“ஆற்றில் விவசாயம் செய்வது மிகவும் வசதியாக இருக்கிறது – அறுவடைக்குப் பிறகு பயிர்களின் அடிக்கட்டைகள் எஞ்சியிருப்பதில்லை. அதைப்போலவே இங்கே களைகளும் வளர்வதில்லை.“

மகாசாமுண்ட் மாவட்டம், கோதாரி கிராமத்தைச் சேர்ந்தவர் குந்தி பானே. தாம்தாரி மாவட்டம், நக்ரி நகரத்துக்கு அருகே உள்ள பார்சியா கிராமத்தின் வழியாகப் பாயும் மகாநதி ஆற்றின் மணற்படுகையில் விவசாயம் செய்யும் 50-60 விவசாயிகளில் ஒருவர் இவர். “கடந்த பத்தாண்டுகளாக இதைச் செய்துவருகிறேன். நானும் என் கணவரும் இங்கே வெண்டைக்காய், பீன்ஸ், கிர்னி பழம் ஆகியவற்றைப் பயிரிடுகிறோம்,” என்கிறார் குந்தி. அவருக்கு வயது 57.

புற்கள் வேய்ந்த சிறு குடிலில் அமர்ந்தபடி அவர் பேசினார். ஒரு ஆளுக்குப் போதுமானதாகவும், லேசான மழை வந்தால் நனையாத அளவு உறுதியாகவும் இருந்தது அந்த தற்காலிக குடில். முக்கியமாக, இரவு நேரங்களில் மாடுகள் உள்ளிட்ட விலங்குகள் பயிரை மேய்ந்துவிடாமல் தங்கிப் பார்த்துக்கொள்வதற்காகவே இந்தக் குடில் அமைக்கப்பட்டுள்ளது.

ராய்பூர் மாவட்டத்தின் பாராகாவ்ன் மற்றும் மகாசாமுண்ட் மாவட்டத்தின் கோதாரி ஆகிய ஊர்களை இணைக்கும் வகையில் மகாநதியின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பாலத்துக்குக் கீழே செல்லும் பசுமையான திட்டுகளைப் போலத் தெரிகிறது விவசாயம் செய்யப்பட்ட இடம். இரண்டு ஊர்களையும் சேர்ந்த விவசாயிகள், ஆற்றின் மணற்திட்டுகளை தங்களுக்குள் பிரித்துக்கொண்டு டிசம்பர் முதல் மே மாதக் கடைசியில் மழைக்காலம் தொடங்கும் வரை அங்கு பயிரிடுகிறார்கள்.

Left : Farmers bathing in the river by their fields.
PHOTO • Prajjwal Thakur
Right: Kunti Pane sitting in front of her farm
PHOTO • Prajjwal Thakur

இடது: வயல்களுக்கு அருகே இருக்கும் ஆற்றில் விவசாயிகள் குளிக்கின்றனர். வலது: வயலுக்கு முன்னால் குந்தி பனே அமர்ந்திருக்கிறார்

Watermelons (left) and cucumbers (right) grown here on the bed of the Mahanadi
PHOTO • Prajjwal Thakur
Watermelons (left) and cucumbers (right) grown here on the bed of the Mahanadi
PHOTO • Prajjwal Thakur

மகாநதி மணற்படுகையில் விளைந்த தர்பூசணிப் பழங்கள் (இடது) மற்றும் வெள்ளரிக்காய்கள் (வலது)

“எங்களுக்கு சொந்தமாக கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது,” என்று நம்மிடம் அவர் கூறினார். ஆனால், இந்த ஆற்றுப்படுகையில் விவசாயம் செய்யவே அவர் விரும்புகிறார்.

“எங்கள் நிலம் ஒன்றுக்கு மட்டும் உரம், விதைகள், கூலி, போக்குவரத்து என்று எல்லாம் சேர்த்து சுமார் 30,000 முதல் 40,000 ரூபாய் வரை செலவாகிறது. எல்லா செலவும் போக சுமார் 50,000 ரூபாய் எங்களுக்குக் கிடைக்கிறது,” என்கிறார் குந்தி.

சத்தீஸ்கரில் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள கும்ஹார் சாதியைச் சேர்ந்தவரான குந்தி தங்கள் சமுதாயத்தின் பாரம்பரியத் தொழில் பானை வனைவதும், சிற்பம் செதுக்குவதும் ஆகும் என்கிறார். தீபாவளி, போலா பண்டிகைகளின்போது பானை செய்கிறார் குந்தி.  “எனக்கு மண்பாண்டத் தொழில் பிடிக்கும். ஆனால் அதை ஆண்டு முழுவதும் செய்ய முடியாது,”  என்கிறார் அவர். போலா என்பது மகாராஷ்டிராவிலும், சத்தீஸ்கரிலும் விவசாயிகள் கொண்டாடும் ஒரு பண்டிகை. காளைகளுக்கும், எருதுகளுக்கும் இந்தத் திருவிழாவில் முக்கிய இடம் உண்டு. வேளாண்மையில் அவை ஆற்றும் முக்கியப் பங்களிப்புக்காக இந்த திருவிழாவில் இவை கொண்டாடப்படுகின்றன. வழக்கமாக இந்தப் பண்டிகை ஆகஸ்ட் மாதத்தில் வரும்.

*****

ராய்பூர் மாவட்டம், சூரா வட்டாரம், பாராகாவ்ன் கிராமத்தில் உள்ள கல் குவாரி ஒன்றில் வேலை செய்கிறார் 29 வயது பட்டதாரி இளைஞர் ஜகதீஷ் சக்ரதாரி. ஆற்று மணற்படுகையில் தங்கள் குடும்பத்துக்கான இடத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக உழைக்கிறார் இவர். தமது வருவாயை கொஞ்சம் அதிகரிக்கவே இதை அவர் செய்கிறார். மாணவப் பருவத்தில் இருந்தே குவாரியில் வேலை செய்து குடும்பத்துக்கு உதவி வரும் ஜகதீஷுக்கு அங்கு தினக்கூலியாக ரூ.250 கிடைக்கிறது.

Left: Jagdish Chakradhari sitting in his hut beside his farm.
PHOTO • Prajjwal Thakur
Right: Indraman Chakradhari in front of his farm
PHOTO • Prajjwal Thakur

இடது: தமது நிலத்துக்கு அருகே உள்ள தமது குடிலில் அமர்ந்திருக்கிறார் சக்ரதாரி. வலது: தமது நிலத்துக்கு முன்பாக இந்திரமான் சக்ரதாரி

Left: Indraman Chakradhari and Rameshwari Chakradhari standing on their field.
PHOTO • Prajjwal Thakur
Right: Muskmelon grown on the fields of Mahanadi river
PHOTO • Prajjwal Thakur

இடது: தங்கள் நிலத்தில் நின்றுகொண்டிருக்கும் இந்திரமான் சக்ரதாரி மற்றும் ராமேஷ்வரி சக்ரதாரி வலது: மகாநதி ஆற்றுப்படுகை வயல்களில் விளைந்த கிர்னி பழம்

அவரது தந்தையான 55 வயது சத்ருகன் சக்ரதாரி, 50 வயது தாய் துலாரிபாய் சக்ரதாரி மற்றும் 18 வயது தங்கை தேஜேஸ்வரி ஆகியோரும் மகாநதி ஆற்றுப்படுகையில் தங்களுக்கான பகுதிகளில் உழைக்கிறார்கள். சக்ரதாரி குடும்பத்தாரும் கும்ஹார்  சாதியைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், இவர்கள் மண்பாண்டத் தொழிலில் ஈடுபடுவதில்லை. “இந்த தொழிலில் பெரிதாக சம்பாதிக்க முடியவில்லை” என்கிறார் ஜகதீஷ்.

40 வயது இந்திரமான் சக்ரதாரியும் பாராகாவ்ன் கிராமத்தில் உள்ள கும்ஹார் சமூகத்தை சேர்ந்தவர்தான். விழாக்காலங்களில் துர்கை, பிள்ளையார் சிலைகளை செதுக்கும் இவர் இந்த தொழிலில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக கூறுகிறார்.

“என்னைப் போல என் மகனும் விவசாயி ஆவதில் எனக்கு விருப்பமில்லை. ஏதோ ஒரு வேலை வாங்குவதற்கோ, வேறு ஏதாவது தொழிலுக்கோ என்ன செய்யவேண்டுமோ அதை அவன் செய்யலாம். 11ம் வகுப்பு படிக்கும் அவன், கணினியைப் பயன்படுத்தவும் கற்று வருகிறான். வயலில் அவன் உதவி செய்கிறான். ஆனால், விவசாயத்தில் வயிற்றுப்பாட்டுக்குப் போதுமான அளவுதான் சம்பாதிக்க முடிகிறது,” என்கிறார் இந்திரமான்.

அவரது மனைவி ராமேஷ்வரி சக்ரதாரி நிலத்தில் வேலை செய்கிறார்; பானை செய்கிறார்; சிலைகளும் வடிக்கிறார். “திருமணத்துக்குப் பிறகு தினக்கூலித் தொழிலாளியாக வேலை செய்தேன். இப்போது இதை விரும்புகிறேன். காரணம், நாங்கள் இப்போது வேறொருவருக்கு வேலை செய்யவில்லை, சொந்தமாக வேலை செய்கிறோம்,” என்கிறார் அவர்.

Left: Indraman Chakradhari carrying the beans he has harvested from his field to his hut to store.
PHOTO • Prajjwal Thakur
Right: Rameshwari Chakradhari working in her field
PHOTO • Prajjwal Thakur

இடது: ஆற்றுப்படுகை வயலில் அறுவடை செய்த பீன்சை தமது குடிலுக்கு கொண்டு செல்லும் இந்திரமான் சக்கரதாரி. வலது: தமது வயலில் உழைத்துக்கொண்டிருக்கும் ராமேஷ்வரி சக்ரதாரி


Left: Shatrughan Nishad in front of his farm.
PHOTO • Prajjwal Thakur
Right: Roadside shops selling fruits from the farms in Mahanadi river
PHOTO • Prajjwal Thakur

இடது: தமது நிலத்துக்கு முன்னால் சத்ருகன் நிஷாத். வலது: மகாநதி ஆற்று வயலில் விளைந்த பழங்களை விற்கும் சாலையோரக் கடைகள்

மகாசாமுண்ட் மாவட்டம், கோதாரி கிராமத்தைச் சேர்ந்த சத்ருகன் நிஷாத்தின் குடும்பம் இந்த இடத்தில் மூன்று தலைமுறையாக விவசாயம் செய்கிறது. இந்த 50 வயது விவசாயிக்கு ஆற்றுப்படுகையில் ஓர் இடம் இருக்கிறது. “மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் இந்த இடத்தில் தர்பூசணிப் பழமும், கிர்னிப் பழமும் விளைவித்துக் கொண்டிருந்தார். அவரது வயலில் நான் தொழிலாளியாக வேலை செய்தேன். பிறகு நாங்களே சொந்தமாக இதை செய்யத் தொடங்கினோம்,” என்கிறார் அவர்.

“டிசம்பரில் நாங்கள் நிலத்தில் உரம் போட்டு, விதைப்போம். பிப்ரவரியில் அறுவடை செய்யத் தொடங்குவோம்,” என்று கூறும் சத்ருகன், இந்த ஆற்று வயலில் நான்கு மாதம் சாகுபடி செய்கிறார்.

மாநிலத் தலைநகரான ராய்பூரின் மொத்த விற்பனை மண்டி இங்கிருந்து 42 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால், வட்டாரத் தலைமையிடமான அராங் மண்டி இங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலேயே இருப்பதால் விவசாயிகள் இங்கே போவதையே விரும்புகிறார்கள். இந்த இடங்களுக்கு தங்கள் பண்டங்களை ரேக்குகளில் அனுப்புகிறார்கள் விவசாயிகள். ராய்பூருக்கு ஒரு ரேக் கொண்டு செல்ல 30 ரூபாய் ஆகிறது.

நீங்கள் மகாநதி பாலத்தின் வழியாகப் பயணித்தால், தார்ப்பாய், கழிகள் கொண்டு அமைத்த தற்காலிக கடைகளில் தாங்கள் விளைவித்த காய்கறிகளையும், பழங்களையும் இந்த ஆற்றுப் படுகை விவசாயிகள் விற்பனை செய்வதைப் பார்க்க முடியும்.

தமிழில்: அ.தா.பாலசுப்ரமணியன்

Student Reporter : Prajjwal Thakur

प्रज्ज्वल ठाकुर, अज़ीम प्रेमजी विश्वविद्यालय में स्नातक के छात्र हैं.

की अन्य स्टोरी Prajjwal Thakur
Editor : Riya Behl

रिया बहल, पीपल्स आर्काइव ऑफ़ रूरल इंडिया (पारी) के लिए सीनियर असिस्टेंट एडिटर के तौर पर काम करती हैं. मल्टीमीडिया जर्नलिस्ट की भूमिका निभाते हुए वह जेंडर और शिक्षा के मसले पर लिखती हैं. साथ ही, वह पारी की कहानियों को स्कूली पाठ्क्रम का हिस्सा बनाने के लिए, पारी के लिए लिखने वाले छात्रों और शिक्षकों के साथ काम करती हैं.

की अन्य स्टोरी Riya Behl
Translator : A.D.Balasubramaniyan

A.D.Balasubramaniyan, is a bilingual journalist, who has worked with leading Tamil and English media for over two decades from Tamil Nadu and Delhi. He has reported on myriad subjects from rural and social issues to politics and science.

की अन्य स्टोरी A.D.Balasubramaniyan