வட மும்பையின் மத் தீவில் தொங்கர்படா குடியிருப்பு உள்ளது. 40 முதல் 45 கோலி மீனவ சமுதாயத்தினர் இங்கு வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சேர்ந்து காலாவைப் (மீன்கள் காயவைக்கும் மைதானத்தை) பயன்படுத்துகிறார்கள். மத்தில் இதுபோன்ற மேலும் சில மைதானங்கள் உள்ளன.
கிட்டத்தட்ட ஒவ்வொரு கோலி குடும்பத்தினரும் 5 முதல் 10 பேரை வேலைக்கு அமர்த்துகிறார்கள். இந்த தொழிலாளர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆந்திர பிரதேசம், உத்திர பிரதேசம், மஹாராஷ்ட்ரா மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்து வருபவர்களாவார்கள். இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மும்பைக்கு செப்டம்பர் மாதம் முதல் ஜீன் மாதம் வரை வருகிறார்கள். இவர்கள் கோலிகளுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்கிறார்கள். 8 மாதத்தில் ரூ.65 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்கள்.
புலம்பெயர் தொழிலாளர்களில் ஆண்கள் 4 முதல் 5 பேர் வரை கோலி குடும்பத்தினர் வழங்கும் அறைகளில் ஒன்றாக தங்கிக்கொள்கிறார்கள். இங்குள்ள பெரும்பாலான பெண்கள் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் குழந்தைகள் உள்ளிட்ட மொத்த குடும்பத்தினருடன் வருவார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.700 வாடகைக்கு தனித்தனி இடங்களை கோலிகள் ஒதுக்குவார்கள்.
தமிழில்: பிரியதர்சினி. R.