‘கேப்டன் பாவ்’ (ராம்சந்திரா ஸ்ரீபதி லாட்)
விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் டூஃபான் சேனையின் தலைவர்
ஜூன் 22, 1922 - பிப்ரவரி 5, 2022
அவர் போராடிய தேசத்தால் எந்த கவுரவமும் செலுத்தப்படாமல் அவர் சென்றுவிட்டார். ஆனால் இவரைத் தெரிந்த ஆயிரக்கணக்கானோர் வணக்கம் செலுத்தியிருக்கின்றனர். 1940களில் உலகிலேயே வலிமையாக இருந்த பேரரசைத் தம் தோழர்களுடன் எதிர்த்து நின்றவர். ராம்சந்திரா ஸ்ரீபதி லாட் தலைமறைவுஅரசில் முக்கியமான பங்கு வகித்தார். 1943ம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து பிரிவதாக அறிவித்த சதாராவின் தலைமறைவு அரசாங்கத்தை புகழ்பெற்ற நானா பாட்டில் தலைமை தாங்கினார்.
ஆனால் கேப்டன் பாவ் (அவரின் தலைமறைவு புனைபெயர்) மற்றும் தோழர்கள் அதோடு நின்றுவிடவில்லை. 1946 வரையிலான மூன்றாண்டுகள் அவர்கள் பிரிட்டிஷாரை தடுத்தி நிறுத்தி வைத்தனர். 600 கிராமங்களிலிருந்து அவர்கள் இணை அரசாங்கத்தை நடத்தினார்கள். ஒருவகையில், பிப்ரவரி 5ம் தேதி நேர்ந்த அவரது மரணம், பிரிட்டிஷாரை எதிர்த்து நின்ற அரசாங்கத்தின் முடிவை குறிக்கிறது.
கேப்டன் ‘பாவ்’ (மூத்த சகோதரர்) தலைமறைவு அரசாங்கத்தின் ஆயுதப்படையை தலைமை தாங்கினார். அதற்குப் பெயர்தான் சூறாவளி ராணுவம் என்கிற அர்த்தம் தொனிக்கும் ‘டூஃபன் சேனை’. அவரின் நாயகனாக இருந்த ஜி.டி.பாபு லாடுடன் சேர்ந்து, ஜூன் 7, 1943-ல் மகாராஷ்டிராவின் ஷெனோலியில் பிரிட்டிஷ் அதிகாரிகளின் ஊதியங்களைக் கொண்டு சென்று கொண்டிருந்த புனே-மிராஜ் சரக்கு ரயிலைத் தாக்கினார். அவர்கள் கொள்ளையடித்த பணத்தைப் பஞ்ச வருடத்தில் பசியால் வாடும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோருக்குக் கொடுத்துதவினர்.
அவரும் அவரின் தலைமறைவு அரசாங்கமும் காணாமல் போன பல பத்தாண்டுகளுக்குப்
பிறகு பாரி,
கேப்டன் மூத்தச் சகோதரரை
மீண்டும் கண்டுபிடித்து
அவரின் கதையை நமக்குச் சொல்ல வைத்தது. அப்போதுதான் சுயாட்சிக்கும் விடுதலைக்குமான வேறுபாட்டை
புரிந்து கொண்டோம். இந்தியாவில் சுயாட்சி இருக்கிறது. ஆனால் சுதந்திரம் இன்னும் சிலருக்கு
மட்டும்தான் இருக்கிறது என்கிறார் அவர். “பணமுள்ள மனிதன் இன்று ஆல்கிறான். முயலைப்
பிடிப்பவன் வேட்டைக்காரன் ஆகிறான். இதுதான் நம் விடுதலையின் நிலை.”
நவம்பர் 2018-ல், 1 லட்சத்துக்கும் மேலான எண்ணிக்கையில் விவசாயிகள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி சென்றபோது, அவர்களுக்கு ஒரு காணொளித் தகவலை பாரியின் பாரத் பாடில் மூலமாக கொடுத்தனுப்பினார் அவர். “என்னுடைய உடல்நிலை நன்றாக இருந்திருந்தால், நான் உங்களுடன் அணிவகுத்து வந்திருப்பேன்,” என முழங்கியிருந்தார் 96 வயது வீரர்.
ஜுன் 2021ல், தொற்றுச் சூழலைத் தாண்டி அவர் நல்லபடியாக இருக்கிறார் என்பதை நேரில் கண்டு உறுதிப்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். என்னுடைய சக பணியாளர் மேதா கலேவுடன் சென்று அவரது பிறந்தநாளில் வாழ்த்துத் தெரிவித்தேன். பாரியின் சார்பில் அவருக்கு நேரு மேலாடை, ஒரு கைத்தடி மற்றும் அவருடன் நாங்கள் எடுத்த புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம் முதலிய பரிசுகளுடன் சென்றோம். 2018ம் ஆண்டில் பார்த்ததை விட அவர் சுருங்கிப் போயிருந்ததைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். பழம்பெரும் வீரர் பலவீனமாக இருந்தார். ஒரு வார்த்தை பேசக் கூட சிரமப்பட்டார். ஆனால் பரிசுகள் அவருக்குப் பிடித்தன. அவர் மேலாடையை உடனே அணிந்தார். சுட்டெரித்த சூரியனைக் கூட அவர் பொருட்படுத்தவில்லை. கைத்தடியை முழங்காலின் மீது வைத்து விட்டு, புகைப்படத் தொகுப்பில் மூழ்கிப் போனார்.
பிறகுதான் ஒரு விஷயம் எங்களுக்கு புரிந்தது. 70 வருடங்கள் இணையராக இருந்த கல்பனா லாட் ஒரு வருடத்துக்கு முன் இறந்து போயிருந்தார். அவரின் மறைவுதான் பெரியவரை மிக அழுத்தமாக பாதித்திருந்தது. அந்த மறைவை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நாங்கள் கிளம்பும்போதே அவரின் முடிவும் அதிக தூரத்தில் இருக்காது என்றுதான் நினைத்தேன்.
தீபக் லாட் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டார். “அவர் இறக்கும்போது அதே நேரு மேலாடையைத்தான் அணிந்திருந்தார்.” கைத்தடி அவருக்கு அருகே இருந்தது. அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்குக்கு அதிகாரிகள் உறுதி அளித்திருப்பதாக தீபக் கூறினார். ஆனால் நடக்கவில்லை. எனினும் கேப்டனின் இறுதிப் பயணத்தில் கலந்து கொள்ள பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வந்திருந்தனர்.
85 மாத காலப் பணியில் பாரி 44 தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறது. கேப்டன் மூத்தச் சகோதரர் பற்றிய படத்தை அவரின் ஊரில் போட்டுக் காட்டியபோது அவரிடமிருந்து கிடைத்த பாராட்டுக்கு அவை எதுவும் ஈடில்லை என நம்புகிறேன். 2017ம் ஆண்டில் தீபக் லாடின் வழியாக அவர் அனுப்பிய செய்தி இதுதான்:
“தலைமறைவு அரசாங்கம் பற்றிய மொத்த வரலாற்றையும் பி.சாய்நாத் மற்றும் பாரி மீட்டெடுக்கும் வரை, அவை உயிரற்றுக் கிடந்தது. நம் வரலாற்றின் அந்த பெருமைக்குரிய அத்தியாயம் அழிக்கப்பட்டிருந்தது. நாங்கள் சுயாட்சிக்கும் விடுதலைக்கும் போராடினோம். வருடங்கள் உருண்டோடிய பிறகு, எங்களின் பங்களிப்பு மறக்கடிக்கப்பட்டு விட்டது. நாங்கள் கைவிடப்பட்டோம். கடந்த வருடம் என்னுடையக் கதையைக் கேட்க சாய்நாத் என் வீட்டுக்கு வந்திருந்தார். ஷெனோலியில் பிரிட்டிஷ் ரயிலை எதிர்த்து நாங்கள் நடத்திய பெரும் தாக்குதல் நடந்த அதே தண்டவாளங்களுக்கு என்னுடன் அவர் வந்தார்.
” என்னையும் சக விடுதலைப் போராட்ட வீரர்களையும் பற்றிய இப்படம் மற்றும் கட்டுரை மூலம் சாய்நாத் தலைமறைவு அரசாங்கத்தைப் பற்றிய நினைவை மீட்டெடுத்தார். அது மக்களுக்காக எப்படி போராடியது என்பதை பேசி, எங்களுக்கான பெருமை மற்றும் மரியாதையை மீட்டெடுத்திருக்கிறார். சமூகத்தின் மனசாட்சிக்கு மீண்டும் எங்களை அவர்கள் நினைவூட்டியிருக்கின்றனர். இதுதான் எங்களின் உண்மையான கதை.
”படம் பார்த்தது என்னை நெகிழ்ச்சியடையச் செய்துவிட்டது. ஆரம்பத்தில் என் கிராமத்தில் இருக்கும் பல இளையோருக்கு ஒன்றும் தெரியாது. நான் யாரென்பதோ என் பங்கு என்னவென்பதோ தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது, இப்படம் மற்றும் கட்டுரை PARI-ல் வெளியான பிறகு, இளையத் தலைமுறையும் என்னை புதுவகை மரியாதையுடன் பார்க்கின்றனர். நானும் என் தோழர்களும் இந்தியாவை விடுவித்ததில் முக்கியப் பங்காற்றியிருக்கிறோம் எனப் புரிந்திருக்கின்றனர். என் கடைசி, இறுதிக்கட்ட வருடங்களில் இது எங்களின் மரியாதையை மீட்டெடுத்திருக்கிறது.”
அவரின் மரணத்தின் மூலம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட பெருமைக்குரிய வீரர்களில் ஒருவரை நாம் இழந்துவிட்டோம். இந்த நாட்டின் விடுதலைக்காக எந்தத் தன்னலமும் கருதாமல் போராடியவர்கள் அவர்கள். அதனால் நேரவிருந்த எல்லா ஆபத்துகளையும் புரிந்தே அவர்கள் களம் கண்டனர்.
முதல் நேர்காணலுக்கு பிறகு ஒரு வருடம் கழிந்து 2017-ல் ஊரில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பெரியவர் கலந்து கொண்ட புகைப்படத்தை பாரத் பாடில் அனுப்பியிருந்தார். பிறகு கேப்டன் பாவை சந்திக்கச் சென்றபோது, வெயிலில் அவர் என்ன செய்து கொண்டிருந்தார் எனக் கேட்டேன். இப்போது அவர் எதற்குப் போராடுகிறார் எனக் கேட்டேன். விடுதலைப் போராட்ட நினைவுகளை நினைவுபடுத்திக் கொண்டு அவர் சொன்னார்:
“அப்போதும் போராட்டம் விவசாயிகளுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும்தான் சாய்நாத். இப்போதும் இந்தப் போராட்டம் விவசாயிகளுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும்தான்.”
உடன் படிக்க: மறத்தல் தகுமோ?: பிராதி சர்க்காரின் இறுதி பெருமிதம்! மற்றும் தீரத்தளபதியும், சுழற்றி அடித்த சூறாவளிப் படையும்
தமிழில் : ராஜசங்கீதன்