கதுலப்பா தனது பேரன் நரசிம்மலுவோடு இருக்கிறார். அவரது மகன் சின்ன சாய்யன்னா 2003 டிசம்பரில் தற்கொலை செய்துகொண்டபோது, அவரது உடலை போஸ்ட் மார்ட்டம் செய்யவில்லை. ஏனென்றால் எங்களால் அப்போது அதற்காக செலவு செய்யமுடியவில்லை என்கிறார் அவர்

மெகபூப் நகர். மேடக் மற்றும் அனந்தபூர்

கதுலப்பா அவரது மகனைப் பற்றி நம்மிடம் பேச நினைக்கிறார். ஆனால் முடியவில்லை. அவர் பேச முயல்கிற ஒவ்வொரு முறையும் அந்த வயதான மனிதரின் கண்கள் கண்ணீரால் நிறைந்து போகின்றன. அதனால் அவர் தனது பேரனைத் திரும்பிப் பார்த்து அவரை பேசுமாறு கேட்டுக்கொள்கிறார். ஆந்திரப் பிரதேசத்தில் தற்கொலை செய்துகொண்ட நூற்றுக்கணக்கான விவசாயிகளின் கதைகளைப் போன்றதுதான் அது. பெரிய வித்தியாசமில்லை. ஆனால், இந்தக் கதையில் ஒரு எதிர்பாராத விஷயம் இருக்கிறது.

இந்தக் குடும்பத்துக்கு எந்தவொரு நஷ்ட ஈடும் கிடைப்பதற்கு வழி இல்லை. கடந்த டிசம்பரில் மக்பூப் நகர் மாவட்டத்தின் ஜென்கர்லாவில் சாய்யன்னா தற்கொலை செய்தபோது, மருத்துவ உடற்கூறு பரிசோதனைக்கு அவரது உடல் ஆட்படுத்தப்படவில்லை. அதன் அர்த்தம் என்னவென்றால், அவரது மரணத்துக்கு காரணம் தற்கொலைதான்  என்று அவர்களால் நிறுவமுடியாது.

அவர்களால் பணம் கொடுக்க முடியாது என்பதால் போஸ்ட் மார்ட்டம் செய்யப்படவில்லை. போஸ்ட் மார்ட்டம் செய்து கொள்ள முடியாதவகையிலான அத்தகைய பல குடும்பங்கள் இருக்கின்றன.  சில உணர்ச்சிபூர்வமான காரணங்கள் இருக்கவே செய்கின்றன. போஸ்ட் மார்ட்டம் செய்வதற்கு நிறைய பணம் செலவாகும் என்பதே மற்ற காரணம்.

பெரும்பாலான இடங்களில் போஸ்ட் மார்ட்டம் என்றால் (லத்தீன் மொழியில் மரணத்துக்கு பிறகு என்று அர்த்தம்) மரணத்துக்கு பிறகு ஒரு உடலை பரிசோதித்தல் என்றுதான்  அர்த்தம்.

அது மரணத்துக்கான காரணத்தை தீர்மானிக்க உதவுகிறது. கிராமப்புற ஆந்திராவில் மற்ற எல்லா விஷயங்களுக்கும் மேலாக இது வளர்ந்துவருகிற மரணத்துக்குப்பிறகான தொழிலாக மாறியிருக்கிறது.

அதற்கு பணம் செலுத்த வேண்டியிருக்கிறது

அதன் அர்த்தம் என்னவென்றால், உதாரணமாக, “நீ போலீஸ்காரருக்கு பணம் தரவேண்டும். டாக்டருக்கும் தரவேண்டும். பிணத்தை மருத்துவமனைக்கு ஓட்டிச்செல்கிற ஆர்டர்லிக்கும் பணம் தரவேண்டும்.” என்கிறார் ஜென்கரல்லாவைச் சேர்ந்த ஜி.சங்கர். இதைப் புரிந்துகொள்ள முடியாமல் அவஸ்தைப்படுகிற நம்மைப் பார்த்து அவர் சிரிக்கிறார். “ஆச்சரியமாக இருக்கிறதா? சாதாரணமாக ஒரு அரசு ஊழியரிடம் சாதாரணமாக ஒரு கையெழுத்து வாங்க வேண்டும் என்றால் கூட அதற்கு ஐம்பது ரூபாய் செலவாகும். இதெல்லாம் இலவசமாக வரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ?”

போஸ்ட் மார்ட்டத்துக்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது என்று எழுத்தில் இருக்கிறது உண்மைதான்.ஆனால் மக்கள் அதற்கெல்லாம் பணம் கட்டத்தான் செய்கிறார்கள்.

தற்கொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஆறு மாவட்டங்களில் நாங்கள் ஆய்வு செய்தவரை, அவர்கள் இதற்கு பணம் கட்டியிருக்கிறார்கள்.

சிலர் ஐயாயிரம் வரை செலவு செய்துள்ளனர். மேலம் சிலர் பத்தாயிரம் வரை செலவு செய்துள்ளனர்.

“இது சட்டவிரோதம். இதயமே இல்லாதவர்கள்தான் இப்படி செய்வார்கள். அந்த மக்கள் ஏற்கெனவே மிகுந்த துன்பத்தில் இருக்கிறார்கள். கடன் வலையில் சிக்கியிருக்கிறார்கள்” என்கிறார் அனந்தபூரைச் சேர்ந்த டாக்டர் எம்.கயானாந்த்.“ கடன் காரணமாகத்தான்  குடும்பத்தில் உள்ள ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். அதனால் ஏற்படுகிற அழுத்தம் மேலும் கடனுக்குள் ஆழமாக அவர்களை சிக்க வைக்கிறது.“ இதற்காக பணம் கொடுத்தவர்கள் யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தோம் என்பதை எந்தத் தடையும் இல்லாமல் சொல்லுவார்கள். ஆனால், போலீஸ்காரர்களுக்கு எவ்வளவு கொடுத்தோம் என்பதைச் சொல்லும்போது அவர்கள் மிகவும் எச்சரிக்கையோடு சொல்வார்கள். போஸ்ட்மார்ட்டம் செய்கிற இடத்துக்கு உடலை எடுத்துச் செல்லும் ஓட்டுநருக்கு 2000 ரூபாய் தரவேண்டும். போலீஸ்காரர்கள் மூவாயிரம் ரூபாய் வரை எடுத்துக்கொள்வார்கள். போலீஸ்காரர்களுக்கு உதவியாளராக இருக்கிற ‘ஆர்டர்லி’ ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொள்வார். போஸ்ட் மார்ட்டம் செய்கிற மருத்துவருக்கு 2000 ரூபாய்க்கு குறையாமல் தரவேண்டும்.

“கட்டாயம் 6000 ரூபாய் வரை செலவாகும்” என்கிறார் ஜென்கரல்லாவைச் சேர்ந்த சேகர். அதை விட குறைவாகவே செலவானாலும் கூட அதுவே ஏற்கெனவே கடனில் மூழ்கியிருக்கும் குடும்பங்களுக்கு மேலும் ஒரு சுமைதான்.

“ ஆனால், போஸ்ட் மார்ட்டம்  என்பது முழுமையாக கட்டணம் இல்லாமல் செய்யக்கூடிய ஒன்று” என்கிறார் இதையெல்லாம் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிற அனந்தபூரின் கல்யாண்துர்க்கில் வசிக்கும் டாக்டர் தேசம் ஸ்ரீனிவாசா ரெட்டி.

“இதில் டாக்டருக்கு இருக்கிற வேலை என்பது ஏறக்குறைய ஒன்றுமில்லை. டாக்டரின் உதவியாளர் எல்லாவற்றையும் செய்துவிடுவார். உடலை அவர்தான் வெட்டித் திறப்பார். அதற்குள்ளே அவர் என்ன பார்க்கிறார் என்பதையும் அவர்தான் சொல்வார். டாக்டர் வெறுமனே குறிப்புகளை எழுத மட்டுமே செய்வார். வெகு சிலர்தான் அந்த வேலையைச் செய்வார்கள். ஒரு முறை ஒரு உதவியாளருக்கு பதவி உயர்வு தரப்பட்டு வேறு பணியிடத்துக்கு மாற்றப்பட்டார். ஆனால், அதற்குப் பிறகு அந்த வேலையைச் செய்வதற்கு வேறு யாரும் இல்லை. அதனால் அவரையே திரும்பவும் அந்த பணியிடத்துக்கு திருப்பி அழைத்துக்கொண்டார்கள்” என்கிறார் அவர்.

போஸ்ட்மார்ட்டம் தொடர்பான பிரச்சனைகள்

போஸ்ட் மார்ட்டம் தொடர்பான பிரச்சனைகள் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு மட்டும் அல்ல.

“மருத்துவம் தொடர்பான சட்டம் பற்றிய வழக்கு என்றால் அதற்கே உரிய அழுத்தங்கள் மிகவும் கடுமையாக இருக்கும். தடய அறிவியல் தொடர்பானவர்கள் வேறு நம்மை பாடாய்படுத்துவார்கள். ஒரு கொலையை கொலை என்று சொன்னால், அது ஒரு சக்திவாய்ந்தவரை மனம் நோக வைத்தால் என்ன நடக்கும்?  அத்தகையவர்கள் போஸ்ட் மார்ட்டம் அறிக்கையின் மீதும் தாக்கம் செலுத்துவார்கள்.

ஒருசில அறிக்கைகளின்போது சர்ச்சைகள் உருவாகியிருக்கின்றன. அவற்றின் இறுதி தீர்ப்பு என்பது சந்தேகத்துக்குரியது.

ஏன் நாம் சண்டை போட வேண்டும்? பிரச்சனைகளை ஏன் இழுத்துப் போட்டுக்கொள்ள வேண்டும்? ஏன் பணத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று ஒரு கட்டத்தில்  நினைக்க வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் ஆளாகிறார்கள். ஏன் இதில் கொஞ்சம் பணம் பெற்றுக்கொள்ளக்கூடாது? என்று தோன்றுகிற பாணியிலான இந்த சிந்தனையால்தான்  தற்போது தற்கொலைகளிலும் தொடர்கிறது” என்கிறார் அவர்.

“‘ஆனால் இதெல்லாம் பணம் பிடுங்குவதை நியாயப்படுத்தாது” என்கிறார்கள் டாக்டர் ரெட்டியும் டாக்டர் கியானந்தும். “எதிர்த்து நிற்க முடியாதவர்களை கொடுமைப்படுத்துவதையும் நியாயப்படுத்த முடியாது”.

அறிவியல் ஆர்வத்தையும் வெகுஜன அறிவியலையும் பரப்புகிற, ‘ஜன விக்யான் வேதிகா’ எனும் அமைப்பில் இந்த இரண்டு டாக்டர்களும் செயல்படுகின்றனர். டாக்டர் கியானந்த் இதன் மாநிலத் தலைவராக உள்ளார். விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றிய பல்வேறு அம்சங்களை தொடர்ந்து கவனிப்பவராக அவர் இருக்கிறார்.

மரணத்துக்குப் பிறகான இந்த வியாபாரம் மிகவும் விரிந்த, பரந்த அளவில் நடைபெறுகிறது. அனந்தப்பூரின் துக்காலா மல்லப்பாவின் குடும்பம் அவரது மரணத்துக்குப் பிறகு பத்தாயிரம் வரை செலவு செய்துள்ளது.

வஞ்ரகாரூர் பகுதியில் தற்கொலை செய்துகொண்ட காமலி நாயக் என்பவரின் மனைவி கோபரி பாய்க்கு 6000 ரூபாய் வரைக்கும் செலவானது. “ அதை நாங்கள் எங்களது நண்பர்கள் ஆளுக்கு கொஞ்சம் போட்டு சேகரித்தோம்” என்கிறது இந்த ஆதிவாசி குடும்பம். மகபூப் நகரின் சின்ன ரேவலியில் தற்கொலை செய்துகொண்ட பரம ஏழையான தலித் குடும்பத்தைச் சேர்ந்த பந்தி பொசையா என்பவரின் போஸ்ட் மார்ட்டத்துக்கு 3000 ரூபாய்க்கு மேல் செலவானது. பொசையாவின் அனைத்து மகன்களும் கொத்தடிமைகளாக சிக்கியிருக்கின்றனர். அவர்கள் கடனாக பணம் வாங்கியிருக்கிறார்கள்.

கடனை அதிகரித்தல்

நிஜாமாபாத்தில் அகாபூரில் உள்ள பொன்னாலா அனுமந்தரெட்டியின் குடும்பம்  இந்த செலவுகளுக்காக ஐயாயிரம் கடன் வாங்கியிருக்கிறது. அவர்கள் ஏற்கெனவே ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள்.

சில குடும்பங்கள் எந்தப் பணத்தையும் செலவு செய்யாமல் தப்பிக்கவும் செய்துள்ளன. அனந்தபூரின் தாசரி மகேந்திரு, மேடக் மாவட்டத்தின் சங்கோல்ல நரசிம்மலு ஆகியோரின் குடும்பங்கள் அத்தகையவை. இத்தகைய சம்பவங்களோடு வழக்கமாக சம்பந்தப்பட்டிருப்பவர்களில் மரத்துப் போய்விடாமல் கொஞ்சம் உணர்ச்சியோடு இருப்பவர்கள் உள்ள இடங்களிலும் இது நடைபெற்றிருக்கலாம். ஆனால், இத்தகைய சம்பவங்கள் அதிகம் இல்லை. மகேந்திருவின் குடும்பத்தினருக்கு அக்கம்பக்கம் இருப்பவர்கள் கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்கள். “அவர்களிடமிருந்து கறப்பதற்கு ஒன்னுமே இல்லை என்பதை போலீஸூம் தெரிந்துகொண்டது” என்கிறார்கள் அவர்கள்.

பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்கிற குடும்பங்கள்தான் போஸ்ட் மார்ட்டம் வேண்டாம் என்கிறார்கள். அது தற்கொலைதான் என்பதை அவர்கள் எப்படி நிரூபிப்பார்கள்? “அது பெரிய பிரச்சனை” என்கிறார் டாக்டர் ரெட்டி.

“அவர்கள் அதை நிரூபிக்கவில்லை என்றால் எப்படி இழப்பீடு வாங்குவார்கள்?” கொஞ்சம் காலத்துக்கு முன்னால மரணம் நடந்திருந்தால் எப்படி வாங்குவது?

மேடக் மாவட்டத்தின் செல்மாடா பகுதியில் 2003ஆம் வருடம் மே மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட, பிரதாப் ரெட்டியின் குடும்பம் தற்போது இழப்பீடு வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

“அவர்களுக்கு அப்போது பணம் இல்லாமலிருந்தது” என்கிறார் பக்கத்தில் வசிப்பவர். ஜென்கரல்லாவில் கதுலப்பா எங்களிடம் சொல்ல முயன்றதும் அதுதான். அவரது கன்னங்களில் தற்போது கண்ணீர் வழிந்துகொண்டிருக்கிறது.

நெருக்கடியில் சிக்கியிருக்கிற பலருக்கு இங்கே மரணம் என்பது ஒரு முடிவைக் கொண்டுவரவில்லை. அவர்களின் குடும்பங்களுக்கு மேலும் ஒரு புதிய சுமையைத்தான் அது கொண்டுவருகிறது.

இந்த கட்டுரையின் ஒரு வடிவம் தி இந்து ஆங்கில நாளிதழில்வெளியாகியிருக்கிறது: http://www.hindu.com/2004/08/08/stories/2004080804671400.htm

த.நீதிராஜன்

पी. साईनाथ, पीपल्स ऑर्काइव ऑफ़ रूरल इंडिया के संस्थापक संपादक हैं. वह दशकों से ग्रामीण भारत की समस्याओं की रिपोर्टिंग करते रहे हैं और उन्होंने ‘एवरीबडी लव्स अ गुड ड्रॉट’ तथा 'द लास्ट हीरोज़: फ़ुट सोल्ज़र्स ऑफ़ इंडियन फ़्रीडम' नामक किताबें भी लिखी हैं.

की अन्य स्टोरी पी. साईनाथ
Translator : T Neethirajan

T Neethirajan is a Chennai based writer, journalist and the editor of South Vision books – a bilingual publication house focused on social justice issues.

की अन्य स्टोरी T Neethirajan