மூடுவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. ஆனாலும் முதல் தளத்தில் இருக்கும் அறை பூட்டப்பட்டிருக்கிறது. அருகே இருந்த குடிசையிலும் யாரும் இல்லை. வெறும் நாற்காலிகளும் மேஜைகளும் பெஞ்சும் மருந்துகளுக்கான அட்டைகளும் கிடந்தன. ஒரு பழைய பெயர் பலகையும் கிடந்தது. மூடப்பட்ட அறையை கொண்டிருந்த அக்கட்டடத்தின் நுழைவாயிலில் புதிய பெயர் பலகை இருந்தது. ‘அரசு புதிய வகை ஆரம்ப சுகாதார நிலையம், ஷப்ரி மொகல்லா, தல், ஸ்ரீநகர்’.
இங்கிருந்து ஒரு பத்து நிமிட படகு பயணத்தில் நசிர் அகமது பட்டின் மருத்துவ மையத்துக்கு சென்றுவிட முடியும். அந்த மையம் எப்போதும் திறந்திருக்கும். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். ஒரு குளிரான பிற்பகலில் கடைசி வாடிக்கையாளரை (மாலையில் மீண்டும் வந்து நிறைய பேரை சந்திப்பார்) சிறிய மரத்தாலான கடையில் அவர் சந்தித்துக் கொண்டிருந்தார். ஊசி செலுத்துவதற்கென உள்ளே ஒரு தடுப்பு அறையும் இருக்கிறது. வெளியே இருக்கும் பெயர்ப்பலகையில், ‘பட் மருந்து விற்பனையாளர்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
60 வயது ஹஃபீசா தர் பெஞ்சில் அமர்ந்து காத்திருக்கிறார். நசீர் மருத்துவரை படகில் அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். அவரின் வசிப்பிடம் 10 நிமிட படகு பயணத் தொலைவில் இருக்கிறது. “என்னுடைய மாமியார் சர்க்கரை நோய்க்கான சில ஊசிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு அதிக வயது என்பதால் நசீர் அய்யாவே கனிவுடன் வந்து ஊசி போட்டு விடுவார்,” என்கிறார் அவர் நசீரை வாழ்த்தியபடி. “மருத்துவர் அங்கு (ஆரம்ப சுகாதார நிலையம்) இருப்பதில்லை,” என்கிறார் விவசாயியாக இருக்கும் தர். அவருடைய கணவரும் ஒரு விவசாயிதான். தல் ஏரியில் படகும் ஓட்டுகிறார். “அவர்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து மட்டும் கொடுப்பார்கள். பிற்பகல் நான்கு மணிக்கு மேல் அங்கு யாரும் இருப்பதில்லை.”
ஏரியின் தீவுகளில் வாழும் மக்களுக்கு, கடந்த இரண்டு வருடங்களில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவரை பார்த்த ஞாபகமே இல்லை. அதற்கு ஆகஸ்ட் 2019ல் தொடங்கி தொடர்ச்சியான ஊரடங்குகளும் ஒரு காரணம். “சில ஆண்டுகளுக்கு முன் வரை நன்றாக வேலை செய்த ஒரு மருத்துவர் அங்கு இருந்தார். ஆனால் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 2019லிருந்து அங்கு யாரையும் நாங்கள் பார்க்கவில்லை,” என்கிறார் 40 வயது முகமது ரஃபீக். சுற்றுலா புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். “அவர்கள் (ஊழியர்கள்) தொடர்ந்து வருவதில்லை. வந்தாலும் முழு வேலை நேரத்துக்கு இருப்பதில்லை.”
‘புதிய வகை ஆரம்ப சுகாதா நிலையங்கள்’ (கஷ்மீரின் மேம்படுத்தப்பட்ட மையங்கள்) எல்லாமும், ஸ்ரீநகரின் தலைமை மருத்துவ அதிகாரியின் துணை திட்ட இயக்குநர் அலுவலகத்தின்படி, மருத்துவ அதிகாரியாக ஒரு மருத்துவரையும் ஒரு மருந்ந்து விற்பனையாளரையும் ஒரு பெண் ஊழியரையும் ஒரு செவிலியரையும் கொண்டிருக்க வேண்டும். சுகாதார சேவைத்துறை அவர்களை நியமிக்க வேண்டும்.
“போலியோ சொட்டு மருந்து போடும் நேரங்களில் மட்டும் சுகாதார மையம் உயிர் பெற்று விடும். ஒலிபெருக்கிகளில் அறிவிப்பார்கள்,” என்கிறார் 25 வயது வசிம் ராஜா. சுற்றுலா படகில் புகைப்படக் கலைஞராக பணியாற்றும் அவர், சுகாதார மையம் இருக்கும் அதே பகுதியில் (கூலி மொகல்லா என்ற பெயர் கொண்டிருந்தாலும் அப்பகுதியின் பெயர் பலகை பக்கத்து பகுதியின் பெயரை தாங்கி இருக்கிறது) வசிக்கிறார். “மருந்து விற்பனையாளர், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வந்து என் தந்தைக்கு மருந்து ஏற்றுவார்,” என்கிறார் அவர். “இந்த மருந்தகம் எங்களுக்கு முக்கியமாக தேவைப்படும் நேரங்களில் அடைத்து கிடக்கிறது. பிறகு நாங்கள் நசீரையோ பிலாலையோ (இன்னொரு மருந்து விற்பனையாளர் - மருத்துவர்) சென்று பார்க்க வேண்டும். அல்லது மருத்துவமனைக்கு செல்ல சாலையை அடைய வேண்டும். அதற்கு அதிக நேரமாகும். நெருக்கடி நேரத்தில் அது கஷ்டமாக இருக்கும்.”
ஜனஹர்லால் நேரு மருத்துவமனைதான் அருகே இருக்கும் பொது மருத்துவமனை. ஸ்ரீநகரின் ரைனாவாரி பகுதியில் இருக்கும் மருத்துவமனைக்கு கூலி மொகல்லாவிலிருந்து 15 நிமிட படகு பயணம் மேற்கொண்டு புலவார்ட் சாலையை அடைய வேண்டும். பிறகு அங்கிருந்து இரண்டு பேருந்து பிடிக்க வேண்டும். அல்லது 40 நிமிட படகு பயணம் மேற்கொண்டு பிறகு ஒரு 15 நிமிடங்கள் நடக்க வேண்டும். கஷ்மீரின் தீவிரமான குளிர்காலங்களில் இத்தகைய பயணங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கும்.
அதிகம் இயங்காத ஆரம்பு சுகாதார நிலையத்தை தாண்டி, 18-20 சதுர கிலோமீட்டர் அளவின் தல் ஏரி தீவுகளில் வசிக்கும் 50,000-60,000 மக்களுக்கு இருப்பது அரசு நடத்தும் மருந்தகம் மட்டும்தான். நந்த்போராவில் இருக்கிறது. ஒரு பெரும் நீர்ப்பரப்பின் ஒரு முனையில் இருக்கும் அங்கும் ஊழியர்கள் எப்போதும் இருப்பதில்லை. மேலும் ஒரு துணை மையம் ஏரிக்கரையின் புலவார்ட் சாலையில் (தீவுகளில் வசிக்கும் மக்கள் கோவிட் மருந்துகளும் பரிசோதனைகளும் பெறுவதற்கென இருக்கும் பகுதி) இருக்கிறது.
எனவே ஏரியின் தீவுகளில் வசிப்பவர்களுக்கு நசீரும் அவரை போல் மருந்தகங்கள் நடத்தி மருத்துவர்களாகவும் மருத்துவ ஆலோசகர்களாகவும் இருக்கும் பிற மூன்று பேரின் உதவிதான் அவர்களுக்கு கிடைக்கும் சுகாதாரமாக இருக்கிறது.
50 வயது நசீர் அகமது பட் தல் ஏரியில் 15-20 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மருந்தகத்தில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இருக்கிறார். மதிய உணவும் அங்கேயேதான். ஒரு நாளில் 15-20 நோயாளிகளை பார்ப்பதாக சொல்கிறார். பெரும்பாலும் காய்ச்சல், இருமல், ரத்த அழுத்த பிரச்சினைகள், தொடர் வலி மற்றும் சுத்தப்படுத்தி கட்டு போட வேண்டிய சிறிய காயங்கள் முதலிய சிக்கல்களுக்குதான் நோயாளிகள் வருகின்றனர். (அவரின் மருத்துவ மற்றும் மருந்து விற்பனையாளர் தகுதிகள் பற்றி எதுவும் என்னிடம் சொல்லவில்லை). ஆலோசனைக்கு என எந்த கட்டணமும் நசீர் கேட்பதில்லை. மருந்துகளுக்கான விலை மட்டும்தான் பெறுகிறார் (அவரின் வருமானமும் அதுதான்). அங்கிருக்கும் மக்களுக்கு அதிகம் தேவைப்படும் மருந்துகளையும் வாங்கி சேமித்து வைக்கிறார்.
இன்னொரு மருந்தக மையத்தில் 65 வயது முகமது சிதிக் சாச்சூ தன் ரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்கிறார். சுற்றுலா பயணிகளுக்கு தோல் பொருட்கள் விற்பவர் அவர். ஸ்ரீநகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் அவரின் பித்தப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. “ஆரம்ப சுகாதார நிலையும் பயனற்றது. யாரும் அங்கு செல்வதில்லை. அருகே இருப்பதாலும் மருந்துகள் கிடைப்பதாலும் இந்த மருத்துவ மையங்களை நாங்கள் விரும்புகிறோம்,” என்கிறார் அவர்.
சாச்சூ செல்லும் மருந்தகம் பிலால் அகமது பட்டுடையது. ஸ்ரீநகரின் தெற்குப் பகுதியிலுள்ள நோவ்கமில் பட் வசிக்கிறார். உரிமம் பெற்ற மருந்து விற்பனையாளரான அவர் ஜம்மு கஷ்மீர் மருந்தக சபை கொடுத்த சான்றிதழை எடுத்துக் காட்டுகிறார்
மர அலமாரிகளில் மருந்துகளும் நோயாளிகளுக்கான படுக்கையும் கொண்டிருக்கும் மருந்தகத்தில் காலை 11 மணி தொடங்கி மாலை 7 மணி வரை, 10லிருந்து 25 நோயாளிகளை பார்ப்பதாக பட் சொல்கிறார். அவர்களில் பெரும்பாலானோர் சிறிய சிக்கல்களுக்காக வருகின்றனர். அவரும் ஆலோசனைக்கான கட்டணம் வாங்குவதில்லை. மருந்துக்கான் விலை மட்டும் பெற்றுக் கொள்கிறார்.
தல் ஏரிக்கு ஒரு மருத்துவமனை தேவை என அவர் வலியுறுத்துகிறார். “ஒரு பெண் மருத்துவரேனும் இருக்க வேண்டும். பேறுகால மருத்துவ மையம், பெண்களுக்கு தேவையான சேவைகளளிக்க இருக்க வேண்டும். மருத்துவப் பரிசோதனைகளுக்கான வசதிகள் இல்லை. குறைந்தபட்சம் மக்களின் சர்க்கரை அளவையேனும் பரிசோதிக்க வேண்டியிருக்கிறது. இங்கிருக்கும் பெரும்பாலானோர் தொழிலாளர்கள். ஏழைகள். சுகாதார மையத்தில் இந்த வசதிகள் இருந்தால் ஒரு ஐந்து ரூபாய் மாத்திரைக்காக கடும் குளிரில் என்னை தேடி அவர்கள் வர மாட்டார்கள்.”
அந்த நாளின் முற்பகுதியில் பிலால் ஒரு புற்றுநோயாளியை அவரது வீட்டில் பரிசோதித்தார். அவர் ஸ்ரீநகரின் ஷெரி கஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நான் மருந்து ஏற்ற வேண்டியிருந்தது,” என்கிறார் அவர். அந்த மருத்துவமனை ஏரியின் கிழக்குக் கரையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. “அந்த நேரத்தில் நான் மருந்தகத்தை மூட வேண்டியிருக்கிறது. அவர் ஒரு மரப்படகை ஓட்டிக் கொண்டிருந்த ஏழை. அவரிடம் நான் கட்டணம் கேட்க முடியாது.”
மாலை 4 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டபிறகு, மக்கள் மருந்தக மருத்துவர்களை சார்ந்திருக்கும் சூழல் அதிகமாகிறது. “நான் வீட்டில் இருக்கும்போது இரவில் கூட அழைப்பு வருகிறது,” என்னும் பிலால் ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார். ஒரு முதிய பெண் மூச்சற்று கிடப்பதாக அவரின் குடும்பம் அழைத்தது. அப்பெண் ஸ்ரீநகரில் சமீபத்தில்தான் அறுவை சிகிச்சை செய்திருந்தார். சர்க்கரை நோய் இருந்தது. இதய பிரச்சினைகளும் இருந்தன. “நள்ளிரவுக்கு பிறகு அவர்கள் என்னை தொடர்பு கொண்டபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் தோன்றியது. மருத்துவமனைக்கு அவரை வேகமாக கொண்டு செல்லுமாறு (தொலைபேசியில்) அறிவுறுத்தினேன். அவர்கள் அழைத்து சென்றார்கள். மாரடைப்பு என கண்டுபிடிக்கப்பட்டது. நல்லவேளையாக அவர் உயிர் பிழைத்தார்.”
ஏரியின் உள்ளே, ஊடகங்களோ புகைப்படக் கருவிகளோ எட்ட முடியாத தீவுகளில் வரும் பிரச்சினைகள் அதிக தீவிரத்தை அடையும். குளிர்கால மாதங்களில் படகுகளை ஏரியில் சில அடிகளுக்கு நகர்த்தவே ஆறு அங்குல அடர்த்தி கொண்ட பனிப்படலங்களை உடைக்க வேண்டியிருக்கும். கோடை காலத்தில் 30 நிமிடங்கள் பிடிக்கும் ஒரு படகு பயணம், ஏரி உறைந்த பிறகு மூன்று மணி நேரங்கள் வரை பிடிக்கும்.
ஏரிக்குள் இருக்கும் திண்ட் பகுதியில் வாழும் 24 வயது ஹடிசா பட், “பகலும் இரவும் மருத்துவர்கள் இருக்கக்கூடிய ஒரு மையம் எங்களுக்கு தேவை,” என்கிறார். “பரிசோதனைக்கான வசதிகளும் தேவை. பகலிலும் மாலையில் எவ்வளவு நேரமானாலும் கூட நாங்கள் நசீரின் மருந்தகத்துக்கே செல்கிறோம். இரவு நேரத்தில் எவருக்கேனும் உடல் நலம் குன்றினால், ஒரு படகையும் துடுப்பையும் கண்டுபிடித்து பாதிக்கப்பட்டவரை ரைனாவாரிக்கு அழைத்து செல்ல வேண்டும். வளர்ந்தவர் கூட இரவை தாக்குப்பிடிக்க முடியும். குழந்தைகள் தாக்குப்பிடிக்க முடியாது,” என்கிறார் ஹடிசா. அவரின் நான்கு சகோதரர்கள் விவசாயிகளாகவும் படகோட்டிகளாகவும் பருவகாலம் சார்ந்து பணிபுரிகிறார்கள்.
மார்ச் 2021ல் அவரின் தாய் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டபோது தெற்கு ஸ்ரீநகரின் பர்சுல்லாவில் இருக்கும் அரசு எலும்பு மூட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. நேரு பூங்காவிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மருத்துவமனை. “அவரின் காயம் ஆபத்து நிறைந்ததாக இல்லை என்றாலும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இரண்டு மணி நேரங்கள் (மற்றும் ஆட்டோ கட்டணங்கள்) ஆனது,” என்கிறார் ஹடிசாவின் சகோதரரான அபித் ஹுசைன் பட். “அதற்கு பிறகும் நாங்கள் இரண்டு முறை அந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது. ஏனெனில் அவருக்கு சிகிச்சை அளிக்கும் வசதி இங்கு பக்கத்தில் எங்கும் இல்லை.”
ஏரியிலிருந்து மக்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சிக்கலை தீர்க்கும் பொருட்டு டிசம்பர் 2020ல் தாரிக் அகமது பட்லூ என்கிற படகு உரிமையாளர் அவரின் படகை நீரில் செல்லும் அவசர ஊர்தியாக மாற்றியமைத்தார். அப்போது வந்த ஊடகச் செய்திகள் இப்படியான அவசர ஊர்தியை அவர் கொண்டு வர என்ன காரணம் என எழுதின. அவரது அத்தையின் மாரடைப்பும் அவருக்கே வந்த கோவிட் தொற்றும்தான் அந்த முடிவுக்கு அவரை தள்ளின. ஓர் அறக்கட்டளையிடமிருந்து நிதியுதவி பெற்றார். அவரின் அவசர ஊர்தியில் ஒரு ஸ்ட்ரெச்சர் இருக்கிறது. சக்கர நாற்காலி இருக்கிறது. ஆக்சிஜன் சிலிண்டரும் முதலுதவி பெட்டியும் முகக்கவசமும் ரத்த அழுத்தம் காட்டும் உபகரணமும் இருக்கின்றன. 50 வயது பட்லூ, ஒரு மருத்துவரையும் ஒரு உதவியாளரையும் கூடிய விரைவில் படகில் கொண்டு வர முயற்சிப்பதாக கூறுகிறார்.
ஸ்ரீநகரில் உள்ள சுகாதார அதிகாரிகளும் அவர்களின் பங்குக்கு சிரமம் அனுபவிக்கின்றனர். தல் ஏரியில் இருக்கும் குறைவான வசதிகள் பற்றி ஒரு மூத்த அதிகாரியிடம் கேட்டபோது, ஸ்ரீநகரின் கன்யாரில் இருக்கும் அவரின் மருத்துவமனையிலேயே குறைவான ஊழியர்கள்தான் இருப்பதாக குறிப்பிடுகிறார். மாவட்ட மருத்துவமனை (ஜவஹர்லால் நேரு மருத்துவமனை) கோவிட் 19 தொற்று மருத்துவமனையாக மார்ச் 2020-ல் மாற்றப்பட்ட பிறகு, கோவிட் அல்லாத பிற நோயாளிகள் அவரின் மருத்துமனைக்கு வருவதாக சொல்கிறார். அதிகரித்த எண்ணிக்கைக்கு ஏற்ப ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. “வழக்கமாக ஒரு நாளுக்கு 300 நோயாளிகள் வருவார்கள். ஆனால் இப்போது 800-900 நோயாளிகள் வருகின்றனர். சமயங்களின் 1500 பேர் கூட வருவதுண்டு,” என இவ்வருட ஜனவரி மாதம் அவர் என்னிடம் கூறினார்.
பெரிய நோய்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக சுகாதார மையங்களின் ஊழியர்கள் அதிக இரவு நேர வேலைகள் பார்க்க அழைக்கப்பட்டிருப்பதாக அதிகாரி சொல்கிறார். அதனால்தான் ஏரியின் கூலி மொகல்லா பகுதியின் சுகாதார மைய ஊழியர்கள் அங்கு இருப்பதில்லை என்றும் குறிப்பிடுகிறார். சுகாதார மையங்களில் பணிபுரியும் பெண் சுகாதார ஊழியர்கள் கோவிட் தொற்றின் தடம் அறியும் வேலையிலும் பிரதானமாக இயங்கினார்கள். அவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்திருக்கிறது.
கூலி மொகல்லாவின் சுகாதார மையத்தில் 10 வருடங்களாக பணிபுரியும் 50 வயது இஃப்திகார் அகமது வஃப்ஃபை, ஒரு மாதத்தில் மட்டும் கன்யார் மருத்துவமனையில் இரவு வேலை பார்ப்பதற்கு ஐந்து முறை அழைக்கப்படுவதாக சொல்கிறார். விளைவாக அடுத்த நாள் காலை சுகாதார மையத்துக்கு அவரால் வர முடிவதில்லை. “இதற்கென தனி ஊதியம் எதுவும் எங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. ஆனாலும் நாங்கள் செய்கிறோம்,” என்கிறார் அவர். “எல்லா இடங்களிலும் ஊழியர்கள் குறைவாக இருக்கிறார்கள். இந்த தொற்றுநோய் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டது.”
மூன்று வருடங்களாக சுகாதார மையத்துக்கு மருத்துவர் ஒதுக்கப்படவில்லை என்கிறார் அவர். ஊழியர்கள் குறைவாக இருக்கும் பிரச்சினையை பற்றி கேள்வி எழுப்பியபோது சமாளித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். “மையத்தை சுத்தப்படுத்தும் வேலையை கூட நானே செய்கிறேன். சில நேரங்களில் நோயாளிகளுக்கு நானே ஊசியும் போடுகிறேன். அவர்கள் கேட்டால் ரத்த அழுத்தத்தையும் பரிசோதிக்கிறேன்,” என்கிறார் வஃப்ஃபாய். அவருக்கான வேலையை தாண்டிய வேலைகள் இவை என்கிறார். “ஆனால் நோயாளிக்கு இது புரியாது. எனவே உங்களால் முடிந்த வகையில் நீங்கள் உதவவே விரும்புவீர்கள்.”
வஃப்ஃபாயும் இல்லாதபோது மூடியிருக்கும் சுகாதார மையத்தை தாண்டி தல் ஏரியின் மக்கள் எப்போதும் இயங்கும் மருந்தக மருத்துவர்களை நாடி செல்கின்றனர்.
தமிழில் : ராஜசங்கீதன்