ஜானு வாகேவின் குடிசைகளில் வாழ்பவர்களும் 15 கட்காரி ஆதிவாசி மக்களும் அபரிமிதமான வளர்ச்சியை இன்னும் கொஞ்ச நாளில் பார்க்கவிருக்கிறார்கள். பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு உள்ள பழங்குடி சமூகம் என மகாராஷ்டிராவில் குறிக்கப்படுபர்கள் அவர்கள். அவர்களுக்கு கிடைக்கப் போகிற வளர்ச்சி என்பது அவர்களுக்கானதாக இருக்கப்போவதில்லை. தானே மாவட்டத்தில் அவர்கள் வசித்து வரும் குக்கிராமம் கூடிய விரைவில் மாநில அரசின் சம்ருதி மகாமர்க் திட்டத்தினால் காணாமல் போகவிருக்கிறது. சம்ருதி மகாமர்க் என்றால் வளர்ச்சி தரும் நெடுஞ்சாலை என்று அர்த்தமாம்.

"இதுதான் என்னுடைய வீடு. இங்குதான் என் வாழ்க்கை முழுவதையும் கழித்திருக்கிறேன். என்னுடைய தந்தையும் தாத்தாவும் இங்குதான் வாழ்ந்திருந்தார்கள். இப்போது வந்து அவர்கள் (மகாராஷ்டிர அரசு) எங்களை வெளியேறச் சொல்லுகிறார்கள். எழுத்துப்பூர்வமான எந்தவித முன்னறிவிப்பும் எங்களுக்கு கொடுக்கப்படவில்லை," என்கிறார் 42 வயதாகும் ஜானு. "நாங்கள் இங்கிருந்து எங்கே போவோம்? நாங்கள் எங்கே எங்களுடைய வீட்டை கட்டுவோம்?"

அவருடைய குடிசை பிவாந்தி தாலுகாவின் சிரத்பதா கிராமத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. ஒரு சிறிய அறை, மூங்கில் தடுப்பால் பிரிக்கப்பட்டிருக்கிறது. மறுபக்கத்தில் சமையலறை. ஒரு கரி அடுப்பு இருக்கிறது. தரை மாட்டுச் சாணத்தால் மெழுகப்பட்டிருக்கிறது. குடிசை வேயப்பட்ட சுவர்கள் குச்சிகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஜானு மீன் பிடிப்பார். ஒருநாள் விட்டு ஒருநாள்தான் வேலை. அவருடைய மனைவி வசந்தி, குறுகலான கரடுமுரடான ஆறு கிலோமீட்டர் பாதையை கடந்து, படாகா டவுனில் இருக்கும் சந்தைக்கு சென்று மீன் விற்பார். 5-6 கிலோ எடை கொண்ட ஒரு கூடையைத் தலையில் சுமந்து செல்வார். ஒரு நாளைக்கு நானூறு ரூபாய் வரை 15 நாட்களுக்கு ஒரு மாதத்தில் சம்பாதிக்கின்றனர். குடும்பத்தில் இருப்பதோ நான்கு பேர். இடைப்பட்ட நேரங்களில் ஜானுவும் வசந்தியும் விவசாயக் கூலிகளாக சிரத்பதா கிராமத்தில் வேலை பார்க்கின்றனர்.  வெள்ளரிக்காய், கத்தரிக்காய், மிளகாய் போன்ற காய்கறிகளை பறிக்கும் வேலை செய்து ஒரு நாளைக்கு 250 ரூபாய் வரை அவர்கள் சம்பாதிக்கிறார்கள்.

Family standing outside their hut
PHOTO • Jyoti
Hut
PHOTO • Jyoti

இடது பக்கம்: ஜானு வாகே, வசந்தி மற்றும் அவர்களின் குழந்தைகள். வலது பக்கம்: சிரத்பதாவில் உள்ள நான்கு குடிசைகளில் ஒரு குடிசை. "இங்கிருந்து நாங்கள் எங்கு போவோம்? "என கேட்கிறார் ஜானு.

இந்தக் குக்கிராமத்தில் இருக்கும் நான்கு குடிசைகளை 210/85 என்கிற ஒரே சர்வே எண்ணில் பொதுப்பணித்துறை பட்டியலிட்டிருக்கிறது. ஆனால் இந்த நிலமெல்லாம் விரைவில் வரவிருக்கும் 60 மீட்டர் அகல பாலம் கட்டுவதற்காக கைப்பற்றப்படும் என 2018 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் மகாராஷ்டிரா சாலை மேம்பாட்டு வாரியம் மத்திய அரசுக்கு சமர்ப்பித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில்  குறிப்பிடப்பட்டிருக்கிறது.

400 மீட்டர் நீளத்துக்கு இருக்கப்போகும் பாலம் சிரத்பதாவை கடந்து பத்சா ஆற்றின் கிழக்கு வரை நீளவிருக்கிறது. ஜானு மற்றும் அண்டை வீட்டாரின் வீடுகள் மட்டும் பாதிக்கப்படப் போவதில்லை. அவர்களின் வாழ்வாதாரங்களும் பாதிக்கப்படவிருக்கின்றன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் 2018 ஆம் ஆண்டில் வந்தபோது, 700 கிலோ மீட்டர் நீள பாலத்துக்கு வழிவிட்டு அந்த நான்கு குடும்பங்களும் இடம்பெயர வேண்டும் என வாய்மொழியாக உத்தரவிட்டிருக்கிறார்கள்.   அக்குடும்பங்களுக்கு இதுவரை எழுத்துபூர்வமான உத்தரவு எதுவும் வரவில்லை. 'வளர்ச்சி'க்கான பாலம் 26 தாலுகாக்களில் உள்ள 392 கிராமங்களை இணைக்கும் என குறிப்பிடுகிறது மகாராஷ்டிராவின் சம்ருதி மகாமர்க் இணையதளம் . மொத்தமாக 25 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படும்.

தானே மாவட்டத்தில் 778 ஹெக்டேர்களுக்கு பரந்திருக்கும் 41 கிராமங்களை இத்திட்டம் உள்ளடக்கி இருக்கிறது. அங்கு இருக்கும் 3706 விவசாயிகளை இத்திட்டம் பாதிக்கும் எனக் கூறுகிறது அக்டோபர் 2018 ஆம் ஆண்டு சம்ருதி திட்டத்துக்காக எடுக்கப்பட்ட கூட்டு அளவை நில கையகப்படுத்தலுக்கான கணக்கெடுப்பு.

நிலம் கையகப்படுத்தும் முறையை எளிமையாக்க மகாராஷ்டிரா நெடுஞ்சாலை சட்டத்தை மாநில அரசு திருத்தி இருக்கிறது. மேலும் நிலம் கையகப்படுத்துதல் புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற சட்டத்தில் மாநிலத்திற்கு தேவையான சில திருத்தங்களையும் கொண்டு வந்திருக்கிறது. சமூகத் தாக்க மதிப்பீட்டை அகற்றும் திருத்தம் அதில் முக்கியமானது.

காணொளி: "நாங்கள் எங்கள் வீடுகளை இழக்கப் போகிறோம். நாங்கள் எங்கு செல்வோம்?"

விளைவாக, நிலமற்ற தொழிலாளர்களின் மீள்குடியேற்றம் புறக்கணிக்கப்படுகிறத. ஜானு மற்றும் அவரின் அண்டை வீட்டுக்காரர்களுக்கான இழப்பீடு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. MSRDC - ன் துணை ஆட்சியரான ரேவதி கைக்கார் சொல்கையில் "மகாராஷ்டிராவின் நெடுஞ்சாலை சட்டத்தின்படிதான் நாங்கள் நிலங்களை கையகப்படுத்துகிறோம். பாதிக்கப்படும் குடும்பங்களை எங்களால் மீள்குடியேற்றம் செய்ய முடியாது. ஆனால் அவர்களுக்கான இழப்பீட்டை நாங்கள் தந்து விடுவோம்," என்கிறார்.

ஆனாலும் வசந்திக்கு நம்பிக்கை இல்லை. "ஒருவேளை அவர்கள் பணத்தை கொடுத்தாலும் புதிதாக ஒரு கிராமத்துக்கு சென்று எப்படி நாங்கள் வாழ்க்கையை தொடங்குவது?" என அவர் கேட்கிறார். "அங்கு இருக்கும் மக்களுடன் முதலில் பழக வேண்டும். அதற்கு பிறகுதான் அவர்களின் நிலங்களில் வேலை பார்ப்பதற்கான வாய்ப்புகளை எங்களுக்கு வழங்குவார்கள். அதெல்லாம் சுலபமான காரியமா என்ன? நாங்கள் மீன் பிடிக்கவும் முடியாது. எப்படி நாங்கள் வாழ போகிறோம்?"

ஒரு கிலோ 3 ரூபாய் என 20 கிலோ அரிசியையும் ஒரு கிலோ 2 ரூபாய் என ஐந்து கிலோ கோதுமையையும் ஒவ்வொரு மாததமும் வறுமைக்கு கீழ் உள்ளோருக்கான குடும்ப அட்டையின் மூலம் வசந்தி பெறுகிறார். "எங்களால் பருப்பு வாங்க முடிவதில்ல. நாங்கள் அரிசியுடன் மீனை சேர்த்து உண்கிறோம். சில நேரங்களில் நாங்கள் காய்கறிகளை விவசாய நிலங்களின் உரிமையாளர்களிடம் இருந்து வேலைக்கு கூலியாக வாங்கிக் கொள்கிறோம்," என்கிறார் அவர். "இங்கிருந்து நாங்கள் சென்று விட்டால் எங்களால் மீன்பிடிக்க முடியாது," என்கிறார் ஜானு. "மீன்பிடிக்கும் பாரம்பரியம் எங்களின் மூதாதையர் வழியாக வந்து சேர்ந்த விஷயம்".

2018 ஆம் ஆண்டு தானே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வந்த அதிகாரிகள் சிரத்பதாவில் நிலத்தை அளந்த போது நடந்த விஷயங்களை நினைவு கூர்கிறார் 65 வயதாகும் காஷிநாத் பாம்னே. "நான் வீட்டு வாசலில் உட்கார்ந்து இருந்தேன். கையில் கோப்புகளுடன்  ஒரு இருபது முப்பது அதிகாரிகள் இருந்தனர். அவர்களுடன் காவல்துறையினரும் இருந்ததால் நாங்கள் அச்சம் கொண்டோம். அவர்களிடம் நாங்கள் எதுவும் கேட்கவில்லை. அவர்கள் எங்கள் வீட்டை அளந்து பார்த்தார்கள். நாங்கள் காலி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். பிறகு அவர்கள் சென்று விட்டார்கள். நாங்கள் இங்கிருந்து எங்கே செல்லவேண்டும் என்பதையும் சொல்லவில்லை."

Old couple sitting on ground, looking at documents
PHOTO • Jyoti
Old lady selling fishes
PHOTO • Jyoti

இடதுபக்கம்: காசிநாத் மற்றும் த்ருபாதே வாகே வீட்டில் இருக்கும் காட்சி வலது பக்கம் படாகா டவுனில் இருக்கும் சந்தையில் மீன் விற்கும்  த்ருபாதா.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தானே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு நடந்த ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் காஷிநாத் கலந்து கொண்டார். அவருடன் சேர்ந்து 15 விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர். ஷாகாப்பூர் தாலுகாவை சேர்ந்த தால்கான் கிராமம் மற்றும் கல்யாண் தாலுகாவை சேர்ந்த உஷித் மற்றும் பலெகோன் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். "15 நாட்களில் பிரச்சினையை சரி செய்வதாக மாவட்ட ஆட்சியர் உத்திரவாதம் கொடுத்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை," என்கிறார் காஷிநாத். எழுத்துப்பூர்வமான உத்தரவு வர காத்திருக்கிறார்கள். இழப்பீடாக கிடைக்கப்போகும் தொகை தெரியவும் காத்திருக்கிறார்கள்.

காஷிநாத்தும் அவரின் மனைவி த்ருப்பாதாவும் கூட மீன் பிடிப்பதையே சார்ந்து இருக்கிறார்கள். அவர்களின் மூன்று குழந்தைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இரண்டு மகள்கள் வேறு கிராமங்களில் வாழ்கிறார்கள். மகன் மட்டும் அவர்களுடன் சித்ரபதாவிலேயே வாழ்கிறார்.  பாழடைந்த குடிசையை பார்த்துக்கொண்டே த்ருப்பாதா, "இவற்றை சரிசெய்ய தேவையானதை கூட நாங்கள் சம்பாதிக்கவில்லை. எங்களின் பசியைப் போக்குவதற்கான பணம் மட்டும்தான் எங்களால் சம்பாதிக்க முடிந்தது. பக்கத்திலேயே ஆறு இருக்கிறது. மழைக்காலத்தில் எங்கள் வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிடும். ஆனாலும் வாழ்வதற்கு என ஒரு கூரை இருக்கிறது என்பதில் எங்களுக்கு நிம்மதி," என்கிறார். சில ரசீதுகளை என்னிடம் காண்பித்தார். இங்கு வாழும் குடும்பங்கள் வருடாந்திர வீட்டுவரி என ஒரு தொகை கட்டுகிறார்கள். 258 ரூபாயிலிருந்து 350 ரூபாய் வரை கிராமப் பஞ்சாயத்துக்கு வரி கட்டுகிறார்கள். "இது வீட்டு வரி, இது மின்சார கட்டண ரசீது... இவை எல்லாவற்றையும் நாங்கள் தொடர்ந்து கட்டி வருகிறோம். அப்படியிருந்தும் எங்களுக்கு இன்னொரு வீடு கிடைக்காதா?"

1325 பேர் வாழும் கிராமம் சிரத்பதா. புதிதாக கட்டப்படவிருக்கும் பாலத்தை எதிர்த்து 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த கிராமப் பஞ்சாயத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. ஆனால் அதே வருடத்தில் மகாராஷ்டிராவின் ஆளுநரும் ஒரு அறிவிக்கையை வெளியிட்டார் எனக் கூறுகிறார்கள். அதாவது முக்கியமான திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்த கிராம பஞ்சாயத்தின் அனுமதி தேவையில்லை என்ற அறிவிக்கை.

விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். "தானே மாவட்டத்தில் இருக்கும் 41 கிராமங்கள் இந்த திட்டத்தை எதிர்த்திருக்கின்றன. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அரசு திருத்தி, கிராமப் பஞ்சாயத்துகளின் அனுமதி தேவையில்லை என்கிற மாற்றத்தை கொண்டு வந்தது, விவசாயிகள் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளுக்கு எதிரானது," என சொல்கிறார் பபான் ஹார்னே. அவர் தானேவை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் சம்ருதி மகாமர்க் ஷேத்காரி சங்கர்ஷ் சமிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். "மீள்குடியேற்ற நடவடிக்கையை புறக்கணிக்கும் அரசு, 'பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பி போ' என்கிற அணுகுமுறையை கையாள்கிறது."

A family with their children in their house
PHOTO • Jyoti
A man showing his house tax receipt
PHOTO • Jyoti

இடது பக்கத்தில், வித்தால் வாகே மற்றும் அவரின் குடும்பம். வலது பக்கத்தில், வெளியேற்றத்தில் இருந்து காக்குமென அவர் நம்பியிருக்கும் வீட்டு வரி ரசீது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்படி சிரத்பதா கிராமத்தில் 14 ஹெக்டேர் நிலம் நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்படவிருக்கிறது. பதிலாக நில உரிமையாளர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 1.98 கோடி இழப்பீடு தரப்படும். ஒரு ஹெக்டேர் என்பது 2.47 ஏக்கர்கள். MSRDC-ன் ரேவதி கைக்காரை பொறுத்தவரை இது சந்தை மதிப்பை விட ஐந்து மடங்கு அதிகம். ஆனால் நிலத்தை கொடுக்க மறுக்கும் விவசாயிக்கு இதில் 25 சதவிகிதம் குறைக்கப்படும் என்றும் அவர் சொல்கிறார்.

"நிலத்தை கொடுக்கும்படி விவசாயிகள் கட்டாயப்படுத்த படமாட்டார்கள் என்கிறது அரசு. ஆனால் பல இடங்களில் அவர்கள் மறுக்கும் பட்சத்தில் குறைவான இழப்பீடு தரப்படும் என மிரட்டப்படுகிறார்கள். இன்னும் சில இடங்களில் அதிகமான பணம் கொடுக்கப்படும் என்றும் ஆசை காட்டப்படுகிறது,"  என சொல்கிறார் கபில் தாம்னே. இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தையும் இரண்டு மாடி வீட்டையும் அவர் இழக்கவிருக்கிறார். "என்னிடம் வந்த நில கையகப்படுத்தும் அதிகாரி, முதலில் உன் நிலத்தை கொடு பிறகு உனக்கு பணம் கொடுக்கப்படும் என்றார். நான் என் நிலத்தை கொடுக்க மறுத்து விட்டேன். அதனால் இப்போது அவர்கள் அதைக் கட்டாயமாக கையகப்படுத்துகிறார்கள். அதாவது சம்மதமின்றி." மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டு வருடங்கள் அலைந்து கடைசியாக 2019 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் தன் வீட்டுக்காக 90 லட்ச ரூபாயை இழப்பீடாக போராடி பெற்றார் தாம்னே. அவருடைய விவசாய நிலத்துக்கு எவ்வளவு இழப்பீடு கிடைக்கும் என்பது அவருக்கு தெரியவில்லை.

சிரத்பதாவில் இருக்கும் இன்னொரு விவசாயி ஹரிபாவ் தாம்னே. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னுடைய விவசாய நிலம் கையகப்படுத்தப்பட மறுப்பை பதிவு செய்திருக்கிறார். "எங்களின் 7/12 நில ஆவணத்தில் (வருவாய்த்துறை நில பதிவேட்டின் தகவல்படி) பத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. ஆனால் நிலம் கையகப்படுத்தும் அதிகாரி இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்களிடம் மட்டும் கேட்டுவிட்டு விற்பனை பத்திரத்தை முடித்து விட்டார். இது விவசாயிகளை ஏமாற்றும் செயல்."

A man in a boat, catching fishes
PHOTO • Jyoti
Lady
PHOTO • Jyoti

ஆங்குஷ் மற்றும் ஹீராபாய் வாகே. ' மீன்களால் எப்படி வாழ முடியும்? ஆறுதான் எங்களுக்குத் தாய். எங்களுக்கு உணவு கொடுப்பது அதுதான்'

சிரத்பதாவில் இருக்கும் மீனவ கிராமம் ஒன்றில் 45 வயதாகும் ஆங்குஷ் வாகே குடிசைக்கு பின்புறம் இருக்கும் சரிவில் இறங்கி மீன்பிடி படகை தயார்செய்ய ஆற்றை நோக்கி செல்கிறார். "என்னுடைய தந்தையும் இப்படித்தான் ஆற்றை நோக்கி நடந்து செல்வார். பாலம் கட்டி முடித்த பிறகு இதெல்லாம் நின்றுவிடும். இயந்திரங்களும் சிமெண்ட்டும் ஆற்றை அழுக்காக்கி விடும். நிறைய சத்தம் வரும். மீன்கள் எப்படி வாழ முடியும்? இந்த ஆறுதான் எங்களின் தாய். எங்களுக்கான உணவை அதுதான் தருகிறது."

ஆங்குஷ்ஷின் அச்சத்தை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையும் வெளிப்படுத்துகிறது. பாலத்தை கட்டுவதற்கான அடித்தளம் கட்டும் வேலைகள் ஆற்றுப்படுகையை தோண்டி, துளையிட்டு, குவித்து செய்யப்பட வேண்டியிருக்கும் எனக் குறிப்பிடுகிறது. கட்டுமான வேலைகளால் கழிவுகள் பெருகும் என்றும் அவை ஆற்றில் கொந்தளிப்பை ஏற்படுத்தி களங்கப்படுத்தி விடும் என்றும் குறிப்பிடுகிறது. கட்டுமானத்துக்கு தென்கிழக்கே இருக்கும் பட்ஸா நீர்த்தேக்கத்திலும் வண்டல் மண் படிந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறது அறிக்கை.

"நாம் என்ன செய்வது எனக் கேட்கிறார்?" ஆங்குஷ்ஷின் மனைவியான ஹீராபாய். அவர்களின் மூத்த மகனான 27 வயது வித்தாலின் குடிசையும் நெடுஞ்சாலையால் இல்லாமல் போகும். ஆறிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் சவாத் கிராமத்தில் ஒரு கல் குவாரியில் அவர் வேலை பார்க்கிறார். கற்களை உடைத்து லாரியில் ஏற்றும் வேலையில் நாட்கூலியாக நூறு ரூபாய் பெறுகிறார். "நாங்கள் அனைவரும் பிவாந்தியின் பொதுப்பணித்துறைக்கு (2018 நவம்பரில்) சென்றோம்," என்கிறார் வித்தால். "இடத்தை காலி செய்வதற்கான நோட்டீஸ் எங்களுக்கு வந்ததா எனக் கேட்டார்கள். எங்களுக்கு இதுவரை வரவில்லை. எங்களில் இருப்பவர்கள் யாரும் படித்தவர் அல்ல. எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் வேறு இடத்தை பார்த்து செல்ல வேண்டும். நாளையே அவர்கள் வந்து எங்களைக் கிளம்பச் சொன்னால், நாங்கள் எங்கு போவது?"

தானே மாவட்டத்தின் வசாலாக் கிராமத்தில் டிசம்பர் 2017 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், குறைகேட்பு கூட்டம் ஒன்றை நடத்தியது. அழிக்கப்படும் ஆறு, வெளியேற்றப்படும் மக்கள், அவர்களின் மீள் குடியேற்றம் போன்ற விஷயங்கள் கேள்விகளாக எழுப்பப்பட்டன. ஆனால் எந்த கேள்வியும் பொருட்படுத்தப்படவில்லை.

ஒரு கூடை முழுக்க திலாப்பியா மீனுடன் த்ருப்பாதாவின் மகன் 4 மணிக்கு வீடு திரும்பினார். படாகாவில் இருக்கும் சந்தைக்கு த்ருபாதா கிளம்பிக் கொண்டிருந்தார். "மீன்களை விற்று என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. இதையும் அவர்கள் ஏன் எங்களிடம் இருந்து பிடுங்கிக் கொள்கிறார்கள்? அழுக்கு பிடித்த இந்த சாலையை முதலில் சரி பண்ணுங்கள். சந்தைக்கு செல்ல வேண்டிய தூரத்தை இதில்தான் நாங்கள் நடந்து கடக்க வேண்டியிருக்கிறது," என கூடையில் படபடத்துக் கொண்டிருக்கும் மீனில் தண்ணீர் தெளித்தபடி சொல்கிறார்.

தமிழில்: ராஜசங்கீதன்.

Jyoti

ज्योति, पीपल्स आर्काइव ऑफ़ रूरल इंडिया की एक रिपोर्टर हैं; वह पहले ‘मी मराठी’ और ‘महाराष्ट्र1’ जैसे न्यूज़ चैनलों के साथ काम कर चुकी हैं.

की अन्य स्टोरी Jyoti
Translator : Rajasangeethan

चेन्नई के रहने वाले राजासंगीतन एक लेखक हैं. वह एक प्रमुख तमिल समाचार चैनल में बतौर पत्रकार काम करते हैं.

की अन्य स्टोरी Rajasangeethan