கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி, ரூ. 500 மற்றும் ரூ. 1,000 ரத்து செய்யப்பட்டு பத்து மாதங்களுக்குப் பிறகு, பணமதிப்பிழப்பின் குளறுபடிகள் தீபக் படவ்னேவைத் தொடர்ந்து அச்சுறுத்துக்கிறது.
நவம்பர் தொடக்கத்தில், படவ்னே தனது 2.5 ஏக்கர் பண்ணையில் இருந்து 31 குவிண்டால் பருத்தியை அறுவடை செய்திருந்தார். அதில் நல்ல வருமானம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். "வர்த்தகர் லாரிக்கு ஏற்பாடு செய்து என் வீட்டிலிருந்து பருத்தியை ஏற்றினார்," என்று அவர் கூறுகிறார். ஆனால் அப்போதுதான், பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பண நெருக்கடி விவசாயத் துறையைத் தாக்கியது. தீபக்கின் பருத்திக்கான வருவாய் கிடைக்காமல் போனது. ‘வர்த்தகர் இப்போது தீபாவளி சமயத்தில் [அக்டோபர் 2017 நடுப்பகுதியில்] பணம் தருவதாகக் கூறுகிறார்,” என்று அவர் கூறுகிறார்.
படவ்னேவுக்கு அவரது பருத்தி விளைச்சலுக்கு 178,483 ரூபாய் வர்த்தகர் தரவேண்டும். மார்ச் 24 அன்று இந்த தொகைக்கு அவர் பெற்ற காசோலை மூன்று முறை ’பவுன்ஸ்’ ஆனது. மகாராஷ்டிராவின் மராத்வாடாவில் உள்ள அவுரங்காபாத் நகரின் புறநகரில் உள்ள கராஜ்கான் கிராமத்தில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் 31 வயதான தீபக் கூறுகையில், “நான் மட்டுமே பாதிக்கப்பட்டவன் இல்லை. "என் கிராமத்தில் இதேபோல் ஏமாற்றப்பட்ட மற்றவர்களும் உள்ளனர்."
கூட்டுக் குடும்பத்தில் வசித்து வரும், இரண்டு குழந்தைகளைக் கொண்ட படவ்னே, 1,300 பேர் கொண்ட இந்த கிராமத்திலிருந்து சிலரை ஒன்று சேர்த்துள்ளார் - அவர்களும் தங்கள் நிலுவைத் தொகைக்காகக் காத்திருக்கிறார்கள் அல்லது ’பவுன்ஸ்’ ஆன காசோலைகளைப் பெற்றவர்கள். ஏப்ரல் மாதத்தில், பணமதிப்பிழப்புக்கு ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு, 38 வயதான தீபக்கின் சகோதரர் ஜீதேந்திரா, 34 குவிண்டால் பருத்திக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் பெற்றார். அதுவும் பவுன்ஸ் ஆனது. "என்னிடம் கையில் பணம் இல்லையெனில் இதை வைத்து நான் என்ன செய்ய வேண்டும்?" அவர் கேட்கிறார். "பயிர் பருவத்திற்கான உள்ளீடுகளை வாங்க எனக்கு பணம் தேவை [ஜூன் நடுப்பகுதியில் தொடங்கியது]."
ஜூன் மாதத்தின் காலையில் நாங்கள் அங்கு சென்றபோது, கேள்விக்குரிய வர்த்தகர் நிருபர்களைத் தவிர்ப்பதற்காக கிராமத்தை விட்டு வெளியேறினார். எனவே, அவர் இந்த விஷயங்கள் குறித்து தனது பதிப்பைக் கொடுக்கவில்லை, எனவே இந்த கட்டுரையில் அவர் குறிப்பிடப்படவில்லை.
கோபமடைந்த குழு அவரது வீட்டிற்குள் நுழைந்தபோது, அவரது மகன் தற்கொலை செய்து கொண்டால் அவர்கள்தான் பொறுப்பு என்று அவரது தாயார் அச்சுறுத்தினார். "பணம் செலுத்த தாமதமாக காரணம் பணமதிப்பிழப்பே என்று வர்த்தகர் கூறினார்," ஆனால் தீபக் கூறுகிறார், "ஆனால், எங்களுக்கு விதைப்பு காலம் காத்திருக்காது. மோசடி குற்றச்சாட்டின் பேரில் [நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்மட் காவல் நிலையத்தில்] எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம்.”
அவுரங்காபாத்-ஜல்னா நெடுஞ்சாலையில் உள்ள ஹசனாபத்வாடி கிராமத்தில், 28 வயதான அதுல் அந்தராய், ஜூன் மாதத்தில், பணமதிப்பிழப்பிற்கு சில மாதங்களுக்குப் பிறகும் போராடிக் கொண்டிருந்தார். ஐந்து ஏக்கரில் 1,000 சாத்துக்குடி மரங்கள் உள்ளன. "எனக்கு ஒரு தனியார் கிணறு மற்றும் ஆழ்குழாய்க் கிணறு உள்ளன, எனவே என்னைச் சுற்றி சாத்துக்குடி பயிரிடும் பல விவசாயிகளை விட பழத்தோட்டத்திற்கு நான் தண்ணீர் விடுகிறேன்."
நவம்பர் முதல் வாரத்தில், ஒரு வர்த்தகர் அந்தராயை அணுகி அவருக்கு முழு உற்பத்திக்கும் 6.5 லட்சம் கொடுக்க முன்வந்தார். "பிப்ரவரி மாதத்தில் அறுவடை செய்ய நான் திட்டமிட்டிருந்தேன்," என்று அவர் கூறுகிறார். “மேலும் ஒரு கிலோவுக்கு 30-35 ரூபாய், நான் பயிரிலிருந்து 10 லட்சம் எதிர்பார்த்து இருந்தேன். நான் மீண்டும் தொடர்புகொள்கிறேன் என்று வணிகரிடம் கூறினேன்.”
ஆனால், நவம்பர் 8 ஆம் தேதி, அரசாங்கத்தின் ‘நோட்பந்தி’ (பணமதிப்பிழப்பு) உத்தரவுக்குப் பிறகு, அதே வர்த்தகரிடம் பணம் இல்லை, விகிதங்கள் சரிந்தன. “எனக்கு இறுதியில் முழு மகசூலுக்கும் 1.25 லட்சம் ரூபாய் கிடைத்தது”, என்கிறார் அதுல். “நான் கிலோவுக்கு 30-35 ரூபாய் எதிர்பார்த்து இருந்தேன், ஆனால், நான் கிலோவுக்கு பழத்தை 3 ரூபாய்க்கு விற்றேன்”.
ஒவ்வொரு ஆண்டும், மராத்வாடாவில் பயிர்களுக்கான பரிவர்த்தனைகள் ரொக்கப்பணமாக அளிக்கப்படுக்கின்றன. உணவுப் பயிர்களைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் பெரிய அளவு பருத்தி மற்றும் சாத்துக்குடிக்கு பரிமாறிக்கொள்ளப்படுகிறது. ஆகவே, பணமதிப்பிழப்பு பிறகு, பணம் குறைவாக பரிவர்த்தனை செய்யப்பட்டப்போது, பருத்தி மற்றும் சாத்துக்குடி விவசாயிகளுக்கு ஏற்பட்ட தாக்கம் கடுமையாக இருந்தது. நவம்பர் என்பது மராத்வாடாவின் விவசாயிகள் பருத்தியை அறுவடை செய்யும் காலம். மேலும், இது பிப்ரவரி-மார்ச் மாதத்தின் முதல் சாத்துக்குடியை அறுவடைக்கு சில மாதங்களுக்கு முன்பு (இரண்டாவது ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில்) என்பது குறிப்பிடத்தக்கது.
விகிதங்கள் வீழ்ச்சியடைந்தன மற்றும் விவசாயிகளிடமிருந்து பங்கு வாங்க வணிகர்களிடம் பணம் இல்லை. வாக்குறுதியளித்த ரொக்கப்பணமில்லாத எதிர்காலம் ஒருபோதும் வரவில்லை, கிராமப்புற மராத்வாடாவில் பலர் இந்த யோசனையை கேலி செய்கின்றனர். சோயா மொச்சை மற்றும் ஜோவர் பயிரிடும் பீட் மாவட்டத்தின் அஞ்சன்வதி கிராமத்தில் விவசாயி அசோக் யெதே கூறுகிறார்: “ஏடிஎம்கள் நகரங்களில் குவிந்துள்ளன. "ஒரு வங்கிக்குச் செல்வதற்கோ அல்லது ஏடிஎம்-க்கு செல்வதற்கோ நாங்கள் கிலோமீட்டர் பயணம் செய்யவேண்டும்."
கிராமப்புறங்களில் ஏடிஎம்கள் மிகக் குறைவானவை மற்றும் மிகவும் தொலைவில் உள்ளவை. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தரவுகளின்படி (ஜூன் 2017 வரை) முழு நாட்டிலும் உள்ள 2,22,762 ஏடிஎம்களில்,) 40,997 மட்டுமே கிராமப்புற மையங்களில் உள்ளன. இதன் பொருள் இந்தியாவில் உள்ள ஏடிஎம்களில் இது 20 சதவீதத்திற்கும் குறைவு. இது கிராமப்புறமாக வகைப்படுத்தப்பட்ட மக்கள்தொகையின் (மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 மூலம்) 69 சதவீதத்திற்கு கிடைக்கிறது.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் தேவிதாஸ் துல்ஜாபுர்கர், ஏடிஎம்களின் இயக்க நேரத்தைக் குறிப்பிடுவதும் முக்கியம் என்று சுட்டிக்காட்டுகிறார். "நகரங்களில், பணம் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நிரப்பப்படுகிறது," என்று அவர் கூறுகிறார். "கிராமப்புறங்களில் அப்படி இல்லை, ஏடிஎம்களின் இயக்க நேரம் நகரங்களில் இருப்பதில் 20 சதவீதம் ஆகும்."
தவிர, இணையவழி பரிவர்த்தனைகளுக்கு அதிக செலவு ஆகும் என்று அவர் கூறுகிறார். இதுபோன்ற ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு விவசாயி கூடுதல் பணம் செலுத்த முடியாது. எதுவாக இருந்தாலும், கிராமப்புற பொருளாதாரத்தில் எந்தவொரு பரிவர்த்தனைக்கும் பணம் முக்கியமானது என்று அவர் விளக்குகிறார். "ஒரு விவசாயத் தொழிலாளிக்கு 250 ரூபாயை ‘பேடிஎம்’ மூலம் நாங்கள் செலுத்த முடியாது," என்று அவர் சிரிக்கிறார். “பெரும்பாலும், ஒரு விவசாயி பணத்தைப் பெற்ற உடனடியாக உள்ளீடுகள் அல்லது ரேஷன்கள் அல்லது தீவனங்களை வாங்க அதைப் பயன்படுத்துகிறார். கிராமப்புற இந்தியாவில் முழு வர்த்தக சங்கிலியும் ரொக்க பணம் அடிப்படையிலானது.”
நவம்பர் 2016 க்குப் பிறகு பண நெருக்கடிக்கு கூடுதல் பளு சேர்க்க, கிராமப்புறங்களில் உள்ள வங்கிகள் கடைசியாக புதிய நாணயத்தாள்களைப் பெற்றன. பல விவசாயிகள் தங்கள் கணக்குகளை வைத்திருக்கும் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய நோட்டுகளை கூட பல மாதங்களாக ரிசர்வ் வங்கி ஏற்கவில்லை. லாத்தூர் மாவட்ட கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குனர் ஹனுமந்த் ஜாதவ் கூறுகிறார், "7-8 மாதங்களாக நாங்கள் தொடர்ந்து நெருக்கடியில் இருந்தோம், மாவட்ட வங்கிகள் மறுபரிசீலனை செய்யப்படாதபோது, எங்கள் ஏடிஎம்களில் பணம் இல்லாமல் போனது."
கராஜ்கானிலும், கிராமங்களில் வாழும் பெரும்பான்மையை புறக்கணித்து, பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி நகரும் முடிவு, நகரத்தை மையமாகக் கொண்டது என்று விவசாயிகள் கூறுகின்றனர். "பொதுவாக, எந்தவொரு மூலத்திலிருந்தும் நாங்கள் பெறும் பணத்தை அதே நாளில் பயன்படுத்துகிறோம்" என்று தீபக் கூறுகிறார். “ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பணத்தை எடுக்க நாங்கள் வங்கிக்குச் செல்லத் தொடங்கினால், நாங்கள் செலவழிக்கும் பணத்தையும் நேரத்தையும் கற்பனை செய்து பார்க்க முடியுமா? மும்பை மற்றும் டெல்லியில் பணமில்லா பொருளாதாரம் நன்றாக இருக்கிறது, ஆனால் இது கிராமப்புற இந்தியாவில் ஒரு கேலிக்கூத்து. ”
தீபக்கால் 2016-17 விவசாய பருவத்தின் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. “நான் கர்மட்டில் உள்ள மகாராஷ்டிரா வங்கிக்கு 1.5 லட்சம் கொடுக்க வேண்டும், ”என்கிறார். “நான் ஒவ்வொரு ஆண்டும் திருப்பிச் செலுத்தி வருகிறேன், எனவே நான் ஒரு புதிய பயிர் கடனுக்கு தகுதியுடையவன். ஆனால் இந்த ஆண்டு, நான் தவற விட்டு விட்டேன். "
தீபக் இப்போது ஒரு தனியார் பணக்காரரிடமிருந்து மாதத்திற்கு 3 சதவீத வட்டிக்கு 240,000 ரூபாய் கடன் பெற்றிருக்கிறார். அவர் ஏற்கனவே ஒரு தனியார் பணக்காரரிடமிருந்து 2 லட்சம் பெற்றிருந்தார். அவர் நடந்துகொண்டிருக்கும் சம்பா பருவத்திற்கு புதிய கடனைப் பயன்படுத்தினார் மற்றும் தனது வங்கிக் கடனின் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தியுள்ளார். ஆனால் அவர் "இடைவிட்ட மழையின் காரணமாக இந்த ஆண்டு அறுவடை நம்பிக்கைக்குரியதாகத் தெரியவில்லை," என்று கவலைப்படுகிறார்.
மேலும் ஹசனாபத்வாடி கிராமத்தில், அதுல் தனது சாத்துக்குடி பழத்தோட்டத்தை விட்டுவிட வேண்டுமா என்று யோசிக்கிறார். “கிணறு வறண்டு விட்டது. மழைப்பொழிவு பெரிதாக இல்லை. அறுவடை [ஆண்டின் இரண்டாவது, ஆகஸ்ட்-செப்டம்பர்] சாதாரணமானது. பணமதிப்பிழப்புக்கு பிறகு நான் நிறைய பணத்தை இழந்ததால், தாவரங்களை உயிருடன் வைத்திருக்க தண்ணீர் வாங்குவது கடினம். "
படங்கள்: ஸ்ரீரங் ஸ்வர்கே
தமிழில்:: ஷோபனா ரூபகுமார்