“கடந்த ஓராண்டில், நான் 27 இறுதிச் சடங்குகளை செய்துள்ளேன்,” என்கிறார் சூரத்தில் பணியாற்றும் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது விசைத்தறி மாஸ்டரான பிரமோத் பிசோயி. “தொழிலாளர்களின் குடும்பங்கள் மிகவும் ஏழ்மையில் இருப்பதால் [குஜராத்திற்கு பயணித்து] இறுதிச் சடங்கில் பங்கேற்க முடிவதில்லை.”
பிகாஸ் கவுடா இறந்தபோது அவரது தந்தையும், சகோதரர்களும் உடனிருந்தனர். 16 வயது பிகாஷ் விசைத்தறி எனும் கொடிய உலகிற்குள் நுழைந்து 24 மணி நேரம்தான் ஆகியிருந்தது. கஞ்சமில் உள்ள லன்டாஜூவாலி கிராமத்தில் தனது வீட்டிலிருந்து கிளம்பி 1,600 கிலோமீட்டர் பயணித்து சூரத்தின் வேத் சாலையில் உள்ள விசைத்தறியில் பணியாற்ற அச்சிறுவன் வந்திருந்தான். கடந்தாண்டு ஏப்ரல் 25ஆம் தேதி இயந்திரத்தின் ஸ்டார்ட்டரை அழுத்தியபோது உயர் மின்அழுத்தம் உடலில் பாய்ந்து உடனடியாக இறந்து போனான். அவனது தந்தையும், இரண்டு மூத்த சகோதரர்களும் அருகில் உள்ள விசைத்தறிகளில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
“இயந்திரம் பழுதாகி இருந்தது எல்லோருக்கும் தெரியும். இதற்கு முன் எங்களுக்கும் லேசான மின்சாரம் பாய்ந்த அனுபவம் உள்ளது... அது என் மகனைக் கொல்லும் என ஒருபோதும் நாங்கள் நினைத்தது இல்லை,” என்கிறார் கிட்டதட்ட முப்பதாண்டுகளாக சூரத்தில் பணியாற்றி வரும் அவனது தந்தை சரண் கவுடா. “வீட்டில் எங்கள் நிலைமை மிகவும் மோசம். குடும்பத்தில் பணம் சேமிக்க எனது இளைய மகனையும் இங்கு அழைத்து வர எண்ணியிருந்தேன்.”
இரண்டு வாரங்கள் கழித்து மே 10ஆம் தேதி சச்சினில் (சூரத் பெருநகர பிராந்தியத்தில் உள்ளது) உள்ள குஜராத் தொழில்துறை வளர்ச்சிக் கழகத்தின் விசைத்தறி ஆலையில் ராஜேஷ் அகர்வால் சிக்கிக் கொண்டார். மகாரஷ்டிராவிலிருந்து புலம்பெயர்ந்து வந்திருந்த அந்த இளம் தொழிலாளர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். “இயந்திரம் பழமையானது. மின்வெட்டு வரும் வரை அதை நிறுத்த முடியாது,” என்கிறார் விபத்திற்குப் பிறகு கூட்டத்தில் திரண்ட சக தொழிலாளர் ஒருவர். “நூலை செலுத்த அவர் தனது கைகளை நுழைத்திருக்கலாம்... அப்போது உள்ளே இழுக்கப்பட்டிருக்கலாம்.” அதிலிருந்து ஆலை மூடப்பட்டது.
மின்சார தாக்குதல், தீ விபத்து, மூச்சு திணறல், கீழே விழுதல், விரல்களை இழத்தல், கைகால்கள் நசுங்குதல், மரணித்தல் என சூரத்தில் உள்ள விசைத்தறி ஆலைகளில் “கிட்டத்தட்ட தினமும்” பல்வேறு விபத்துகள் செய்தியாவதில்லை அல்லது இழப்பீடு அளிக்கப்படுவதில்லை என்கின்றனர் தொழிலாளர்களும், மாஸ்டர்களும்.
பாலிஸ்டர் இழையில் தொங்கும் வாழ்க்கை
வடக்கு சூரத்தின் மினா நகரில் 1000 சதுர அடிக்கு விரிந்துள்ள ஆலையில் 100க்கும் அதிகமான விசைத்தறி இயந்திரங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இடைவெளிகூட கிடையாது. ஒரு வேலைநேரத்தில் 80 முதல் 100 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அல்லது மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை என்ற 12 மணி நேர வேலை நேரத்தில் கைகளை நீட்டுவதற்குகூட தொழிலாளர்களுக்கு இடம் கிடையாது. அவர்களின் ஒவ்வொரு செயலையும் பல இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் கண்காணிக்கும். பொது கழிப்பறை சிறிது தூரத்தில் இருக்கும். மே மாதத்தில் நிலவும் 41டிகிரி செல்ஷியஸ் வெப்பத்திலும் குடிக்க தண்ணீர் கிடையாது. அருகில் உள்ள தேநீர் கடைகளில் இருந்து ஆண்கள் எடுத்து வருகின்றனர். ஜன்னல்கள் கிடையாது.
நூல்கள் வேகமாக நெய்வதை உறுதிசெய்ய தொழிலாளர்கள் தொடர்ந்து வேகமாக கால்களையும், பாதங்களையும் அசைக்க வேண்டும். “இங்கு ஒவ்வொரு நிமிடமும் எண்ணப்படுகிறது... உண்மையில் ஒவ்வொரு நொடியும்,” என்கிறார் விசைத்தறி மாஸ்டர் பிசோயி. ஒவ்வொரு மீட்டருக்கும் ரூ.1.10 முதல் ரூ.1.50 என்று துண்டுகளின் அடிப்படையில் பணியாளர்களுக்கு ஊதியம் அளிக்கப்படுகிறது. இதனால், “நேரத்தை வீணடிக்கவோ, ஓய்வெடுக்கவோ முடியாது.” “மின்வெட்டு” ஏற்பட்டால் மட்டுமே அவர்களுக்கு ஓய்வு நாட்கள். மாதத்திற்கு சுமார் 360 மணி நேரம் வேலை செய்து ஒரு தொழிலாளர் ரூ.7000 முதல் ரூ.12,000 வரை சம்பாதிக்கின்றனர். அதிலும் குறைந்தது ரூ.3,500 உணவு, வாடகைக்கு சென்றுவிடும்.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் பாலிஸ்டர் துணியில் சுமார் 90 சதவீதம், மாதத்தில் 360க்கும் அதிகமான மணி நேரங்கள் வேலைசெய்யும் சூரத் விசைத்தறி தொழிலாளர்கள் தரும் உழைப்பில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 3 கோடி மீட்டர் மூலத் துணியையும், 25 கோடி மீட்டர் பதப்படுத்தப்பட்ட துணியையும் உற்பத்தி செய்கின்றனர் என்கிறது வதோதராவைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான மக்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (PTRC) 2017 ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட சூரத் ஜவுளித் தொழிலில் தொழிலாளர்களின் நிலைகள் எனும் தலைப்பிலான அறிக்கை.
சூரத் மற்றும் அதன் புறநகரங்களான பண்டிசாரா, உத்னா, லிம்பயாத், பேஸ்தான், சச்சின், கட்டர்கம், வேத் ரோட், அஞ்சனி பகுதிகளில் தறிகள் பரவியுள்ளன. கிட்டதட்ட 15 லட்சம் விசைத்தறி இயந்திரங்கள் நகரெங்கும் உள்ளதாக குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுடன் பணியாற்றும் ஆஜீவிகா அமைப்பு மதிப்பீடு செய்கிறது.
தொழிலாளர்களுக்கு சிறிய, பெரிய, மோசமான காயங்களை அதிகளவில் ஏற்படுத்தும் இடங்களாக தறிகள் விளங்குகின்றன. அவர்களில் பெரும்பாலானோர் கஞ்சமிலிருந்து வந்தவர்கள். சூரத்தில் பதிவு செய்யப்பட்ட ஜவுளி பதனிடும் ஆலைகளில் 2012 முதல் 2015 வரையிலான காலங்களில் மட்டும் 84 கோர சம்பவங்களில் மொத்தம் 114 தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே காலத்தில் 375 தொழிலாளர்கள் மோசமாக காயமடைந்துள்ளனர். தொழில்துறை பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான இயக்குநரகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தின் கீழ் இத்தரவுகள் வெளியாகியுள்ளன. பதிவு செய்யப்படாத பல விசைத்தறி பட்டறைகள் நகரில் உள்ளன. விபத்துகள், மரணங்களின் எண்ணிக்கையும் குறைவாகவே கணக்கிடப்படுகின்றன.
இதுகுறித்த அதிகாரப்பூர்வமான முழு தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை.
கடைகள் மற்றும் நிறுவனச் சட்டத்தின் கீழ்தான் பெரும்பாலான தறிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆலைச் சட்டத்தின் கீழ் இவை வராததால் விபத்தோ, மரணமோ நிகழ்ந்தால் தொழிலாளர்களுக்கு அல்லது அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது கட்டாயமில்லை என்று குறிப்பிடுகிறார் பிடிஆர்சியின் இயக்குநர் ஜகத்தீஷ் படேல்.
தொழிலாளர்கள் எந்த ஒப்பந்தமும் பெறுவதில்லை. வாய் வார்த்தைகளில் தான் ஆள்சேர்ப்பு இறுதியாகிறது. “பண்டிகை அல்லது திருமண காலங்களில் இடைவேளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு முறை வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு திரும்பும்போது வேலை கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது. அவர்களிடத்தில் எளிதில் வேறொருவர் வந்துவிடுவார்,” என்கிறார் 2016 ஜனவரியில் நிறுவப்பட்ட சூரத் மற்றும் அருகமை பகுதிகளில் உள்ள பிரவாசி ஷ்ராமிக் சுரக்ஷா மஞ்ச் (பிஎஸ்எஸ்எம்) எனும் தறி மற்றும் ஜவுளி தொழிலாளர்களின் கூட்டமைப்பின் உறுப்பினர் பிரஹ்லாத் ஸ்வெயின். “திரும்பி வரும்போது அதே வேலை கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது,” என்கிறார் கஞ்சமின் படக்கண்டி கிராமத்தைச் சேர்ந்த 36 வயது புலம்பெயர் தொழிலாளரான சிமஞ்சலா சாஹூ. “வேலை செய்யாத நாட்களில் தொழிலாளர்களுக்குப் பணமும் கிடைக்காது.”
பேரம் பேச முடியாத காரணத்தால், புலம்பெயர் தறி தொழிலாளர்களுக்கு விபத்துகள், இறப்புகள் நிகழ்ந்தால், சிறிதளவு இழப்பீடு வழங்கப்படுகிறது, என்கிறார் சூரத் நகராட்சி நிர்வாகத்தின் உதவி துப்புரவு ஆய்வாளர் ஜே.கே. காமித். “தொழிலாளர்களின் குடும்பங்கள் மிக தொலைவில் தங்கள் கிராமங்களில் உள்ளனர். அவர்களின் நண்பர்களும் நகரின் தறிகளில் வேலை செய்கின்றனர். எனவே இதை பின்தொடர்வதற்கோ, காவல்நிலையம் செல்வதற்கோ நேரம் இருப்பதில்லை,” என்கிறார் அவர். “காயமுற்றோர், மரணித்தோர் குறித்த அதிகாரப்பூர்வ ஆவணப்படுத்துதல் என்றும் எதுவுமில்லை. உடனடியாக வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.”
பொதுவாக தறியில் மரணம் நிகழ்ந்தால் காவல்துறை வழக்கு பதிவு செய்கிறது. ஆனால் இது ஒரு சட்டப்பூர்வ, மருத்துவ நடைமுறை மட்டுமே. கைதுகள் மிக அரிதாகவே நிகழ்கின்றன. இழப்பீடு பெறுவதற்கு குடும்பத்தினர் தொழிலாளர் நலத் துறையை அணுக வேண்டும். காயமடைந்தால், இழப்பீடு கோருவது முதலாளியை எதிர்க்கும் செயல் என்பதால் தொழிலாளரின் வேலைக்கு ஆபத்து வந்துவிடும். நீதிமன்றத்திற்கு வெளியே பெரும்பாலும் தீர்த்துக் கொள்கின்றனர்.
சிறுவன் பிகாஷ் கவுடா இறந்து நான்கு நாட்களுக்குp பிறகு ஏப்ரல் 29ஆம் தேதி அவனது குடும்பத்திற்கு ரூ.2.10 லட்சம் முதலாளியால் வழங்கப்பட்டது. மேற்கொண்டு எதுவும் கேட்கக் கூடாது என்று குடும்பத்தினரிடம் உறுதியும் பெறப்பட்டுள்ளது. வழக்கை முடித்துவைக்க முதலாளிகள் பெரும்பாலும் ரூ.50,000 மட்டுமே தருவார்கள். இதற்கு பல மாதங்கள் ஆகும். இதுபோன்ற தருணங்களில் பிஎஸ்எஸ்எம், ஆஜீவிகா பீரோ தலையிட்டால், இழப்பீட்டு தொகை அதிகரிப்பதோடு, வேகமாக கிடைக்கப் பெறும்.
மூவரின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டதால் குடும்பமும் ஒப்புக் கொண்டது.
கஞ்சமிலிருந்து குஜராத்திற்கு
கஞ்சமிலிருந்து குறைந்தது 800,000 தொழிலாளர்கள் சூரத்தில் இருப்பார்கள் என மதிப்பீடு செய்கிறார் சூரத் ஒடியா நலச் சங்கத்தின் உறுப்பினரான ராஜேஷ் குமார் பதி. அவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் நகரின் விசைத்தறி பிரிவில் வேலை செய்கின்றனர். “ஒடிசா மற்றும் சூரத் இடையே புலம்பெயர்வு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது,” என்கிறார் அவர். “எனினும் கஞ்சம் ஒடிசாவில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கருதப்படுகிறது,” என்கிறது பிடிஆர்சி அறிக்கை. மேலும் “இயற்கை வளங்கள் சுருங்குதல், வேளாண் நிலங்கள் குறைதல், தொடர் வெள்ளம், வறட்சி போன்றவை புலம்பெயர்வுக்குக் காரணமாகின்றன.”
சூரத்தின் மிகப் பெரும் தொழிலான வைரங்களில் கஞ்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என குறிப்பிடுகிறார் ஜகதிஷ் படேல். “அங்கு உள்ளூர் குஜராத்தி பணியாளர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. ‘தங்களின் நம்பிக்கைக்குரிய‘ ஆட்களை மட்டுமே முதலாளிகள் வேலைக்கு வைத்துக் கொள்கின்றனர். தறி ஆலைகளின் இறுதிநிலை வேலைகளைத் தான் கஞ்சம் தொழிலாளர்கள் செய்கின்றனர். ஆண்டின் எல்லா நாட்களிலுமே தொடர்ச்சியாக இயந்திரங்களை ஓட வைக்கும் வேலைகளை மட்டுமே அவர்கள் செய்கின்றனர்.”
எனினும் உள்ளூரைவிட இச்சூழல் சிறப்பாக உள்ளதாக தொழிலாளர்கள் இப்போதும் சொல்கின்றனர். பிஎஸ்எஸ்எம் உறுப்பினரான சிமஞ்சலா சாஹூ சொல்கிறார், “கஞ்சமின் நிலை மிகவும் சவாலானது. தொடக்கத்தில் சில தொழிலாளர்கள்தான் வந்தனர், பிறகு பெருங்குழுக்களாக வரத் தொடங்கினர், சிலர் குடும்ப உறுப்பினர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து வருகின்றனர்.”
விசைத்தறி துறையில் உள்ள பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் ஆண்கள். கஞ்சமிலிருந்து குறைவான பெண்களே சூரத் வந்துள்ளனர். அவர்கள் எம்பிராய்டரி அல்லது துணிகளை நறுக்கும் ஆலைகளில் வேலை செய்கின்றனர். அல்லது வீட்டிலிருந்து துண்டுகளின் அடிப்படையில் வேலை செய்கின்றனர். நகரில் தங்கிவிட்ட தங்களது கணவர்களுக்காக சில பெண்கள் சூரத் வந்துள்ளனர். பெரும்பாலான ஆண்கள் குடும்பத்தை விட்டுவிட்டு தான் வந்துள்ளனர். ஆண்டிற்கு ஒருமுறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சில வாரங்களுக்குச் சென்று வருகின்றனர். (இத்தொடரில் இதுகுறித்து அடுத்த கட்டுரையில் வருகிறது.)
புலம்பெயர் தொழிலாளர்களில் ஏராளமானோர் கேவாட் பிரிவைச் சேர்ந்த தலித்துகள். அவர்கள் தங்கள் கிராமங்களில் மீனவர்களாக அல்லது படகோட்டிகளாக வேலை செய்பவர்கள். சாஹூ போன்ற சில தொழிலாளர்கள் இதர பிறபடுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலானோருக்கு சொந்தமாக எந்த நிலமும் கிடையாது. “அவர்களின் முதன்மை வருவாய் ஆதாரம் விவசாயம் தான். அது வெப்பநிலை, வெள்ளச் சூழலை சார்ந்துள்ளது,” என்கிறார் ஸ்வெயின். “இதுபோன்ற சூழல்களே அவர்களை சூரத்திற்கு வரவழைக்கிறது. தங்களின் ஒட்டுமொத்த உடல்நலனை பாதித்தால் கூட குடும்பத்திற்கு சம்பாதித்து கொஞ்சம் பணம் அனுப்ப முடிகிறது.”
ஆலைகளின் உயர்மட்ட சுரண்டலும் கையறு நிலையால் இயல்பான ஒன்றாகிவிட்டது. “ஒவ்வொரு தொழிலாளி காயப்படும்போது அல்லது இறக்கும்போது அன்றாடம் பற்பல இளைஞர்களும், கவலைகொண்ட தொழிலாளர்களும் நகருக்கு அன்றாடம் வந்து கொண்டிருக்கின்றனர், ” என்கிறார் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மின் கம்ப விபத்தில் மூன்று விரல்களை இழந்த கஞ்சமின் பெர்ஹாம்பூர் நகரத்திலிருந்து வந்த 38 வயது விசைத்தறி தொழிலாளியான ருஷிகேஷ் ராவத். “வீட்டில் நிலவும் சூழலைவிட எந்த காயமோ, விபத்தோ மோசமானது இல்லை என்பதை முதலாளிகளும் நன்கு அறிவர்.” விரல்களை இழந்தபோதும் ராவத் சூரத்தில் பாதுகாப்பு பணியாளராக இழப்பீடு கிடைக்கும் என்ற சிறுநம்பிக்கையுடன் வேலைசெய்து வருகிறார். சூரத்தின் தொழிற்துறை பகுதியான பாண்டிசராவில் ஒற்றை அறை வீட்டில் அவர் தங்கியிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
அன்றாட போராட்டங்களும், நிரந்தரமான தாக்கங்களும்
கடுமையான பணிநேரம், குறைவான கூலியுடன், பட்டறைகளில் நிலவும் தொடர் பெரும் இரைச்சலால் செவித்திறனை இழக்கும் விசைத்தறி தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. “விசைத்தறி ஆலைக்குள் சராசரியாக நிலவும் ஒலியின் அளவு 110 டெசிபில்,” என்கிறார் ஆஜீவிகா பீரோவின் மத்திய ஒருங்கிணைப்பாளரான சஞ்ஜய் படேல். இந்தாண்டு ஜனவரியில் பல்வேறு ஆலைகளில் வேலைசெய்யும் 65 விசைத்தறி தொழிலாளர்களிடம் ஒலிச் சோதனைகளை நிறுவனம் நடத்தியது. இதன் முடிவுகளை வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சான்றளித்துள்ளது. அதில் 95 சதவீதம் பேருக்கு பல்வேறு நிலையிலான செவித்திறன் குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. “தொழிலாளர்களிடையே செவித்திறன் குறைவது பொதுவான ஒன்று என்பதோடு, அன்றாட வேலைகளையும் அது பாதிப்பதில்லை என்பதால் முதலாளிகளும் அதை தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை... இதுபற்றி தொழிலாளர்களும் கேள்வி எழுப்புவதில்லை,” என்கிறா படேல்.
ஆலைக்குள் இருக்கும் இயந்திரங்களின் ‘அதிகார படிநிலை’ தொழிலாளர்களுக்கு ஆபத்தைக் கூட்டுகிறது. அஞ்சனி தொழிற்பேட்டை விசைத்தறி உரிமையாளர் தனது தறிகளில் கிட்டதட்ட 80 தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளார். “கஞ்சம் தொழிலாளர்கள்” சீனா, ஜெர்மனி, கொரியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் உயர் ரக இயந்திரங்களில் பணியாற்ற அனுமதிக்கப்படுவதில்லை என்று என்னிடம் தெரிவித்தார். “விலை மலிவாக உள்ளூரில் தயாரித்த இயந்திரங்களில் மட்டுமே இத்தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இவை அதிக இரைச்சல் எழுப்புவதோடு [வேலை செய்யவும்] கடினமானது.”
“இயந்திரங்களின் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளில் செலவிட பொதுவாக உரிமையாளர்கள் விரும்புவதில்லை. அது மிகவும் விலை அதிகம். கடந்த நான்கு ஆண்டுகளாக இத்தொழில் அவ்வளவு சிறப்பாகவும் இல்லை,” என்கிறார் அஞ்சனி தொழிற்பேட்டை பி-4 பிரிவின் தறி உரிமையாளர் கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினர் நிதின் பயானி.
பெரும்பாலான சம்பவங்களில் தொழிலாளர்கள் தான் விபத்துகளுக்கும் காயங்களுக்கும் காரணம் என பயானி நம்புகிறார். “அவர்கள் குடித்துவிட்டு வேலையில் கவனம் செலுத்துவதில்லை,” என்கிறார் அவர். “இரவு நேர பணியின்போது ஆலைகளை உரிமையாளர்கள் கண்காணிப்பதில்லை. இதுபோன்ற சமயங்களில் தான் பெரும்பாலும் விபத்துகள் நடக்கின்றன.”
அங்கங்களை இழப்பவர்கள், பிற காயங்கள் அடைபவர்கள் அதே இயந்திரங்களில் மீண்டும், மீண்டும் வேலை செய்கின்றனர். முப்பதாண்டுகள் கடந்தாலும் புதிதாக எதையும் கற்காமல் அல்லது பணி உயர்வு பெறாமல் அதே வேலையை செய்கின்றனர். “இத்தொழிலில் மேல் செல்வது எளிதல்ல. 65 வயது தொழிலாளர்கூட அதே இயந்திரங்களில் வேலையைத் தொடர்கிறார்,” என்கிறார் ஃபுல்வாடியில் தொழிலாளர்களுக்காக உணவகம் நடத்தி வரும் 40 வயது ஷம்புநாத் சாஹூ. அவர் கஞ்சமின் பொலசரா நகரிலிருந்து புலம்பெயர்ந்தவர். “தொழிலாளர்களுக்கு விரைவாக வயோதிகம் வந்துவிடுகிறது...”
தமிழில்: சவிதா