டிபன் கேரியர்கள், குடிதண்ணீர், குடைகள் மற்றும் காலணிகள். உரிமையாளரைப் பார்க்க முடியாவிட்டாலும் உரிமையாளர் யார் என்று உங்களால் புரிந்து கொள்ள முடியும். ஒரு விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குழு அருகில் வேலை செய்கிறது என்பதை நீங்கள் அறிய முடியும். இது ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள சிண்டேஹி கிராமத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். தொழிலாளர்கள் கிட்டத்தட்ட முழுக்க முழுக்க பெண்கள் மற்றும் இளம்பெண்களே, அவர்களது பணி இடத்தை அடைய பொட்டங்கி வட்டம் முழுவதும் பெரும் தூரம் நடந்து அனைத்து உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு வந்துள்ளனர் (சில உபகரணங்கள் படத்தில் இல்லை). இது 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம். மழைக்காலம் துவங்கிவிட்டது. அதனால் தான் குடைகள். ஏழைத் தொழிலாளர்களின் ரப்பர் செருப்புகள் அங்கு சுற்றி கிடக்கின்றன ஏனெனில் அவர்கள் காலணிகளையும் பொக்கிஷமாக நினைக்கின்றனர் அதனால் அதனை வெளியில் அணிந்து செல்லவோ அல்லது மண்ணில் போட்டு உலாவவோஅவர்கள் தயங்குகின்றனர். சில சந்தர்ப்பங்களில் டிபன் கேரியரில் உள்ள உணவு மூன்று அல்லது நான்கு நபர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. சுகாதாரமான குடிநீர் என்பது எல்லா நேரத்திலும் வேலையிடங்களில் - இது ஒரு தனியார் பண்ணை - கிடைப்பதில்லை - அதனால் தான் பிளாஸ்டிக் பாட்டில்கள். பருவ மழைக்கான விதைப்புப் பருவம் துவங்கிவிட்டது.
தமிழில்: சோனியா போஸ்