“நீ நாயை அடித்தாயா?“ என்று அவர்கள் கேட்டார்கள். சுனந்தா சாகு பதில் கூறுவதற்கு முன்னரே, ஒரு மரக்கட்டையால் அவரது தலையில் தாக்கப்பட்டார். நினைவு திரும்பியபோது ஒரு மருத்துவமனையில் விழித்தெழுந்திருந்தார்.
நாய் என்பது வெறும் சாக்கு. உண்மையில் அவர்களுக்கு அவனை(நாயை) பிடிக்கவில்லை. சுனந்தா ஒரு கலப்பின தெருநாயை அழைத்து வந்து வளர்ப்பதற்கு முன்னர், ஜடை பின்னலிட்டு, பொம்மை என்று சுனந்தாவை அன்பாக அழைத்தவர்கள்தான் தற்போது கொடிய அந்நியர்கள்போல் நடந்துகொள்கிறார்கள். “செத்து விடு அல்லது ஓடிவிடு என்பது அவர்கள் தினமும் கூறுவது. நாயை வளர்ப்பது எனது தனிமையை போக்கியது. நான் அவனை காலு என்று அழைப்பேன்“ என்று சுனந்தா கூறுகிறார்.
2010ல் சுனந்தா வீடு திரும்பிய 6 ஆண்டுகள் கழித்து, நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்த அவரது தந்தை கிருஷ்ணானந் சாகு இறந்த இரண்டு மாதத்தில் இந்த அடி விழுகிறது. சாகுவும், அவரது இரண்டு மகன்கள், மகன்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் தனது மகள் மீது நடத்தும் அத்துமீறலை கண்டிக்க வார்த்தைகளின்றி பார்த்துக்கொண்டிருந்தார். அவரது மனைவி கனகலதாவும் மவுனத்தையே கடைபிடித்தார்.
சுனந்தாவைப்பொருத்தவரை தெளிவாக தெரிந்தது என்னவென்றால், அவளை அவர் வரவேற்கவும் இல்லை. தேவை என்று எண்ணவுமில்லை. “அவர்கள் எனக்கு தேவையான சோப்பு, எண்ணெய் கூட வழங்கமாட்டார்கள்“ என்று அவர் கூறுகிறார். உணவும் அளவாகத்தான் கொடுப்பார்கள். சுனந்தாவின் மீது அக்கறைகொண்ட அருகில் உள்ளவர் ஒருவர்தான் அவரை, ஒரு சமூக செயற்பாட்டாளரின் உதவியுடன் கிராம பஞ்சாயத்திடம் உதவி கேட்க தூண்டினார். அதன் பின்னர் அவருக்கு வறுமையில் வாழும் பெண்களுக்கு மாநில அரசு வழங்கும் மாதாந்திர உதவித்தொகை ரூ.300 மற்றும் அந்தியோதயா திட்டத்தின் கீழ் மாதத்திற்கு 25 கிலோ அரிசியும் கிடைத்தது.
நிஹல் பிரசாத் கிராமத்தில் (ஒடிஷாவின் தேன்கன்னல் மாவட்டத்தில் உள்ள கோண்டியா வட்டத்தில் உள்ளது) இப்பிரச்னைகள் குறித்து நிறைய பேர் சுனந்தாவின் சகோதரர்களிடம் பேசியுள்ளனர். “ஆனால் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை“ என்று அந்த கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான ரமேஷ் மொஹந்தி தோள்களை உயர்த்தி ஒன்றும் செய்யவில்லை என்பதை செய்து காட்டி கூறுகிறார்.
அந்த சகோதரர்கள் தங்கை மீது எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. தங்கள் குடும்பத்தின் நற்பெயரை அவர் களங்கப்படுத்துவதாக அவர்கள் நினைத்தார்கள். “அவர்களின் மனைவிகளால் எனக்கு ஏதாவது செய்ய முடியுமென்றால், அவர்கள் என்னை வீட்டைவிட்டு வெளியேறுமாறு அச்சுறுத்துவதுதான்“ என்று சுனந்தா கூறுகிறார்.
இத்தனை தண்டனைக்கும் காரணம் சுனந்தா செய்த முதல் பாவம் காதல் மற்றும் இரண்டாவது முறை அவர் செய்த மீறல்தான். அது முதல் சுனந்தாவை அவர்கள் மேலும் மோசமாக நடத்துகிறார்கள்.
2016ம் ஆண்டு மே மாதம், அப்போது சுனந்தாவிற்கு 36 வயது இருந்தது. அவர்களின் மறைந்த தந்தைக்கு சொந்தமான 9 ஏக்கர் விளைநிலத்தில் அவரது பங்கினை கேட்டுள்ளார். அவரது வழக்கு மிக எளிமையான ஒன்று “நிலம் எனது இரு சகோதரிகளின் திருமணத்திற்காக விற்கப்பட்டது. எனக்கு திருமணமாகாததால், எஞ்சியுள்ள நிலத்தில் எனக்கு சமமான பங்கு உள்ளது“ என்கிறார்.
இந்த நாட்டில் சுனந்தாவின் கோரிக்கை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அகில இந்திய வேளாண் கணக்கெடுப்பு அறிக்கை 2010 – 11 ன்படி, 87.2 சதவீத நிலத்தை (வீட்டுமனைகளாக்கப்பட்ட நிலங்களை தவிர) ஆண்கள் வைத்திருக்கிறார்கள். சொற்ப அளவான 12.8 சதவீதத்தை பெண்கள் சொந்தமாகக் கொண்டுள்ளனர்.
ஒரு நாள் மதியவேளையில் சகோதரர்கள், கோபத்தில் சுனந்தா நாயை கடுமையாக தாக்கியதாகவும், “நாளை அவர் எங்களையும் தாக்குவார்“ என்று கூறி கம்பியை அவர் அருகே எடுத்து வரும்போது கத்திக்கொண்டே தாக்கினர்.
சுனந்தாவின் வழக்குகள் அடங்கிய மெல்லிய அரக்கு நிற கோப்புகள் ஒன்று அவரது வீட்டிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் தேன்கன்னலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் பெண்கள் உதவி மையத்தில் உள்ளது. “தலைக்கு உள்ளே காயம், தற்போது தலை சுற்றல் ஏற்படுவதால், சிடி ஸ்கேனுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது“ அந்தக்கோப்பில் உள்ள ஒரு மருத்துவ அறிக்கையை படிக்கும்போது இவ்வாறு உள்ளது. அது கட்டக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து வழங்கப்பட்டிருந்தது. தேன்கன்னலில் முதற்கட்ட சிகிச்சை பெற்ற பின்னர் சுனந்தா இந்த மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டடார்.
பானுமதி பானி, ஊராட்சி உறுப்பினர்களை அணுகுவதற்கு சுனந்தாவுக்கு உதவிய சமூக சேவகி, இம்மையத்தின் ஆலோசகராகவும் உள்ளார். இம்மையம் பெண்களை குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் 2005 ன் மூலம் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை மையம் துவங்கி 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் 1,212 பெண்கள் இதன் மூலம் உதவி பெற்றுள்ளனர் என்று அங்குள்ள ஒரு வெள்ளை நிற அறிவிப்புப்பலகை கூறுகிறது. இந்த உதவி அச்சட்டத்தில் உள்ளதுபோல், பெரும்பாலும் ஆலோசகர்கள் மற்றும் மத்தியஸ்தர்கள் மூலம் கிடைத்ததாக கருதப்படுகிறது. வெகுசில பெண்களே நீதிமன்றம் மற்றும் காவல்துறை ஆகியவற்றை நேரடியாக அணுகுகிறார்கள். சுனந்தா அனுபவித்த மன மற்றும் உடல் வன்முறைகளே, பானுமதியை அவருக்கு சட்டப்பூர்வமாக உதவுமாறு தூண்டியது. சுனந்தாவின் சகோதரர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் மீது இந்திய தண்டனைச்சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சுனந்தாவுக்கும், அவரது தாய்க்கும் அவர்களின் 7 அறைகள் கொண்ட வீட்டில் இரண்டு அறைகள் ஒதுக்கப்படவேண்டும் என்பதை இந்த வழக்கு உறுதி செய்கிறது. அவரது சகோதரர்கள் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தனர். அவர்களுக்கும், சுனந்தாவுக்கு இடையில் யாரை ஆதரிப்பது என மற்ற இரு சகோதரிகளும் ஊசலாடினர். அதன் மூலம் அமைதி ஏற்பட்டாலும், அது நிலையானதாக இல்லை.
“முன்னரே எனக்கிருக்கும் உரிமை தெரிந்திருந்தால், வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டதாக இருந்திருக்கும்“ என்று சுனந்தா வருத்தப்படுகிறார்.
அந்த முன்னரே என்பது மார்ச் 2007ம் ஆண்டை குறிக்கிறது. அப்போது சுனந்தாவுக்கு வயது 27, அப்போது பிஸ்வாஜீத் தாலாவால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். ஒரு நேரத்தில் வசீகரிக்கும் வகையிலும், சில நேரங்களில் விடாப்பிடியான குணமும், பின்னர் கோபமும் நிறைந்த காதலர். சுனந்தா 18 வயதில் 10ம் வகுப்பு படித்த காலத்தில் இருந்து பின் தொடர்ந்து வருகிறார். சுனந்தாவைப்பார்த்து விசில் அடிப்பது, கடிதத்தை வீசுவது, அவர் நடந்து வரும்போது அவர் முகத்தில் டார்ச் லைட்டை ஒளிரச்செய்வது போன்ற செயல்களை செய்து வந்தார். பயந்த அவர் தனது தாயிடம் இதுகுறித்து தெரிவித்தார். அவரது தாய்தான் இதுபோன்ற வழிகளில் கிண்டல் செய்வது அவர் உன் மீது கொண்டுள்ள உண்மை அன்பை விளக்குவதாக உள்ளது என்று விளக்கினார். “அவரின் அருகாமையை நான் மகிழ்ச்சியாக கருத துவங்கினேன். அவர் என்னை மகிழ்ச்சியாக உணர வைத்தார்“ என்று சுனந்தா கூறுகிறார். முதல் காதல் கொடுத்த பரவசத்தில் கட்டுண்டு கிடந்த அவருக்கு பிஸ்வாஜித் தன்னைவிட 20 வயது மூத்தவர் என்பதும், அவர் வேலையில்லாதவர் என்பதும் பெரிதாக தெரியவில்லை.
அந்த பரவசம் அனைத்தும், அவரது குடும்பத்தினர் முதன்முதலாக திருமணம் குறித்த பேச்சை எடுத்தபோது விரக்தியாக மாறியது. “அவரது சகோதரி நான் அழகாக இல்லையென்றும், நான் அவரது சகோதரரை வளைத்துவிட்டேன்“ என்று கூறியதை சுனந்தா நினைவு கூறுகிறார். அவரது குடும்பத்தினர் மற்றும் சகோதர, சகோதரிகளின் பேரன்பை மட்டுமே அதுவரை பெற்றிருந்த ஒரு இளம்பெண்ணுக்கு இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. “நான் ஒன்றுமே இல்லாததுபோல் உணர்ந்தேன்“ என்று கிசுகிசுப்பாக கூறினார். பிஸ்வாஜித் இன்னும் தொடர்ந்தார். ஆனால், அதன் பின்னர் சுனந்தாவும் விடாப்படியாக இருந்தார்.
“என்னை வாக்குறுதிகளால் கவரும் முயற்சிகளை அவர் செய்துகொண்டிருந்தார். அவர் எப்போதும் எனக்காக காத்திருப்பதாக கூறும் நீண்ட காதல் கடிதங்களை எழுதினார். எனது தந்தையிடம் ஆட்களை தூதும் அனுப்பினார். ஆனால், என்னை அழகில்லை என்று கூறிய குடும்பத்தில் நான் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன்“ என்று சுனந்தா கூறுகிறார்.
அவரது தாத்தா சுதந்திர போராட்ட வீரர் ஷோர்யா சரண் சாகுவை மனதில் வைத்தே அவர் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தார். “நான் எனது தாத்தாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் செய்வதை நினைத்து கூட பார்க்கவில்லை“ என்று அவர் விளக்குகிறார்.
2007ம் ஆண்டில் அவரை தாக்கியது கூட தொடர்ந்து திருமணம் செய்துகொள்ள மறுத்ததால்தான் நடந்தது. ஒரு நாள் இரவு அவர் வீட்டிலிருந்து வெளியேறி வயலில் ஓய்வாக படுக்கலாம் என்று நினைத்தபோது, அவரது கழுத்தை யாரோ சுற்றி இறுக்கிப்பிடித்திருப்பதுபோல் உணர்ந்தார்.
இரண்டு நாட்கள் கழித்து அவர் கண் முழித்து பார்த்தபோது, அவர்கள் வீட்டில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சமுதாய மருத்துவ மையத்தில் இருந்தார். “நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேனா என்பது எனக்கு நினைவில்லை. ஆனால், எனது ஆடைகள் கிழிந்திருந்தது. காவல் துறையினர் எனக்கு செவிமடுக்க மறுத்தனர். எனக்கு எந்த பரிசோதனையும் செய்யப்படவில்லை“ என்று சுனந்தா கூறுகிறார். சுனந்தாவின் சொந்த குடும்பத்தினரே போலீசாரின் உதவிக்கான தேவையை புறந்தள்ளிவிட்டு, பிஸ்வஜித்தை திருமணம் செய்துகொள்ளவும், அப்போதுதான் தங்கள் குடும்பத்தின் புகழுக்கு சுனந்தாவால் ஏற்பட்ட களங்கத்தை போக்கவும் முடியும் என்று வற்புறுத்தினர். அதற்கு தனது சொத்துக்களை அழித்தது மற்றும் அத்துமீறி தனது இடத்திற்குள் நுழைந்தது ஆகியவை குறித்து சுனந்தாவுக்கு எதிராக பிஸ்வஜித் அளித்த புகார் மீதான அச்சம் காரணமாகவும் அவர்கள் பிஸ்வஜித்தை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளனர்.
காவல்துறையினர் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல் பிஸ்வஜித்துக்கு சுனந்தாவால் தண்டனை வாங்கிக்கொடுக்க முடியவில்லை. அந்த தாக்குதலுக்கு அடுத்த இரண்டு மாதத்தில் அவர் 18 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
இதற்கிடையில், சுனந்தா மற்ற தங்கைகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றுகூறி, வெளியில் தங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டார்.
அடுத்த மூன்று ஆண்டுகள் தங்குமிடம் மற்றும் உறவினர்களின் வீடுகள் என்று அலைகழிக்கப்பட்டார். ஜெய்ப்பூரில் ஒரு உறவினருடன் தங்கியிருந்தபோது அவர் தையல் கற்றுக்கொண்ட பின்னர்தான் ஒரு உதவி அவருக்கு கிடைத்தது. ஒரு தொண்டு நிறுவனம் அவருக்கு தையல் இயந்திரம் வழங்கியது.
கிராம சமுதாயக்கூடத்தில் உள்ள ஒரு தூசு நிறைந்த அறையில் அந்த தையல் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு ஜனவரியில் அம்மையத்தை பயன்படுத்திக்கொள்ள ஊராட்சி அவருக்கு அனுமதி வழங்கியது முதல் அதுதான் சுனந்தாவின் பணியிடம். இங்குதான் அவர் ரவிக்கைகளும், சுடிதார்களும் தைக்கிறார். அதில் சில இங்கு தொங்கவிடப்பட்டுள்ளன. அவர் தைத்துவிட்டு எஞ்சிய துணிகளிலிருந்து விரிப்புகளை தயாரிக்கிறார். அவற்றை சரியான வண்ணங்கள் சேர்த்து நேர்த்தியாகவும், அழகாகவும் தைக்கிறார்.
நிறைய துணி இருக்கும் நாளில் அவர் ரூ.200ம், சாதாரண நாளில் ரூ.25ம் ஈட்டுகிறார். அது மட்டுமின்றி ஆடுகள் வளர்த்து விற்பனை செய்து வருகிறார். அதிலிருந்து மாதமொன்றிற்கு ரூ. 3 ஆயிரம் வரை கூடுதலாக பெறுகிறார். அது அவரது 75 வயது தாயை பாராமரிப்பதற்கு போதுமானதாக உள்ளது. ஆனால், அவருக்கு புதிய உடைகள் வாங்கிக்கொள்வதற்கு போதியதாக இல்லை. இன்று அவர் அணிந்திருக்கும் ஆரஞ்சு நிற உடை அவரது சகோதரிகளில் ஒருவருடையது.
திருமணம் தான் பெண்ணுக்கு மரியாதையை பெற்றுத்தரும் என்ற அவரது தாயின் வற்புறுத்தலை மறுத்து உறுதியாக நின்றார். “திருமணம் மகிழ்ச்சியை வழங்கும் என்று எவ்வித உத்திரவாதமும் கிடையாது“ என்று அவர் கூறுகிறார்.
சுனந்தா குடும்பம் அவருக்கு கசப்பான அனபவங்களையே வழங்கியிருந்தாலும், அவர் குற்றஉணர்வால் வருந்தி அமைதியாக இருந்துவிடவில்லை. “நான் எந்த தவறும் செய்யவில்லை“ என்று அவர் வலியுறுத்தி கூறுகிறார்.
காவல் துறையின் வழக்கு தள்ளுபடியானவுடன், அவர் சொத்தில் தனக்குள்ள பங்கை கோரும் உரிமையை நிலைநாட்ட சட்டத்தின் உதவியை நாட திட்டமிட்டுள்ளார். அவர் தனது தாயை புனித யாத்திரை அழைத்துச்செல்லவும், பால்பண்ணை அமைக்கவும், தனக்கு பிடித்த ரஜினிகந்தா மலர்கள் உள்பட் மலர் தோட்டம் அமைக்கவும் விரும்புகிறார். “அங்கன்வாடி உதவியாளராகவும் வாய்ப்புகள் உள்ளது“ என்று அவர் மேலும் கூறுகிறார்.
வேறு என்ன?
அவருக்கு நாய் வளர்க்கும் எண்ணமும் உள்ளது. “காலுவைப்போல், அது கடந்தாண்டு இறந்துவிட்டது“ என்று அவர் சிரிக்கிறார்.
தமிழில்: பிரியதர்சினி. R.