”தாத்தா, கிளம்பி வாங்க,” என தன்னா சிங்கின் பேரன் எப்போதும் தொலைபேசியில் கூறுவதுண்டு. “எப்படி நான் திரும்ப முடியும்? அவனுடைய எதிர்காலத்துக்காகத்தான் நான் இங்கு இருக்கிறேன்,” என்கிறார் சிங் அவரது கூடாரத்துக்கு அருகே ஒரு பிளாஸ்டிக் ஸ்டூலில் அமர்ந்தபடி.
“ஒவ்வொரு முறை அவன் (என்னுடைய மகனின் 15 வயது மகன்) சொல்லும்போதும் அழ வேண்டுமென தோன்றும். பேரக்குழந்தைகளை யாரேனும் இப்படி விட்டுவிட்டு வருவார்களா? மகனையும் மகள்களையும் இதுபோல் யாரேனும் விட்டு வருவார்களா?” எனக் கேட்கிறார் கண்ணீரினூடே.
என்னக் காரணத்துக்காகவும் திரும்பிச் சென்றுவிடக் கூடாது என உறுதி பூண்டிருந்தார் தன்னா சிங். நவம்பர் 26, 2020 தொடங்கி, திக்ரி விவசாயப் போராட்டக் களத்தில்தான் அவர் இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகு நவம்பர் 19, 2021 அன்று மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுமென பிரதமர் சொன்ன பிறகும் கூட சிங் திரும்பிச் செல்வதாக இல்லை. சட்டங்கள் முறையாகத் திரும்பப் பெறப்படும் வரை திக்ரியில் தான் இருக்கப் போவதாகச் சொல்கிறார் மனைவியை இழந்த 70 வயது சிங். “இச்சட்டங்கள் திரும்பப் பெறுவதற்கு ஜனாதிபதி ஒப்புக் கொள்வதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். இந்த நாள் வருவதற்காகதான் எங்கள் வீட்டை விட்டு வந்திருக்கிறோம்,” என்கிறார் அவர்.
ஒரு வருடத்துக்கு முன் மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற வேண்டுமெனக் கேட்டு தில்லிக்கு செல்ல முயன்று, அனுமதி மறுக்கப்பட்டு, தில்லியின் எல்லைகளான திக்ரி (மேற்கு தில்லி), சிங்கு (வடமேற்கு தில்லி) மற்றும் காசிப்பூர் (கிழக்கு) ஆகிய இடங்களிலேயே தங்கிவிட்ட பல்லாயிரக்கணக்கான விவசாயிகளில் அவரும் ஒருவர்.
பஞ்சாபின் முக்ட்சார் மாவட்ட பங்க்சரி கிராமத்திலிருந்து சில விவசாயிகளுடன் ட்ராக்டரில் சிங் இங்குக் கிளம்பி வந்துவிட்டார். போராட்டக் களத்துக்கு அருகே எங்கேனும் ட்ராக்டர் நின்று கொண்டிருக்கும். கிராமத்தில் அவரது குடும்பம் எட்டு ஏக்கர் நிலத்தில் கோதுமையும் நெல்லும் விளைவிக்கிறது. “விவசாய நிலத்தின் பொறுப்பை என் மகனிடம் கொடுத்து விட்டு நான் இங்கு வந்திருக்கிறேன்,” என்கிறார் அவர்.
இந்த வருடம் அவருக்குக் கடினமான வருடமாக இருந்தது. நஷ்டத்தின் வருடம். இரண்டு உறவினர்கள் இந்த வருடத்தில் இறந்தனர். மாமா மகன் மற்றும் அண்ணியின் மகன். “சமீபத்தில்தான் முதுகலைப் படிப்பு முடித்திருந்தான். சிறு வயது… ஆனாலும் நான் போகவில்லை,” என்கிறார் அவர். “கடந்த ஒரு வருடத்தில் பல விஷயங்கள் நடந்து விட்டன. ஆனால் நான் வீட்டுக்குச் செல்லவில்லை. போராட்டத்தை விட்டுவிட்டு நான் போக விரும்பவில்லை.”
வீட்டின் சந்தோஷமானத் தருணங்களையும் அவர் தவற விட்டிருந்தார். “என் மகள் 15 வருடங்களுக்கு பிறகு குழந்தை பெற்றெடுத்திருக்கிறாள். என்னால் போக முடியவில்லை. என் பேரனை பார்க்கக் கூட நான் போகவில்லை. நான் திரும்பிச் சென்றதும் முதலில் அவர்களைச் சென்று பார்ப்பேன். அவனை (10 மாதக் குழந்தை) செல்பேசியில் புகைப்படங்களாகத்தான் பார்த்திருக்கிறேன். அழகான குழந்தை!”
அதே சாலையின் நடுவே தில்லி மெட்ரோ ரயில் பாலத்துக்குக் கீழுள்ள இன்னொரு கூடாரத்திலிருக்கும் ஜஸ்கரன் சிங் சொல்கையில், “வீட்டில் இருக்கும் வசதிகளை தவிர்த்துவிட்டு போராட்டத்துக்காக இங்கே தெருக்களில் தங்கியிருக்கிறோம். சரியான கூரை உங்களின் தலைக்கு மேல் இல்லாமலிருக்கும் வாழ்க்கை சுலபமானது கிடையாது,” என்கிறார்.
இந்த வருடம் கொடுமையான குளிர்கால இரவுகளையும் கோடை நாட்களையும் கொண்டிருந்தது என்கிறார் அவர். மழைக்கால வாரங்கள் மிக மோசமாக இருந்திருக்கிறது. “அந்த இரவுகளில் யாராலும் தூங்க முடியவில்லை. பல நேரங்களில் கூரையைக் காற்று அடித்துச் சென்றுவிடும். அது நடக்கும்போது உடனே நாங்கள் மாற்றுக் கூரைக்கு ஏற்பாடு செய்தோம்.”
மன்சா மாவட்டத்தின் பிக்கியிலிருந்து வருபவர்களுடன் சுற்று வைத்து போராட்டக்களத்துக்கு வந்து போய்க் கொண்டிருந்தார் ஜஸ்கரன் (முகப்புப் படத்தில் இருப்பவர்). 12 ஏக்கர் நிலத்தில் கோதுமை மற்றும் நெல் பயிர்களை விளைவிக்கிறார் அவர். அவரின் மகன் மின்சாரம் பாய்ந்து இறந்துவிட்டார். அச்சம்பவம் நடந்த 18 மாதங்கள் கழித்து அவரின் மனைவியும் இறந்துவிட்டார். தற்போது அவர் 80 வயது தாய், மருமகள் மற்றும் இரண்டு பேரக் குழந்தைகள் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
கடந்த வார வெள்ளிக்கிழமை வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுமென பிரதமர் அறிவித்தபோது ஊரைச் சேர்ந்த நான்கு விவசாயிகளுடன் அவர் திக்ரிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். “அறிவிப்பை அனைவருடன் சேர்ந்து கொண்டாடுவதற்கு நாங்கள் கிராமத்திலும் இல்லை. திக்ரியையும் அடைந்திருக்கவில்லை,” என்கிறார் 55 வயது ஜஸ்கரன். அவரின் தாய் அவரை தொடர்பு கொண்டு, போராட்டக் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுவிட்டதால் திரும்ப வருமாறு அழைத்ததாகச் சொல்கிறார் அவர். ஆனால், “நாடாளுமன்றத்தில் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்வரை நாங்கள் காத்திருப்போம்,” என நவம்பர் 29ம் தேதி தொடங்கப்படும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரைக் குறிப்பிட்டு அவர் சொல்லியிருக்கிறார். “விவசாயிகளான நாங்கள் (போராட்டத்தில்) கலந்து கொண்டதில் சந்தோஷம்தான். எனினும் இந்தச் சட்டங்கள் முறையாக திரும்பப் பெறப்படுகையில்தான் எங்களுக்கு உண்மையான சந்தோஷம். அப்போதுதான் நாங்கள் வீடு திரும்புவோம்.”.
கிராமங்களுக்கு திரும்புவதும் அத்தனை சுலபமில்லை என்கிறார் பதிண்டா மாவட்டத்தின் கோத்ரா கொரியன்வாலா கிராமத்திலிருந்து திக்ரிக்கு வந்திருக்கும் பரம்ஜித் கவுர். “எங்களின் மனங்களுக்கு கஷ்டமாக இருக்கும். கடினமான நேரத்தில் எங்கள் கைகளைக் கொண்டு இங்கு நாங்கள் கட்டியிருக்கும் இந்த வீடுகள் எங்கள் நினைவில் இருக்கும். பஞ்சாபிலிருக்கும் எங்கள் ஊரைப் போலவே இங்கும் எல்லா வசதிகளும் இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம்.”
ஹரியானாவின் பகாதுர்கா நெடுஞ்சாலையில், நடுவே இருக்கும் பிரிப்பானில், அவரும் பிற பெண் விவசாயிகளும் காய்கறிகளையும் தக்காளிகளையும் கேரட்டுகளையும் உருளைக்கிழங்குகளையும் கடுகுகளையும் வளர்க்கின்றனர். அவரை நான் சந்தித்தபோது இந்த ‘விவசாய நில’த்தில் விளைவிக்கப்பட்டக் கீரையை பெரிய பாத்திரங்களில் மதிய உணவுக்காக சமைத்துக் கொண்டிருந்தார்.
பல நினைவுகளையும் இழப்புகளையும் கொண்ட எங்களின் மனங்களை சரிசெய்வது போராட்டமாக இருக்கும் என்கிறார் பரம்ஜித். “போராட்டங்களின்போது இறந்த 700 பேரை நாங்கள் மறக்க மாட்டோம். மூன்று பெண் போராட்டக்காரர்கள் லாரி மோதி இறந்தபோது துயரமடைந்தோம். இங்கு 10 நாட்கள் கழித்த பிறகு தீபாவளிக்காக அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள். ஆட்டோவுக்காக காத்திருக்கும்போது இது நேர்ந்தது. அன்றைய இரவில் எங்களால் சாப்பிட முடியவில்லை. மோடியின் அரசுக்கு இது பற்றியெல்லாம் கவலை இல்லை.”
60 வயது பரம்ஜித் பாரதிய கிசான் சங்கத்தின் பதிண்டா மாவட்டப் பெண் தலைவர் ஆவார். அவர் சொல்கையில், “ஜனவரி 26ம் தேதி ட்ராக்டர் பேரணி நடந்தபோது லத்தி மற்றும் குச்சிகளால் தாக்கப்பட்டு பலருக்குக் காயம். கண்ணீர் புகைக்குண்டு வீசினார்கள். வழக்குகள் பதிவு செய்தனர். இவை எல்லாவற்றையும் வாழ்க்கைக்கும் மறக்க மாட்டோம்,” என்கிறார்.
விவசாயிகளின் போராட்டம் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதும் முடிந்துவிடாது என உறுதியாகச் சொல்கிறார் அவர். “எந்த அரசாங்கமும் விவசாயச் சமூகத்தைப் பற்றி யோசித்ததே இல்லை.அவர்களை பற்றி மட்டும்தான் யோசிக்கிறார்கள். நாங்கள் வீட்டுக்கு செல்வோம். எங்களின் குழந்தைகளைச் சந்திப்போம். பேரக் குழந்தைகளுடன் விளையாடுவோம். பிறகு நாங்கள் போராட எங்களின் விவசாயப் பிரச்சினைகள் இருக்கின்றன.”
“இப்போதும் எங்களுக்கு அவரின் (மோடியின்) மீது நம்பிக்கையில்லை,” என்கிறார் 60 வயது ஜஸ்பிர் கவுர் நாட். பஞ்சாப் கிசான் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினராக இருக்கிறார். திக்ரியில் தங்கியிருக்கிறார். “அவரது அறிவிப்பில், ஒரு குறிப்பிட்ட பகுதி விவசாயிகளை சமரசம் செய்வதில் தோல்வி அடைந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அதற்கு அர்த்தம், வேளாண் சட்டங்கள் கொண்டு வந்த முடிவு சரியென அவர் நினைப்பதே. அறிவிக்கப்பட்டது எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட நாங்கள் காத்திருக்கிறோம். பிறகு எழுதிருப்பதையும் நாங்கள் பரிசோதிப்போம். ஏனெனில் அவர்கள் வார்த்தைகளில் விளையாடுபவர்கள்.”
மின்சாரத் திருத்த மசோதா, வைக்கோல் எரிப்புத் தடைச் சட்டம் முதலியவற்றை திரும்பப் பெற வேண்டுமென்ற நிலுவையிலுள்ள பல கோரிக்கைகளை ஜஸ்பிர் பட்டியலிடுகிறார். “அரசு இந்தக் கோரிக்கைகளை ஏற்கக் கூடுமென எங்களுக்குத் தெரியும்,” என்னும் அவர், “குறைந்தபட்ச ஆதார விலை அளிக்க அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். பிற கோரிக்கைகளும் இருக்கின்றன. போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும். ட்ராக்டர்களுக்கு நேர்ந்த சேதத்துக்கான இழப்பீடு வேண்டும். எனவே இங்கிருந்து இப்போதைக்கு நாங்கள் கிளம்பப் போவதில்லை,” என்கிறார் அவர்.
40 விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சாவும் நவம்பர் 21ம் தேதி ஞாயிறன்று போராட்டம் தொடரும் என உறுதிபடுத்தியிருக்கிறது. நவம்பர் 22ம் தேதி லக்நவ்வில் விவசாயிகள் பஞ்சாயத்து நடக்கும். நவம்பர் 26ம் தேதி தில்லி எல்லைப் பகுதிகளில் கூட்டங்கள் நடக்கும். நவம்பர் 29ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடக்கும்.
தமிழில் : ராஜசங்கீதன்