எங்கள் ரயில் நாக்பூர் ரயில்வே சந்திப்பை அடைந்தது. போன டிசம்பர் மாதம். ஒரு நண்பகல். ஜோத்பூர்- பூரி எக்ஸ்பிரஸ் தனது இஞ்சினை நாக்பூரில் மாற்றுகிறது, எனவே அது சிறிது
நேரம் அங்கு
நிற்கும். ப்ளாட்ஃபார்மில்
ஒரு சிறு கூட்டப் பயணிகள் தலையில் பைகளை ஏந்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மேற்கு
ஒடிசாவிலிருந்து பருவகால புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்; வேலைக்காக பயணம்
செய்கிறார்கள், செகந்திராபாத்
ரயிலுக்காக காத்திருந்தனர் . ஒடிசாவில் (செப்டம்பர் மற்றும் டிசம்பர்
மாதங்களுக்கு இடையில்) அறுவடைக்குப் பிறகு, பல குறு விவசாயிகளும்
நிலமற்ற பண்ணை தொழிலாளர்களும் தெலுங்கானாவில்
செங்கல் சூளைகளில் வேலை செய்வதற்காக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள். பலர் ஆந்திரா, கர்நாடகா
மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள சூளைகளுக்கும் செல்கின்றனர்.
அந்தக் குழுவில் இருந்த ரமேஷ் (அவர் தனது முழுப் பெயரையும் கொடுக்க விரும்பவில்லை), புலம் பெயர்ந்தவர்கள் பார்கர் மற்றும் நுவாபாடா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார். தங்களுடைய கிராமங்களிலிருந்து அவர்கள் சாலை வழியாக கான்டாபஞ்சி, ஹரிஷங்கர் அல்லது துரெகேலா இரயில் நிலையங்களுக்கு வந்து, அங்கிருந்து நாக்பூருக்கு இரயில் பிடிக்கிறார்கள். பிறகு அங்கிருந்து தெலுங்கானாவிலுள்ள செகந்திராபாதை சென்றடைகிறார்கள். அங்கிருந்து, பகிர்ந்து செல்லும் (ஷேர்டு) நான்கு சக்கர வாகனங்களில் சூளைகளை சென்றடைகிறார்கள்.
ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் நௌக்காய் திருவிழா நடக்கிறது. இந்தத் திருவிழாவின் போது அவர்கள் புதிதாய் விளைந்த அரிசியை தங்களுடைய குல தெய்வத்திற்கு படைத்து அறுவடையைக் கொண்டாடுவார்கள். இதற்கு சற்று முன்பு, தொழிலாளர்கள் ஒரு ஒப்பந்தக்காரரிடமிருந்து (கான்டிராக்டர்) முன்பணம் (மூன்று பேர் சேர்ந்த ஒரு குழுவிற்கு ரூ. 20,000 முதல் ரூ .60,000 வரை) எடுக்கிறார்கள். பின்னர், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில், அவர்கள் செங்கல் சூளைகளுக்குச் சென்று, வேலை செய்து ஆறு மாதங்கள் அங்கே வாழ்ந்து, மழைக்காலத்திற்கு முன்பே திரும்பி வருகிறார்கள். சில நேரங்களில், அவர்கள் தங்கள் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக மிகவும் கடினமாக வெகு நேரம் உழைக்கிறார்கள், இது ஒரு வகையான கொத்தடிமைத்தனமாகும்.
மேற்கு ஒடிசாவில் உள்ள பாலங்கிர் , நுவாபாடா , பர்கர் மற்றும் காலஹந்தி மாவட்டங்களில் இருந்து மக்கள் குடியேறுவது குறித்து 25 ஆண்டுகளாக ஒரு செய்தியாளராக பதிவு செய்து வருகிறேன். கடந்த காலங்களில், அவர்கள் பாத்திரங்கள், உடைகள் மற்றும் தேவையான வேறு எதையும் சணல் பைகளில் எடுத்துச் சென்றனர். இது ஓரளவிற்கு மாறி வருகிறது - அவர்கள் கொண்டு செல்லும் டஃபிள் பைகள் இப்போது பாலியெஸ்டரால் செய்யப்பட்டவையாக மாறியிருக்கிறது. புலம் பெயர்பவர்கள் இன்னமும் விவசாய நெருக்கடி மற்றும் வறுமையால் தள்ளப்பட்டாலும், தொழிலாளர்கள் இப்போது தங்களுடைய முன்பணம் பற்றி ஒப்பந்தக்காரர்களுடன் பேரம் பேசமுடிகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தைகள் எந்தத் துணியும் இல்லாமல் அல்லது குறைந்தபட்ச ஆடைகளை அணிந்துக்கொண்டு பயணிப்பதை நான் பார்ப்பேன்; இப்போது, அவர்களில் சிலர் புதிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள்.
அரசு நடத்தும் சமூக நலத் திட்டங்கள் ஏழைகளுக்கு ஓரளவிற்கு உதவினாலும், சில விஷயங்கள் அப்படியே தான் இருக்கின்றன. இன்னமும் நெரிசலான பொதுப் பெட்டிகளில் இட ஒதுக்கீடு இல்லாமல் தான் தொழிலாளர்கள் பயணம் செய்கிறார்கள். பயணம் மிகவும் சோர்வாக தான் இருக்கிறது. குறைந்த ஊதியத்திற்கான அவர்களின் நிர்கதியும் முதுகு உடையும் உழைப்பும் மாறவே இல்லை.
தமிழில்: ரெக்ஸ் ஜோஷுவா