" என் பையில் வைத்திருந்த வாழைப் பழங்களைச் சாப்பிட்டுதான் உயிர்பிழைத்தேன்." - மார்ச் 22 ஆம் தேதி 'மக்கள் ஊரடங்கு உத்தரவு' நடைமுறையில் இருந்தபோது சுரேந்திர ராம் எப்படி அன்றைய பொழுதைக் கடந்தார் என்பது குறித்து என்னிடம் அவர் தொலைபேசியில் கூறியதே, இது. அன்று, மும்பையில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தபோது, வீட்டிற்குள் வசிப்பவர்கள் கதவைத் திறந்து வெளியில் வரவில்லை. பரேலில் உள்ள டாடா நினைவு மருத்துவமனைக்கு அருகில் உள்ள நடைபாதையில் உட்கார்ந்தார், சுரேந்திரா.
அவரின் வயது 37; அவருக்கு வாய்ப் புற்றுநோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு தொடங்கியது முதல் ஒரு வாரமாக நடைபாதைதான் அவருக்கு 'வீடு'. அவர் உள்பட தெருக்களில் தங்கும் எத்தனையோ நோயாளிகளுக்கு ’வீட்டுக்குள் முடங்குவது’ என்பதே இல்லை. தென் மத்திய மும்பையில் அரசாங்க ஆதரவுடன் சேவை அளிக்கும் இந்த மருத்துவமனையில், புற்றுநோயாளிகளுக்கு. மானியக் கட்டணத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதுமிருந்து வறிய குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சைக்காக இங்கு வருகிறார்கள்.
"எனக்கான பரிசோதனை முடிந்துவிட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு வருமாறு மருத்துவர் என்னிடம் சொல்லிவிட்டார்." என்கிறார், சுரேந்திரா. ஆனால், பீகார் மாநிலம், சமஸ்ட்டிப்பூர் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய ஊரான பொட்டிலியாவுக்கு திரும்பிச்செல்ல அவரால் முடியவில்லை. ஒரு முறை தொடர்வண்டிச் சேவை குறைக்கப்பட்டு, மார்ச் 25 முதல் நாடளவிலான முடக்கத்துடன் முற்றிலுமாக நிறுத்தப்பட்டடு. “ இப்போது 21 நாள்களுக்கு எல்லாமே முடக்கம் என்று கூறுகிறார்கள். எனக்கு எந்த செய்தியும் தெரியவில்லை. சுற்றி உள்ளவர்களிடம்தான் விவரம்கேட்க வேண்டும். அதுவரை நான் இந்த நடைபாதையில்தான் வசிக்கப்போகிறேனா?” என்று கேட்டார் சுரேந்திரா.
மார்ச் 20 அன்று நான் சுரேந்திராவைச் சந்தித்தேன். அப்போது, அவர் ஒரு ஆரஞ்சுநிற நெகிழி விரிப்பின் மீது தரையில் உட்கார்ந்தபடி, வாயின் ஒரு பக்கமாக வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அவரின் இடது நாசியில் ஒரு குழாய் செருகப்பட்டு இருந்தது. "உணவு என் தொண்டையில் இறங்காது; அதனால் எனக்கு குழாய் தேவை." என விவரித்தார். அவரின் உடைகள், மருத்துவக் குறிப்பாவணங்கள், மருந்துகளுடன் வாழைப் பழங்களையும் அடைக்கப்பட்டபடியான ஒரு கருப்பு நிறப் பையும் விரிப்பின் மீது இருந்தது.
மார்ச் 20 அன்று நான் சுரேந்திராவைச் சந்தித்தேன். அப்போது, அவர் ஒரு ஆரஞ்சுநிற நெகிழி விரிப்பின் மீது தரையில் உட்கார்ந்தபடி, வாயின் ஒரு பக்கமாக வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அவரின் இடது நாசியில் ஒரு குழாய் செருகப்பட்டு இருந்தது. "உணவு என் தொண்டையில் இறங்காது; அதனால் எனக்கு குழாய் தேவை." என விவரித்தார். அவரின் உடைகள், மருத்துவக் குறிப்பாவணங்கள், மருந்துகளுடன் வாழைப் பழங்களையும் அடைக்கப்பட்டபடியான ஒரு கருப்பு நிறப் பையும் விரிப்பின் மீது இருந்தது.
சுரேந்திராவை நான் சந்தித்த நாளுக்கு முன்னர்வரை, அவரின் பாதுகாப்புக்கான ஒரு முகக்கவசம்கூட இருக்கவில்லை. தன் மூக்கு, வாய் பகுதிகளை ஒரு பச்சைத் துண்டால் மூடியிருந்தார். அடுத்த நாள் யாரோ அவருக்கு முகக்கவசம் கொடுத்தனர். பொது கழுவுமிடத்தையும் அங்கு வைக்கப்பட்டுள்ள சிறிதளவு சோப்பையும் அவர் பயன்படுத்திக்கொள்கிறார்.
"கைகளைக் கழுவி பாதுகாப்பாக இருக்கும்படி அவர்கள் மக்களிடம் கூறுகிறார்கள். ஆனால் எங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஏன் அவர்கள் எதுவும் செய்யவில்லை? நாங்கள் நோயாளிகளும்கூட.” என்கிறார் சுரேந்திரா.
உலக நலவாழ்வு அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை, கடுமையான கோவிட் -19 நோய்த் தொற்று ஆபத்து அதிகமுள்ள மக்கள் பிரிவினரைப் பட்டியல் இட்டுள்ளன. அதில் புற்றுநோயாளிகளும் இருக்கின்றனர். இவர்கள் ரொம்பவும் குறைந்த உணவு, தண்ணீர், சுகாதாரத்துடன் திறந்தவெளியிலேயே தங்கிக்கொண்டிருந்தால், ஆபத்து மட்டுமே கற்பனைக்கு உரியதாக இருக்கிறது.
சமூக அளவிலான தொடர்பைக் குறைப்பதும் மக்களை வீட்டுக்குள்ளேயே இருப்பதை உறுதிப்படுத்துவதுமே பொது முடக்கத்தின் இலக்காகத் தீர்மானிக்கப்பட்டது. சுரேந்திராவுக்கோ மும்பையில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கும் அளவுக்கு வசதிவாய்ப்பு இல்லை. “ ஒவ்வொரு முறையும் நான் இந்த நகரத்துக்கு வரும்போதும் எனக்கு இழப்புதான். இந்த நிலையில், எங்கே தங்குவதற்கு இடத்தைத் தேடுவேன்? எனக் கேட்கிறார். மும்பையின் பல பகுதிகளில் சலுகைக் கட்டணத்தில் தங்கிக்கொள்ளும் இடங்கள் இருப்பது, அவருக்குத் தெரியவில்லை. " இங்கே எனக்கு யாரையும் தெரியாது; யாரிடம் போய்க் கேட்க?" - என சலித்துக்கொள்கிறார்.
சுரேந்திரா ஓராண்டுக்கும் மேலாக டாடா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக தனியாகவே மும்பைக்கு வந்துசெல்கிறார். அவருடைய இணையர் மற்றும் 5 மற்றும் 2 வயதுடைய குழந்தைகள் ஊரில் இருக்கின்றனர். " ஓராண்டுக்கு முன்னர் வரை, பெங்களூரில் ஒரு தவாக்கானா (மருந்தகத்தில்) நான் வேலைசெய்தேன். புற்றுநோயால்தான் வேலையை விட்டு நிற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்கிறார் அவர். மாதத்துக்கு ரூ. 10,000 ஊதியம், அதில் தன்னுடைய தனிப்பட்ட செலவுளுக்காக சிறிதளவு எடுத்துக்கொண்டு, மீதத்தை குடும்பத்துக்கு அனுப்பிவிடுவார். இப்போது, வருமாய்க்கான எந்த ஆதாரமும் இல்லாமல், உறவினர்களையே அவர் நம்பியிருக்கிறார். " என்னிடம் பணமே இல்லை. மும்பைக்கு வரும்போது என் சாலா (இணையரின் சகோதரர்) எனக்கு பணம் தந்து உதவுகிறார்." என்று கூறுகிறார், சுரேந்திரா.
சுரேந்திராவுக்கு மருத்துவமனையில் சிகிச்சைக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. "எனக்கான கீமோதெரப்பி, மற்ற சிகிச்சைகளுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது; மீதக் கட்டணமும் மருத்துவமனையால் ஏற்கப்பட்டுவிட்டது. ஆனாலும் மும்பையில் வாழ்வது ஒவ்வொரு நாளும் கஷ்டம்தான்.”என்கிறார் சுரேந்திரா.
மருத்துவமனைக்கு வெளியே நடைபாதைகளில் உள்ள நோயாளிகளுக்கு காலையில் வாழைப்பழமும் ரொட்டியும் கிடைத்துவருகின்றன. மாலையில் சிறிது மசாலா பொறி தருகிறார்கள். நேற்று (மார்ச் 29) காலையில், முதல் முறையாக தன்னார்வலர்கள் மூலம் பால் கிடைத்தது.
நீரிழப்பு இல்லாதபடி பார்த்துக்கொள்ளும்படி சுரேந்திராவுக்கு மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறார். “ சிலர் எங்களுக்காக உணவு வாங்கித்தருகிறார்கள்; ஆனால் அவர்கள் தண்ணீர் வாங்குவதில்லை. ஊரடங்கின்போது தண்ணீரை வாங்குவது கடினமாக இருக்கிறது.” என்கிறார் அவர்.
சுரேந்திரா உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து சில எட்டு தள்ளி, இன்னல்பட்டுக்கொண்டு இருந்தது, சஞ்சய்குமாரின் குடும்பம். மார்ச் 20 அன்று நான் அவர்களைச் சந்தித்தபோது, நடைபாதையில் ஒரு பாய் மீது உடம்பையும் ஒரு சிமென்ட் பட்டியில் தலையை வைத்தபடி இருந்தார், சஞ்சய்குமார். 19 வயதான (மேலே உள்ள அட்டைப் படத்தில்) அவர், எலும்புப் புற்றுநோயால் தாக்கியதால் அவரின் வலது காலை அசைக்கமுடியாத நிலை. சஞ்சயின் அண்ணன் விஜயும் அண்ணி பிரேம்லதாவும் ஒரு மாதத்த்துக்கும் மேல் அவருடன் நடைபாதையில் தங்கியிருந்து வந்தனர்.
சில நாள்களுக்குப் பிறகு தொலைபேசியில் என்னிடம் பேசிய சஞ்சய், ”இந்த ஊரடங்கு உத்தரவால் எங்கள் நிலைமை மோசமாகிவிட்டது. உணவைப் பார்ப்பது பெருங்கொம்பாக இருக்கிறது. உதவ யாரும் இல்லாதபோது நாங்கள் பிரட்டையும் பிஸ்கட்டையும் சாப்பிட்டுக்கொள்கிறோம்.” என்று கூறினார்.
எழுந்திருக்கவோ அல்லது எளிதாக நடக்கவோ அவரால் முடியாது. மருத்துவமனைக்கு அருகில் உள்ள பொதுக் கழிப்பிடத்துக்குச் செல்வதுகூட அவருக்கு கடினம். “ ஒவ்வொரு நாளும் உடலை நகர்த்தமுடியாமல் இங்கேயே படுத்துக்கொள்கிறேன். மருத்துவமனையிலிருந்து ரொம்பத் தொலைவில் இருக்கமுடியாது.”என்று சஞ்சய் கூறுகிறார். அவர் நடந்தாரென்றால் அவரின் வலது காலில் இரத்தம் கசியத் தொடங்கிவிடும்; மூன்று நாள்களுக்கு முன்னர் மருத்துவர்கள் அதற்கு ஒரு பிளாஸ்டர் வைத்து கட்டிவிட்டனர்.
குடும்பம் முதல்முறையாக மும்பைக்கு வந்திருக்கிறது. "மும்பையில் சுவிதா (வசதி) நன்றாக இருக்கும் என்று என்னிடம் சொன்னார்கள். ஆனால் நடைபாதையில் வாழ்வதும் உருப்படியான ஒரு உணவைப் பெறுவதற்குக் காத்திருப்பதும்தான் இங்கு நமக்கு கிடைக்கும் வசதிகள்.” என்கிறார் விஜய். இவர்களுக்கும் எந்தவொரு சலுகைக்கட்டண தங்குமிடம் கிடைக்கவில்லை. எந்த தர்மசாலாவும் தங்களுக்குத் தெரியாது என்றும் இவர்கள் கூறுகின்றனர்.
"மருத்துவரைப் பார்ப்பதற்கோ ஏதாவது பரிசோதனை செய்வதற்கோ ஒவ்வொரு நாளும் நாங்கள் காத்திருக்கவேண்டும்; வீட்டுக்குத் திரும்பிப் போகமுடியாது." என்கிறார் விஜய். இவர்களின் ஊர், மத்தியபிரதேசத்தின் பாலாகாட் மாவட்டத்தில் உள்ள பைகார் வட்டாரத்தில் இருக்கிறது.
ஊரில் விஜயின் பெற்றோரோ தங்கள் மகன்களும் மருமகளும் பாதுகாப்பாக ஊர்திரும்ப வேண்டுமெனக் காத்திருக்கிறார்கள். விஜய்தான், அந்தக் குடும்பத்தில் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தவர். கட்டுமானத் தளங்களில் அவர் வேலைசெய்கிறார். மாதத்துக்கு 7 - 8 ஆயிரம் ரூபாய், ஊதியம். சஞ்சய்க்கு உதவுவதற்காக, அவர் மும்பைக்கு வந்தபிறகு இந்த வருமானம் நின்றுபோனது. இந்தக் குடும்பம் ஏதோகொஞ்சம் வைத்திருந்த சேமிப்பின் மூலம் வாழ்வை ஓட்டுகிறது.
"கடைகள், உணவகங்களில் உணவு வாங்குகிறோம். கொஞ்சம் பூரி, பாஜி வாங்குவதுண்டு. ஆனால் எவ்வளவு காலம் இப்படி வாங்கி சாப்பிடமுடியும்? பருப்பும் அரிசிச் சோறும் இங்கே அதிக விலை. இங்கே கழிப்பிடத்துக்கு நாங்கள் கட்டணம் செலுத்தவேண்டும்; செல்பேசிகளுக்கு மின்னூட்டம் செய்யவும் கட்டணம் செலுத்தவேண்டும். மும்பையில் எல்லாவற்றிற்கும் பணம் தந்தாக வேண்டும். நான் ஒரு தொழிலாளி!” எனப் பொருளுணர்த்திச் சொல்கிறார், விஜய். இவற்றுக்காக ஒரு நாளைக்கு விஜய்க்கு 100 - 200 ரூபாய் செலவாகிறது; ஒருவேளை மருந்துகள் தேவைப்பட்டால் இன்னும் செலவு கூடும்.
மருத்துவமனைக்கு வெளியே நடைபாதைகளில் தங்கியிருக்கும் நோயாளிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பல அமைப்புகளும் தனி நபர்களும் தவறாமல் உதவுகிறார்கள். ரொட்டிகள், பால், வாழைப்பழங்களை அவர்கள் தருகிறார்கள். ஆனால் பொது முடக்கமானது அதையும் கெடுத்துவிட்டது. ‘மக்கள் ஊரடங்கு’ நாளில்,“எங்களுக்கு இரவில் மட்டுமே உணவு கிடைத்தது” என்கிறார், விஜய். முந்தைய நாள் வைத்திருந்த சிறிது ரொட்டி, கொஞ்சம் காய்கறிகளை வைத்து அவர்கள் சமாளித்தனர்.
இந்த முடக்கக் காலத்தில், வெளியே உணவு தந்துகொண்டிருக்கும்போது சில நோயாளிகளை பரிசோதனைக்காக மருத்துவமனைக்குள் அழைக்கப்படுவார்கள். அப்போது அவர்களுக்கு அந்த வேளை உணவு கிடைக்காமல் போய்விடும். கடந்த திங்களன்று கருணா தேவிக்கு இப்படித்தான் நேர்ந்தது. அவருக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளது. மருத்துவமனையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள தாதர் இரயில்நிலையம் அருகே ஒரு தர்மசாலாவில் தங்க இடமிருப்பதாக வாரக்கணக்கில் அவர் காத்திருக்கிறார். சில தர்மசாலாகளில் ஒரு நாளைக்கு ரூ.50 - ரூ. 200 கட்டணம் வசூலிக்கின்றன. இந்த நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் இவ்வளவு தொகையை கொடுக்கமுடியாது.
மார்ச் 20 ஆம் தேதி, கீத்தா சிங், தன் கணவர் சத்தேந்தருடன் நடைபாதையில் உட்கார்ந்திருந்தார். அப்போது, ஒரு கொறித்துண்ணி இரண்டு கற்களுக்கு இடையில் செத்துக் கிடந்தது. கீத்தாவுக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது ஆறு மாதங்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது. நான்கு மாதங்களாக சிகிச்சைக்காக அவர் மும்பையில் தங்கியுள்ளார். அவர்கள் மகாராஷ்டிரத்தின் சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒரு வாரத்திற்கு முன்னர்வரை, அவர்கள் வடக்கு மும்பையில் உள்ள கோரேகானில் சத்தேந்தரின் உறவினருடன்தான் தங்கியிருந்தனர். கோவிட் -19 தொற்று அச்சத்தால் அந்த உறவினர் இவர்களை அங்கிருந்து கிளம்பும்படி சொல்லிவிட்டார். " நாங்கள் அன்றாடம் மருத்துவமனைக்குப் போய்வருகிறோம் என்பதால், தன் மகனுக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடும் என்று அவள் அச்சமடைந்தாள். ஆகையால் நாங்கள் அங்கிருந்து நகரவேண்டி இருந்தது. இரண்டு நாள்களாக தொடர்வண்டி நிலையங்களிலும் நடைபாதையிலும் தங்கிக்கொண்டு இருக்கிறோம்” என்கிறார் கீத்தா.
பல முறை முயன்றபின், தானே மாவட்டத்தின் டோம்பிவாளியில் உள்ள தள்ளிய உறவினர் ஒருவரை சத்தேந்தர் பிடித்துவிட்டார். மருத்துவமனையிலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள அந்த இடத்துக்கு, அவரும் கீத்தாவும் இடம்பெயர்ந்தனர். உணவுக்காகவும் தங்குமிடத்துக்காகவும் அந்த உறவினர்களுக்கு இவர்கள் பணம்தருகின்றனர்.
கீத்தாவுக்கு அடுத்த பரிசோதனை ஏப்ரல் 1 ஆம் தேதியன்று செய்யத் திட்டமிடப்பட்டது. அதைத் தொடர்ந்து கீமோதெரப்பியும் மாதத்தின் முதல் சில நாள்களில் ஒரு அறுவைச்சிகிச்சையும் செய்வதெனக் கூறப்பட்டது. ஆனால், ஏப்ரல் 1 ஆம் தேதி மருத்துவர் கொடுத்த ஆலோசனை நேரம் ரத்துசெய்யப்படுவதாக அவரிடம் கூறியிருக்கின்றனர். இதுவரையிலான வழக்கமான மருந்துகள், முன்னெச்சரிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு மருத்துவர் கூறியிருக்கிறார். "எங்கள் குழந்தைகளைப் பார்க்கக்கூட வீட்டுக்குப் போகமுடியாது. மருத்துவமனைக்கும் போகமுடியாது. இப்போது எங்களால் எதற்கும் வழி இல்லாதபடி இருக்கிறோம். இங்கே சிக்கிக்கொண்டு இருக்கிறோம் என்று கூறலாம்.” என்கிறார் சத்தேந்தர். "அவள் தொடர்ச்சியாக வாந்தியெடுத்தபடி இருக்கிறாள்." - என்கிறார், கீத்தாவின் உடல்நலன் குறித்த அதிக அக்கறையுடன்.
அவர்களுக்கு 12 மற்றும் 16 வயது கொண்ட இரண்டு குழந்தைகள். சோலப்பூரில் சத்தேந்தரின் அண்ணனுடன் இருந்துவருகின்றனர். " விரைவில் திரும்பிவிடுவோம் என நாங்கள் உறுதியளித்துவிட்டு வந்தோம்; ஆனால் அவர்களின் முகங்களை எப்போது பார்ப்போம் என்று எங்களுக்குத் தெரியவில்லை." என்று கீதா கூறுகிறார். சத்தேந்தர் ஒரு விசைத்தறி ஆலையில் ஐந்து மாதங்களுக்கு முன்னர்வரை மாதத்துக்கு 7,000 ரூபாய் ஊதியம் பெற்றுவந்தார். டாட்டா நினைவு மருத்துவமனை அறக்கட்டளை அவர்களின் மருத்துவச் செலவில் பாதியை ஏற்றுக்கொள்கிறது என்கிற அவர், மீதத்தை தன்னுடைய சேமிப்பை வைத்து சமாளித்து வருகிறார்.
வாய்ப் புற்றால் தாக்கப்பட்டுள்ள ஜமீல் கானும் இப்படியான அச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார். அவர் தன் தாயார் கமர்ஜாகா, சகோதரர் சாகில், சகோதரி நஸ்ரின் ஆகியோருடன் ஏழு மாதங்களாக மருத்துவமனைக்கு அருகிலுள்ள நடைபாதையில் தங்கியிருந்து வருகிறார். உத்தரப்பிரதேசத்தின் பால்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள கோண்டாவா கிராமம்தான், அவர்களின் சொந்த ஊர். குடும்பத்தினரில் பெரும்பாலானவர்கள் விவசாயத் தொழிலாளர்கள். வேலை கிடைக்கும் என்றால், அன்றாட வேலைக்கு கூலியாக 200 ரூபாய் கிடைக்கும்; பருவம் போய் விவசாய வேலைகள் இல்லாதபோது வேலைதேடி அவர்கள் நகர்ப்புறத்துக்குக் குடிபெயர்வார்கள்.
முடக்கத்துக்குப் பிறகு இவர்கள், மருத்துவமனையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள நாலசோபரா எனும் ஊரில் உள்ள தள்ளிய உறவினரின் வீட்டுக்குச் சென்றனர். "அவர்கள் எங்களை கொஞ்ச நாள் தங்கிக்கொள்ள அனுமதித்தார்கள். ஆனால் இது இவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும் என ஒருபோதும் யோசித்துப் பார்த்ததில்லை.."- ஜமீல்.
நாலசோபரா உறவினர் குடும்பம், கூடுதலாக நான்கு பேருடன் சமாளிக்கமுடியாமல் திணறிவருகிறது. "ஏற்கெனவே அவர்கள் ஐந்து பேர்; இப்போது நாங்களும் சேர்ந்துவிட்டோம். அவர்களிடம் அதிகமான உணவுப்பொருள் இருப்பது ரொம்பவும் கடினம். எங்கள் மருந்துச் செலவு, வாரத்துக்கு 500 ரூபாய் ஆகிவிடுகிறது. அவ்வளவுதான், எங்களிடம் இருந்த பணம் எல்லாம் காலி.” என்கிறார் நஸ்ரின். சனிக்கிழமையன்று அவர்கள் சில மருந்துகளை எடுத்து வைத்திருந்தனர். அதற்குப் பிறகு எப்படி சமாளிப்பார்கள் எனத் தெரியவில்லை. ஜமீல் முகத்தில் இடப்பக்கத்தில் உள்ள கொப்புளம், அடிக்கடி சுத்தம்செய்து, கட்டுகட்டப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
நடைபாதையில் தங்கியிருப்பது நல்லது என்று நினைக்கிறார், ஜமீல். “குறைந்தது மருத்துவமனை அருகில் இருக்கிறது. அதில் (முகத்தி) இரத்தப்போக்கோ வலியோ வந்தால் உடனே மருத்துவமனைக்குப் போகமுடியும்.” என்கிறார், அவர். "இங்கே (நாலசோபராவில்) என் சகோதரருக்கு ஏதேனும் நேர்ந்தால் யார் பொறுப்பு? அப்படி ஏதும் நேர்ந்தால் அதனால் யாருக்கு என்ன?" எனக் கேட்கிறார் நஸ்ரின்.
டாட்டா நினைவு மருத்துவமனையின் மக்கள்தொடர்புக் குழுவில் உள்ள நிலேஷ் கோயங்காவிடம் தொலைபேசியில் பேசியபோது, “ அவசர சிகிச்சை தேவையில்லாவிட்டால் நோயாளிகளை வீட்டுக்கு அனுப்ப முயல்கிறோம். அதிகபட்சம் எவ்வளவு சிறப்பாகச் செய்யமுடியுமோ அதைச் செய்கிறோம்.” என்றார்.
இந்த ஆண்டு ஜனவரியில், மருத்துவமனைக்கு அருகில் உள்ள இந்துமாதா மேம்பாலத்துக்குக் கீழே வாழும் புற்றுநோயாளிகளின் நிலைமை குறித்து மும்பை மிரர் பத்திரிகை விவரச்செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, கணிசமான நோயாளிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் விரைவாக தர்மசாலாக்களுக்கு அனுப்பினார்கள். மேம்பாலத்தின் கீழ் நடமாடும் கழிப்பிடங்களுடன் தற்காலிகத் தங்குமிடம் போன்ற நடவடிக்கைகளை மும்பை மாநகராட்சி பரிந்துரைத்தது. அதன் பிறகு, நடைபாதைகளில் என்னுடன் பேசிய யாரும் இதைப் பற்றி பெரிதாகக் கேட்கக்கூட இல்லை.
தமிழில்: தமிழ்கனல்