் பயணிக்கிறார்.
அவரது வாழ்க்கை பற்றி அவர் பேசுவதையும் பாடுவதையும் இக்காணொளியில் பாருங்கள்.
தமிழில் : ராஜசங்கீதன்