சமூக ஊடகங்கள் அனைத்திலும் ஆக்ஸிஜன், மருத்துவமனை படுக்கைகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளைக் கேட்கும் பதிவுகள், கதைகள் மற்றும் செய்திகளால் நிரப்பப்பட்டிருந்தன. எனது தொலைபேசியும் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. ‘ஆக்ஸிஜன் உடனடியாக தேவை’ ஒரு குறுஞ்செய்தி வந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில், எனக்கு நெருங்கிய நண்பரிடமிருந்து அழைப்பு வந்தது. அவரது நண்பரின் தந்தைக்கு கோவிட் -19 இருந்தது, அவர்கள் ஒரு மருத்துவமனை படுக்கை கிடைக்க சிரமப்பட்டுக்கொண்டிருந்தனர். அதற்குள், இந்தியாவில் தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300,000 க்கும் அதிகமாகிவிட்டன. எனக்குத் தெரிந்த சிலரை அழைக்க முயற்சித்தேன், ஆனால் அது பயனற்றது. அந்த போராட்டத்தில், இந்த குறிப்பிட்ட பாதிக்கப்பட்டவரை நான் மறந்துவிட்டேன். சில நாட்களுக்குப் பிறகு, என் நண்பர் மீண்டும் இதை சொல்ல அழைத்தார். "என் நண்பரின் தந்தை ... அவர் இறந்தார்."
ஏப்ரல் 17 அன்று, அவரது ஆக்சிஜன் ஆபத்தான அளவில் 57 சதவீதமாக குறைந்தது (இது 92-90 க்கு கீழே விழுந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்). சில மணி நேரத்தில், அளவு 31 ஆக சரிந்தது, விரைவில் அவர் காலமானார். அவர் தனது மோசமான நிலையை நேரடியாக ட்வீட் செய்தார், மேலும் அவரது கடைசி ட்வீட்: “எனது ஆக்சிஜன் 31. யாராவது எனக்கு உதவுவார்களா?”
மேலும் ’எங்களை காப்பாற்றுங்கள்’ செய்திகள், அதிகமான ட்வீட்டுகள், அதிக அழைப்புகள். ஒரு பதிவு பின்வருமாறு இருக்கும்: “மருத்துவமனை படுக்கை தேவை” ஆனால் அடுத்த நாள் ஒரு புதிய பதிவு இருக்கும் - “நோயாளி இறந்துவிட்டார்.”
நான் சந்திக்காத, பேசாத அல்லது அறியாத ஒரு நண்பர்; வேறொரு மொழியைப் பேசும் தொலைதூர நிலத்தைச் சேர்ந்த நண்பர், சுவாசிக்க முடியாமல், தெரியாத ஒரு ஈமத்தீயில் எரிந்து எங்காவது இறந்துவிடுகிறார்.
ஈமத்தீ
அன்புள்ள நண்பரே, என் இதயம் உங்களை நினைக்கிறது
மரணத்தின் வெள்ளை நிறத்தில் சுற்றப்பட்டு,
சடலங்களின் பள்ளத்தாக்கில் தனியாக,
நீங்கள் அச்சத்தில் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.
அன்புள்ள நண்பரே, என் இதயம் உங்களை நினைக்கிறது
சூரியன் மறையும் தருணத்தில்,
உங்கள் மீது இரத்தக்களரி அந்தி பொழிந்து,
நீங்கள் அச்சத்தில் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.
முகமறியாதவர்களுடன் நீங்கள் படுத்திருக்கிறீர்கள்,
முகமறியாதவர்களுடன் நீங்கள் எரிக்கிறீர்கள்,
முகமறியாதவர்களுடன் பயணமும் இருந்தது.
நீங்கள் அச்சத்தில் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.
ஒரு துளி மூச்சுக்காக நீங்கள் அழுதபோது,
ஒரு வெள்ளை சுவர் மண்டபத்தில்,
நீங்கள் அச்சத்தில் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.
கண்ணீரின் கடைசி இரண்டு துளிகள்
உங்கள் முகத்தை ஏமாற்றி விழுந்தபோது;
அந்த கடைசி தருணங்களில்,
உங்கள் தாயின் துயரமான கண்ணீரை நீங்கள் பார்த்தீர்கள்,
நீங்கள் அச்சத்தில் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்.
ஓலமிடும் எச்சரிக்கை ஒலி,
அழுகின்ற தாய்மார்கள்,
எரியும் ஈமத்தீ.
"அச்சம் தவிர்!" என்று
நான் சொல்வது நியாயமாக இருக்குமா,
"அச்சம் தவிர்!" என்று
நான் சொல்வது நியாயமாக இருக்குமா,
அன்புள்ள நண்பரே, என் இதயம் உங்களை நினைக்கிறது.
தமிழில்: ஷோபனா ரூபகுமார்