ஜூன் மாதத்தையும், அதைத் தொடர்ந்து  வரப்போகும் மழைக்காலத்தையும் நினைத்து அஞ்சுகிறார் விவசாயி சுனந்தா சூபே. ‘மோட்டே கோகல்கே’ என்று உள்ளூரில் அழைக்கப்படும் ஆப்பிரிக்கப் பெரு நத்தைகள் இந்தக் காலக்கட்டத்தில்தான் அவரது ஒரு ஏக்கர் விளைநிலத்தை நாசமாக்கும்.

“நெல், சோயா மொச்சை, நிலக்கடலை, கருப்பு காராமணி, சிவப்புக் காராமணி என எதை சாகுபடி செய்தாலும் அவற்றை இந்த நத்தைகள் உண்ணும்,” என்கிறார் அவர். மா, சப்போட்டா, பப்பாளி, கொய்யா என எந்தப் பழவகையும் அவற்றிடம் இருந்து தப்பிக்க முடியாது. “பல்லாயிரக்கணக்கான நத்தைகள் வரும்,” என்கிறார் இந்த 42 வயது விவசாயி.

மகாராஷ்டிராவில் பட்டியல் பழங்குடியான மகாதேவ் கோலி சமுதாயத்தை சேர்ந்தவரான சுனந்தா, சாஸ்கமான் அணைக்கு அருகே தனது தாயோடும் சகோதரனோடும் வசிக்கிறார். அணையின் ஒருபுறம் இவரது வீடும், மறுபுறம் இவரது வயலும் உள்ளன. எனவே அரைமணி நேரம் படகு வலித்தால்தான் வீட்டிலிருந்து நிலத்துக்கோ, நிலத்தில் இருந்து வீட்டுக்கோ செல்ல முடியும்.

ஆப்பிரிக்கப் பெருநத்தைகள் ( Achatina fulica ) இந்தியாவில் பெருவேகத்தில் வளரும் உயிரினமாக உள்ளன என்கிறது குளோபல் இன்வேசிவ் ஸ்பீஷிஸ் டேட்டாபேஸ் . இந்தியாவில் பலவிதமான பயிர்களை உண்டு வாழும் ஆப்பிரிக்கப் பெரு நத்தைகள், ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலத்தில் திவய் மலையின் அடிவாரத்தில் உள்ள வயல்களை ஆக்கிரமிக்கும். சமயத்தில் அவை சில மாதங்களுக்குக் கூட இருக்கும். 2022 இறுதியில் இந்த செய்தியாளரிடம் பேசிய சுனந்தா கடந்த மூன்றாண்டுகளாக இந்தப் பிரச்சனையை சந்திப்பதாக கூறினார்.

Sunanda Soope (left), a farmer in Darakwadi village of Pune district says that her farm (right) has been affected by Giant African Snails
PHOTO • Devanshi Parekh
Sunanda Soope (left), a farmer in Darakwadi village of Pune district says that her farm (right) has been affected by Giant African Snails
PHOTO • Devanshi Parekh

புனே மாவட்டம், தரக்வாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுனந்தா சூபே (இடது) தனது விளை நிலம் (வலது) ஆப்பிரிக்கப் பெருநத்தைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்

Giant African Snails on the trunk of papaya tree (left) and on young mango plant (right) in Sunanda's farm. She says, 'The snails destroyed everything'
PHOTO • Sunanda Soope
Giant African Snails on the trunk of papaya tree (left) and on young mango plant (right) in Sunanda's farm. She says, 'The snails destroyed everything'
PHOTO • Sunanda Soope

சுனந்தாவின் நிலத்தில் உள்ள பப்பாளி மரத்தின் அடிப்பாகத்திலும் (இடது) மாமரக் கன்றிலும் (வலது) ஏறிய ஆப்பிரிக்கப் பெரு நத்தைகள்

“அவை முதலில் எப்படி வந்தன என்று தெரியவில்லை,” என்கிறார் நாராயண்காவ்ன் என்ற ஊரில் உள்ள வேளாண் அறிவியல் மையத் தொடர்பு அலுவலரான டாக்டர் ராகுல் காட்கே. “ஒரு நத்தை ஒரு நாளில் ஒரு கிலோமீட்டர் தூரம் செல்லும்; அவை முட்டையிட்டு குஞ்சு பொறித்து இனப்பெருக்கம் செய்யும்,” என்று கூறும் அவர், ஜனவரி மாதம் முடக்க நிலைக்குச் செல்லும் உயிரினங்கள், சுற்றுப்புறம் வெப்பமாகி, உயிர்வாழ உகந்த தட்பவெட்ப நிலை தோன்றும்போது தங்கள் கூட்டில் இருந்து வெளியே வரும் என்கிறார்.

“நிலத்தில் நான் கருப்புக் காராமணி, சிவப்புக் காராமணி விதைத்தேன். நத்தைகள் எல்லாவற்றையும் நாசமாக்கிவிட்டன,” என்கிறார் சுனந்தா. “50 கிலோ விளையும் என்று நினைத்தேன். ஆனால், ஒரு கிலோதான் கிடைத்தது.” வட இந்தியாவில் ராஜ்மா என்று அழைக்கப்படும் சிவப்புக் காராமணி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கும். சுனந்தா விதைத்த கருப்புக் காராமணியும், நிலக்கடலையும்கூட நத்தைகளிடம் இருந்து தப்பவில்லை. நிலக்கடலையில் மட்டும் 10 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடுகிறார் அவர்.

“மழைக்காலத்தில் விதைக்கும் சம்பாப் பருவம், தீபாவளிக்குப் பிறகு வரும் குறுவைப் பருவம் என இரண்டு விதைப்புப் பருவங்கள் உண்டு,” என்கிறார் அவர். ஆனால், கடந்த ஆண்டு இந்த நத்தை தொல்லை காரணமாக மழைக்காலம் வந்து இரண்டு மாத காலத்துக்கு தமது நிலத்தை கரம்பாகவே போட்டுவைக்கும் நெருக்கடி ஏற்பட்டதாக கூறுகிறார் சுனந்தா. “கடைசியாக டிசம்பர் மாதம் பச்சைக் கொண்டைக் கடலை, கோதுமை, நிலக்கடலை, வெங்காயம் ஆகியவற்றை விதைத்ததாக கூறுகிறார்,” அவர்.

மகாராஷ்டிராவில் உள்ள விளை நிலங்களில் 5 முதல் 10 சதவீதம் இந்த ஆப்பிரிக்கப் பெரு நத்தைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார் டாக்டர் காட்கே. “இளம் தாவரங்களின் மென்மையான தண்டுப் பகுதிகள் இந்த நத்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. இதுதான் சேதாரத்தை அதிகப்படுத்துகிறது. விவசாயிகளுக்கும் இதனால் இழப்பு ஏற்படுகிறது.”

Nitin Lagad on his 5.5 acre farm in Darakwadi village, also affected by the Giant African Snails. He had to leave his farm empty for four months because of the snails.
PHOTO • Devanshi Parekh
Nitin Lagad on his 5.5 acre farm in Darakwadi village, also affected by the Giant African Snails. He had to leave his farm empty for four months because of the snails.
PHOTO • Devanshi Parekh

ஆப்பிரிக்கப் பெரு நத்தைகளால் பாதிக்கப்பட்ட நிதின் லகட் என்பவர் தனது 5.5 ஏக்கர் நிலத்தில் இருக்கிறார். நத்தை தொல்லை காரணமாக தனது நிலத்தை நான்கு மாதம் சும்மா போட்டுவைத்தார் இவர்

Left: Nitin has now sown onion but the snails continue to affect the crop.
PHOTO • Devanshi Parekh
Right: Eggs laid by the snails
PHOTO • Nitin dada Lagad

நிதின் விதைத்த வெங்காயப் பயிரையும் நத்தைகள் தொடர்ந்து அழிக்கின்றன. வலது: நத்தைகள் இட்ட முட்டைகள்

அதே தரக்வாடியை சேர்ந்த 35 வயது விவசாயி நிதின் லகட் ஒவ்வோர் ஆண்டும் நத்தைகளால் இப்படி பாதிக்கப்படுகிறார். “இந்த ஆண்டு 70 முதல் 80 மூட்டை (தோராயமாக 6,000 கிலோ), சோயா மொச்சை விளையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், சுமார் 40 மூட்டைதான் கிடைத்தது.”

தன்னுடைய 5.5 ஏக்கர் நிலத்தில் வழக்கமாக மூன்று போகம் சாகுபடி செய்யக்கூடியவர் இவர். ஆனால், இந்த ஆண்டு நத்தைகள் ஏற்படுத்திய சேதம் காரணமாக இரண்டாவது போகத்தில் அவரால் எதுவுமே பயிரிட முடியவில்லை. “நான்கு மாதம் நிலத்தை சும்மா போட்டுவைத்தோம். இது ஒரு சூதாட்டம் மாதிரிதான் என்று தெரிந்தாலும், இந்த முறை வெங்காயம் விதைத்தோம்,” என்கிறார் அவர்.

மெல்லுடலி கொல்லிகள் (molluscicides) போன்ற வேளாண் வேதிப்பொருட்கள் நல்ல பலனைத் தரவில்லை. “நாங்கள் மண்ணில் மருந்தடிக்கிறோம். ஆனால், நத்தைகள் மண்ணுக்கு கீழே இருப்பதால் அவை பலன் தரவில்லை. அவற்றைப் பிடித்து மருந்து அடித்தாலும் அவை ஓட்டுக்கு உள்ளே இழுத்துக் கொள்ளும்,” என்கிறார் நிதின். “மருந்துகள் பலன் தரவே இல்லை,” என்கிறார் அவர்.

Left: Giant African Snails near Sunanda Soope’s farm.
PHOTO • Devanshi Parekh
Right: Shells of dead Giant African Snails which were collected after they were killed in a drum of salt water
PHOTO • Devanshi Parekh

இடது: சுனந்தா சூபே நிலத்துக்கு அருகே ஆப்பிரிக்கப் பெரு நத்தைகள். வலது: உப்பு நீர் டிரம்மில் போட்டு கொல்லப்பட்ட பிறகு சேகரிக்கப்பட்ட ஆப்பிரிக்கப் பெரு நத்தைகளின் ஓடுகள்

வேறு எந்த  மாற்று வழியும் இல்லாத நிலையில், நத்தைகளை கைகளால் சேகரிப்பதாக கூறுகிறார்கள் தரக்வாடி விவசாயிகள். பிளாஸ்டிக் பைகளை கையுறை போல அணிந்துகொண்டு நத்தைகளைப் பிடித்து உப்பு நீர் நிரப்பிய ஒரு ட்ரம்மில் போடுவதாக அவர்கள் கூறுகிறார்கள். முதலில் அதிரும் நத்தைகள் பிறகு இறக்கின்றன.

இப்படி போடப்படும் நத்தைகள் “தொடர்ந்து டிரம்மில் இருந்து வெளியில் வந்துகொண்டே இருக்கும். மீண்டும் மீண்டும் நாங்கள் அவற்றை உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கவேண்டும். ஐந்து முறை இப்படி மீண்டும் மீண்டும் உள்ளே தள்ளிய பிறகுதான் அவை இறக்கும்,” என்கிறார் சுனந்தா.

நிதினும் அவரது சில நண்பர்களும் சேர்ந்து அவரது 5.5 ஏக்கர் நிலத்தில் ஒரே நேரத்தில் 400-500 நத்தைகளைப் பிடித்தனர். வெங்காயம் விதைப்பதற்கு முன்பாக தனது நிலத்தில் இருந்து நத்தைகளை அழித்து சுத்தம் செய்தார். அவர் செய்ய முடிந்தது அதுதான். ஆனால், இன்னும் நத்தைகளைப் பார்க்க முடிகிறது. தனது நிலத்தில் சுமார் 50 சதவீதத்தை நத்தைகள் அழித்துவிட்டதாக கூறுகிறார் அவர்.

“தினம் நாங்கள் நூற்றுக்கணக்கான நத்தைகளைப் பிடித்து அழித்து எங்கள் விளை நிலத்தின் பெரும்பகுதியை சுத்தம் செய்துவிடுகிறோம். ஆனால், மறுநாள் மீண்டும் இதே எண்ணிக்கையில் நத்தைகள் காணப்படுகின்றன,” என்கிறார் சுனந்தா.

“ஜூன் மாதம் அவை மீண்டும் வரத் தொடங்கும்,” என்று அச்சத்தோடு கூறுகிறார் அவர்.

தமிழில்: அ.தா.பாலசுப்ரமணியன்

Student Reporter : Devanshi Parekh

देवांशी पारेख ने अभी हाल-फ़िलहाल फ्लेम यूनिवर्सिटी से स्नातक की पढाई पूरी की है. दिसंबर 2022 से लेकर फरवरी 2023 के बीच उन्होंने पारी से इंटर्नशिप भी किया है.

की अन्य स्टोरी Devanshi Parekh
Editor : Sanviti Iyer

संविति अय्यर, पीपल्स आर्काइव ऑफ़ रूरल इंडिया में बतौर कंटेंट कोऑर्डिनेटर कार्यरत हैं. वह छात्रों के साथ भी काम करती हैं, और ग्रामीण भारत की समस्याओं को दर्ज करने में उनकी मदद करती हैं.

की अन्य स्टोरी Sanviti Iyer
Translator : A.D.Balasubramaniyan

A.D.Balasubramaniyan, is a bilingual journalist, who has worked with leading Tamil and English media for over two decades from Tamil Nadu and Delhi. He has reported on myriad subjects from rural and social issues to politics and science.

की अन्य स्टोरी A.D.Balasubramaniyan