“அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்த மக்கள் நடமாட்டம் இரவு 7 மணியிலிருந்து காலை 7 மணி வரை தடை செய்யப்படுகிறது.”
–உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை (மே 17ம் தேதி இந்தியா டுடேவில் குறிப்பிட்டிருந்தபடி)
‘மாநிலங்களுக்கு இடையே பேருந்துகளையும் வாகனங்களையும் அனுமதித்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரணம்’ (அதுவும் இரண்டு மாநிலங்களும் ஒப்புக் கொண்டால் மட்டும்தான்) வழங்கியிருந்தது சுற்றறிக்கை. நெடுஞ்சாலைகளில் நடந்து கொண்டிருந்த தொழிலாளர்களை பற்றி ஒரு வார்த்தை இடம்பெறவில்லை.
இரவு 7 மணியிலிருந்து காலை 7 மணி வரை நடமாட்டம் தடை செய்யப்பட்டதால் தொழிலாளர்கள் 47 டிகிரி செல்சியஸ் கோடை வெயிலில் நடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
தெலங்கானாவின் மிளகாய் விவசாய நிலங்களில் வேலை பார்த்த
ஜம்லோ மட்கம்
என்கிற 12 வயது ஆதிவாசி சிறுமி ஒரு மாதத்துக்கு முன் ஊரடங்கு உத்தரவு வேலையையும் வருமானத்தையும் நிறுத்தியபின் சட்டீஸ்கரில் இருக்கும் தன் ஊருக்கு கிளம்பினார். மூன்று நாட்களில் 140 கிலோமீட்டர்கள் நடந்தவர், சோர்வாலும் நீரில்லாமலும் வீட்டுக்கு 60 கிலோமீட்டர் தொலைவே இருந்த நிலையில் விழுந்து இறந்தார். இன்னும் எத்தனை ஜம்லோக்களை இத்தகைய ஊரடங்கு உத்தரவுகள் உருவாக்கும்?
130 கோடி மக்களை நான்கு மணி நேரங்களில் வீடுகளில் முடங்க சொன்ன பிரதமரின் மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு, பதற்றத்தை உருவாக்கியது. எல்லா இடங்களிலும் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வீடுகளை நோக்கி நடக்கத் தொடங்கினர். அடித்து துவைத்து நகரச்சிறைகளுக்குள்ளேயே காவலர்களால் முடக்க முடியாதவர்களை மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தினோம். பூச்சிக்கொல்லி மருந்தை மக்கள் மீது அடித்தோம். நிவாரணம் கிடைக்காத இடங்களுக்கு ‘நிவாரண முகாம்’ என்ற பெயர்சூட்டி அவர்களை அனுப்பி வைத்தோம்.
சாதாரணப் பொழுதில் கூட இருந்திராத அளவுக்கு மும்பை – நாசிக் நெடுஞ்சாலை ஊரடங்கு நேரத்தில் பரபரப்பாக இருந்தது. மக்கள் விரும்பிய திசைகளில் நடந்தார்கள்.
பிம்லேஷ் ஜெய்வால்
சில வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் ஒரு காலை இழந்தவர். ஒரு ஸ்கூட்டரில் மனைவியையும் மூன்று வயது மகளையும் ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிராவின் பன்வெலிலிருந்து மத்தியப்பிரதேசத்தின் ரெவா வரை 1200 கிலோமீட்டர் சென்றிருக்கிறார். “நான்கு மணி நேர அவகாசத்தை மட்டும் கொடுத்து ஒரு நாட்டையே யாராவது முடக்குவார்களா?” எனக் கேட்கிறார் அவர். அட பிம்லேஷ், அக்கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரியாதா?
இவற்றுக்கிடையில், “ரயில்களை ஏற்பாடு செய்கிறோம். நீங்கள் எல்லாரும் உங்கள் வீடுகளுக்கு போகலாம்,” என்றோம். செய்யவும் செய்தோம். பசியில் வாடி நம்பிக்கையிழந்து பரிதவித்த மக்களிடம் பயணச்சீட்டுகளுக்கான முழுப் பணத்தை கொடுக்கும்படி கேட்டோம். பிறகு, கட்டுமான நிறுவனங்களும் இன்னும் பல நிறுவனங்களும் அவர்களுக்கு உழைத்துக் கொட்ட வேண்டிய கூட்டம் தப்பிக்கிறது என புகார் செய்ததும் சில ரயில்களை ரத்து செய்தோம். அது போன்ற புகார்கள் ரயில் சேவை தொடங்குவதை பெரிய அளவில் தாமதப்படுத்தியது. மே மாத 1ம் தேதி தொடங்கப்பட்ட ஷ்ரமிக் சிறப்பு ரயில்களில் 91 லட்சம் தொழிலாளர்களை அவர்களின் ஊர்களுக்கு கொண்டு சேர்த்து விட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் மே 28ம் தேதி அரசு கூறியது. கட்டணத்தை பொறுத்தவரை சில இடங்களில் ரயில் சேவையைத் தொடங்கும் மாநில அரசும் சில இடங்களில் ரயில்கள் வந்து சேரும் மாநில அரசும் கொடுக்குமென அரசு வழக்கறிஞர் (மத்திய அரசின் பங்கு என இதில் எதுவும் இல்லை) குறிப்பிட்டார்.
இவற்றைக் கொண்டு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ள முடியும். ரயில்களில் பயணிப்பதற்கு பதிவு செய்ய இன்னும் எத்தனை கோடி பேர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது கூட நமக்கு தெரியாது. ஆனால் அவர்கள் எப்படியேனும் ஊர்களுக்கு செல்ல வேண்டுமென விரும்புகிறார்கள் என்பது மட்டும் நமக்கு தெரிகிறது. அதே போல் அவர்கள் போக விடாமல் தடுத்து வைப்பதற்கான பெரிய அளவில் முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதும் நமக்கு தெரிகிறது. பல மாநிலங்கள் வேலைநேரத்தை 12 மணி நேரங்களாக நீட்டித்திருக்கின்றன. அதில் பாஜக ஆளும் மூன்று மாநிலங்களும் அடக்கம். அதிக நேரம் உழைத்தாலும் அதற்கு வருமானம் கிடையாது. பல தொழிலாளர் சட்டங்களை மூன்று வருடங்களுக்கு சில மாநிலங்கள் நீக்கியிருக்கின்றன.
ஏப்ரல் 12ம் தேதி வரை 14 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் இருப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது. மார்ச் 31ம் தேதி முகாம்களில் இருந்தவர்களை விட இரு மடங்கு. உணவு முகாம்கள், சமூக சமையலறைகள், தன்னார்வ முயற்சிகள் போன்றவற்றால் ஏப்ரல் 12ம் தேதியில் எண்ணிக்கை ஒரு கோடியே முப்பது லட்சமாக மாறியது. மார்ச் 31-ஐ விட ஐந்து மடங்கு அதிகம். இந்த எண்ணிக்கையெல்லாம் முழுமையான ஒரு பேரழிவின் சிறு பகுதி மட்டும்தான். தற்போது வரை சாமானியர்களும் தனி நபர்களும் சமூகங்களும் குடும்பங்களும் தன்னார்வ தொண்டுக் குழுக்களும் சிவில் சமூக இயக்கங்களும் தொண்டு நிறுவனங்களும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் கூட இந்த சிக்கலை களைய செய்யும் செலவு மத்திய அரசு செய்திருக்கும் செலவைக் காட்டிலும் அதிகம். அவர்களின் நோக்கம் உண்மையிலேயே நேர்மையானது.
மார்ச் 19லிருந்து மே 12ம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடி ஐந்து முறை தொலைக்காட்சியில் பேசியிருக்கிறார். தட்டுகளையும் பாத்திரங்களையும் தட்ட சொன்னார். மெழுகுவர்த்தி ஏற்றச் சொன்னார். கொரோனாவை எதிர்கொள்ளும் முன்கள வீரர்களுக்கு மலர்களை தூவச் சொன்னார். ஐந்தாவது பேச்சில்தான் தொழிலாளர்கள் என்ற வார்த்தையையே சொன்னார். ‘புலம்பெயர் தொழிலாளர்கள்’ என ஒரே ஒரு தடவை சொல்லியிருக்கிறார். தேடிப் பார்த்து கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.
புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்ப வருவார்களா?
வாய்ப்புகள் இல்லாததால் கொஞ்ச காலத்தில் சிலர் திரும்புவார்கள். முப்பது வருடங்களாக வளர்ச்சி என்கிற பெயரில் கோடிக்கணக்கான வாழ்வாதாரங்களை நாசம் செய்திருக்கிறோம். 31500 விவசாயிகள் தற்கொலை செய்யுமளவுக்கு மிகப் பெரிய விவசாய நெருக்கடியை உருவாக்கி வைத்திருக்கிறோம்.
ஊர்களுக்கு திரும்புவதை பற்றி நிச்சயம் பேசுங்கள். ஆனால் அதற்கு முன் அவர்கள் ஏன் சொந்த ஊர்களை விட்டு முதலில் கிளம்பினார்கள் என்பதையும் கேளுங்கள்.
1993ம் ஆண்டில், தெலங்கானா என இன்று மாறியிருக்கும் மஹ்பூப் நகரிலிருந்து மும்பைக்கு செல்ல வாரத்துக்கே ஒரு பேருந்து சேவைதான் இருந்தது. 2003 மே மாதத்தில் கூட்டம் நிறைந்த பேருந்தில் நான் சென்றபோது வாரத்துக்கு 34 பேருந்து சேவைகள் என மாறியிருந்தது. அந்த மாத இறுதியில் அதுவும் 45 ஆக அதிகரிக்கப்பட்டது. என்னுடன் பயணித்தவர்கள் அனைவரும் விவசாயப் பொருளாதாரம் நொறுங்கியதில் பாதிப்படைந்தவர்கள். 15 ஏக்கர் நிலம் கொண்டிருந்தவரும் அவர்களில் ஒருவர். அவர் கொண்டிருந்த நிலத்தின் கதை முடிந்துவிட்டதால் மும்பையில் வேலை தேடி செல்வதாகக் கூறினார். அவரின் நிலத்தில் கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் பின்னால் அமர்ந்திருந்தார். நில உரிமையாளரை போலவே அவரும் வேலை தேடி சென்று கொண்டிருந்தார்.
நாமனைவரும் ஒரே பேருந்தில்தான் பயணிக்கிறோம் என எனக்கு தோன்றியது.
1994ம் ஆண்டில் வயநாடு மாவட்டத்தின் மனந்தவடியிலிருந்து கர்நாடகாவின் குட்டாவுக்கு செல்ல இருந்த கேரள அரசு பேருந்துகள் மிகக் குறைவு. விவசாய நெருக்கடி ஏற்படும் வரை, பணப்பயிர் வளர்த்த வயநாடு மாவட்டத்துக்குள்தான் இடப்பெயர்வு நடந்தது. 2004ம் ஆண்டில் 24 கேரள அரசு பேருந்து சேவைகள் குட்டாவுக்கு சென்று கொண்டிருந்தன. வயநாடில் இருந்த வேலைவாய்ப்பு விவசாயத்துடன் சேர்ந்து அழிந்தது.
நாடு முழுவதும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் நாம் வளர்ச்சி பற்றி கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களை நம்பி கொண்டாடிக் கொண்டிருந்தோம். எட்வர்ட் அபே சொன்ன வரிதான் ஞாபகத்துக்கு வருகிறது. ‘வளர்ச்சி என்பதற்காகவே உருவாக்கப்படும் வளர்ச்சி, புற்றுநோய் செல்லுக்கான சித்தாந்தம்’ என்றார். நாம் கொண்டாடிக் கொண்டிருந்தோம். கிராமங்களில் வளர்ந்து வரும் நெருக்கடியை சுட்டிக் காட்டுவோரை ஏளனம் செய்தோம்.
பல தொலைக்காட்சி ஆசிரியர்களுக்கும் தொகுப்பாளர்களுக்கும் புரிவதில்லை (அவர்களின் இளைய நிருபர்களுக்கு புரிகிறது). விவசாய நெருக்கடி என்பது விவசாயத்தை பற்றியானது மட்டுமல்ல. விவசாயமல்லாத தொழில் செய்பவர்களான நெசவாளர்கள், குயவர்கள், தச்சர்கள், மீனவர்கள் போல் விவசாயப் பொருளாதாரத்துடன் இணைந்திருக்கும் பல கோடி வாழ்வாதாரங்களும் விவசாய சமூகம் நெருக்கடியை சந்திக்கும்போது பாதிக்கப்படுகிறது.
30 வருடங்களுக்கு முன்னரே நாம் அழித்துவிட்ட வாழ்க்கைகளுக்கு திரும்பத்தான் மக்கள் முயற்சித்து கொண்டிருக்கிறார்கள்.
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதற்கு முன்பான பத்து வருடங்களில் இடப்பெயர்வுகள் அதிகமாக நடந்திருப்பதாக குறிப்பிட்டபோது ஊடகங்களுக்கு அக்கறை பிறக்கவில்லை. 1921ம் ஆண்டே ஒரு முக்கியமான விஷயம் நமக்கு தெரிய வந்தது. நகர இந்தியா அதன் மக்கள்தொகையில் கிராம இந்தியாவைக் காட்டிலும் அதிக மக்களை சேர்த்துக் கொண்டிருந்தது. 1991ம் ஆண்டிலிருந்து குறைந்து ஒன்றரை கோடி விவசாயிகள்தான் (பெரிய அளவில் பயிரிடுபவர்கள்) நாட்டில் இருப்பதும் நமக்கு தெரிய வந்தது. சராசரியாக 1991ம் ஆண்டிலிருந்து நாளொன்றுக்கு 2000 விவசாயிகள் ‘பெரிய அளவில் பயிரிடுபவர்கள்’ என்ற நிலையை இழந்து கொண்டிருந்தனர்.
சுருக்கமாக சொல்வதெனில் பஞ்சம் பிழைக்க நடந்த இடப்பெயர்ச்சிகள் அதிகரித்துக் கொண்டிருந்தது. விவசாயம் செய்ய முடியாத பலர் விவசாயத்தை விட்டு வெளியேறி நகரங்களுக்கு சென்றுவிட வில்லை. அடித்தட்டு விவசாய வர்க்கத்துக்கு மாறினர். இப்போது அவர்கள் அனைவரும், இடம்பெயராத பல கோடி விவசாயிகளுடன் இணைந்திருக்கின்றனர். விவசாயத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் இத்தகைய அழுத்தம் எனன விளைவுகளை கொடுக்கும்? உங்களுக்கே விடை தெரியும்.
அவர்களெல்லாம் யார்?
எல்லாரும் கிராமத்திலிருந்து வெளியேறி பெரிய நகரத்துக்கு செல்லவில்லை. கிராமத்திலிருந்து நகரத்துக்கு இடம்பெயர்பவர்கள் நிச்சயமாக இருக்கிறார்கள். ஆனால் கிராமங்களிலிருந்து கிராமங்களுக்கு இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். மார்ச்-ஏப்ரல் மாதங்களில் அறுவடை வேலைகளுக்காக பிற கிராமங்களுக்கும் மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் சென்றவர்கள் திரும்ப முடியவில்லை. இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்ததாக நகரங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்வோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு இடம்பெயர்வோரின் எண்ணிக்கை மிகக் குறைவு.
அவர்கள் அனைவரையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக எங்கும் தங்காமல் வேலை செய்பவர்கள். வேலை தேடியலையும் ஏழை மக்களின், பல திசைகளை நோக்கிய இலக்கற்ற பயணத்தை மக்கள்தொகை கணக்கெடுப்பால் அடையாளம் காண முடியவில்லை. ராய்ப்பூரில் சில நாட்கள் ரிக்ஷா இழுக்கவென காளஹந்தியிலிருந்து செல்வார்கள். மும்பை கட்டுமான தளம் ஒன்றில் ஒரு 40 நாட்களுக்கு வேலை செய்யலாம். அருகே உள்ள ஒரு மாவட்டத்தில் அறுவடை வேலைக்கு பிறகு செல்லலாம்.
மாநிலங்களை கடந்து செல்லும் தொழிலாளர்கள் மொத்தம் 5 கோடியே 40 லட்சம் பேர் என்கிறது 2011ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு. ஆனால் அதுவுமே மிகவும் குறைத்து சொல்லப்படும் எண்ணிக்கைதான். மக்கள்தொகை கணக்கெடுப்பை பொறுத்தவரை இடப்பெயர்வை ஒரு கட்ட பெயர்ச்சியாக பார்க்கிறது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு சென்று ஆறு மாதத்துக்கேனும் அந்த இடத்தில் இருப்பவரைதான் புலம்பெயர் தொழிலாளி என்கிறது. உதாரணமாக மும்பையை அடைவதற்கு முன், பல வருடங்களாக பல இடங்களுக்கு தொழிலாளி இடம்பெயர்ந்திருக்கலாம். அந்த பயணங்களின் துயரம் எங்குமே பதிவு செய்யப்படவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பும் தேசியக் கணக்கெடுப்பும் குறைந்த கால இடப்பெயர்வுகளை பதிவு செய்ய தயாராகவே இல்லை.
மார்ச் 26ம் தேதியிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களை பற்றிய செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் அவர்களை பற்றி பெரிய அறிவில்லாமல் இருப்பதை போல் தோற்றமளித்தால், அதற்கு காரணம் புலம்பெயர் தொழிலாளர்களை பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லை என்பதுதான். இந்த துறையை பற்றி செய்தி கொடுக்கும் செய்தியாளர் கூட அவர்களிடம் கிடையாது. அவ்வப்போது இடம்பெயரும் தொழிலாளர்களுக்கும் நீண்டநாளாக இடம்பெயர்ந்திருக்கும் தொழிலாருக்கும் எப்போதுமே இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் தொழிலாளருக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரிவதில்லை. பணம் தராத பகுதிகளிலிருந்து எதற்கு செய்திகளை தர வேண்டும்?
*****
ஒன்றுக்கும் மேற்பட்ட பல பேர் என்னிடம் கூறினார்கள்: புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை மிகக் கொடுமையானது. நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். கடுமையாக உழைக்கும் இந்த மக்கள் பெருந்துயரத்தில் இருக்கிறார்கள். இவர்கள் தொழிற்சாலை ஊழியர்களை போலவும் அவர்களுடைய சங்கம் போலவும் தொந்தரவு கொடுப்பவர்கள் கிடையாது. நம் இரக்கம் தேவைப்படுபவர்கள் இவர்கள்.
உண்மைதான். நம் வசதிக்கு காட்ட வேண்டிய இரக்கம் காட்ட வேண்டும்தான். ஆனால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நம் இரக்கம் தேவையில்லை. அக்கறையோ பரிவோ தேவையில்லை. அவர்களுக்கு நீதி வேண்டும். அவர்களுக்கான உரிமை உண்மையாக வேண்டும். மதிக்கப்பட வேண்டும். செயல்படுத்தப்பட வேண்டும்.தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு கொஞ்ச நஞ்சமேனும் உரிமைகள் இருக்கிறதெனில் அவர்கள் ஒன்று சேர்ந்தது சங்கமாகி பேரம் பேசும் வலிமை பெற்றதால்தான். அதற்கு காரணம் தொந்தரவு கொடுப்பதாக நாம் நினைக்கும் அந்த சங்கங்கள்தான். அவற்றுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உங்களின் பரிவு ஒப்பனைக்காகவோ தற்போதைய சூழலுக்கானதாகவோ மட்டும் இல்லையெனில் இந்தியாவில் நியாயமும் உரிமையும் கேட்டு போராடும் எல்லா தொழிலாளர் போராட்டங்களையும் ஆதரியுங்கள்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் பிற தொழிலாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் விநோதமானது. புலம்பெயர் தொழிலாளர் என்கிற வார்த்தைகளில் தொழிலாளர் என்கிற வார்த்தைதான் முக்கியம். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் பெங்களூருவில் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு தில்லிக்கு செல்கிறார் எனில் அவர் புலம்பெயர்பவர். தொழிலாளி அல்ல. சாதி, வர்க்கம், சமூக மூலதனம் மற்றும் தொடர்புகள் போன்றவற்றில் புலம்பெயர்ந்த தொழிலாளருக்கும் அவருக்கும் பல வித்தியாசங்கள் இருக்கும். நாம் வெறுக்கும் பிற தொழிலாளர்கள் நம்மை எதிர்த்து பேசுவார்கள். வெட்கமே இல்லாமல் அவர்களின் உரிமைகளை கேட்பார்கள். அவர்கள் அனைவரின் முந்தைய தலைமுறையும் புலம்பெயர்ந்தவர்களாக இருப்பார்கள்.
ஆரம்பக் காலங்களில் மும்பை ஆலைகளில் வேலை செய்த தொழிலாளிகளில் பலர் கொங்கன் மற்றும் மகாராஷ்ட்ராவின் பல பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள்தான். பிறகு நாட்டின் பல இடங்களிலிருந்தும் சென்றார்கள். Economic and Political Weekly-ல் வந்த அற்புதமாக கட்டுரை ஒன்றில் டாக்டர் ரவி டுக்கால் சுட்டிக் காட்டியது போல், அந்த தொழிலாளர்களும் 1896-97ல் தாக்கிய பிளேக் நோயால் மும்பையை விட்டு தப்பிச் சென்றார்கள். முதல் ஆறு மாதங்களில் 10000 பேர் மும்பையில் இறந்தார்கள். 1914ம் ஆண்டிலெல்லாம் இந்தியா முழுவதிலும் 80 லட்சம் பேரின் உயிரை குடித்திருந்தது பிளேக் நோய்.
“நகரத்தின் 8,50,000 மக்கள்தொகையில் 80000 பேர் ஆலைத் தொழிலாளிகள்,” என எழுதியிருக்கிறார் டுக்கால். பிளேக் நோயை கட்டுப்படுத்துவதாக சொல்லிக் கொண்டு நிகழ்த்தப்பட்ட பல துன்பங்களுக்கு தொழிலாளர்கள் ஆளாக்கப்பட்டனர். துப்புரவு, தனிமைப்படுத்துதல், குடும்ப உறுப்பினர்களை பிரிப்பது மட்டுமென இல்லாமல் அவர்களின் வாழ்விடங்களையே இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 1897ம் ஆண்டின் தொடக்கத்தில் பல போராட்டங்களை முன்னெடுத்தனர். பிளேக் நோய் தொடங்கிய நான்கைந்து மாதங்களில் ஆலைத் தொழிலாளிகளை உள்ளடக்கிய 400000 பேர் பம்பாய்யை விட்டு அவரவர் ஊர்களுக்கு சென்றுவிட்டனர். பம்பாய் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்தது.”
அவர்களில் பலரை மீண்டும் திரும்ப வைத்தது எது? “நோரோஸ்ஜீ வாடியாவின் யோசனையின் பேரில் பல ஆலை முதலாளிகள் தொழிலாளர்களுக்கு தங்குமிடமும் நல்ல வேலைச் சூழல் மற்றும் வாழ்க்கைச் சூழலையும் கொடுத்து நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர் (சர்கார் 2014). பிளேக் நோய் பரவத் தொடங்கிய சூழலிலும் தொழிலாளர்கள் பம்பாய்க்கு திரும்ப இதுவே காரணமாக இருந்தது. முதலாம் உலகப் போரின் காலகட்டத்தில்தான் நோய் மறைந்தது.
பாராளுமன்ற சட்டப்படி பம்பாய் வளர்ச்சி அறக்கட்டளை என ஒன்றை பிரிட்டிஷ் அரசும் தலையிட்டு உருவாக்கியது. நகராட்சியும் அரசும் புறம்போக்கு நிலங்களை அறக்கட்டளையிடம் ஒப்படைத்தன. நகரத்தின் துப்புரவு மற்றும் வாழ்க்கை நிலைகளை உயர்த்த அவை பயன்படுத்தப்பட்டன. ஆனாலும் பிரயோஜனமில்லை. கட்டியதை விட அதிகமான குடியிருப்புகளை அது அழித்தது. என்றாலுமே கூட முன்னேற்றம் பற்றி ஒரு சிந்தனையேனும் உருவாகியிருந்தது. அப்போதும் இப்போது போலவே முன்னேற்றம் என்கிற சிந்தனை நகரத்தையும் அதன் பிம்பத்தையும் முன்னேற்றுவதாக மட்டுமே இருந்தது. அந்த நகரத்தையே கட்டியெழுப்பிக் கொண்டிருந்த ஏழை மற்றும் விளிம்புநிலை தொழிலாளர்களின் வாழ்க்கைகளையும் நிலைகளையும் முன்னேற்றுவதை பற்றிய யோசனை இருக்கவேயில்லை.
ஏழைகள் மீதான பரிவு பிளேக் நோயோடும் அதன் நினைவுகளோடும் சேர்ந்து மறைந்து போனது. இன்று நடப்பதை போலவே தோன்றலாம். நாளையும் கூட இதுவே நடக்கலாம். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கொடுமையான வாழ்க்கைகளை, அவர்கள் கொடுத்துக் கொண்டிருந்த சேவைகள் நின்று போன மார்ச் மாதத்தில்தான் நமக்கு தெரிய வருகிறது. மீண்டும் நமக்கான வசதி வந்ததும் காணாமல் போகும் கேடு கெட்ட பழக்கம் பரிவுக்கு உண்டு.
1994ம் ஆண்டில் பிளேக் நோய் 54 பேரை சூரத்தில் கொன்றது. அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வருடமும் 15 லட்சம் குழந்தைகளை காவு வாங்கியது. நான்கரை லட்சம் பேரின் உயிரை காசநோய் குடித்தது. ஆனால் சூரத்தில் பரவிய பிளேக் நோய்தான் ஊடக கவனத்தை பெற்றது. காப்பதற்கான மருத்துவம் இருக்கும் இரு நோய்கள் 30,000 மடங்கு அதிகமான உயிர்களை பறித்துக் கொண்டிருந்தபோதும் கவனத்துக்கு வரவில்லை.
பிளேக்நோய் மறைந்ததும் ஏழை மக்களை கொல்லும் முதன்மையான நோய்களை புறக்கணிக்கும் வழக்கமான வாழ்க்கைக்கு நாம் திரும்பினோம். மோசமான வாழ்க்கைச்சூழல்களில் வாழ்ந்து நம்மை காட்டிலும் நோய்களுக்கு எளிமையாக ஆட்படும் வாய்ப்பு பெற்றிருக்கும் அவர்களை பொருட்படுத்தவில்லை.
நம் காலத்திலும் கூட, கொரோனாவுக்கு முன் ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என அறிவித்த ஸ்மார்ட் நகரங்கள்’ திட்டத்திலும் 3-5 சதவிகித தொழிலாளர்களுக்கு மட்டுமே பயன்படும் சூழல் இருந்தது. மற்ற அனைவரையும் இன்னும் மோசமான சூழல்களுக்கும் கொடும் நோய்களுக்கும் தள்ளிவிடும் நிலையே இருந்தது.
கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு புலம்பெயர்பவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் நன்றாக இருக்கலாம். ஆனால் அவர்களின் வாழ்க்கையும் சுகாதாரமும் மிக மோசமாக இருக்கும். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலைகள் பாதாளத்தில் இருக்கும்.
இவற்றை குறித்து நாம் ஏதேனும் செய்ய முடியுமா? நிறையவே செய்ய முடியும். முதலில் மீண்டும் நம் வழக்கமான வாழ்க்கைகளுக்கு திரும்பிச் செல்லும் மனநிலையை விட வேண்டும். 30 வருடங்களாக நாம் கொண்டிருக்கும் சந்தை வழிபாடு போன்ற மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும். பிறகு இந்திய அரசியல் சாசனம் வேண்டுவது போல், ‘சமத்துவமான நீதியும் சமூகமும் பொருளாதாரமும் அரசியலும்’ கிடைக்கும் அரசை கட்ட வேண்டும்.
முகப்புப் படம்: சுதர்ஷன் சகர்கர்
இக்கட்டுரை முதலில் இந்தியா டுடேவில் 2020ம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி பிரசுரிக்கப்பட்டது.
தமிழில்: ராஜசங்கீதன்