இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும் , புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
மண், தாய்மார்கள், மனித நேரங்கள்
காலை 7 மணிக்கு முன்னர்தான் ஆந்திர பிரதேசம் விஜயநகரத்தில் உள்ள நிலமில்லா கூலித்தொழிலாளர்களை சந்திப்பது உறுதியானது. நாள் முழுவதும் அவர்கள் செய்யும் வேலையை பார்ப்பதுதான் அன்றைய நாளின் திட்டம். நாங்கள் தாமதமாக சென்றுவிட்டோம். அந்த நேரத்தில், மூன்று மணி நேரத்திற்கு முன்னரே பெண்கள் உள்ளே சென்றிருந்தார்கள். பனை மரக்காடுகளின் வழியாக அவர்கள் வயல்களை அடைந்தார்கள் அல்லது அவர்களின் நண்பர்கள் ஏற்கனவே வயலில் வண்டல் நிறைந்த தொட்டிகளை சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.
இதில் பெரும்பாலான பெண்கள் சமையல், பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் மற்றும் மற்ற வீட்டு வேலைகளை முடித்திருந்தனர். அவர்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு கிளப்பிவிட்டிருந்தனர். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உணவளித்திருந்தனர். வழக்கம்போல் அவர்கள் கடைசியாகவே சாப்பிட்டிருந்தனர். அரசின் வேலைவாய்ப்பு உறுதி இடங்களிலும், பெண்களுக்கு குறைந்த கூலியே வழங்கப்படுகிறது.
குறைந்தளவு கூலி உறுதி சட்டம் இங்கு ஆண், பெண் இருவருக்குமே மீறப்பட்டிருந்தது. மேற்கு வங்காளம், கேரளா தவிர நாடு முழுவதும் இதே நிலைதான். எல்லா இடங்களிலும் பெண் தொழிலாளர்களுக்கு ஆணின் கூலியில் பாதியோ அல்லது மூன்றில் ஒரு பங்கோதான் கொடுக்கப்பட்டது.
பெண் வேளாண் தொழிலாளர்கள் அதிகரிக்கும்போது, அவர்களுக்கு குறைவான கூலி வழங்குவது நிலத்தின் சொந்தக்காரர்களுக்கு நன்மையளித்தது. அவர்களின் கூலியை குறைத்து வைத்திருக்க செய்தது. ஒப்பந்தக்காரர்களும், நிலத்தின் சொந்தக்காரர்களும் பெண்களுக்கு எளிதான வேலை மட்டுமே வழங்கப்படுகிறது எனவே கூலியும் குறைவாக கொடுக்கப்படுவதாக வாதிட்டனர். ஆனால், நடவுப்பணி கடினமான மற்றும் அபாயகரமான வேலை. அதேபோல்தான் அறுவடையும். இரண்டும் பெண்களுக்கு பல்வேறு வியாதிகளை கொடுக்கிறது.
நடவு செய்வதற்கு திறமை அதிகளவில் தேவைப்படுகிறது. நாற்றுகள் குறிப்பிட்ட ஆழத்தில் பதியப்படவில்லையென்றாலோ அல்லது போதிய இடைவெளியின்றி நடப்பட்டாலோ சரியாக முளைக்காது. நிலத்தை சரியாக உழவு செய்யவில்லையென்றாலும் பயிர் நன்றாக வளராது. நடவு செய்யும்போது முழங்கால் அளவு நீரில் குனிந்துகொண்டு நின்று செய்ய வேண்டும். ஆனால், அது சாதாரண வேலையாக கணக்கிடப்பட்டு குறைந்த கூலியும் வழங்கப்படுகிறது. அதை பெண்கள் செய்வதால், அதற்கு மதிப்பில்லை.
பெண்களுக்கு கூலி குறைத்து வழங்கப்படுவதற்கு, அவர்கள் ஆண்களைப்போல் கடினமான
வேலைகளை செய்ய மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால், பெண்கள் அறுவடை செய்த நெற்பயிரைவிட
ஆண்கள் செய்தது அதிகம் என்பதற்கான சான்று எங்குமில்லை. அவர்கள்
ஆண்களுக்கு நிகராக வேலை செய்தாலும் அவர்களுக்கு ஆண்களைவிட குறைவான கூலியே வழங்கப்படுகிறது.
திறனற்றவர்களாக இருந்தால் நிலத்தின் சொந்தக்காரர்கள் அதிகளவிலான பெண்களை வேலைக்கு அமர்த்துவார்களா?
1996ல் ஆந்திர பிரதேச அரசு, மல்லி, புகையிலை மற்றும் பருத்தி அறுவடை பணிகளில் ஈடுபடுவோருககு குறைந்தபட்ச கூலியை அறிவித்தது. இது நடவு மற்றும் அறுவடை பணியில் ஈடுபடுவோர் பெறும் கூலியைவிட அதிகமாகும். கூலி பாகுபாடு அடிக்கடி மற்றும் அதிகாரப்பூர்வமாக நடக்கும் ஒன்றாகும்.
கூலித்தொகை, உற்பத்தியுடன் சிறிது தொடர்புடையது. அது பாரபட்சமானது. பழங்காலத்து பாகுபாடு நிறைந்தது. அதை அவர்கள் ஏற்றுக்கொள்வது இயல்பானது.
பெண்கள் வயலில் செய்யும் வேலை மற்றும் மற்ற இடங்களில் செய்யும் வேலையும் நன்றாக வெளியில் தெரிகிறது. ஆனால் இவையனைத்தும் அவர்கள் குழந்தைகளை கவனிக்கும் முதன்மையான பொறுப்பில் இருந்து விலக்கு அளிக்கவில்லை. ஒடிஷாவின் மால்கன்கிரி ஆரம்ப சுகாதார மையத்திற்கு ஒரு ஆதிவாசி பெண் அவரின் 2 குழந்தைகளையும் அழைத்து வந்திருக்கிறார். கரடுமுரடான தரையில் பல கிலோ மீட்டர் தொலைவு களைப்புடன் நடந்து வந்தார். பெரும்பாலான நேரங்களில் அவரது குழந்தையை சுமந்தே வந்தார். அதுவும் கடுமையான மலைப்பள்ளத்தாக்கில் பல மணி நேரம் வேலை செய்துவிட்டு அங்கு வந்தார்.
தமிழில்: பிரியதர்சினி. R.