அனந்தபூர் மாவட்டத்தின் நாகரூர் கிராமத்திலுள்ள விவசாயிகள் கடந்த காலத்தில் அவர்களது கிராமத்தில் நிலத்தடி நீர் வளமாக இருந்ததை நினைத்து ஏங்குகிறார்கள். 2007ஆம் வருடத்துக்கு முந்தைய காலகட்டம் பற்றி அவர்கள் சில நேரம் நிகழ்காலத் தொனியில்  பேசிக்கொள்கிறார்கள். ஒப்பீட்டளவில் வளமாக இருந்த அந்த நாட்களை அவர்களால் அவ்வளவு எளிதாக கடந்தகாலமாகப் பார்க்க முடியவில்லை.

2007 வாக்கில் மழை பெய்வது குறைந்தாலும் கூட நாகரூர் பக்கத்தில் உள்ள ஏரிகள் கடைசியாக நிரம்பி வழிந்தன. “ என்.டி.ராமராவ் ஆந்திரப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக இருந்தபோது மழை ஒழுங்காக பெய்தது. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2004 மே மாதம் முதலமைச்சராக பதவியேற்றபிறகும் ஏரி, குளங்கள் ஒரு வாரத்துக்கும் மேலாக நிரம்பி வழிந்தன. அதுதான் கடைசி” என்கிறார் வி.ராமகிருஷ்ண நாயுடு (42) என்கிற விவசாயி.

PHOTO • Sahith M.

‘என்.டி.ராமராவ் முதலமைச்சராக இருந்தபோது,மழை ஒழுங்காக பெய்தது‘ வறட்சிக்கு முந்திய  காலகட்டத்தை நினைத்துப்பார்க்கிறார் வி.ராமகிருஷ்ண நாயுடு.

சில வருடங்கள் மழை குறைவாக பெய்தால் அதற்கு அடுத்த வருடங்களில் நன்றாக மழைபெய்யும் என்பது வழக்கம். இதுவும் மெதுவாக மாறிவிட்டது. சில வருடங்களில் நாகரூரில் வருடந்தோறும் பெய்த மழையின் அளவு 700-800 மில்லி மீட்டர் அளவுக்கு இருந்துள்ளது. ஆனால் 2011 ஜூன் காலகட்டத்துக்குப் பிறகு 2015 ஜூன் - 2016 மே மாதம் வரையான  காலகட்டத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு 607 மிமீ. மற்ற வருடங்களில் 400 மிமீக்கும் 530 மிமீக்கும் இடையில்தான். (நிலத்தடி நீர் மற்று தண்ணீர் தணிக்கைத் துறை, அனந்தபூர் அமைப்பின் தரவுகளின்படி).

அனந்தபூர் மாவட்டத்தின் 750 கிராமங்களில் மெதுவாக நீர்வளம் குறைந்துகொண்டே போகிற நிலைமை, 1990களிலேயே தொடங்கிவிட்டது. நாகரூர் கிராமத்தில் சுமார் 2300 பேர் வசிக்கிறார்கள்.   சிறுதானியங்ளையும் எலுமிச்சம்பழங்களையும் அவர்கள் பாரம்பரியமாக விளைவிப்பார்கள். ஆனால் அவற்றுக்குப் பதிலாக 1990களில் பணப்பயிர்களை விளைவிக்க ஆரம்பித்தார்கள். வேர்கடலை, ஆரஞ்சுப் பழங்கள் உள்ளிட்ட பணப்பயிர்களை அவர்கள் விளைவிக்கத் தொடங்கினார்கள். “அப்போதெல்லாம் அதுதான் ட்ரெண்ட், பணப்பயிர்களை விளைவிப்பதால் அதிக லாபம் கிடைக்கும் என்பதால் அவற்றையே விவசாயிகள் விளைவித்தார்கள்” என்கிறார் சுனில் பாபு எனும் விவசாயி.

PHOTO • Sahith M.

தங்களின் நிலத்துக்கு பாசன வசதிகளைச் செய்வதற்காக, இரண்டு லட்சம் ரூபாய்களுக்கு தண்ணீர் பீய்ச்சும் குழாய்கள் வாங்கியது உள்ளிட்டு ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக ரூபாய் பத்து லட்சம் வரைக்கும் கே. சீனிவாசலுவும் அவரது குடும்பமும் செலவு செய்துள்ளனர்.

அதிகமான தண்ணீர் தேவைப்படுகிற பணப்பயிர்களை விளைவிக்கிற முறைக்கு விவசாயிகள் மாறியது ஒரு பக்கம். இன்னொரு பக்கத்தில் மழை பெய்வதும்  குறைந்ததும் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படுவதும் அதிகரித்தது. எப்போதும் நிலத்தடி நீர் அதிகமாக இருக்கிற பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தைக் குறைத்தது. “ நாப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இங்கே ஒரு ஆழ்துளை கூட கிடையாது. மனிதர்களின் உழைப்பின் மூலம் தோண்டப்பட்ட கிணறுகள் மட்டும்தான் இருந்தன. பத்து அடி ஆழம்  நாங்கள் தோண்டியதுமே அப்போதெல்லாம் தண்ணீர் வந்துவிடும்” என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் சுனில்பாபுவின் அப்பாவான 70 வயதான விவசாயி சீனிவாசலு.

ஆனால், இப்போது எல்லாம் மாறிவிட்டது. 1972 ஆம் வருடம் முதலாக தண்ணீர் பற்றிய தகவல்களை  மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டம் மற்றும் தண்ணீர் தணிக்கைத் துறை பராமரித்து வருகிறது. அந்த தரவுகளின் படி தற்போது நாகரூரின் தண்ணீர் மட்டம் கடுமையாக குறைந்துவருகிறது. நிலத்தடி நீர்  மட்டம் உயர்வு என்பது வருடாவருடம் குறைந்தே வருகிறது. இப்போதெல்லாம் 600 - 700 அடிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டுகிறார்கள். சில இடங்களில் 1000 அடிகளுக்குத் தோண்டினாலும் தண்ணீர் கிடைக்கவில்லை என்கிறார்கள் சில விவசாயிகள்.

விவசாயத்துக்கான நீர் பாசனம் ஆழ்துளைக் கிணறுகளின் வழியாக நடப்பது அதிகரித்திருப்பதால் நிலத்தடி நீர் மட்டும் இன்னும் மோசமாக குறைந்து வருகிறது.  அது மட்டுமல்ல, மாவட்டத்தில் உள்ள சாதாரண கிணறுகளும் வறண்டுவிட்டன. அனந்தப்பூரின் 63 மண்டலங்களில் 12 மட்டும்தான் நிலத்தடி நீர் தொடர்பாக, அபாயம் இல்லாதவகையில் பாதுகாப்பாக  இருக்கின்றன என்கிறது எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வு நிறுவனத்தின் 2009 வருட ஆய்வறிக்கை ஒன்று.

PHOTO • Sahith M.

நாகரூரில் நிலத்தடி நீர் மட்டம் 2001 - 2002 காலகட்டத்தில் சுமார் 10 மீட்டர்களாக இருந்தது. அதுவே 2017ஆம் வருடத்தில் 25 மீட்டர்களாக இருந்தது. சில வருடங்களாக  நிலத்தடி நீர் மட்டத்தின் ஆழம் குறைந்துவிட்டது. (ஆதாரம்- நிலத்தடி நீர் மற்றும் தண்ணீர் தணிக்கை துறை, அனந்தப்பூர்) வலதுபக்கம்: தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டதைக் காட்டுகிறார் கே. சீனிவாசலு.

தனது ஒன்பது ஏக்கர் நிலத்தில் எட்டு ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டினார் சீனிவாசலு. ஒவ்வொன்றும் ஒரு லட்சம் ரூபாய் செலவு வைத்தது. அவரும் அவரது மூன்று மகன்களும் வட்டிக்கடைக்காரர்களிடமிருந்து ரூபாய் ஐந்து லட்சம் வரை கடன் வாங்கியிருந்தனர். எட்டு ஆழ்துளைக் கிணறுகளில் ஒன்றுதான் தற்போது தண்ணீர் தந்துகொண்டிருக்கிறது. அதன் தண்ணீரை அவர்களின் வயலுக்குக் கொண்டுவந்து பீய்ச்சியடிக்கும் குழாய்கள் மூலம் நீர் பாசனம் செய்வதற்கு கூடுதலாக இரண்டு லட்சம் ரூபாய்கள் செலவானது. “ எங்களது வாய்க்கு உணவாகும் நிலையில் இருக்கும் பயிர்கள் செத்து விடாமல் காப்பாற்ற வேண்டும் என்பதே எங்களின் ஆசை” என்கிறார் சீனிவாசலு.

“சீனிவாசலு போன்ற விவசாயிகள் பல ஆழ்துளை கிணறுகளை வெட்டி தங்களது அதிர்ஷ்டத்தைச் சோதித்துக்கொண்டிருக்கிறார்கள். 2013ஆம் ஆண்டுக்குள் இந்த மாவட்டத்தில் இரண்டு லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் வரை தோண்டப்பட்டுவிட்டன என்று தனது ‘அனந்த பிரஸ்தனம்’ எனும் நூலில் சொல்கிறார் டாக்டர் ஒய்.வி. மல்லா ரெட்டி. அனந்தபூரில் சூழலியல் பிரச்சனைகளுக்காக செயல்படுகிற அமைப்பின் இயக்குனராக செயல்படுகிறார் அவர். இரண்டு லட்சம் கிணறுகளில் 80 ஆயிரம் வரை 2013 கோடைகாலத்திலேயே வறண்டுவிட்டன என்கிறது அவரது புத்தகம்.

“2017ஆம் ஆண்டில் ஆழ்துளைக் கிணறுகளின் எண்ணிக்கை 2.5 லட்சமாக உயர்ந்துவிட்டது. ஆனால் அவற்றில் 20 சதவீதம் அளவுக்கான கிணறுகள்தான் செயல்படுகின்றன. மற்றவை செயல்படவில்லை என்கிறார் அதிகாரிகள்” என்று நம்மிடம் தெரிவிக்கிறார் மல்லா ரெட்டி.

PHOTO • Sahith M.

நாகரூரில் தோண்டப்பட்ட,ஆனால் தண்ணீர் வராத ஒரு ஆழ்துளை கிணறு. அது திறந்துகிடப்பதை மறைப்பதற்காக பயன்படுகிற கல்.

அந்த 80 சதவீத கிணறுகளில் ராமகிருஷ்ண நாயுடுவின் நிலத்தில் இருக்கிற இரண்டு கிணறுகளும் உண்டு. அவரது ஐந்தரை ஏக்கர் நிலத்தில் 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு மூன்று ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டினார். அவற்றில் ஒன்றுதான் தற்போது செயல்படுகிறது. “2010 மற்றும் 2011 காலகட்டத்தில்தான் நான் கடன்கள் வாங்கத் தொடங்கினேன். அதற்கு முன்பாக மரங்கள் இருந்தன. ஏராளமான தண்ணீரும் இருந்தது. அப்போது கடன்களும் கிடையாது” என்கிறார் அவர். தற்போது அவர் வட்டிக்கு விடுபவர்களிடமிருந்து ரூபாய் 2 லட்சத்து 70 ஆயிரம் வரைக்கும் கடன்கள் வாங்கியிருக்கிறார். விவசாயம் மூலம் வருகிற வருமானத்திலிருந்து அவரால் இரண்டு சதவீத வட்டியை மட்டுமே கட்டமுடிகிறது. “ராத்திரியெல்லாம் தூக்கம் வராது. எப்போதும் நான் கடன்காரர்களைப்  பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறேன். நாளைக்கு யார் வந்து கடனைக்கேட்பார்கள்? ஊரில் என்னை யார் வந்து அவமானப்படுத்துவார்கள்?”

கடன்கள் இருந்தாலும், பல ஆழ்துளை கிணறுகள் இருந்தாலும் தண்ணீரைப் பற்றியும் கடன்கள் பற்றியும் கவலை இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி ஒரு விவசாயி  தனது நிலத்தில் நல்ல விவசாயத்தைச் செய்தால் அவருக்கு லாபம் கிடைக்கும் என்பதற்கு  எந்தவொரு உத்தரவாதம் இல்லை. விவசாயப் பொருள்கள் விற்கிற சந்தையில் ஏற்படுகிற ஏற்ற இறக்கங்களும் விவசாயியைப் பாதிக்கின்றன. சாம்பாரில் போடுகிற வெள்ளரிக்காயை இந்த வருடத்தில் விளைவித்தார் நாயுடு. ஆழ்துளைக் கிணற்றின் தண்ணீரைப் பயன்படுத்தினார். நல்ல விளைச்சல். நல்ல லாபம் கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தார். ஆனால் அவர் வெள்ளரிக்காய்களைப் பறிப்பதற்கான நாள் வருவதற்கு பத்து நாட்களுக்கு முன்பாகவே சந்தையில் விலைகள் வீழ்ச்சியடைந்துவிட்டன. ஒரு கிலோ 14 அல்லது 15 ரூபாய்க்கு விற்றுவந்த வெள்ளரிக்காய் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ என்ற அளவுக்கு விலை குறைந்து விட்டது. அது நான் விதைகளுக்குச் செலவு செய்ததை விட குறைவு. அதனால் நான் வெள்ளாடுகள் இந்த வெள்ளரிக்காய்களை கடித்துத்தின்னட்டும் என்று விட்டுவிட்டேன்” என்கிறார்  அவர்.

PHOTO • Sahith M.

ஜி.ஸ்ரீராமுலுவின் ஆறு ஏக்கர் நிலத்தில் ஆறு ஆள்துளை கிணறுகள் போட்டும் பயனில்லை. அத்தகைய பலனற்ற ஒரு கிணற்றின் அருகில் நிற்கிறார் அவர்.

தக்காளிகளுக்குக்கூட விலை கிடைக்கவில்லை என்கிறார் ஜி.ஸ்ரீராமுலு. 2016இல் ஆழ்துளை கிணற்றுப் பாசனம் கிடைத்து, தக்காளி நன்றாக விளைந்தாலும் அவருக்கு நஷ்டம்தான் கிடைத்தது.  கிராமத்துக்கு வெளியே இருக்கிற ஸ்ரீசாய் டிபன் ஹோட்டலில் காலை ஏழரை மணி அளவில் தேனீர் குடித்துக்கொண்டே தனது ஆழ்துளைக் கிணறுகள் பற்றி பேசுகிறார் ஸ்ரீராமுலு. அந்தக் கடையில் வழக்கமாக நல்ல கூட்டம் இருக்கும். பயிர்கள் பொய்த்துப் போனதால் அதிகமான நேரம் பல விவசாயிகள் இந்தக் கடையில் இருப்பார்கள். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தினக்கூலிக்காக வேலைக்குப் போகிறவர்கள் இந்தக் கடையில் இருப்பார்கள். இந்த டீக்கடையை குயவர் வேலையைச்செய்கிற கே.நாகராஜூ 2003இல் ஆரம்பித்தார். ஆரம்பத்தில் தினமும் 200,300க்கு வியாபாரம் நடந்தது. தற்போது தினமும் சுமார் ஆயிரம் ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது என்கிறார் அவர்.

அந்தக் கடையில் விவசாயிகள் பல்வேறு விஷயங்களைப் பேசுகிறார்கள். தேசிய அரசியல் முதலாக ஆழ்துளைக் கிணறுகள் வாய்க்கிறதே அதிர்ஷ்டம் என்பது வரை அவர்கள் பேசுகிறார்கள். கடன்களைப் பற்றியும் பேசுகிறார்கள். “கிராமத்தில் இருக்கிற அரசியல் தலைகள் என்று இருந்தவர்கள் தற்போது கங்கையம்மன் (தண்ணீர்) என்று இருக்கிறார்கள்”  என்று ஒருவர் கிண்டலாகச் சொன்னார். அதாவது கிராமத்தினர் முன்பெல்லாம் தங்களின் கிராமத்தில் உள்ள உள் சண்டைகளுக்குப் பிறகு தங்களைக் கைது செய்யாமல் இருப்பதற்காக பணத்தைச் செலவு செய்வார்கள். ஆனால், தற்போது அவர்களின் பெரும்பாலான பணம் தண்ணீர் தொடர்பான பிரச்சனைகளுக்கே செலவு ஆகிவிடுகிறது .

PHOTO • Sahith M.

நாகரூருக்கு வெளியே உள்ள ஸ்ரீசாய் டிபன் ஹோட்டலில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விவசாயிகளே. தங்களின் வயல்களில் பயிர்கள் பொய்த்துப்போனதால் தினக்கூலி தொழிலாளர்கள் ஆக மாறுகிற நிலைமையில் அவர்கள் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் தண்ணீர் குறைந்து வரும் நிலையில் விவசாயம் செய்வது இங்கே பிடிக்காத ஒரு வேலையாக மாறிவருகிறது. நாகரூரில் உள்ள யாரும் தற்போது தங்களின் மகள்களை விவசாயக் குடும்பங்களில் திருமணம் செய்து கொடுப்பதில்லை என்று நிறையப் பேர் சொல்கிறார்கள். “எங்கள் ஊரில் உள்ள ஒரு பெண்ணை நான் திருமணம் செய்துகொள்ள விரும்பினேன்” என்கிறார் நாயுடு. ”நான் ஹைதராபாத் அல்லது வேறு எங்காவது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பெற்றால் எனக்கு அவர்களின் பெண்ணைத் தருவதாக அவர்கள் சொன்னார்கள். ஒரு விவசாயிக்கு நாங்கள் எங்களின் பெண்ணைத் தரமாட்டோம் என்று அவர்கள் சொன்னார்கள்.”

ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்பினார் நாயுடு. “அது நல்ல வாழ்க்கையாக இருந்திருக்கும். எனது மக்களுக்கு நான் நீதியையும் நியாயத்தையும் கொண்டு வருபவனாக இருந்திருப்பேன்” என்கிறார் நாயுடு. குடும்ப பிரச்னைகளால் அவரது பட்டப்படிப்பை பாதியிலேயே விடவேண்டியிருந்தது. விவசாயத்தைப் பார்க்கவேண்டியிருந்தது. தற்போது அவருக்கு 42 வயதாகிவிட்டது. திருமணம் செய்யவில்லை. நிறைவேறாத பல கனவுகளோடு அவர் வாழ்கிறார்.

தமிழாக்கம்: த.நீதிராஜன்

Rahul M.

राहुल एम, आंध्र प्रदेश के अनंतपुर के रहने वाले एक स्वतंत्र पत्रकार हैं और साल 2017 में पारी के फ़ेलो रह चुके हैं.

की अन्य स्टोरी Rahul M.
Sahith M.

साहिथ एम हैदराबाद सेंट्रल यूनिवर्सिटी से राजनीति विज्ञान में एमफ़िल कर रहे हैं।

की अन्य स्टोरी Sahith M.
Translator : T Neethirajan

T Neethirajan is a Chennai based writer, journalist and the editor of South Vision books – a bilingual publication house focused on social justice issues.

की अन्य स्टोरी T Neethirajan