என்றேனும் ஒருநாள் தன் திறமையை மக்கள் பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் பாடல்களை தொடர்ந்து சமூகதளங்களில் பதிவேற்றுகிறார் அவர்.
“ஆல்பமாக என் பாடல்களை ஒருநாள் வெளியிட விரும்புகிறேன்,” என்கிறார் 24 வயது சாண்டோ டண்டி. அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்திலுள்ள சிக்கோட்டா தேயிலை எஸ்டேட்டின் தேக்கியாஜுலி பிரிவை சேர்ந்தவர் அவர்.
சிறுவயதிலிருந்தே சாண்டோ ஒரு பாடகராக வேண்டுமென்கிற கனவுடன்தான் வளர்ந்தார். ஆனால் அவர் வாழ்ந்த உலகின் யதார்த்தமோ வேறாக இருந்தது. அப்பாவின் சிறு சைக்கிள் ரிப்பேர் கடையில் பணிபுரிகிறார் அவர்.
சாண்டோ டண்டி ஒரு பழங்குடி. ஆனாலும் அவரை ஒரு குறிப்பிட்ட பழங்குடிப் பிரிவுக்குள் அடக்கிவிட முடியாது. கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளாக ஒடிசா, மேற்கு வங்கம், பிகார், ஜார்க்கண்ட், தெலெங்கானா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் ஆந்திரா பிரதேசம் ஆகிய பகுதிகளிலிருந்து பலர் அசாம் தேயிலை தோட்டத்துக்கு புலம்பெயர் தொழிலாளர்களாக வந்திருக்கின்றனர். இக்குழுக்களின் வழிதோன்றல்கள் பழங்குடி சமூகங்களுடன் கலந்துவிட்டனர். இச்சமூகங்கள் மொத்தமாக ‘தேயிலைப் பழங்குடிகள்’ என்றே அழைக்கப்படுகின்றனர்.
கிட்டத்தட்ட 60 லட்சம் பேராக அசாமில் வசிக்கும் இவர்கள் சொந்த மாநிலங்களில் பட்டியல் பழங்குடிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள். ஆனால் அந்த அடையாளம் இங்கு அவர்களுக்கு நிராகரிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 12 லட்சம் பேர் 1000 தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிகின்றனர்.
தினசரி வாழ்வின் துயரமும் தீவிர உழைப்பும் பலரின் ஆசைகளை நொறுக்கியிருக்கிறது. சாண்டோவின் ஆசை மட்டும் நொறுங்கவில்லை. அவரைச் சுற்றியிருக்கும் துயரங்களை வெளிப்படுத்தும் ஜுமுர் பாடல்களை அவர் பாடுகிறார். வெயிலிலும் மழையிலும் தேயிலைத் தோட்டங்களில் பாடுபடும் மக்களை பற்றியும் ஒவ்வொரு கோப்பை தேநீருக்கு பின் இருக்கும் கடின உழைப்பைப் பற்றியும் பாடுகிறார்.
இங்கு பாடப்படும் ஜுமுர் பாடல்கள் சத்ரி மொழியில் பாடப்படுகின்றன. பல தலைமுறைகள் தாண்டி அவை தொடர்கின்றன. சாண்டோ பாடும் பாடல்களில் பெரும்பான்மை அவரது தந்தையும் மாமாவும் உருவாக்கியவை. பலவை குழந்தையாக அவரிருந்த போதே கேட்டவை. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அசாமின் தேயிலைத் தோட்டங்களுக்கு இடம்பெயர்ந்த பழங்குடிச் சமூகங்களின் கதைகளையும் இடப்பெயர்வையும் அப்பாடல்கள் கொண்டிருக்கின்றன. அவர்களின் பழைய வீட்டை மறந்துவிட்டு புதிய வீட்டை அடைந்த பயணக்கதைகள். அடர்ந்த காடுகளை அவர்கள் திருத்தி, நிலத்தை சமப்படுத்தி, தேயிலை தோட்டங்கள் உருவாக்கிய கதைகள்.
இசையில் கொண்டிருக்கும் ஈடுபாடு காரணமாக பிற கிராமவாசிகளால் எப்போதும் சாண்டோ அவமதிக்கப்படுகிறார். அவருடைய ஆசைகள் என்னவாக இருந்தாலும் இறுதியில் அவர் தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் வேலையைத்தான் செய்ய வேண்டுமென்பார்கள். சில நேரங்களில் இத்தகைய பேச்சுகள் அவரை விரக்தியடையச் செய்யும். ஆனாலும் அதிக நேரத்துக்கு அது நீடிக்காது. அவர் பெரிதாக கனவு காண்பதை அவர்கள் தடுப்பதில்லை. சமூகதளங்களில் நம்பிக்கையோடு அவர் பாடல்கள் பதிவேற்றுவதையும் அவர்கள் நிறுத்துவதில்லை.
தமிழில் : ராஜசங்கீதன்