மாலை நேரம்,  ஆறு மணி ஆகிறது. மாடுகள் வீடு திரும்பவேண்டிய நேரம்.. ஆனால், மசாய்வாடியில் இனி ஆறு மாதங்களுக்கு எந்த மாடும் வீட்டுக்குத் திரும்பிவராது. மாடுகளின் கழுத்துமணிகள் ஒலிக்காது; ’..ம்மா’வென மாடுகள் கத்துவதைக் கேட்கமுடியாது; கறந்த பாலை வாங்கிச்செல்ல வரும் வேன்களின் சலசலப்பும் இருக்காது; புது சாணத்தின் வாசனையும் வீசாது. ஆம், மகாராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்தின் மாண் வட்டாரத்தில், சுமார் 315 வீடுகளைக் கொண்ட இந்த ஊர், இப்போது அமைதியாக இருக்கிறது. இந்த ஊரின் பாதிக்குப் பாதி மக்களும் கிட்டத்தட்ட எல்லா மாடுகளுமே இப்போது இருப்பது, ஐந்து கிமீ தொலைவில் உள்ள தீவன முகாமில்! சதாராவிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள மஸ்வத் நகருக்கு அருகில் இந்த முகாம் அமைந்துள்ளது.

40 வயதான சங்கீதா விர்கரும் ஜனவரி முதல் தீவனமுகாமுக்கு இடம் மாறிவிட்டார். அவர் தன் இரண்டு எருமைகள், இரண்டு ஜெர்சி மாடுளையும் தன் தந்தையின் ஒரு மாட்டையும் அதன் கன்றுக்குட்டியையும் அங்கு கொண்டுவந்துள்ளார். அவரின் கணவர் நந்து, 44, பத்தாம் வகுப்பு தேர்வுக்குத் தயாராகும் 15 வயது மகள் கோமல், 7 ஆம் வகுப்பு படிக்கும் மகன் விசால் ஆகியோருடன் கிராமத்திலேயே தங்கியிருக்கிறார். அவர்களின் மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. நந்து-சங்கீதா குடும்பத்துக்குச் சொந்தமான மூன்று ஆடுகளும் அவற்றுடன் ஒரு பூனையும் ஒரு நாயும் வீட்டில் இருக்கின்றன.

“ வீட்டில் குழந்தைகள், முகாமில் மாடுகள்.. இரண்டையும் நான்தான் ஒன்றுபோல கவனித்துக்கொள்ள வேண்டும்,”என்கிறார், நாடோடிப் பழங்குடியினரான தங்கர் சமூகத்தைச் சேர்ந்த சங்கீதா. “இந்த ஆண்டு ஒரு மழைகூட பெய்யவில்லை. என் இணையருக்கும் அவரின் இரண்டு சகோதரர்களுக்கும் சொந்தமான 12 ஏக்கர் நிலத்தைப் பயிரிட்டுள்ளோம். பொதுவாக, குறுவைப் பருவத்தில் 20 - 25 குவிண்டால் இருங்கச் சோளம் அல்லது கம்பு விளைச்சல் கிடைக்கும்.  ஆனால் இந்த ஆண்டு, எங்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. பயிர் முழுவதும் போய்விட்டது. மழை இல்லாவிட்டால் தீவனமும் இருக்காது. சம்பா பருவ விதைப்பு சுத்தமாக இல்லை என்றாகிவிட்டது. எப்படித்தான் எங்கள் மாடு, கன்றுகளுக்கு தீவனம் தரப்போகிறோமோ? ”- பசுமாட்டை நீவிவிட்டபடியே பெருமூச்சு விடுகிறார், சங்கீதா.

PHOTO • Binaifer Bharucha

மஸ்வத் நகருக்கு அருகிலுள்ள தீவன முகாம், மாண்டேஷ் பகுதியின் 70 ஊர்களைச் சேர்ந்த 8,000 மாடுகளுக்கான இடமாக உள்ளது

சங்கீதாவின் ஒவ்வொரு ஜெர்சி மாடும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ரூ. 60,000-க்கு வாங்கப்பட்டன. அவை ஒவ்வொன்றுக்கும் அன்றாடம் 20 கிலோ தீவனமும் 50-60 லிட்டர் தண்ணீரும் தேவை. ஆனால், 2018 நவம்பர் முதல் மொத்த மசாய்வாடிக்குமே ஒரு வாரத்துக்கு ஒரு தொட்டி தண்ணீர்தான் கிடைத்துவருகிறது. அதாவது, ஒவ்வொருவருக்கும் அதிகபட்சம் 40 லிட்டர். நான்கு நாள்களுக்கு ஒரு முறையென ஆண்டு முழுவதும் மஸ்வத் நகராட்சி சார்பில் விநியோகம்செய்யப்பட்டு வந்த தண்ணீரும் நிறுத்தப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம். ஊரிலுள்ள கிணறுகள் வறண்டுவிட்டன. ஆடு, மாடுகளுக்கு தண்ணீரே இல்லை. மார்ச் மாதம் முதல் வெயில் அதிகரிக்கும்போது, ​​தண்ணீரின் தேவையும் கூடுதலாகும்.

" ஊரில் அறவே தண்ணீரும் தீவனமும் இல்லை" என்கிறார், நந்து. “இதனால், எங்களிடம் இருந்த ஒரே காளைமாட்டையும் விற்றுவிட்டோம். ஒரு மாதத்திற்கு வரக்கூடிய 100 தட்டைகளைக் கொண்ட ஒரு கட்டு விலை ரூ.2,500. கரும்புத்தாழ் விலையோ ரூ. 5,000; அது இரண்டு மாதங்களுக்கு தாக்குப்பிடிக்கும். ஆடு, மாடுகளுக்கு தண்ணீரைக் கொண்டுவருவதற்கான போராட்டம், இன்னொரு வேலையாகிப் போனது. இப்போதைக்கு சிறிதளவு கரும்புத்தாழ் கிடைத்திருக்கிறது. மார்ச் மாதத்திற்குப் பிறகு எந்தப் பசுந் தீவனத்தையும் எங்களால் பார்க்கமுடியாது. அந்தக் காளையை 2006-ல் ரூ. 30,000க்கு வாங்கினோம். அதை வளர்த்து நன்றாகப் பராமரித்துவந்தோம். 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.25,000-க்குதான் விற்றோம். இன்னொரு மாட்டை வாங்குவதைப் பற்றிய நினைப்பே இல்லை..”- என்ற நந்துவால் கண்ணீரை அடக்கமுடியவில்லை.

சதாரா மாவட்டத்தின் மாண், கட்டவ் ஆகிய வருவாய் வட்டங்கள், மாண்டேஷ் எனப்படும் பகுதியில் உள்ளன. இதைப் போல, சாங்லி பகுதியில் ஜாட், அட்பாடி மற்றும் காவத்தேமகங்கல் ஆகிய வருவாய் வட்டங்களும் சோலாப்பூரில் சங்கோல், மல்சிராஸ் ஆகிய வட்டங்களும் உள்ளன. இது ஒரு மழைமறைவுப் பிரதேசம்; கடுமையான நீர்த் தட்டுப்பாடு, தொடர் வறட்சிக்கு இலக்காவது ஆகும். இது உழவர்கள், உழவுத் தொழிலாளர்கள் தங்கள் கால்நடைகளைச் சார்ந்து இருப்பதை அதிகரிக்கிறது. ஒரு பருவம் முழுக்க பயிர்கள் வறட்சியால் அழிந்துபோய், தண்ணீர், தீவனத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது, ஊர்களே மொத்தமாக இடம்பெயரவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

Quadriptych
PHOTO • Binaifer Bharucha

முகாமில், தன் மாட்டுக் கொட்டிலுக்கு அடுத்த தற்காலிகக் குடிலில், ‘இந்த வேலைகளுக்கு முடிவு இல்லை’ என்கிறார் சங்கீதா விர்கர்

தீவன முகாமில் சமாளிப்பு

2018 அக்டோபர் 31 அன்று, மகாராஷ்டிரத்தின் 26 மாவட்டங்களில், 151 வட்டாரங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டவை என அறிவிக்கப்பட்டது. அவற்றில் 112 வட்டாரங்கள் கடும் வறட்சியை எதிர்கொண்டுள்ளன. சதாராவைச் சேர்ந்த மான் - தாகிவாடியும் இந்தப் பட்டியலில் உள்ளது. மாண்டேஷ் பகுதியின் எல்லா வட்டாரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. தண்ணீர் மற்றும் நலவாழ்வுத் துறை வெளியிட்ட ’நீர்த் தட்டுப்பாட்டுக்கான வாய்ப்பு 2018-19’ என்கிற அறிக்கையின்படி, 2018 அக்டோபர் கடைசிக்குள் மான் வட்டாரத்தில் 193 மி.மீ. மழை பெய்துள்ளது- அதாவது, இங்கு சராசரி மழைப்பொழிவு 48 சதவீதம். இவை சராசரிகள்தான்; சில ஊர்களில் மூன்றே மில்லிமீட்டர் அளவுக்குதான் மழை பெய்துள்ளது. ஆனால், இந்த வட்டாரத்தில் உள்ள 81 ஊர்களில், நிலத்தடி நீர் மட்டம் ஒரு மீட்டருக்கு அதிகமாகவும், 48 ஊர்களில் 3 மீட்டருக்கு அதிகமாகவும் இறங்கிவிட்டது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாண்டேஷ் பகுதியில் உள்ள 70 ஊர்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1,600 பேர், 7,769 மாடுகளுடன் மஸ்வாத் கால்நடை முகாமில் தங்கியுள்ளனர். இம்முகாமானது, 2019  ஜனவரி 1 அன்று மாண்தேஷி அமைப்பால் தொடங்கப்பட்டது. மஸ்வாத்தை மையமாகக் கொண்ட இவ்வமைப்பு, மாண்தேஷி மகிலா சகாகரி வங்கிக்கு வழங்கல் ஆதரவாக இருப்பதுடன், நிதிநல்கையைத் தாண்டியும் சில களங்களில் செயல்படுகிறது. இந்த முகாமானது, தற்போதைய வறட்சியை எதிர்கொள்ளும் ஊர்களுக்கு இந்தமட்டில் முதல் தீவன முகாம் ஆகும். ( 'கால்நடைகள், பறவைகள் - இரண்டுக்குமே நிறைய தண்ணீர் தேவை' - பார்க்கவும்)

நாங்கள் அங்கு சென்ற அன்று காலை 6:30 மணி இருக்கும்..ஒரே கொட்டில்களும் மாடுகளுமாக அதுவே பெரிய கடல் போலத் தெரிந்தது. பெண்கள் கொட்டில்களைத் துப்புரவு செய்கிறார்கள்; பால் கறக்கிறார்கள்; தேநீரும் தயாரித்துத் தருகிறார்கள். சில குடும்பங்கள் சிறு பிள்ளைகளுடனும் வந்திருந்தன; அந்தக் குழந்தைகள் பொழுதுவிடிந்தும் தூங்கிக் கொண்டிருந்தன. ஆண்கள் தீ மூட்டம் போட்டு அதைச் சுற்றி அமர்ந்திருந்தனர். ஒலிபெருக்கிகளில் பக்திப் பாடல்களைக் கேட்கமுடிந்தது.

PHOTO • Binaifer Bharucha
PHOTO • Binaifer Bharucha

இடது: சங்கீதாவின் இணையர் நந்து, மகள் கோமல், மகன் விசாலுடன் அவர்களின் ஊரிலேயே தங்கியிருக்கிறார். வலது: நாகு அண்ணாவும் அவரின் தந்தையை கவனித்துக்கொள்வதற்காக மசாய்வாடியில் தங்கிவிட்டார்; அவரின் இணையர் விலாசி முகாமில் இருக்கிறார். ‘கிட்டத்தட்ட இது நாங்கள் மணமுறிவு ஆகிவிட்டதைப் போல ஆகிவிட்டது...’ என்கிறார் நாகு

”இங்கே, விடியும்முன்பே எங்கள் பொழுது தொடங்கிவிடுகிறது" என்கிறார், சங்கீதா. இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது அம்மை தாக்கி ஒரு கண் பார்வை இழந்ததால், அவர் பள்ளியை விட்டு நிற்கவேண்டியதாகிவிட்டது. “இருள் விலகுவதற்கு முன்பே எழுந்துவிடுகிறோம். மண் அடுப்பில் வெந்நீர் போட்டு, (கிழிந்த சேலைத் தடுப்புக்குப் பின்னால் நின்று) குளித்துவிடுவோம். பிறகு, சாணத்தையெல்லாம் வாரி, கொட்டிலைத் துடைத்து, மாடுகன்றுகளுக்கு தண்ணீரும் புண்ணாக்கும் ஊட்டிவிட்டு, பாலைக் கறக்கத் தொடங்குவோம். அதற்குள் விடிந்துவிடும். எருவுக்காக ஒரு டிராக்டரில் சாணத்தை எடுத்துக்கொண்டு போவார்கள். அடுத்து, காலைச் சமையலில் இறங்குவோம். எங்கள் முறை வந்ததும், முகாம் கிடங்கில் போய் பசுந்தீவனத்தை வாங்கிவருவோம். பெரிய மாடுகளுக்கு தலா 15 கிலோ, கன்றுக்குட்டிகளுக்கு தலா 7 கிலோ என எடைபோட்டு கொண்டுவருவோம். ஒரே நேரத்தில் குறைந்தது 70 கிலோ கரும்புத்தாழைக் கொண்டுவரவேண்டும். பிறகு, அவற்றை சிறுசிறு துண்டுகளாக வெட்டிவைக்கவேண்டும். இந்த மாடு, கன்றுகள் குறைந்தது மூன்று தடவையாவது தண்ணீர் குடித்தாகவேண்டும். அதிகபட்சம் என்பதற்கு கணக்கில்லை.” என்று பாத்திரங்களைக் கழுவியபடியே, சொல்கிறார் சங்கீதா. ( ஒருவழியாக 8,000 சகாக்களுடன் உணவைப் பெறும் சிம்னாபாய் கட்டுரையைப் பார்க்கவும்)

கால்நடைகளுக்கு தீவனம், நீர், அவற்றுக்கான பிற சேவைகளையும், மக்களுக்கான அடிப்படை வசதிகளையும் முகாம் அமைப்பாளர்கள் செய்துதருகிறார்கள். எடுத்துக்காட்டாக, முகாமில் உள்ள ஒவ்வொரு ‘வார்டிலும்’ தண்ணீர் பீப்பாய்கள் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒரு முறை, தொட்டிவண்டி மூலம் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இத்துடன், குடிநீருக்காக தனியாக ஒரு தொட்டியும் இருக்கிறது. அறக்கட்டளை தந்த மரக் கொம்புகள், கூரைக்கான பச்சை வலையைக் கொண்டு மக்களே கொட்டில்களை அமைத்துவிடுகின்றனர். கொட்டில்களுக்கு சற்று தள்ளி தார்ப்பாலின் அல்லது புடவைகளால் ஆன குடில்களில் பெண்கள் தங்கிக்கொள்கின்றனர்.

விலாசி விர்கரின் கொட்டில், சங்கீதாவின் கொட்டிலுக்கு அடுத்து இருக்கிறது; அவரும் தங்கர் சமூகத்தைச் சேர்ந்தவர். விலாசியுடன் அவர்களின் இரண்டு எருமைகளும் ஒரு ஜெர்சி மாடும் ஒரு கில்லர் இன மாடும் இரண்டு கன்றுக்குட்டிகளும் உள்ளன. மகாராஷ்டிராவின் மிக மோசமான வறட்சியான ஆண்டுகளில் ஒன்றான 1972-ல் விலாசி பிறந்தார். "வறட்சிக் காலத்தில் பிறந்தவர், அதனால் வறட்சியைத் தாங்கிக்கொள்ளவேண்டும்" என நிராகரிக்கப்பட்டவராகக் கூறுகிறார், விலாசி. அவரின் கணவர் நாகுவும் வயதான மாமனாரும் மசைவாடியிலேயே தங்கியிருக்கின்றனர். அவர்களுடைய குடும்பத்தின் ஆடுகளைக் கவனித்தாகவேண்டும். விலாசியின் மகளும் மூத்த மகனும் பட்டம் முடித்து, மும்பையில் வேலைசெய்கின்றனர். அவரின் இளைய மகனும் அங்குதான் பி.காம். படித்துவருகிறார். ஆகையால், விலாசி மாடுகளுடன் முகாமுக்கு வந்துள்ளார்.

A woman carries fodder for the cattle
PHOTO • Binaifer Bharucha
A woman milks a cow
PHOTO • Binaifer Bharucha

இடது: மசாய்வாடியின் இரஞ்சனாபாய் அவருடைய மாட்டுக்காக கரும்புத் தாழை வெட்டுகிறார். வலது: இந்த வறட்சியில் தன்னுடைய மாடுகளைக் காப்பாற்றமுடியும் என லிலாபாய்க்கு நம்பிக்கை

விலாசியும் முகாமில் உள்ள மற்ற பெண்களும் வீட்டிலிருந்து எடுத்துவந்த மண் அடுப்புகளையோ  எரிவாயு அடுப்புகளையோ பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் மூன்று கற்களை மட்டும் குவித்து, சுள்ளிகள் அல்லது கரும்புத்தாழை எரிபொருளாக ஆக்கிக்கொள்கின்றனர். தேவையான சில பாத்திரங்களையும் வீட்டிலிருந்து எடுத்துவந்துள்ளனர். குடும்பத்துப் பெரியவர்கள், புதன்தோறும் மஸ்வாட் வாரச் சந்தைக்குப் போய் மளிகைப்பொருள்களும் மற்ற பொருள்களையும் வாங்கிவருவார்கள். விலாசி, தனக்காகவும் குடும்பத்துக்கும் சேர்த்தே சமைக்கிறார். வழக்கமாக, கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பருப்பு பஜ்ரி பக்ரிதான் இருக்கும். சமைத்தபின் உணவை மூட்டைகட்டி, கிராமத்த்துக்குச் செல்லும் யாரிடமாவது கொடுத்து அனுப்புகிறார். “ வீட்டில் சமைப்பதற்கு யாரும் இல்லை. எனவே, அனுப்பிவிடும் சாப்பாட்டுப் பாத்திரத்திலிருந்து சாப்பிட்டுக்கொள்கிறார்கள். இதனால், அடுத்த 6 - 8 மாதங்களுக்கு இப்படித்தான் இருக்கும்போல.”என்று கூறுகிறார் விலாசி.

விலாசி, சங்கீதா, அவரைப் போன்ற பல பெண்களும் திங்கள் முதல் வெள்ளிவரை தீவனமுகாமில் தங்கிவிட்டு, வார இறுதியில் தங்கள் வீட்டிற்குச் செல்கிறார்கள். பெண்கள் ஊருக்குத் திரும்பிவிடுகையில் ​​அவர்களின் இணையர்கள், பெரிய பிள்ளைகளோ அல்லது உறவினரோ முகாமில் இருப்பார்கள். ஒரே சிற்றூர் அல்லது ஊரைச் சேர்ந்தவர்கள் முகாமுக்கும் ஊருக்கும் ஒருசேர மாறிக்கொள்கின்றனர். இப்படி முகாமுக்கும் ஊருக்குமான போக்குவரத்தில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கின்றனர்.

பெண்கள் வார இறுதி நாட்களின்போது வீட்டைத் துப்புரவாக்குவது, துடைப்பது, துவைப்பது, மாவரைப்பது, தரையை சாணத்தால் மெழுகுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள். பிறகு, அவர்கள் முகாமுக்குத் திரும்புகிறார்கள். “வீட்டில் இருந்தால் வயல்களுக்கோ வெளி வேலைக்கோ போகவேண்டியிருக்கும். என்ன.. இங்கே அதைச் செய்யத் தேவையில்லை. அது ஒன்றுதான் ஓர் இளைப்பாறல்.” என்கிறார் விலாசி.

மசாய்வாடியில் நின்றுபோன மாடுகளின் ’ம்மா..’ கத்தல்!

விலாசியின் இணையர் நாகுஅண்ணாவை மசாய்வாடியில் சந்தித்தோம். அப்போது, "இரண்டு வீடுகளில் வாழ்வதைப் போல இருக்கிறது. கிட்டத்தட்ட விவாகரத்து பெற்றவர்களைப் போலவும் ...." என்கிறார், 52 வயதான நாகுஅண்ணா. விலாசி முகாமில் இருப்பதால், வீட்டு வேலைகளில் சிலவற்றை அவர் செய்தாகவேண்டும்; தண்ணீர்த்தொட்டி வண்டி வரும்போது தண்ணீரைப் பிடித்துவைக்க வேண்டும்; மஸ்வாட்டுக்குச் சென்று மளிகைப் பொருள்களை வாங்க வேண்டும்; அவருடைய தந்தையை கவனித்துக்கொள்ளவேண்டும். " நல்லபடியாக ஒரு முறைகூட மழை பெய்யவில்லை. பொதுவாக மார்ச்வரை போதுமான தண்ணீர் இருக்கும். ஆனால் இந்த முறை, தீபாவளியிலிருந்து சிறிதளவு தண்ணீரும் கிடைக்கவில்லை.ஒரு முறை மட்டுமே தூறியது…” என சலித்துக்கொள்கிறார், நாகு.

Two women sitting under a makeshift tent
PHOTO • Binaifer Bharucha

சங்கீதா விர்கர், விலாசி விர்கர் இருவர் குடும்பங்களுக்கும் 10- 12 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆனால், ‘மழையே பெய்யவில்லை; அதனால் தானியம் என்பதே இல்லை” என்கின்றனர்

"இந்த முறை எந்தப் பயிருக்கும் பலன் கிடைக்கவில்லை. அதனால் தானியம் என்பதே இல்லாமல் போய்விட்டது." என்று கூறுகிறார், விலாசி. இந்தக் குடும்பத்துக்கு 10 - 12 ஏக்கர் நிலம் இருக்கிறது. இரண்டு சகோதரர்கள் சேர்ந்து அதில் விவசாயம் செய்கின்றனர். “வயல்களில் அன்றாடம் கூலி வேலை இருப்பதில்லை. (பெண்களுக்கு ரூ. 150, ஆண்களுக்கு ரூ. 250). அரசாங்கம் எந்த வேலையையும் தொடங்கவில்லை. நாங்கள் எப்படி பிழைப்பது, சொல்லுங்கள்!”- விலாசி.

அருகில் இருக்கும் சங்கீதாவின் வீட்டில், அவரின் கணவர் நந்துவிடம் பேசினோம். அப்போது, “ நான் ஒரு செங்கல் சூளையில் அன்றாடம் ரூ. 250 கூலிக்கு வேலைசெய்கிறேன். இந்த வேலை ஒரு வாரத்திற்கு மேல் இருப்பதில்லை. அதன் பிறகு, எங்கே வேலை தேடுவதென எனக்குத் தெரியவில்லை. வயல்களில் அறவே எந்த வேலையும் இல்லை. நட்ட பயிரெல்லாம் போய்விட்டது. வங்கிக்கு பல முறை போய்வந்தும் எந்த பயிர்க்காப்பீடும் எனக்கு கிடைக்கவில்லை. ஏதோ 20 ரூபாய்க்கு லிட்டர் என்கிற கணக்கில் பாலை விற்பதில் கொஞ்சம் பணம் வருகிறது, அவ்வளவுதான். மாடுகளுக்கு நன்கு தீவனம் தந்தால் தினமும் 4-5 லிட்டர் பால் கிடைக்கும். ஆனால் இப்போதைக்கு எங்களிடம் கறவைமாடும் இல்லை. என் மாமியார் தங்கள் வீட்டு பசுவை அனுப்பியிருக்கிறார்;அதன் மூலம், 2-3 லிட்டர் பால் கிடைக்கிறது.” என விவரிக்கிறார், நந்து.

மேலும் பேசுகையில்,” இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேமித்துவைத்த சிறுதி தானியம் இருக்கிறது. அதெல்லாம் இப்போது தீர்ந்துபோய்விட்டது. ஒரு விவசாயி இருங்கச்சோளம் விற்க விரும்பினால், அவருக்கு ஒரு குவிண்டாலுக்கு 1,200 ரூபாய் கிடைக்கிறது; அதையே சந்தையில் வாங்கவேண்டும் என்றால் 2,500 ரூபாய் தரவேண்டும். நாங்கள் எப்படி சமாளிப்பது, சொல்லுங்கள். எங்களிடம் ஆரஞ்சு நிற (‘வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்க்கான’] ரேசன் அட்டை இருக்கிறது. ஆகையால், மூன்று லிட்டர் மண்ணெண்ணெய் தவிர, தானியமோ சர்க்கரையோ வேறு எதுவும் கிடைக்காது.” என தாங்கலாகச் சொல்கிறார், நந்து.

மசாய்வாடியிலும் மற்ற ஊர்களிலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாலோ அல்லது வேறு குழுக்களாலோ மற்றும் தனிநபர்களாலோ அரசு ஆதரவுடன் தீவன முகாம்கள் நடத்தப்படுகின்றன; இதைப்போலவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலமான தளங்கள் இன்னும் தொடங்கப்படவே இல்லை. 2019 ஜனவரி 9 அன்று அரசாங்கத் தீர்மானத்தின்படி, (வறட்சியால் பாதிக்கப்பட்ட மராத்வாடா பகுதியில்) அவுரங்காபாத், பீட், ஜல்னா, ஒஸ்மானாபாத், பர்பானி ஆகிய இடங்களில் கால்நடை முகாம்களைத் தொடங்க ஐந்து கோசாலைகளுக்கு நிதியை நல்கியுள்ளது. இந்த முகாம்கள் ஒவ்வொன்றிலும் 500 முதல் 3,000 மாடுகள்வரை அடைக்கமுடியும்.

Two week cook at the camp
PHOTO • Binaifer Bharucha
Men transport milk and fodder
PHOTO • Binaifer Bharucha

இடது: முகாமிலும் வீட்டிலும் வேலைமேல் வேலைகளைச் செய்யும் சங்கீதா(உடன் லிலாபாய் விர்கர்). வலது: முகாமிலிருந்து சாணத்தை எடுத்துச்செல்லும் பெட்டக வண்டிகள், பாலைக் கொண்டுசெல்லும் டெம்போ வண்டிகள்

சாங்லி, சதாரா, சோலாப்பூர் ஆகிய மாவட்டங்கள் இந்த அரசாங்கத் தீர்மானத்தில் இடம்பெறவில்லை. ஆனால் ஜனவரி 25 அன்று வெளியிடப்பட்ட அரசாங்கத் தீர்மானமானது, வறட்சி பாதிப்புக்குள்ளான 151 வட்டாரங்கள் மற்றும் வறட்சியைப் போன்ற நிலைமைக்கு உள்ளான 268 வருவாய் வட்டங்களில் தீவன முகாம்களை அமைக்கமுடியும் என்று குறிப்பிட்டிருக்கிறது. மாடு ஒன்றுக்கு தலா 70 ரூபாயும் கன்றுக்குட்டிக்கு 35ரூபாயும் மானியமாக வழங்கப்படும், ஒவ்வொரு மூன்றாம் நாளன்றும் 15 கிலோ பசுந்தீவனம் அல்லது 6 கிலோ உலர் தீவனம் வழங்கப்படும். ஆனால், ஒரு குடும்பத்திற்கு ஐந்து மாடுகள் அளவுக்கே முகாமில் சேர்க்க அனுமதிக்க முடியும். மற்ற மாடுகளுக்கு என்ன செய்வது என்பதற்கான எந்த வழிகாட்டலும் இல்லை. ”அதன்படி, இதுவரை ஒரு முகாம்கூட தொடங்கப்படவில்லை; திட்டத்துக்கான கருத்துகள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.” என்கிறார், சங்கோலாவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சேத்தி விகாஸ் வா சன்சோதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த லலித் பாபர்.

“அரசாங்கம் எப்போது தீவன முகாம்களைத் தொடங்குமென எனக்கு தெரியாது” என்கிறார், மாண்தேஷி அறக்கட்டளையின் சச்சின் மென்குடேல். அறக்கட்டளையின் முகாமானது அடுத்த 6 - 8 மாதங்களுக்கு செயல்படும் என்று கூறுகிறார், அதன் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ரவீந்திர விர்கர்.

இந்த மாதங்களில் தன் மாடுகளை உயிருடன் காப்பாற்றிவிடும் நம்பிக்கையில் இருக்கிறார், மசாய்வாடியைச் சேர்ந்த 60 வயது லிலாபாய் விர்கர். " வறட்சி ஏற்படுவதையொட்டி நாங்கள் எப்போது மாடுகளை விற்கப்போகிறோமென வணிகர்கள் காத்திருக்கத் தொடங்குகிறார்கள்." என்கிறார், அவர். " 60 ஆயிரம் - 70 ஆயிரம் மதிப்புள்ள மாடுகளை 5 - 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. நாங்கள் ஒருபோதும் எங்கள் மாடுகளை கசாப்புக்காரருக்கு விற்கமாட்டோம். ஆனால், அரசாங்கம் தீவன முகாம்களைத் திறக்கத் தவறுமேயானால், பாதி மாடுகள் இறைச்சி ஆலைகளுக்குதான் கொண்டுபோகப்படும்.”- வருத்தப்படுகிறார், லிலாபாய்.

தமிழில்: தமிழ்கனல்

Medha Kale

मेधा काले पुणे में रहती हैं और महिलाओं के स्वास्थ्य से जुड़े मुद्दे पर काम करती रही हैं. वह पारी के लिए मराठी एडिटर के तौर पर काम कर रही हैं.

की अन्य स्टोरी मेधा काले
Photographs : Binaifer Bharucha

बिनाइफ़र भरूचा, मुंबई की फ़्रीलांस फ़ोटोग्राफ़र हैं, और पीपल्स आर्काइव ऑफ़ रूरल इंडिया में बतौर फ़ोटो एडिटर काम करती हैं.

की अन्य स्टोरी बिनायफ़र भरूचा
Editor : Sharmila Joshi

शर्मिला जोशी, पूर्व में पीपल्स आर्काइव ऑफ़ रूरल इंडिया के लिए बतौर कार्यकारी संपादक काम कर चुकी हैं. वह एक लेखक व रिसर्चर हैं और कई दफ़ा शिक्षक की भूमिका में भी होती हैं.

की अन्य स्टोरी शर्मिला जोशी
Translator : R. R. Thamizhkanal

R. R. Thamizhkanal is a Chennai-based independent journalist and a translator focussing on issues related to public policies.

की अन्य स्टोरी R. R. Thamizhkanal