லாத்தூர் நகரில் தனது பள்ளி மூடப்பட்டதற்கு பராஸ் மடிகர், 11 வயது சிறுவர்கள் எப்படி எதிர்கொள்வார்களோ அப்படியே உணர்ந்தார். தனது 4 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதில் மகிழ்ச்சியடைந்து, விடுமுறை இன்னும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
அது நடக்கவில்லை. 45 வயதானஅவனின் தந்தை ஸ்ரீகாந்துக்கு ஓட்டுநர் வேலை பறிப்போனது. அவரது கடைசி வருமானத்தை விட மூன்றில் இரண்டு பங்கு குறைவான ஊதியம் பெறக்கூடிய ஒரே ஒரு வேலையை எடுத்து செய்ய வேண்டியிருந்தது. 35 வயதாகும் அவனின் தாயார் சரிதாவுக்கும் மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால், தான் செய்துக்கொண்டிருந்த சமையல்காரர் வேலையை இழந்தார்.
ஒரு நாளின் முதல் பகுதியில் கீரை வகைகளைச் சார்ந்த காய்கறிகளைத் தலையில் சுமந்துகொண்டு விற்கிறார். இதற்கு முரணாக, ஏழை மாணவர் செல்லும் பகுதிகளுக்கு சரஸ்வதி மற்றும் லக்ஷ்மி காலனிகள் (அறிவு மற்றும் செல்வத்திற்கு பெயர் பெற்ற தெய்வங்களின் பெயர்கள்) என்று அழைக்கப்படுகின்றன. அவரின் சகோதரி, 12 வயதான ஸ்ருஷ்டி, ராம் நகர் மற்றும் சீதாராம் நகர் காலனிகளை உள்ளடக்கியது, அங்கு காய்கறிகளை விற்பனை செய்கிறார்.
“எனக்கு ஒவ்வொரு மாலையும் எவ்வளவு பயங்கரமாக கழுத்து வலிக்கும் என்று சொல்ல முடியாது! நான் வீட்டுக்கு வந்ததும் என் அம்மா ஒரு வெதுவெதுப்பான துணியில் எண்ணெய் மசாஜ் தருவார். அதனால், அடுத்த நாள் காலை நான் மீண்டும் பொருள்களைச் சுமக்க முடியும், ”என்று சிறுவன் பராஸ் முணுமுணுக்கிறார். ஸ்ருஷ்டியின் பிரச்சனையோ வேறு: “நண்பகலில் என் வயிறு மிகவும் மோசமாக வலிக்கிறது,” என்று கூறுகிறார். "மதிய உணவு சாப்பிடுவதற்கு முன்பு நான் எலுமிச்சைப் பழச்சாறு குடிக்கிறேன் - அது எனக்கு கொஞ்சம் நிம்மதியைத் தருகிறது." இந்த இரண்டு குழந்தைகளும் இதற்குமுன் எந்த உடல் சார்ந்த வேலையும் செய்ததில்லை. இப்போது அவர்கள் மிக மோசமான சூழ்நிலைகளில் வெளியே இருக்கிறார்கள், கொஞ்சம் ரொட்டி வாங்குவதற்கான பணத்தை ஈட்டுவதற்காக! அதைத் தாண்டி அவர்களால் சிந்திக்கக்கூட முடியாது.
ஏப்ரல் 2ம் தேதி முதல், லாத்தூரில் காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை பராஸ் மற்றும் ஸ்ருஷ்டி இருவரும் தங்களுக்கான வழிகளில் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நேரத்தில், ஒவ்வொருவரும் சுமார் 4-5 கிலோகிராம் சுமைகளுடன் மூன்று கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். ஸ்ருஷ்டிக்கு இது மேலும் கடினமானது. ஏனென்றால் அவள் கூடுதலாக, ஒரு எடை அளக்கும் கருவியை சுமக்க வேண்டும். இது மேலும் அவளுக்கு ஒரு கிலோகிராம் மற்றும் ஒரு 500 கிராம் என எடையைக் கூட்டுக்கிறது. தன் தாயார் கட்டிய பொருட்களை பராஸ் எடுத்துச் செல்கிறார் மற்றும் ஒவ்வொரு கட்டுக்கும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அவர்கள் பணிபுரியும் மணிநேரங்களில், லாத்தூரின் சராசரி வெப்பநிலை சுமார் 27 டிகிரி செல்சியஸிலிருந்து 30 டிகிரியாக வரை இருக்கும்.
காய்கறிகளும் பிற பொருள்களையும் அவர்கள் எங்கிருந்து பெறுகின்றனர்? காலை 8 மணிக்கு முன்னரே ஸ்ருஷ்டியின் பணி தொடங்குகிறது. "தினமும் காலையில், நான் காலை 6 மணிக்கு கோலைக்கு (அவர்களின் வீட்டில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் உள்ள லாத்தூரின் முக்கிய காய்கறி சந்தை) செல்கிறேன்." அவர் தனது தந்தை அல்லது அவர்களது பக்கத்து வீட்டுக்காரரான 23 வயதாகும் கோவிந்த் சவனுடன் செல்கிறார். அவர் தற்போது மாநில காவல்துறை தேர்வுக்கு படித்து வருகிறார். எதுவாக இருந்தாலும், கோலையின் இருசக்கர வாகனத்தில்தான் சென்று வருவார்கள் (அவர் இவர்களிடம் பயண செலவாக பெட்ரோல் உட்பட எதற்கும் பணம் வசூலிக்கவில்லை). அவர்கள் பொருள்களுடன் திரும்பும்போது, அவர்களின் தாயார் கூடைகளிலோ அல்லது பிற பெட்டிகளிலோ அதனை கட்டுகிறார்.
“எதை விற்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்யவில்லை. எங்கள் தந்தையோ அல்லது கோவிந்த் அண்ணாவோ எதை ஏற்பாடு செய்கிறார்களோ அதை நாங்கள் விற்கிறோம், ”என்கிறார் பராஸ். "நாங்கள் ஒரு சணல் மூட்டையில் ரூ. 350-400 [ஒவ்வொரு நாளும்] மதிப்பான பொருள்களை கொண்டு வருவோம், ஆனால், மொத்த லாபமாக ரூ. 100 விட குறைவாகவே ஈட்டுகிறோம், ” என்று விளக்குகிறார் ஸ்ருஷ்டி.
இவர்களது தந்தை ஸ்ரீகாந்த் ஒரு நாளைக்கு 700-800 ரூபாய் ஓட்டுநர் வேலையில் சம்பாதிப்பார். ஒவ்வொரு மாதம் குறைந்தது 20 நாட்களுக்கு வேலை இருக்கும். வேலையில் இருக்கும்போது, அவருக்கு உணவும் கிடைத்துவிடும். இவையெல்லாம் இந்த ஊரடங்கு மூலம் முடிவுக்கு வந்துவிட்டது. ஸ்ரீகாந்த் இப்போது பழைய அவுசா சாலையில் உள்ள லக்ஷ்மி காலனியில் காவலாளியாக பணிபுரிகிறார், அதே இடத்தில் பராஸ் தனது புதிய வியாபாரத்தை மேற்கொள்கிறார். இந்த வேலை அவருக்கு ஒரு மாதத்திற்கு வெறும் 5,000 ரூபாய் மட்டுமே தருகிறது; - இது அவர் ஓட்டுநராக பெற்ற வருமானத்திலிருந்து 70 சதவிகிதம் குறைவு.
ஸ்ரீகாந்த் காவலாளியாக பணிபுரியும் இடத்திற்கு அருகிலேயே அவரது குடும்பம் ஒரு வீட்டைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. அவர்கள் ஊரடங்கு காலத்தின் ஆரம்ப நாட்களில் அதே போல் வீட்டை மாற்றினர். ஆனால் வாடகை ஒரு மாதத்திற்கு 2,500 ரூபாய் - அவரது மாத வருமானத்தில் 50 சதவீதம் இது! - அவர்கள் முன்பு தங்கியிருந்த இடத்தில் ரூ. 2,000 வசூலித்தனர்.
ஊரடங்குக்கு முன்பு, ஸ்ருஷ்டியோ பராஸோ இந்த தொழிலில் ஈடுபாடுவார்கள் என்று அவர்கள் நினைக்கவில்லை.
ஊரடங்குக்கு முன்னர், அவரின் தாய் சரிதா உள்ளூரில் உள்ள சாய் மெஸில் சமையல்காரராக பணிபுரிந்தார். வீட்டிற்கு மாதம் ரூ. 5,000 கொண்டு வருவார். “என் அம்மா அங்கு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மாலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரையிலும் வேலை செய்வார். மேலும், காலையில் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவர் எங்களுக்காக சமைப்பார், ” என்கிறார் ஸ்ருஷ்டி. இப்போது சரிதாவுக்கு வருமானம் இல்லை. பராஸ் மற்றும் ஸ்ருஷ்டி இருவருக்கும் பொருள்களை தனித்தனியாக கட்டியப்படி வீட்டையும் பார்த்துக்கொள்கிறார்.
ஊரடங்குக்கு முன்பு, தாங்கள் இப்படியான ஒரு தொழிலில் ஈடுபடுவோம் என இரண்டு குழந்தைகளுமே நினைத்திருக்க மாட்டார்கள். பராஸ் 4 ஆம் வகுப்பில் தனது முதல் பரீட்சையில் சராசரியாக 95 சதவீதமும்,ஸ்ருஷ்டி 5 ஆம் வகுப்பில் 84 சதவீதமும் பெற்றனர். “நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக விரும்புகிறேன்,” என்கிறார் பராஸ். "நான் ஒரு டாக்டராக விரும்புகிறேன்," என்று ஸ்ருஷ்டி கூறுகிறார். அவர்களின் பள்ளியான சத்ரபதி சிவாஜி தொடக்கப்பள்ளி - அரசு உதவி பெறும் தனியார் நிறுவனம் - இருவருக்கும் கல்வி கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நான் பராஸ் மற்றும் ஸ்ருஷ்டியுடன் பேசியபோது, தூர்தர்ஷனில், ‘தனிமைப்படுத்தப்பட்ட நாட்களை மக்களுக்கு சுவாரஸ்யமாக்குவதற்காக’ சில பழைய பாடல்கள் பாடிக்கொண்டிருந்தது. அதில், 1954 ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படம் ’பூட் போலிஷ்’படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று என் கவனத்தை ஈர்த்தது:
O nanhe munne bachhe
tere muthhi mein kya hai
muthhi mein hai takadir hamari,
Humne kismath ko bas mein kiya hai.”
(“சின்ன குழந்தைகளே!
உங்கள் கைகளில் நீங்கள் என்ன உற்று நோக்குகிறீர்கள்?
"நம் வாழ்வை, நாம் நம் விதியை நம் கைகளில் பலமாக பற்றியுள்ளோம்.
நம் வெற்றியின் விதிகள் நம் கைகளில்!")
ஸ்ருஷ்டிக்கும் பராஸுக்கும் அது சாத்தியமானால்!
தமிழில்: ஷோபனா ரூபகுமார்