“அவள் எப்படி இறந்தால் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அவள் மீது உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்பது மட்டும் தெரியும்.” தனது தங்கையின் மரணம் குறித்து இப்படி சொல்கிறார் சுபாஷ் கபாடி.
மகாராஷ்டிராவின் பீட் நகர பொது மருத்துவமனையில் அவரது தங்கை லதா சுர்வசி இறப்பதற்கு முந்தைய இரவு ஊசிகளை அவசரமாக செலுத்த வேண்டும் என மருத்துவர் பரிந்துரைத்தார். உடனடியாக வெளியே இருந்த மருந்து கடையில் இருந்து சில நிமிடங்களில் ஊசிகள் வாங்கி வந்துள்ளார் சுபாஷ். ஆனால் அதற்குள் மருத்துவர் சென்றுவிட்டார்.
“அவர் ஏராளமான நோயாளிகளை பார்க்க வேண்டியிருந்ததால் அவர் அடுத்த வார்டுக்கு சென்றுவிட்டார்,” என்கிறார் 25 வயது சுபாஷ். “என் சகோதரிக்கு ஊசிகளை போட்டுவிடுமாறு செவிலியரிடம் நான் கூறியதும், அவர் லதாவின் கோப்புகளை பார்த்துவிட்டு அப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றார். ஆனால் சில நிமிடங்கள் முன்பு தான் பரிந்துரைக்கப்பட்டது என்பதால் கோப்பில் இடம்பெறவில்லை என நான் அவரிடம் சொன்னேன்.”
ஆனால் செவிலியர் அவர் சொன்னதை கேட்கவில்லை. ஊசிகள் செலுத்துமாறு வற்புறுத்தியபோது, “பாதுகாவலரை அழைத்துவிடுவேன் என வார்டு பொறுப்பாளர் என்னை மிரட்டினார்,” என்கிறார் சுபாஷ். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு நோயாளிக்கு ஊசிகள் செலுத்தப்பட்டன.
அடுத்த நாள் காலை மே 14ஆம் தேதி லதா உயிரிழந்தார். அவருக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்ட ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மருத்துவமனையில் இருந்து வந்தார். “அவர் நன்றாக உடல்நலம் தேறி வந்தார்,” என்கிறார் பீட் நகர வழக்கறிஞரான சுபாஷ். ஒருவேளை ஊசிகளை சரியான நேரத்தில் செலுத்தியிருந்தால் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் என்பதையும் அவரால் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தது உறுதி என்கிறார். “இது நோயாளிகளை அதிகம் பாதிக்கிறது,” என்கிறார் அவர்.
இந்தாண்டு மார்ச் மாதம் கோவிட்-19 இரண்டாவது அலை வேகமாக பரவ தொடங்கியதும் கிராமப்புற இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பிற்கு கூடுதல் சுமை ஏற்பட்டது. குறைவான ஊழியர்களைக் கொண்ட மருத்துவமனைகள், களைத்துபோன சுகாதார பணியாளர்கள், நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை மறுக்கப்பட்டது ஆகியவை நாட்டின் கிராமப்புறத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கு மருத்துவ வசதி முறையாக கிடைக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
பருவநிலை மாற்றம், தண்ணீர் தட்டுப்பாடு, விவசாய நெருக்கடி போன்ற பிரச்னைகளால் சூழப்பட்டுள்ள மராத்வாடா பிராந்தியத்தின் பீடில் இரண்டாவது அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. ஜூன் 25ஆம் தேதி வரை 92,400 பேருக்கு உறுதி செய்யப்பட்டு கிட்டதட்ட 2,500 பேர் இறந்துவிட்டதாக மாவட்ட பதிவு தெரிவிக்கிறது. இரண்டாவது அலையின் உச்சத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி 26,400 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அது மே 31ஆம் தேதி 87,400 என அதிகரித்துவிட்டது. நோயாளிகள் எண்ணிக்கையின் அதிகரிப்பால் பீடின் சுகாதார அமைப்பே சிதைந்துவிட்டது.
இலவச சிகிச்சைக்காக பீடில் பெரும்பாலானோர் பொது சுகாதாரத் துறையை தேர்வு செய்கின்றனர். விவசாய மாவட்டமான இப்பகுதியில் ஏற்கனவே விவசாயத்தில் நெருக்கடி ஏற்பட்டு பெரும்பாலானோர் கடன் சுமையில் உள்ளனர். இங்கு வறுமை, துயரத்தில் 26 லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள 81 கோவிட் சிகிச்சை மையங்களுக்கு லேசான அறிகுறி உள்ளவர்கள் முதலில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவற்றில் மூன்று மையங்களைத் தவிர மற்றவை மாநில அரசால் நடத்தப்படுபவை. அங்கு நலமடையாதவர்கள் பிரத்யேக கோவிட் சிகிச்சை மையத்திற்கு மாற்றப்படுகின்றனர். பீடில் 45 DCHCகள் உள்ளன. அவற்றில் 10 மட்டுமே மாநில அரசால் நடத்தப்படுகிறது. 48 பிரத்யேக கோவிட் மருத்துவமனைகளில் ஐந்தில் மட்டும் மிகவும் சிக்கலான நிலையில் உள்ளவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அரசு சுகாதார மையங்கள் தான், என்றாலும் கடுமையான பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது.
கோவிட் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோதும் கூட மாநில அரசின் பீட் நகர கோவிட் மையங்களில் போதிய சுகாதார பணியாளர்கள் இல்லை. தற்காலிக ஊழியர்களை மாவட்ட நிர்வாகம் நியமித்தபோதும், பல பணியிடங்கள் காலியாகவே இருந்தன.
மாவட்ட சுகாதார அலுவலர் (DHO) ராதாகிருஷ்ண பவாரின் கூற்றுபடி, மொத்தமுள்ள 33 மருத்துவப் பணியிடங்களில் ஒன்பது மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மயக்கவியல் நிபுணர்களுக்கான 21 பணியிடங்களும் காலியாகவே உள்ளன. 1,322 செவிலியர்களுக்கான காலியிடங்களில் 448 பேரும், 1004 வார்டு உதவியாளர்களுக்கான காலியிடங்களில் 301 பேரும் நிரப்பப்பட்டுள்ளனர்.
மொத்தமாக 16 பிரிவுகளில் உள்ள 3,194 பணியிடங்களில் 34 சதவீதம் அதாவது 1,085 பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனால் ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டது.
இரண்டாவது அலை உச்சமடைந்தபோது நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. ஏப்ரல் 1ஆம் தேதி 26,400ஆக இருந்த எண்ணிக்கை மே 31ஆம் தேதி 87, 400ஆக அதிகரித்துவிட்டது. பீடின் சுகாதார அமைப்பே கூடுதல் சுமையால் குலைந்துபோனது
பீட் பொது மருத்துவமனையில் வென்டிலேட்டர் படுக்கையில் 38 வயதான பாலாசாஹேப் காதம் அனுமதிக்கப்பட்டபோது அவருக்காக ஆக்சிஜன் சிலிண்டரை சேமிப்பு அறையிலிருந்து வார்டிற்கு உறவினர்கள் எடுத்து வந்தனர். “அவரது ஆக்சிஜன் அளவு சரியத் தொடங்கியபோது பணியாளர்கள் யாரும் அங்கு இல்லை,” என்கிறார் 33 வயதாகும் அவரது மனைவி ஜோதி. “அவரது சகோதரர் தனது தோளில் ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்து வந்து வார்டு உதவியாளர் மூலம் பொருத்தியுள்ளார்.”
எனினும் பாலாசாஹிப் உயிர் பிழைக்கவில்லை. நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏலம்காட் கிராம துணைத் தலைவரான பாலாசாஹிப் “எப்போதும் வெளியில் இருப்பதையே பழக்கமாக கொண்டவர்,” என்கிறார் ஜோதி. “மக்கள் அவரிடம் பிரச்னைகளுடன் வருவார்கள்.”
ஏலாம்காட்டில் தடுப்பூசிகள் குறித்து பாலாசாஹிப் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார் என்கிறார் கிராம பள்ளி ஆசிரியரான ஜோதி. “மக்களின் சந்தேகத்தை போக்க அவர் முயற்சித்து கொண்டிருந்தார். எனவே அவர் வீடு வீடாக சென்று வந்தார்.” அப்போது தான் ஏதோ ஒரு தருணத்தில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கும் என ஜோதி நம்புகிறார். இப்போது ஜோதி 14, 9 வயதுகளில் உள்ள இரு மகள்களையும் தனியாக கவனித்து கொள்ள வேண்டி உள்ளது.
தொற்றின் அறிகுறியாக ஏப்ரல் 25ஆம் தேதி பாலாசாஹிபிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட தொடங்கியது. “அதற்கு முந்தைய நாள் அவர் எங்கள் வயலில் வேலை செய்தார். அவருக்கு இணை நோய்கள் எதுவும் இல்லாத போதிலும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அதே நாளில் [ஏப்ரல் 26 அன்றே] உயிரிழந்தார்,” என்கிறார் 65 வயதாகும் அவரது தந்தை பகவத் காதம். “அவர் அஞ்சினார். சிலசமயம் அதுபோன்ற சமயங்களில் நோயாளிகளை தேற்றுவதற்கு மருத்துவர்கள் தேவை. ஆனால் மருத்துவர்களுக்கு அதற்கெல்லாம் இப்போது நேரம் இருப்பதில்லை.”
மருத்துவமனையில் பணியாளர் தட்டுப்பாடு இருப்பதை காரணம் காட்டி வார்டில் உள்ள தொற்றுஆபத்து நிறைந்த கோவிட் நோயாளிகளுடன் தங்குவதற்கு குடும்ப உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர். உறவினர்களை வெளியேற்ற பீட் பொது மருத்துவமனை அதிகாரிகள் முயலும்போதெல்லாம் நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவமனை பணியாளர்கள், காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
வெளியேற்றப்பட்ட போதிலும் குடும்பத்தினர் தங்களின் அன்பானவர்களை காணும் வாய்ப்பிற்காக காத்திருக்கின்றனர். “எங்கள் அன்பானவர்களை யாராவது பார்த்து கொள்வார்கள் என விட்டுச் செல்ல முடியாது,” என்கிறார் மருத்துவமனைக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் 32 வயது நிதின் சாத்தி. “என் பெற்றோர் இருவரும் 60 வயதை கடந்தவர்கள், இருவரும் மருத்துவமனையில் உள்ளனர். அவர்களுக்கு பசிக்கிறதா அல்லது தண்ணீர் வேண்டுமா என யாரும் கேட்பதில்லை.”
பயந்துபோன நோயாளியின் மனநிலையைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம், என்கிறார் நகரில் வங்கி எழுத்தராக பணியாற்றி வரும் சாத்தி “அவர்களின் அருகில் நானிருந்தால் அதை செய்திருப்பேன். அது அவர்களின் மனதை வலிமைப்படுத்தும். அப்படியே விட்டுவிட்டால், கெட்டது நடந்துவிடும் என நீங்கள் சிந்திக்க தொடங்குவீர்கள். இது உங்களின் உடல்நலனை பாதிக்கிறது.”
இதில் உள்ள முரணை சாத்தி சுட்டிக்காட்டுகிறார்: “ஒருபுறம் எங்களை மருத்துவமனைக்கு வெளியே அனுப்புகின்றனர். மறுபுறம் நோயாளிகளை கவனித்துக் கொள்ள போதிய ஊழியர்கள் இருப்பதில்லை.”
மே மாதம் இரண்டாவது வாரத்தில், பணியாளர்கள் பற்றாக்குறையால் கோவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகாரப்பூர்வ பட்டியலில் இடம்பெறாமல் போனதை உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் கண்டறிந்தது மாவட்ட நிர்வாகத்திற்கு தர்மசங்கடமானது.
லோக்மத் செய்தித்தாளின் 29 வயது செய்தியாளர் சோம்நாத் கத்தால், இடுகாடுகளில் தகனம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையையும், அதிகாரப்பூர்வ எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பார்த்துள்ளார். அதில் 105 மரணங்கள் வரை வித்தியாசம் இருப்பதை அவர் கண்டறிந்தார். “இச்செய்தி வெளியான ஒரு வாரத்திற்குள் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை 200க்கும் மேல் என சரிசெய்ய வேண்டி இருந்தது. இவற்றில் சில 2020ஆம் ஆண்டில் நிகழ்ந்தவை,” என்கிறார் அவர்.
போதிய பணியாளர்கள் இல்லாதது தான் இதற்குக் காரணம் என தவறை டிஎச்ஓ பவார் ஒப்புக்கொள்கிறார். எண்ணிக்கையை குறைத்துக் காட்ட வேண்டும் என்று முயற்சிக்கவில்லை என்கிறார் அவர். “எங்களிடம் ஒரு முறை உள்ளது. அதன்படி ஒருவருக்கு கோவிட் 19 உறுதியானால் கோவிட் போர்டலில் இருந்து எங்களுக்கு அறிவிப்பு வரும். நோயாளி அனுமதிக்கப்பட்டது, அவர்களுக்கான சிகிச்சை மற்றும் விளைவுகள் குறித்த தரவுகளைப் பதிவேற்றம் செய்யும் வசதி அதில் உள்ளது,” என விளக்குகிறார் பவார்.
ஒரு நாளுக்கு 25-30 என இருந்த கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் திடீரென 1,500 வரை அதிகரித்தது. “கூட்டம் அதிகரித்ததால் தரவுகளைப் பதிவேற்றுவதில் யாரும் கவனம் செலுத்த முடியவில்லை,” என்கிறார் பவார். “அவர்கள் கோவிட் 19 நோயாளிகளாக சிகிச்சை பெற்றாலும், சிலரது மரணம் போர்டலில் அப்டேட் செய்யப்படவில்லை. இச்செய்தி வெளியானது முதல் நாங்கள் எங்கள் தவறை ஒப்புக்கொள்கிறோம். மாவட்டத்தில் மரண எண்ணிக்கையை அப்டேட்டும் செய்துள்ளோம்.”
மாவட்ட நிர்வாகம் தவறுகளை ஒப்புக்கொண்ட போதிலும், கோவிட் விதிமுறைகளை மீறியதாக சுபாஷிற்கு எதிரான நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. லதாவின் “சடலத்தை அவமதித்ததாக” அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
“மருத்துவமனை பணியாளர் அன்டிஜென் பரிசோதனை [சடலத்தின் மீது], செய்தபோது எதிர்மறையாக வந்தது,” என்கிறார் சுபாஷ். “எனவே தான் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அவர்கள் அனுமதித்தார்கள்.”
நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது சகோதரியின் கிராமமான கும்பர்வாடிக்கு உடலை எடுத்துச் செல்ல சுபாஷ் மருத்துவமனையிடம் கேட்டார். லதா அங்கு அவரது கணவர் ரஸ்தும், நான்கு வயது மகன் ஷ்ரேயாஸ் ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். “இதுவே குடும்பத்தின் விருப்பம். அவருக்கு முறையாக இறுதிச் சடங்கு செய்ய நாங்கள் விரும்பினோம்.”
கும்பர்வாடிக்கு செல்லும் பாதி வழியில் மருத்துவமனையிலிருந்து உடலை திருப்பிக் கொண்டுவரும்படி சுபாஷிற்கு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. “இதுபோன்ற கடினமான சமயங்களில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என எனது உறவினர்களிடம் நான் கூறினேன். நாங்கள் யு டர்ன் செய்து உடலுடன் திரும்பினோம்.”
பெருந்தொற்று நோய்ச் சட்டம், 1897ன்கீழ் சுபாஷின் மீது பொது மருத்துவமனை சார்பில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. “மருத்துவமனையில் கோவிட் நோயாளி இறந்தால், சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இங்கு உறவினர்கள் விதிமுறைகளை மீறியுள்ளனர்,” என்கிறார் பீட் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரவிந்திரா ஜகதப். அன்டிஜென் பரிசோதனை என்பது ஒன்றுமில்லை என்றும் அவர் கூறுகிறார்.
கோவிடில் இறந்தவரின் சடலத்தை கசிவுகளற்ற பையில் சுற்றி வைக்க வேண்டும், மருத்துவமனையிலிருந்து நேரடியாக இடுகாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது விதிமுறை.
மருத்துவமனை அனுமதியின் பேரிலேயே லதாவின் உடலைக் கொண்டு சென்றதாக சுபாஷ் சொல்கிறார். “நான் ஒரு வழக்கறிஞர். என்னால் விதிமுறைகளை புரிந்துகொள்ள முடியும். நான் எப்படி மருத்துவமனைக்கு எதிராகச் சென்று என் குடும்பத்தினரின் நலனை பாதிக்க முடியும்?”
கடந்த காலங்களில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும், பணியாளர்களுக்கும் தான் செய்த உதவிகளைக் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று அவர் ஏமாற்றம் தெரிவித்தார். “குறைந்தது 150 நோயாளிகள் இந்த மருத்துவமனையில் சேர நான் உதவியிருப்பேன். பல நோயாளிகளுக்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது. அவர்கள் அச்சத்தில் உள்ளனர். நான் தான் படிவங்களை நிரப்பி மருத்துவமனைக்குச் செல்ல உதவினேன். ஒரு மருத்துவமனை பணியாளர் செய்ய வேண்டியதை நான் செய்தேன்,” என்கிறார் சுபாஷ்.
லதாவிற்கு உடல்நலம் பாதிப்பதற்கு முன்பே, பொது மருத்துவமனையில் சுபாஷ் பல நோயாளிகளுக்கு உதவியுள்ளார். சகோதரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாரங்கள் உட்பட மொத்தம் ஒன்றரை மாதங்கள் வரை அங்கு செலவிட்டதாக அவர் தெரிவிக்கிறார்.
தனது சகோதரியை கவனித்துக் கொள்ள மருத்துவமனையில் இருந்தபோது ஒருமுறை படுக்கையிலிருந்து விழுந்த கோவிட் நோயாளி ஒருவரை தூக்கி மீண்டும் படுக்கையில் படுக்க வைத்ததாக அவர் சொல்கிறார். “அப்பெண்மணி ஒரு மூத்த குடிமகள். அவர் படுக்கையிலிருந்து தரையில் விழுவதை யாரும் கவனிக்கவில்லை. இதுவே மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் நிலைமை.”
கவலை, ஏமாற்றம், கோபத்துடன் பீடில் உள்ள உணவக வளாகத்தில் என்னை சுபாஷ் சந்தித்தார். அவரால் என்னை வீட்டிற்கு அழைக்க முடியவில்லை. “என் சகோதரி இறந்ததால் என் பெற்றோர் அதிர்ச்சியில் இருந்தனர்,” என்கிறார் அவர். “அவர்கள் பேசும் நிலையில் இல்லை. நானும் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளேன். லதாவின் மகன் ‘அம்மா எப்போது வருவார்கள்?’ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவனிடம் என்ன சொல்வது என எனக்குத் தெரியவில்லை.”
தமிழில்: சவிதா