“இந்த அரசு விவசாயிகளை பற்றி கவலைப்படவில்லை. பெருநிறுவனங்களுக்கே ஆதரவாக இருக்கிறது. வேளாண் பொருட்கள் விற்பனைக் கூடமும் அவர்களிடமே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏன் விவசாயிகளுக்கு உதவி செய்யாமல் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள்?” எனக் கேட்கிறார் கர்நாடகாவின் பெலகாவி மாவட்ட விவசாயக் கூலியான ஷாந்தா காம்ப்ளே.
பெங்களூரு ரயில்வே நிலையத்துக்கு அருகே மெஜஸ்டிக் பகுதியில் அமர்ந்திருக்கும் அவர் ‘மத்திய அரசை கண்டிக்கிறோம்’ என்கிற கோஷங்களை கேட்டுக் கொண்டிருந்தார்.
50 வயது ஷாந்தா, விவசாயிகளின் குடியரசு தின போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்ளவென ஜனவரி 26ம் தேதி காலை பேருந்தில் பெங்களூருவை வந்தடைந்தார். கர்நாடகாவிலிருந்து பல விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் ரயில்களிலும் பேருந்துகளிலும் வந்து கொண்டிருந்தனர். தில்லியில் நடக்கவிருக்கும் விவசாயிகளின் குடியரசு தின ட்ராக்டர் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சுதந்திர பூங்காவில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தனர்.
கிராமத்தில் உருளைக்கிழங்கு, பயிறு மற்றும் நிலக்கடலை நடவு செய்து நாட்கூலியாக 280 ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்தார் ஷாந்தா. விவசாய வேலை இல்லாதபோது ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலைகள் பார்த்தார். அவருடைய 28 மற்றும் 25 வயது மகன்கள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வரும் கட்டுமான வேலைகள் பார்த்தனர்.
“எங்களுக்கென போதுமான உணவும் தண்ணீரும் கூட ஊரடங்கு காலத்தில் இல்லை,” என்கிறார் அவர். “அரசாங்கம் எங்களை பொருட்படுத்தவேயில்லை.”
ரயில்நிலைய மேடையில் நின்று ஒரு விவசாயக்குழு கோஷம் போட்டனர், “வேளாண் பொருள் விற்பனைக் கூடம் எங்களுக்கு வேண்டும். புதிய சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.”
கடந்த வருடத்தில் அரசு நடத்தும் வேளாண்பொருள் விற்பனைக் கூடம் 50 வயது கிருஷ்ணமூர்த்திக்கு உதவியது. ஒழுங்கற்ற மழையால் பனபுரா கிராமத்தின் விவசாயி பருத்தி, சோளம், ராகி, கறிவேப்பிலை முதலிய பயிர்களில் பெரும்பாலானவற்றை இழந்தார். அவரின் 50 ஏக்கர் விவசாய நிலத்தில் மீந்ததை மண்டியில் விற்றார். “விவசாயத்துக்கு நிறைய பணம் செலவாகிறது,” என்கிறார் மூர்த்தி. “ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் செலவழிக்கிறோம். ஆனால் அதில் பாதிதான் திரும்ப கிடைக்கிறது.”
விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 , விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ஆகியவையே மூன்று வேளாண் சட்டங்கள் ஆகும். 2020 ஜூன் 5 அன்று அவசரச் சட்டங்களாக்கப்பட்டு செப்டம்பர் 14 அன்று பாராளுமன்றத்தில் மசோதாக்களாக தாக்கல் செய்யப்பட்டு எதிர்ப்பையும் மீறி வேகவேகமாகாக அந்த மாத 20ம் தேதி நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
மூன்று சட்டங்களும் தங்களின் வாழ்வாதாரங்களை அழிக்கவும் பெருவணிக நிறுவனங்கள் விவசாயம் மற்றும் விவசாயிகள் மீது பெரும் அதிகாரம் கொள்ளவும் வாய்ப்பு வழங்குவதாக விவசாயிகள் நினைக்கின்றனர். விவசாயிக்கு முக்கிய ஆதாரங்களாக இருக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண்பொருள் சந்தைப்படுத்தும் குழு, அரசு கொள்முதல் ஆகிய விஷயங்களை ஆகியவற்றை இந்த சட்டங்கள் மட்டுப்படுத்துகின்றன. மேலும் அரசியல் சாசனத்தின் 32ம் பிரிவு வழங்கும் குடிமக்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பு உரிமை யையும் இச்சட்டங்கள் பாதிப்பதாக விமர்சனம் எழுப்பப்படுகிறது.
‘ஒப்புக் கொள்ள மாட்டோம்! ஒப்புக் கொள்ள மாட்டோம்!’ என பெங்களூருவில் விவசாயிகள் கோஷமெழுப்பினர்.
”மூன்று கொடுமையான வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட வேண்டும்,” என்கிறார் கர்நாடகா ராஜ்ய ரைத சங்கத்தின் மாநிலச் செயலாளர். “மாநிலத்திலிருந்து கிட்டத்தட்ட 25, 30 அமைப்புகள் இந்த போராட்டங்களில் கலந்து கொள்கின்றன. 50000க்கும் மேற்பட்ட விவசாயிகளும் தொழிலாளர்களும் கர்நாடகா முழுவதிலுமிருந்து வருகின்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் மட்டுமே போராடுவதாக மத்திய அரசு சொல்வது முற்றிலும் தவறான செய்தி,” என்கிறார் அவர்.
“அரசாங்கம் விவசாயிகளுக்கு எதிராக இருக்கிறது. இங்கு கூட முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கார்ப்பரேட்டுகளுடன் சேர்ந்திருக்கிறார். நிலச்சீர்திருத்த சட்டத்தை பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தியிருக்கிறார். மேலும் ஒருதலைப்பட்சமாக பசுவதை தடுப்பு மசோதாவை அறிமுகப்படுத்தி இருக்கிறார்,” என்கிறார் கோபால்.
ரயில் நிலையத்துக்கு வெளியே நிற்கும் பெண்கள் குழுவில் ஒருவராக 36 வயது விவசாயி ஏ.மமதாவும் நின்று கொண்டிருக்கிறார். ஹவேரி மாவட்டத்தை சேர்ந்தவர். பருத்தி, ராகி மற்றும் நிலக்கடலையை 9 ஏக்கர் விவசாய நிலத்தில் விளைவிப்பவர். “எங்களுக்கு கார்ப்பரேட் மண்டிகள் தேவையில்லை. அரசாங்கம் வேளாண்பொருள் விற்பனைக் கூடத்தை வலிமை மிகுந்ததாக மாற்றி தரகர்களை ஒழிக்க வேண்டும். நேரடியாக விவசாயிகளிடமிருந்து பொருட்களை வாங்குவதற்கான சிறந்த வழிகளை அவர்கள் அறிமுகப்படுத்த வேண்டும்,” என்கிறார் அவர்.
அவரை சுற்றி இருந்தோர், “புதிய சட்டங்கள் அதானிக்கும் அம்பானிக்கும் ஆனவை” என கோஷம் போட்டனர்.
ரயில் நிலையத்தின் வாகன நிறுத்த பகுதியில் பயணிக்கும் போராட்டக்காரர்களுக்கு காகித தட்டுகளில் சூடான உணவு வழங்கப்படுகிறது. மாற்று பாலினத்தவருக்கான மாநில அமைப்பான கர்நாடகா மங்களமுகி அறக்கட்டளையின் உறுப்பினர்கள் சாதம் சமைத்துக் கொண்டிருந்தனர். “இது எங்களின் க்டமை. விவசாயிகள் விளைவித்த உணவை கொண்டு வளர்ந்தவர்கள் நாங்கள். அவர்கள் விளைவித்த அரிசியைதான் நாங்கள் உண்ணுகிறோம்,” என்கிறார் அமைப்பின் பொதுச் செயலாளரான அருந்ததி ஜி.ஹெக்டே.
அமைப்புக்கென சிக்கமகளுரு மாவட்டத்தில் ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. நெல், ராகி, நிலக்கடலை முதலியவற்றை அமைப்பு அங்கு விளைவிக்கிறது. “நாங்கள் அனைவரும் விவசாயக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். எனவே இந்த போராட்டம் எந்தளவுக்கு முக்கியம் என எங்களுக்கு தெரியும். இந்த போராட்டத்துக்கான எங்கள் பங்கை நாங்கள் செய்கிறோம்,” என்கிறார் அருந்ததி.
ஆனால் ஜனவரி 26 அன்று பிற்பகல் 1 மணிக்கு காவல்துறை மெஜஸ்டிக் பகுதியில் தடுப்பு வைத்து போராட்டக்காரர்கள் சுதந்திர பூங்காவில் நடக்கும் கூட்டத்துக்கு செல்வதை தடுத்தனர்.
“மாநில அரசு ஜனநாயக போராட்டங்களுக்கு எதிராக இருக்கிறது. அதிருப்தியை காவல்துறை கொண்டு ஒடுக்க முனைகிறது,” என்கிறார் கோபால். தங்களின் ஆதரவு தெரிவிக்க மாநிலம் முழுவதிலுமிருந்து மாணவர்களும் தொழிலாளர்களும் கூட வந்திருப்பதாக அவர் கூறுகிறார்.
தடுப்பு நடவடிக்கைகள் பல்லாரியை சேர்ந்த விவசாயி கங்கா தன்வர்கரை கோபப்படுத்தி விட்டது. “எங்கள் வீடுகளையும் குடும்பங்களையும் நிலங்களையும் விட்டுவிட்டு காரணமின்றி இங்கு வர நாங்கள் ஒன்றும் முட்டாள்களல்ல. தில்லியில் நடக்கும் போராட்டத்தில் இதுவரை 150க்கும் மேல் விவசாயிகள் இறந்து போயிருக்கின்றனர். நடுங்கும் குளிரிலும் குழந்தைகளோடு தெருக்களில் கூடாரமமைத்து அவர்கள் அங்கு இருக்கின்றனர்.”
போராடுவதற்கான காரணமாக, “இந்த சட்டங்கள் மக்களுக்கானவை கிடையாது. விவசாயிகளுக்கானவை கிடையாது. தொழிலாளர்க்கானதும் கிடையாது. அவை நிறுவனங்களுக்கானவை,” என கூறுகிறார் அவர்.
முகப்பு படம்: அல்மாஸ் மஸூத்
தமிழில்: ராஜசங்கீதன்