தொலைவில் புழுதி மண்டலத்தினூடே மோட்டார் சைக்ளின் ஃபட்ஃபட் சத்தம் கேட்கிறது. நீலநிறச் சேலையும், பெரிய மூக்குத்தியும், முகம் கொள்ளாச் சிரிப்புமாய் வந்திறங்குகிறார் அடைக்கலச் செல்வி. `வீடு பூட்டியிருக்கும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வந்துடறேன்`, என்று சற்று நேரம் முன்பு, தன் மிளகாய்த் தோட்டத்தில் இருந்து நமக்கு செய்தி அனுப்பியிருந்தார் மார்ச் மாதம்தான். ஆனாலும் ராமநாதபுரத்தின் மதியநேரச் சூரியன் நம்மைச் சுட்டெரிக்கிறார். தனது மோட்டார் சைக்கிளை கொய்யா மரத்தின் குளுமையான நிழலில், நிறுத்தி விட்டு, வீட்டைத் திறந்து, நம்மை வரவேற்கிறார் அடைக்கலச் செல்வி. தொலைவில் சர்ச்சின் மணி ஒலிக்கிறது. குடிக்க நீர் கொண்டு வருகிறார். குடித்து விட்டு, பேச அமர்கிறோம்.
பேச்சு அவரது மோட்டார் சைக்கிளில் இருந்து தொடங்குகிறது. அவர் வயதுப் பெண்கள் கிராமங்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது கொஞ்சம் அதிசயம்தான். `ஆனா, ரொம்ப உதவியா இருக்கு`, எனச் சொல்லிச் சிரிக்கிறார், 51 வயதான அடைக்கலச் செல்வி. ` 8ஆவது படிக்கறப்போ, எங்கண்ணன் சொல்லிக் கொடுத்தாரு.. ஏற்கனவே சைக்கிள் ஓட்டத் தெரியும்கறதனால, கத்துக்கறது கஷ்டமாயில்ல`.
இதில்லன்னா ரொம்பக் கஷ்டப்பட வேண்டியிருந்திருக்கும் என்கிறார் அவர். `என் வீட்டுக்காரரு பல வருஷமா வெளியூர்ல இருக்காரு. அவர் ப்ளம்பர் வேலை பாக்குறவர். மொதல்ல சிங்கப்பூர், அப்புறம் துபாய், கத்தார்னு வேலைக்குப் போனார். நான் தனியாளா பொண்ணுங்கள வளத்துகிட்டே, விவசாயத்தையும் பாத்துகிட்டேன்`.
ஜே. அடைக்கலச் செல்வி நினைவு தெரிந்த நாளில் இருந்தே விவசாயம் செய்து வருபவர். தரையில் சம்மணமிட்டு நேராக அமர்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவிலில் வேளாண் குடியில் பிறந்தார். அது அவர் கணவரின் ஊராரன முதுகளத்தூர் பி.முத்துவிஜயபுரத்தில் இருந்து ஒன்றரை மணிநேரம் பயணம் செய்ய வேண்டிய தொலைவில் உள்ளது. `என் அண்ணன்கள் எல்லாம் சிவகங்கைல இருக்காங்க. அங்க நெறய போர் கிணறுகள் இருக்கு. இங்க விவசாயத்துக்கு மணிக்கு 5 ரூபாய்னு தண்ணி வாங்க வேண்டியிருக்கு. விவசாய நீர் ராமநாதபுரத்தில் பெரிய பிசினஸ்.
மிகச் சிறு வயதிலேயே தன் பெண் குழந்தைகளை விடுதியில் படிக்க சேர்த்து விட்டார். தோட்ட வேலைகளை முடித்துக் கொண்டு, விடுதிக்குச் சென்று அவர்களைப் பார்த்து விட்டு வந்து வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும். தற்போது 6 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார். அதில் ஒரு ஏக்கர் மட்டும்தான் அவரது சொந்த நிலம். 5 ஏக்கர்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டவை. `நெல்லு, மிளகாய், பருத்தி எல்லாம் சந்தைக்கு அனுப்பிருவோம். கொத்தமல்லி, வெண்டைக்காய், கத்திரிக்காய், சுரைக்காய், சின்ன வெங்காயமெல்லாம் வீட்டுத் தேவைக்கு வெச்சிக்கறது…`
அறையில் கட்டப்பட்ட பரணைச் சுட்டிக் காட்டுகிறார். `அறுவடைக்கப்புறம் நெல்லு மூட்டைகள பரண்ல போட்டுருவேன். எலி திங்காம இருக்க.. அப்பறம் மிளகாய, சமையல் ரூம்ல இருக்கற பரண்ல போட்டுருவேன்`. அதனால, நாம வீட்டுல புழங்க இடம் இருக்கும் என்கிறார். 20 வருஷம் முன்னாடி கட்டும் போதே இத யோசிச்சி கட்டிட்டேன் என்கிறார் வெட்கப் புன்னகையுடன்.
வீட்டின் முன்வாசல் கதவில், பூவின் மேல் நிற்கும் மேரி மாதாவின் சிலை செதுக்கப்பட்டிருக்கிறது. இதுவும் அவரது ஐடியாதான். உள்ளே வரவேற்பறையின் பச்சை நிறச் சுவற்றில் பூக்களும், யேசு மற்றும் மேரிமாதாவின் ஓவியங்களும், அவரது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களும் உள்ளன.
இது போன்ற அழகான விஷயங்களைத் தாண்டி, வீட்டிலிருக்கும் பரண்கள், விவசாய உற்பத்தியை நல்ல விலை வரும் வரை பத்திரமாக சேமித்து வைக்க உதவுகின்றன. அது அவருக்கு பெரும்பாலும் நன்மையாகவே முடிந்திருக்கிறது. நெல்லுக்கு அரசாங்கம் கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.19.40 தருகிறது. ஆனால், உள்ளூர் கமிஷன் ஏஜெண்ட் ரூ 13 க்கு வாங்குகிறார்.
`நான் ரெண்டு குவிண்டால் நெல்லு அரசாங்கக் கொள்முதலுக்குக் குடுத்தேன். மிளகாயையும் இதே மாதிரி அரசாங்கமே கொள்முதல் செஞ்சா என்ன?`, எனக் கேட்கிறார்.
ஏற்ற இறக்கங்கள் இல்லாமல், மிளகாய்க்கு தொடர்ச்சியாக நல்ல விலை கிடைத்தல் உற்பத்தியாளர்களுக்கு மிக முக்கியம் என்பது அவர் வாதம். `நெல்லு அளவுக்கு மிளகாய்க்குத் தண்ணி தேவையில்லை. அதிக மழையோ, வயல்ல தேங்கற அளவுக்குத் தண்ணியோ மிளகாய்க்கு ஆகாது. இந்த வருஷம், மழை எப்பத் தேவையில்லையோ அப்பப் பேஞ்சிது. இளம்பயிருக்கு, பூப்பூக்கறதுக்கு முன்னாடி மழ பேஞ்சா நல்லது. ஆனா, அப்ப பேயல`. அவர் பருவநிலை மாற்றம் என்னும் வார்த்தையைச் சொல்ல வில்லை. ஆனால், தவறான பருவத்தில், மிக அதீதமான மழை என்பதன் மூலம் அதைத்தான் சுட்டுகிறார். இதனால், அவரது வழக்கமான மகசூலில் இருந்தது இந்த ஆண்டு 20% மட்டுமே கிடைத்தது. `இந்த வருஷம் பெரும் நஷ்டம்`, என்கிறார். இந்த ஆண்டு, அவர் விளைவிக்கும் ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு கிலோவுக்கு 300 ரூபாய் என நல்ல விலை கிடைத்தும் இதுதான் நிலைமை.
ஒருகாலத்தில் மிளகாய் படி ரூபாய் 1-2 வரை இருந்தது.. அப்போ கத்திரிக்காய் கிலோ 25 பைசா விலை என நினைவு கூர்கிறார்.. `ஏன், பருத்தி கூட முப்பது வருஷம் முன்னாடி கிலோ 3-4 ரூபாய்க்குப் போச்சு. அப்போ, வேலையாள் கூலி கூட நாளைக்கு 5 ரூபாயா இருந்துச்சி.. இன்னிக்கு 250 ரூபாயா ஆயிருச்சு.. ஆனா, பருத்தி விலை கிலோ 80 ரூபாய் தான்`. அதாவது வேளாண் கூலி 50 மடங்கு உயர்ந்திருக்கிறது.. ஆனால், வேளாண் பொருள் விலை 20 மடங்கு மட்டுமே. ஆனால், தனியொரு விவசாயி இதற்கு என்ன செய்ய முடியும்? அமைதியாக இதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.
அடைக்கலச் செல்வியும் அதைத்தான் செய்கிறார். அவர் பேச்சில் அது தெரிகிறது. `மிளகாய் வயல் இந்தப்பக்கம் இருக்கு`, என வலதுபுறம் கையைக் காட்டுகிறார். `இன்னும் கொஞ்சம் நெலம் இந்தப்பக்கம்.. அப்புறம் கொஞ்சம் அந்தப்பக்கம்`, என அவரது கைகள், காற்றில் கோலங்களை வரைகின்றன. `எங்கிட்ட மோட்டார் சைக்கிள் இருக்கறதுனால, நான் யாரையும் நம்பி இருக்கறதில்ல.. வயல்ல மூட்டையக் கட்டி, கேரியர்ல வச்சி எடுத்துட்டுப் போயிருவேன்.. மத்தியானச் சாப்பாட்டுக்குக் கூட போயிட்டு வந்துருவேன்.` அடைக்கலச் செல்வி சிரித்துக் கொண்டே சொல்கிறார். அவரது பேச்சில் தனித்துவமான ராமநாதபுரப் பேச்சு வழக்கு மணக்கிறது.
`இந்த மோட்டார் சைக்கிள வாங்கறதுக்கு முன்னாடி (2005 க்கு முன்), கிராமத்துல யார்கிட்டயாவது மோட்டார் சைக்கிள கடன் வாங்கிட்டுப் போயிட்டு வந்துருவேன்.` TVS மோட்டார் சைக்கிள் ஒரு நல்ல முதலீடு என்பது அவரது உறுதியான நம்பிக்கை. கிராமத்தில் மற்ற பெண்களையும் மோட்டார் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ள ஊக்குவிக்கிறார். `பலபேரு ஏற்கனவே கத்துகிட்டாங்க`, எனச் சிரித்துக் கொண்டே தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்து வயலுக்குக் கிளம்புகிறார். சிவப்புக் கம்பளம் விரித்தாற் போல, அறுவடைக்குப் பின் காயப் போட்டிருக்கும் மிளகாய் வயல்களினூடே நாங்கள் அவரைப் பின் தொடர்கிறோம்.. இந்த குண்டு மிளகாய்கள் பின்னாளில் தொலைதூர வீடுகளில், சாம்பாரில் கொதிக்கப்போகின்றன.. உணவுக்குச் சுவையூட்டப் போகின்றன.
*****
"உன்னை
முதலில் பசுமையாகக் கண்டேன்.. பின்னர் பழுத்து சிவப்பாக மாறி, காண்பதற்கு
அழகாவும், சுவையாகவும் உணவில் கலந்தாய்..."
மகான்
புரந்தர தாசரின் பாடல் வரிகள்
ஆச்சரியமூட்டும் இவ்வாக்கியம், பல வகையான அர்த்தங்களைத் தரவல்லது. இலக்கியங்களில் மிளகாய் முதன்முதலாக இப்பாடலில்தான் குறிப்பிடப்படுகிறது என்கிறார் உணவு வரலாற்றாசிரியர் கே.டி. அச்சைய்யா, `இந்திய உணவு, ஒரு வரலாற்றுக் குறிப்பேடு`, என்னும் தனது நூலில். `இன்று மிளகாய் நம் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. இது பழங்காலத்தில் நம் நாட்டில் இருந்ததில்லை எனச் சொன்னால் நம்புவது கடினம்,` என்கிறார் மேலும். தென்னிந்தியாவின் மகான் புரந்தர தாசர் வாழ்ந்த காலம் 1480 முதல் 1564 வரை. எனவே, மிளகாய் இந்தக் காலகட்டத்தில் நம்மிடையே இருந்தது என்பதற்கான சான்று.
`ஏழைகளின் ரட்சகன். உணவில் சுவை கூட்டுபவன்.. கடித்தால் பாண்டுரங்க விட்டலனைக் கூட மறக்கச் செய்யும் காரம் கொண்டவன்`, என்கிறது புரந்தரதாசரின் பாடல் மேலும்.
மிளகாய், தாவரவியலில் `Capsicum annum’ என அழைக்கப்படுகிறது. `Romancing the Chilli,’ என்னும் தங்கள் நூலில், சுனிதா கொகேட் மற்றும் சுனில் ஜலிஹல், `தென் அமெரிக்காவில் இருந்தது போர்த்துகீசியர்கள் வழியே, மிளகாய் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது`, என்கிறார்கள்.
மிளகாய் வருவதற்கு முன்பு, இந்திய உணவில் காரச்சுவையூட்ட குறுமிளகு மட்டுமே இருந்தது. `ஆனால், இந்தியாவில் அறிமுகமான உடனேயே, மிளகாய், குறுமிளகை ஓரம் கட்டிவிட்டது. குறுமிளகைப் போல அல்லாமல், மிளகாய் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் எளிதாக விளைந்தது மிக முக்கியமான காரணம். மிளகைப் போல அல்லாமல், மிளகாய் பல்வேறு வகைகளில், உணவைச் சுவையூட்டியது கூடுதல் காரணம்.` என்கிறார் கே.டி.அச்சய்யா. மிளகாய்க்கான பெயர் பல மொழிகளிலும் மிளகு என்னும் பெயரை ஒட்டியதாகவே அமைந்துள்ளதைக் காணலாம்.
புதிதாக வந்த மிளகாய் உடனே நமது பயிராகி விட்டது. இன்று இந்தியா, ஆசிய-பசிஃபிக் பகுதியின் மிகப்பெரும் மிளகாய் உற்பத்தியாளராகவும், உலகில் மிக அதிக உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. 2020 ஆண்டு இந்தியாவின் காய்ந்த மிளகாய் உற்பத்தி 17 லட்சம் டன் ஆகும். இது இரண்டாம் மூன்றாம் இடங்களில் இருக்கும் தாய்லாந்து மற்றும் சீன நாடுகளை விட ஐந்து மடங்கு அதிகமாகும் . இந்தியாவில் , 8.36 லட்சம் டன் உற்பத்தி செய்து, ஆந்திரம் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தின் உற்பத்தி 25468 டன்கள் மட்டுமே. தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் மிளகாய் உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது. தமிழகத்தின் மிளகாய் விளையும் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு (தமிழகத்தில் 54231 ஹெக்டேர் நிலப்பரப்பில் மிளகாய் விளைகிறது. இராமநாதபுரத்தில் 15939 ஹெக்டேர்) ஒரு பங்கு இராமநாதபுர மாவட்டத்தில் உள்ளது.
எழுத்தாளர் சாய்நாத் எழுதிய, `நல்ல வறட்சியை எல்லோரும் விரும்புகிறார்கள்`, என்னும் புத்தகத்தில் ஒரு அத்தியாயம், `இடைத்தரகரின் கொடுங்கோன்மை`, எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. அதில்தான், மிளகாயைப் பற்றியும், இராமநாதபுர மிளகாய் உற்பத்தியாளர்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். அந்தக் கட்டுரை இப்படித் தொடங்குகிறது:
`தன் முன்னே வைக்கப்பட்டிருந்த இரண்டு சாக்குகளில் ஒன்றினுள் கையை விட்டு, கிட்டத்தட்ட ஒரு கிலோ மிளகாயை அள்ளி, அலட்சியமாக ஒரு புரம் விட்டெறிகிறார் தரகர் – அது சாமி வத்தல் (கடவுளின் பங்கு). அதற்குக் காசு கிடையாது.
அதைக் கண்டு அதிர்ந்து போன மிளகாய் விவசாயி ராமசாமியை நமக்கு அறிமுகம் செய்கிறார் சாய்நாத். `முக்கால் ஏக்கரில் பயிர் செய்து வாழும் அந்த விவசாயி ஒன்றுமே செய்ய முடியாது. அவர் நிலத்தில் உற்பத்தியாகும் பயிரை, அப்பயிர் விதைக்கப்படுவதற்கு முன்பே அந்த இடைத்தரகர் வாங்கிவிட்டார்`. 1990 களில் தரகர்களின் ஆதிக்கம் அவ்வளவு வலுவாக இருந்தது.
அந்த மிளகாய் விவசாயிகளின் இன்றைய நிலை என்ன என அறிந்து, `அவர்கள் சோறு சாப்பிடட்டும்`, (Let them eat Rice) என்னும் தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுதுவதற்காக நான் இந்த ஆண்டு (2022) மீண்டும் சென்றேன்
*****
"மிளகாய்
உற்பத்தி குறைவதன் காரணம்: மயில், முயல், மாடு, மான். அப்புறம் அதிக மழை
இல்லையெனில் குறைவான மழை..."
வி.கோவிந்தராஜன்,
மிளகாய் உற்பத்தியாளர், மும்முடிச்சாத்தன், இராமநாதபுரம்
இராமநாதபுரம் நகரில் உள்ள மிளகாய் வணிகரின் கடையினுள், ஏலம் தொடங்குவதற்காக ஆண்களும், பெண்களும் காத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மிளகாய் உற்பத்தியாளர்கள். இதற்காக, தங்கள் கிராமங்களில் இருந்து பஸ்களிலும், டெம்போக்களிலும் பயணம் செய்து வந்திருக்கிறார்கள். உள்ளே புழுக்கம் அதிகமாக இருக்கிறது. இரட்டைக் குதிரை ப்ராண்டு மாட்டுத்தீவனச் சாக்குமூட்டைகளின் மீது அமர்ந்து கொண்டு, புழுக்கம் குறைய தங்கள் துண்டுகள் மற்றும் சேலைத்தலைப்புகளை விசிறியாக்கி வீசிக் கொள்கிறார்கள். புழுக்கமா இருந்தாலும், நிழலாவது இருக்கிறது.. வயல்களில் அதுவும் இல்லை என்கிறார்கள். வயல்களில் நிழல் இருந்தால், மிளகாய் விளையாது.
69 வயதான வி.கோவிந்தராஜன், 20 கிலோ எடையுள்ள மூன்று மிளகாய் மூட்டைகளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருக்கிறார். `இந்த வருஷம் மகசூல் ரொம்பக் குறைவு`, என்கிறார்.. `ஆனா மத்த எந்தச் செலவும் குறையல`. இத்தனைக்கும் மிளகாய், மல்லிப்பூ மாதிரி அதிகம் பூச்சி மருந்து தேவைப்படாத பயிர் என்கிறார் மேலும்
கோவிந்தராஜன் மிளகாய் உற்பத்தி முறையை விளக்குகிறார். முதலில் உழவு. இரண்டு முறை ஆழமாகவும், ஐந்து முறை மேலோட்டமாகவும் உழ வேண்டும். அதன் பின்னர் உரம். ஒரு வாரத்துக்கு 100 ஆடுகளை நிலத்தில் பட்டி போடுதல், ஒரு நாளைக்கு அதற்கான செலவு 200 ரூபாய். அப்புறம் விதை மற்றும் களையெடுப்புக்கான செலவு. 4-5 முறை களையெடுக்க வேண்டியிருக்கும். `என் பையன் கிட்ட ட்ராக்டர் இருக்கு. அதனால எனக்கு அந்தச் செலவு மிச்சம்.. மத்தவுங்க வேலைக்குத் தகுந்த மாதிரி, மணிக்கு 900 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை செலவு செய்யனும்`, எனச் சிரித்துக் கொண்டே சொல்கிறார்.
பேசிக்கொண்டிருக்கையில் மற்ற விவசாயிகள் நம்மைச் சூழ்ந்து கொள்கிறார்கள். வேட்டிகளும், லுங்கிகளும் உயர்த்திக் கட்டப்பட்டுள்ளன. துண்டுகளைத் தோளில் போட்டிருக்கிறார்கள். சிலர் தலைப்பாகையாகக் கட்டியிருக்கிறார்கள். தலையில் சூடிய பூ மற்றும் பளிச்சென்ற நைலான் புடவைகளைக் கட்டிய பெண் விவசாயிகளும் வந்திருக்கிறார்கள். அவர்கள் கனகாம்பரம் மற்றும் மல்லிகைச் சரங்களைச் சூடியிருக்கிறார்கள். கோவிந்தராஜன் எனக்கு டீ ஆர்டர் செய்கிறார். ஓடுகளின் விரிசல் வழியே சூரிய ஒளி ஊடுருவி உள்ளே வந்து மிளகாய்க் குவியலின் மீது விழுகிறது.. அந்த வெளிச்சத்தில், குண்டு மிளகாய்கள் மாணிக்கங்களென மின்னுகின்றன.
இராமநாதபுரம் தாலூக்கா கோனேரி குக்கிராமத்தில் இருந்தது வந்திருக்கும் 35 வயது மிளகாய் உற்பத்தியாளரான ஏ.வாசுகி, தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்ளுகிறார். அங்கிருக்கும் மற்ற பெண்களைப் போலவே, அவரது நாளும் அதிகாலையில் ஆண்கள் எழும் முன்பே தொடங்குகிறது. எழுந்து சமைத்து, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவைக் கட்டிக் கொடுத்து விட்டு, காலை 7 மணிக்கு சந்தைக்குக் கிளம்பி வந்திருக்கிறார். வீடு திரும்ப மாலை 7 மணியாகிவிடும். திரும்பிய உடன் அவருக்கு வீட்டு வேலைகள் காத்திருக்கும்.
`இந்த வருஷம் மகசூல் சுத்தமா இல்லீங்க.. என்னமோ தப்பாயிப் போச்சு. செடி வளரவே இல்ல.. அம்புட்டும் கொட்டிருச்சு`, என்கிறார். அவர் கொண்டு வந்திருப்பது 40 கிலோ மட்டுமே. இன்னொரு 40 கிலோ சீசன் கடைசியில் வரும் என எதிர்பார்க்கிறார். நூறு நாள் வேலைத் திட்டம் கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் இருக்கிறார்.
மும்முடிச்சாத்தன் குக்கிராமத்தில் இருந்து 20 கிலோமீட்டர் பயணம் செய்து இராமநாதபுரம் வந்திருக்கும் 59 வயதான பூமயிலுக்கு இன்றைய பயணம்தான் பேசுபொருள். இன்று அவரது பயணம் இலவசம். 2021 ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசின் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் பயணம் இலவசம் என்னும் திட்டத்தை அறிவித்திருந்தார்.
பூமயில் தன் பயணச் சீட்டைக் காட்டுகிறார். அதில் மகளிர் என எழுதியிருக்கிறது. இலவசப்பயணச் சீட்டு. இத்திட்டத்தின் மூலம், இன்று அவருக்கு மிச்சமாகும் பணம் 40 ரூபாய் எனக் கணக்கிடுகிறோம். எங்களுக்கும் இலவசமா இருந்தா நல்லா இருக்கும் எனச் சுற்றியிருக்கும் ஆண்கள் முணுமுணுக்கிறார்கள். அனைவரும் சிரிக்கிறார்கள். பெண்களின் சிரிப்பில் கூடுதல் மகிழ்ச்சி..
மகசூல் குறைந்து போனதன் காரணங்களைச் சொல்லத் தொடங்குகிறார் கோவிந்த ராஜன். `மயில், முயல், மாடு, மான்`, எனப் பட்டியலிடுகிறார். அத்துடன், கூடவோ குறைவாகவோ பெய்யும் மழையும் பட்டியலில் சேர்ந்து கொள்கிறது. பூக்கறதுக்கு முன்னாடி, நல்ல மழை பெய்யனும்.. ஆனா அப்ப பெய்யல. `முன்னாடி, இந்த கூரை வரைக்கும் மிளகாய் வரும்.. மலை மாதிரி குவிஞ்சிருக்கும்`, எனக் கூரையை நோக்கிக் கை காட்டுகிறார்.
ஆனால், இன்று நம் முழங்கால் உயரம் வரையான சிறு குவியல்களாகிவிட்டன. மிளகாய்க் குவியல்களில் சில கருஞ்சிவப்பாக உள்ளன. சில பளீரிடும் சிவப்பு.. இப்படிப் பல நிற பேதங்களுடன் உள்ளன. ஆனால், அனைத்துமே நல்ல காரம் கொண்டவை. மிளகாயின் நெடி உள்ளே பலமாக உள்ளது. தாங்க முடியாமல் தும்மல்களும் இருமல்களும் கேட்கின்றன. வெளியுலகில் கொரோனா வைரஸ் உபயத்தால் வரும் தும்மல்களும், இருமல்களும், இங்கும் கேட்கின்றன. ஆனால், இங்கே காரணம் மிளகாய் நெடி
ஏலம் விடும் எஸ்.ஜோசஃப் செங்கோல் வருவதற்குள் அனைவரிடமும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. உடனே சூழலும் மக்கள் மனநிலையும் மாறுகிறது. ஜோசஃபுடன் வந்த வணிகர்கள் குவியலை நோக்கி வருகிறார்கள். குவியலின் மீது நின்று அதன் தரத்தை உன்னிப்பாக எடைபோடுகிறார்கள். ஜோசஃப் தன் வலது கையில் ஒரு துண்டைப் போட்டு மூடுகிறார். வாங்க வரும் வணிகர்களும் ஒருவர், தன் விரல்கள் மூலம் துண்டுக்குள் இருக்கும் ஜோசஃபின் விரல்களைத் தொட்டு, ரகசியமாகத் தன் விலையைச் சொல்கிறார். வாங்க வரும் வணிகர்கள் அனைவருமே ஆண்கள்
இந்த ரகசிய மொழி, மற்றவர்களுக்கு அதிசயமாக இருக்கும். உள்ளங்கையைத் தொடுதல், விரல்களைப் பிடித்தல், தட்டுதல் எனப் பலவழிகளில், ஆண்கள் விலையைச் சொல்கிறார்கள். வேண்டாம் என்றால், உள்ளங்கையில் பூச்சியத்தை வரைகிறார்கள். ஏலம் விடுபவருக்கு, கிலோவுக்கு 3 ரூபாய் தரகுத் தொகையாகக் கிடைக்கிறது. இந்த ஏலத்தை நடத்தும் வணிகருக்கு 8% தரகுத் தொகை.
ஒரு வணிகர் முடிந்ததும், அடுத்தவர் ரகசிய மொழியில் தனது விலையை ஏலம் விடுபவரின் கைகளைப் பிடித்துச் சொல்கிறார்கள். இப்படி அனைத்து வணிகர்களும் தங்கள் விலையைச் சொல்லி முடிந்ததும், யார் மிக அதிகமான விலை சொல்கிறார்களோ, அது அறிவிக்கப்படுகிறது. நாம் சென்ற அன்று, நிறத்தையும், அளவையும் பொறுத்து, கிலோ 310 முதல் 389 வரை மிளகாய் விலை போனது.
இது நல்ல விலைதான். ஆனால் விவசாயிகள் இதனால் மகிழ்ச்சியடையவில்லை. நல்ல விலை கிடைத்தும், மகசூல் வெகுவாகக் குறைந்து போனதால், இறுதியில் விவசாயிக்கு நஷ்டம்தான்.
`எல்லோரும் விவசாயப் பொருளை மதிப்புக் கூட்டி வித்தா லாபம் வரும்னு சொல்றாங்க.. ஆனா எங்களுக்கு எங்க நேரம்? விவசாயம் பண்றதா? இல்ல அரைச்சி மாவாக்கிப் பொட்டலம் போட்டுகிட்டு இருக்கறதா`, எனக் கோபமாகக் கேட்கிறார் கோவிந்தராஜன்.
அடுத்து கோவிந்தராஜனின் மிளகாய் ஏலத்துக்கு வர, அவரது கோபம் பதட்டமாக மாறுகிறது. ‘இங்க வாங்க.. நல்லாப் பாக்கலாம்’, என என்னை அழைக்கிறார். ‘பரிட்சை முடிவுகளுக்காகக் காத்துகிட்டு இருக்க மாதிரி இருக்கு’, என்கிறார் பதட்டத்துடன். அவரது தோள்துண்டின் ஒரு முனையை வாயில் வைத்துக் கொண்டு, ரகசிய ஏலத்தைக் கூர்ந்து கவனிக்கிறார். விலை படிந்தவுடன், அறிவிக்கப்படுகிறது. ‘கிலோவுக்கு 335 ரூபாய் கிடைச்சிருக்கு’, என்கிறார் புன்னகையுடன். வாசுகியின் மிளகாய் 359 ரூபாய்க்கு விலை போகிறது. உற்பத்தியாளார்கள் நிம்மதியாகிறார்கள்.. ஆனால், வேலை அத்துடன் முடியவில்லை. அடுத்து, மிளகாயை எடை போட்டு, அதற்கான பணத்தை வாங்கிக் கொண்டு, சாப்பிட்டுவிட்டு, வீட்டுச் சாமான்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு பஸ் பிடிக்க வேண்டும்.
*****
"முந்தியெல்லாம்
சினிமாவுக்குப் போவோம்.. கடசியா தியேட்டர்ல பாத்த படம், ‘துள்ளாத மனமும்
துள்ளும்’."
எஸ்.அம்பிகா,
மிளகாய் உற்பத்தியாளர், மேலயக்குடி, இராமநாதபுரம்
‘குறுக்கு வழியாப் போனா, வயலுக்கு அரை மணிநேரத்துல நடந்து போயிரலாம்.. ஆனா ரோட்டு வழியாப் போகணும்னா அதிக நேரமாகும்’, என்கிறார் எஸ்.அம்பிகா. அங்கும் இங்கும் வளைந்தும் நெளிந்தும் செல்லும் பாதையில், 3.5 கிலோ மீட்டர் நடந்து, இராமநாதபுரம், மேலயக்குடி கிராமத்தில் உள்ள அவரது மிளகாய் வயலை அடைகிறோம்.
தொலைவில் இருந்து பார்க்கையில், மரகதப்பச்சை இலைகளோடு செடிகள் செழித்து நிற்கின்றன.. அதன் கிளைகளில், பல்வேறு நிலைகளில், நிறங்களில் - மாணிக்கச் சிவப்பு, மஞ்சள், அழகான அரக்கு எனப் பட்டுபுடவை நிறங்களில் மிளகாய்ப் பழங்கள் தொங்குகின்றன. அங்குமிங்கும், ஆரஞ்சு நிறப் பட்டாம்பூச்சிகள், பழுக்காத மிளகாய்களுக்குச் சிறகுகள் முளைத்தது போல பறந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், அடுத்த பத்து நிமிடங்களில், இந்த அழகுகள் அனைத்தும் ஆவியாகிவிட்டன.. காலை மணி பத்து கூட ஆகவில்லை.. சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. நீரின்றி வறண்டு போன மண்.. நெற்றிவியர்வை கண்களுக்குள் இறங்கி அதன் உப்பு எரிக்கத் தொடங்கியது. சென்ற இடமெல்லாம், நீரின்றி மண் வெடித்து, இராமநாதபுரம் மொத்தமுமே தாகத்தால் அலைவது போல இருக்கிறது. அம்பிகாவின் வயலும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், அவர் அது வறட்சியல்ல என்கிறார்.. மெட்டியணிந்த தன் கால்விரல்களால், மேல்மண்ணை நோண்டி, உள்ளே ஈரம் இருக்கு எனக் காட்டுகிறார்.
அம்பிகாவின் குடும்பம், பல தலைமுறைகளாக, விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கிறது. அம்பிகாவுக்கு வயது 38. உடன் வரும் அவரது நாத்தனார் எஸ்.ராணிக்கு வயது 33. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. மிளகாயுடன், அகத்தி வளர்க்கிறார்கள். அகத்தி ஆடுகளுக்கு நல்ல தீனி. சில சமயம் வெண்டை, கத்திரி பயிரிடுகிறார்கள்.. கூடுதல் வேலைதான்.. ஆனால், வருமானம் வேணுமே.
காலை 8 மணிக்கு வயலுக்கு வரும் பெண்கள், மாலை 5 மணி வரை வயலிலேயே காவல் இருக்கிறார்கள். ‘இல்லைன்னா, செடிகள, ஆடு மேஞ்சிரும்’.
அதிகாலை 4 மணிக்கு எழுந்து, வீட்டைப் பெருக்கி, நீர் கொண்டு வந்து நிரப்பி, சமைத்து, குழந்தைகளை எழுப்பி, அவர்களைப் பள்ளிக்குச் செல்ல தயாராக்கி, மதிய உணவைத் தயார் பண்ணி கொடுத்துட்டு, ஆடுமாடுகளுக்கு தீனி வைத்து விட்டு, அரை மணி நேரம் நடந்து வயலுக்குச் சென்று வேலை செய்கிறார்கள். பின்பு மதியம் மீண்டும் வீட்டுக்கு வ்ந்து மாடுகளுக்குத் தண்ணீர் வைத்து விட்டு, மீண்டும் வயலுக்கு நடந்தே செல்கிறார்கள்.. இது அவர்களது தினசரி வழக்கம்.. வயலுக்கு நாங்கள் நடக்கத் தொடங்குகையில் அவர்களது நாய் கொஞ்ச தூரம் வருகிறது. அதன் பின்னே, அதன் குட்டிகளும் ஓடிவருகின்றன.
அம்பிகாவின் மொபைல் போன் ஒலிக்கிறது. கண்டுகொள்ளாமல் விடுகிறார். மூன்றாவது முறை ஒலிக்கையில், எடுத்து, ‘என்னடா? ‘, என்கிறார் எரிச்சலுடன்.. மகன் பேசுவதைக் கேட்டுவிட்டு, அவனைக் கடிந்து கொண்டு போனை வைக்கிறார்.. ’வீட்டுல பசங்களுக்கு எப்பவும் ஏதாவது வேணும்.. என்ன சமையல் பண்ணி வச்சாலும், முட்டை குடு, உருளைக்கிழங்கு பண்ணுன்னு கேட்கறாங்க.. ஏதாவது செஞ்சு வைக்க வேண்டியிருக்கு.. ஞாயித்துக் கிழமைன்னா, என்ன கறி கேக்கறாங்களோ, அத வாங்கிருவோம்’.
பேசிக் கொண்டே, பெண்கள் மிளகாய் பறிக்கத் தொடங்குகிறார்கள். பக்கத்து வயலிலும் மிளகாய் அறுவடை நடக்கிறது. மிளகாய்ச் செடியின் கிளைகளை மெல்ல விலக்கி, மிளகாய்ப் பழகங்களை படக்கென ஒடித்து எடுக்கிறார்கள்.. கைகள் நிறைந்ததும், ப்ளாஸ்டிக் பெயிண்ட் பக்கெட்டில் போடுகிறார்கள். முந்தியெல்லாம் பனை ஓலக் கூடைதான் என்கிறார் அம்பிகா.. ஆனால், இப்போது ப்ளாஸ்டிக் பக்கெட்கள்.. பல சீசன்கள் வரை தாங்கும் வலுக் கொண்டவை.
வயலில் இருந்து அம்பிகாவின் வீட்டு மொட்டை மாடிக்கு வருகிறோம். அறுவடையான மிளகாய்கள், சுட்டெரிக்கும் சூரிய ஒளியில் காய்ந்து கொண்டிருக்கின்றன. தன் கால்களால், ஜாக்கிரதையாக மிளகாய் வற்றலை துளாவி, மேலே கீழே மாற்றிப் போடுகிறார். இதனால், மிளகாய்ப் பழங்கள், சமமாகக் காய்கின்றன. மிளகாய் வற்றலை கையில் அள்ளி எடுத்து ஆட்டிப் பார்க்கிறார். ‘நல்லாக் காஞ்சிருச்சின்னா, ‘கடகட’ன்னு சத்தம் வரும்’. உள்ளே மிளகாய் விதைகள் ஆடும் ஒலி. இந்தச் சத்தம் கேட்கும் அளவுக்குக் காய்ந்தவுடன், சாக்குப் பையில் நிரப்பி எடை போடுகிறார்கள். பின்னர் உள்ளூர் கமிஷன் ஏஜெண்டிடம் எடுத்துச் சென்று விற்கிறார்கள்.. சில சமயம் பரமக்குடி அல்லது இராமநாதபுரம் எடுத்துச் சென்று சந்தையில் ஏலத்துக்கு விடுகிறார்கள். இதன் மூலம் கொஞ்சம் அதிக விலை கிடைக்கிறது.
கீழே இறங்கி சமையலறைக்குச் செல்கிறோம். `கலர் குடிக்கறீங்களா?`, எனக் கேட்கிறார் அம்பிகா.
பின்னர், பக்கத்து நிலத்தில் பட்டியில் அடைக்கப்பட்டுள்ள ஆடுகளை அழைத்துச் சென்று நமக்குக் காட்டுகிறார். கட்டிலுக்குக் கீழே படுத்துக் கொண்டிருந்த பட்டிக் காவல் நாய்கள், அருகில் வராதே என எச்சரிக்கின்றன. ‘வேலையில்லன்னா வீட்டுக்காரர் வெளியூரு போயிடுவாரு.. அப்ப இவங்கதான் காவல்’.
திருமணமான காலகட்டத்தைப் பேசுகையில் வெட்கப்படுகிறார்.. ‘அப்பல்லாம் சினிமாவுக்கு அடிக்கடி போவோம்.. கடைசியா தியேட்டர்ல பாத்த படம், துள்ளாத மனமும் துள்ளும். 18 வருஷம் ஆச்சி’. இருவரும் சிரித்துக் கொள்கிறோம்.
*****
"தங்கள்
மிளகாயைச் சந்தைப் படுத்த, சிறு விவசாயிகளுக்கு, அதன் மதிப்பில் 18% வரை செலவு
செய்ய நேரிடுகிறது."
கே.காந்திராசு,
மிளகாய் உற்பத்தியாளர் கூட்டமைப்பு, இராமநாதபுரம்.
’இப்ப அஞ்சு பத்து மூட்டை மிளகாய் வச்சிருக்கிற விவசாயிய எடுத்துக்குவோம்.. கிராமத்தில இருந்து மண்டி வரைக்கும் டெம்போ வாடகை.. வியாபாரிக்கு 8% கமிஷன்.. அது போக சிலசமயம் எடைபோடறதுல சில்மிஷம்.. மூட்டைக்கு அரைக் கிலோ போனாலும் விவசாயிக்கு நஷ்டம் தானே..’. நிறைய விவசாயிகள் இது பற்றிப் புகார் சொன்னார்கள்.
’இன்னொரு பிரச்சினை என்னன்னா, வயல விட்டுட்டு, ஒரு நாள் முழுக்க மண்டியிலேயே கெடக்கனும்.. வியாபாரிகிட்ட பணம் இருந்தா கொடுப்பாங்க.. இல்லன்னா அதுக்கு மறுபடி நடக்கனும். மண்டிக்குப் போறப்ப சாப்பாடு கொண்டுட்டு போறது கிடையாது.. ஓட்டல்லதான் சாப்பிடனும்.. இப்படி எல்லாச் செல்வையும் சேத்தா, 18% வந்துரும்’.
காந்திராசு, ஒரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2015 ஆண்டு முதல் அவர் நடத்தி வரும் இராமநாதபுரம் குண்டு மிளகாய் உற்பத்தி நிறுவனம், உற்பத்தியாளர்களின் வருமானத்தை மேம்படுத்தும் நோக்கில் உழைத்துக் கொண்டிருக்கிறது. அந்நிறுவனத்தின் தலைவரான அவர், நம்மை, அவரது முதுகுளத்தூர் அலுவலகத்தில் சந்தித்தார்.
’வருமானத்தை எப்படி மேம்படுத்தறது? முதல்ல உற்பத்திச் செலவக் குறைக்கனும்.. இன்னொன்னு உற்பத்திய அதிகரிக்ககுன். மூணாவது சந்தைப் படுத்த உதவிகள் செய்யனும். இப்போ நாங்க சந்தைப்படுத்த உதவிகள் செஞ்சிகிட்டு இருக்கோம்’. இராமநாதபுரப்பகுதியில் இது மிகவும் முக்கியம் என்கிறார் அவர். ’இப்பல்லாம் பிழைப்புக்காக வெளியூர் செல்வது மிகவும் அதிகமாகி வருகிறது’.
அவர் சொல்வதை அரசின் புள்ளிவிவரங்கள் ஆமோதிக்கின்றன. இராமநாத புர மாவட்ட ஊரக மறுமலர்ச்சித் திட்டத்தின் ஆய்வறிக்கை, வருடம் 3000 முதல் 5000 வரை விவசாயிகள் பிழைப்பைத் தேடி வெளியேறுகிறார்கள் எனச் சொல்கிறது. இடைத்தரகர்களின் ஆதிக்கம், நீராதாரமின்மை, வறட்சி, சேமிப்புக் கிடங்குகளின்மை போன்றவை, பயிர் உற்பத்தித் திறனைப் பெரிதும் பாதிக்கின்றன என்கிறது அந்த அறிக்கை.
நீர்தான் மிக முக்கியமான ஆதாரம் என்கிறார் காந்தியரசு. ‘டெல்டாப் பகுதிக்கோ, மேற்கு தமிழ்நாட்டுக்கோ நாம் போனால், எங்கு பார்த்தாலும் மின் கம்பங்கள்.. அங்கே எல்லா இடங்களிலும் ஆள் துளைக்கிணறுகள்’. இராமநாதபுரத்தில் அப்படி அல்ல.. மிகச் சில இடங்களில் மட்டுமே ஆள்துளைக் கினறுகள் உள்ளன.. மானாவாரிப் பயிர்ச்சாகுபடியின் என்பது மழையை மட்டுமே நம்பியிருப்பதால், நிச்சயமில்லாத ஒன்றாக இருக்கிறது என்பது அவர் பார்வை
காந்திராசு சொல்வதை மாவட்டப் புள்ளிவிவரக் கையேடு உறுதி செய்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் 18 லட்சம் மோட்டர் பம்ப்செட்களில், 9248 மட்டுமே இராமநாதபுரத்தில் உள்ளன.
இராமநாதபுரத்தின் பிரச்சினைகள் எதுவும் புதிதல்ல. 1996 ஆம் ஆண்டு வெளியான, ‘நல்ல வறட்சியை எல்லோரும் விரும்புகிறார்கள்’, என்னும் தன் புத்தகத்துக்காக, பத்திரிக்கையாளர் சாய்நாத், புகழ்பெற்ற எழுத்தாளர், லேட் மேலாண்மை பொன்னுச்சாமியை நேர்காணல் செய்திருந்தார். ‘பொதுவில் நம்பப்படுவது போலில்லாமல், இந்த மாவட்டத்தில் வேளாண் தொழிலுக்கு நல்ல சாத்தியங்கள் உண்டு.. ஆனால், அந்தக் கோணத்தில் இதை யார் அணுகுகிறார்கள்?’ ‘இராமநாதபுர மாவட்டத்தின் விவசாயிகளில் 80% மேலானவர்கள், 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்கள். நீராதாரம் இல்லாமல் இருப்பது பெரும் பிரச்சினை’, என மேலும் அந்த நேர்காணலில் குறிப்பிடுகிறார்.
விவசாயத்தின் சாத்தியங்கள் பற்றி மேலாண்மை பொன்னுசாமி சொன்னது முற்றிலும் சரி. 2018-19 ஆம் ஆண்டு, இராமநாதபுர மாவட்டத்தில் 4426.64 டன் மிளகாய் விளைந்தது. அதன் மதிப்பு 33.6 கோடி. ஆனால், நீர் வசதி தேவைப்படும் நெல் 15.8 கோடி அளவுக்குத்தான் உற்பத்தியானது.
காந்திராசுவே ஒரு விவசாயியின் மகன் தான். முதுகலை படிக்கும் போது கூட விவசாயம் செய்தவர். குண்டு மிளகாய்ச் சாகுபடிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என நம்புகிறார். நமக்கு மிளகாய் விவசாயத்தின் லாப நட்டக் கணக்கைப் போட்டுக் காட்டுகிறார். ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி, அறுவடைக் காலத்தில் மட்டும் வெளியாட்களைக் கூலிக்கு வைத்துக் கொள்கிறார். மற்ற வேலைகளை, குடும்ப உறுப்பினர்களே கவனித்துக் கொள்கிறார்கள். ‘ஒரு ஏக்கர்ல மிளகாய் சாகுபடி செய்ய. 25-28 ஆயிரம் வரை செலவாகும். அறுவடைக் கூலிக்குக் கூடுதலாக 20 ஆயிரம் வரை செலவாகும். 10-15 ஆட்களை வைத்து, முறை மிளகாய் அறுவடை செய்வதற்காகும் செலவு இது. ஒரு ஆள் ஒரு நாளில், ஒரு மூட்டை மிளகாய் பறிக்க முடியும். செடி அடர்த்தியா இருந்தா வேலை கஷ்டமா இருக்கும் என்கிறார் காந்திராசு.
மிளகாய் ஆறுமாதப் பயிர். வருஷம் ரெண்டு போகம் பயிர் செய்ய முடியும். அக்டோபர் மாதத்தில் முதல் போக விதைப்பு ஆரம்பமாகும். ஜனவரி மாதத்தில் அறுவடைக்கு வரும். இரண்டாவது போகப் பயிர் ஏப்ரல் மாதத்தில் அறுவடைக்கு வரும். இந்த ஆண்டு (2022), பருவம் தவறிப் பெய்த மழையினால், மிளகாய்ப் பயிர்ச் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. முதலில் நட்ட நாற்றுகள் அழுகிவிட்டன. பூப்பது தள்ளிப் போனது. அதனால், காய்ப்பு வெகுவாகக் குறைந்து போனது.
மகசூல் மிகவும் குறைந்து போனதால், மிளகாய் விலை மற்ற வருடங்களை விட மிக அதிகமானது. பரமக்குடி மற்றும் இராமநாதபுர விவசாயிகள் மார்ச் மாதத்தில் மிளகாய் கிலோ 450 ரூபாய் வரை போனதாகப் பேசிக் கொண்டார்கள்.. அப்போது கிலோ 500 வரை வந்தாலும் வரும் என வ்தந்தி கூட இருந்தது.
மார்ச் மாத அதிக விலையை காந்திராசு, ‘சுனாமி’ என அழைக்கிறார். நல்ல மகசூல் இருந்தா, கிலோவுக்கு 120 ரூபாய் என்னும் விலையே நல்ல விலை என்கிறார். இந்த விலை கெடச்சா, ஏக்கருக்கு 1000 கிலோ மகசூல் கெடச்சாலே, 50 ஆயிரம் லாபம் கிடைக்கும் என்கிறார். ரெண்டு வருஷம் முன்னாடி, கிலோவுக்கு 90-100 வரைதான் கெடச்சுது.. இன்னிக்கு நல்ல விலை.. ஆனா, இதே மாதிரி எப்பவுமே இருக்காது. இந்த விலை ஒரு லாட்டரி மாதிரி என்பது அவர் கருத்து.
இந்த குண்டுமிளகாய் இராமநாதபுர மாவட்டத்தில் மிகவும் பிரபலம் என்கிறார் காந்திராசு. சின்ன தக்காளிப்பழம் மாதிரி இருக்கும் இது. சென்னைல இதை சாம்பார் மிளகாய்னு சொல்றாங்க.. இதோட தோல் தடிமனா இருக்கறதால, அரைச்சு விட்டா புளிக்குழம்பு நல்லா திக்கா இருக்கும்.. ருசியும் அபாரமா இருக்கும் என்கிறார் மேலும்.
இதுக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது. மே மாத மத்தியில், ஆன்லைனில், அமேசனில், 20% டிஸ்கவுண்ட் போக கிலோ ருபாய் 799க்கு விற்றது.
`இதை எப்படிச் சந்தைப் படுத்தறதுன்னு தெரியல. அது எங்களுக்கு ஒரு பிரச்சினைதான்`, என ஒத்துக் கொள்கிறார் காந்தியரசு. அவரது உழவர் உற்பத்தி நிறுவனத்தில் கிட்டத்தட்ட 1000 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும், இந்த நிறுவனத்துக்குத் தங்கள் பொருட்களை விற்பதில்லை.. `எல்லாவற்றையும் வாங்க எங்களிடம் நிதி வசதியும், சேமிப்புக் கிடங்குகளும் இல்லை`.
உழவர் உற்பத்தி நிறுவனம், மிளகாயை நல்ல விலை வரும் வரை சேமித்து வைப்பதில பல சிரமங்கள் உள்ளன. மாதங்கள் செல்லச் செல்ல, மிளகாய் நிறம் மாறிக் கறுத்துப் போய் விடுகிறது. பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அரசு நடத்தி வரும் குளிர்பதன சேமிப்புக் கிடங்கு ராமநாதபுரத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அதை நேரில் சென்று பார்த்தோம். இங்கே மிளகாயைச் சேமித்து வைக்க உழவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் உதவுகிறோம் என நிர்வாகிகள் சொல்கிறார்கள்.. ஆனால், அந்த சேமிப்புக் கிடங்குக்குச் சென்றுவர போக்குவரத்து வசதிகள் இல்லாததால், பலர் தயங்குகிறார்கள்.
தன் பங்குக்கு உழவர் உற்பத்தி நிறுவனம், பூச்சிகளைக் கட்டுப்படுத்த பாரம்பரிய வழிகளைப் பரிந்துரைக்கிறது. `இந்தப் பகுதியில், மிளகாய் வயலைச் சுற்றி, வரப்புகளில், ஆமணக்குச் செடிகள் வளர்ப்பது வழக்கம். இது மிளகாய்ச் செடிகளை நோக்கி வரும் பூச்சிகளை ஈர்த்துக் கொள்கிறது. மிளகாய்ச் செடிகளை விட மிக உயரமாக வளர்வதால், இதை நோக்கி சிறு சிறு பறவைகள் வரும். அவை இந்தப் பூச்சிகளைப் பிடித்துத் தின்றுவிடும். இதை உயிர்வேலி எனச் சொல்லலாம்.
தன் தாய், மிளகாய் வயலைச் சுற்றி ஆமணக்கு மற்றும் அகத்தியை நட்டு வளர்த்ததை நினைவு கூர்கிறார் காந்திராசு. `மிளகாய் வயலுக்குப் போகையில், எங்க ஆடுகள் அம்மா பின்னாலேயே போகும்.. ஆமணக்குச் செடியில் ஆடுகளைக் கட்டிவிட்டு, அவற்றுக்கு அகத்தித் தழை மற்றும் ஆமணக்குத் தழைகளைப் பறித்துப் போடுவார்கள்`. `மிளகாய்ச் சாகுபடியில் வரும் வருமானம் அப்பாவுக்கு.. ஆமணக்கு விற்று வரும் பணம் அம்மாவுக்கு`, என்கிறார் காந்திராசு
மிளகாய்ச் சாகுபடியை மேம்படுத்த அறிவியலின் உதவியை எதிர்பார்க்கிறார் காந்திராசு. `இராமநாதபுரத்தில், குறிப்பாக முதுகுளத்தூரில் ஒரு மிளகாய் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும். பள்ளிக்கூடம் இருந்தாத்தான் குழந்தைகள் படிப்பாங்கங்கற மாதிரி, இங்கே ஒரு ஆராய்ச்சி நிறுவனம் இருந்தாத்தான், இங்க உள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வரும். அப்பத்தான் மிளகாய்ச் சாகுபடி அடுத்த லெவலுக்குப் போகும்`.
தற்போது, இராமநாதபுரம் குண்டுமிளகாய்க்கான தனித்துவப் புவியியல் அடையாள அங்கீகாரத்தைப் பெற அவரது உழவர் உற்பத்தி நிறுவனம் உழைத்துக் கொண்டிருக்கிறது. `இந்த மிளகாயின் தனித்துவத்தைப் பற்றி பேச வேண்டும்.. அதுக்குன்னு ஒரு புத்தகம் கொண்டுவரணும்`.
எல்லோரும் சொல்றது போல மதிப்புக் கூட்டும் தீர்வுகள் இந்த மிளகாய்க்கு ஒத்து வராது என்கிறார் காந்திராசு. `ஒவ்வொரு உற்பத்தியாளரும் 50-60 மூட்டை மிளகாய்தான் உற்பத்தி செய்றாரு. அத வெச்சி என்ன செய்ய? எங்க உழவர் உற்பத்தி நிறுவனத்துல இருக்க எல்லாரும் ஒண்ணு சேந்தாக் கூட, பெரிய மசாலாக் கம்பெனிகளோட போட்டி போட முடியாது. அவங்கள விடக் குறைவான விலைல கொடுக்க முடியாது.. அவங்க கோடிக்கணக்கான ரூபாய் செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க`.
இதைவிடப் பெரிய பிரச்சினை, வருங்காலத்துல, பருவ நிலை மாற்றமா இருக்கும் என்கிறார் காந்திராசு
`அத எப்படிச் சமாளிக்கப் போறோம்?`, என்று கேட்கிறார். `மூணு நாள் முன்னாடி, ஒரு பெரிய புயல் வருதுன்னு சொன்னாங்க.. மார்ச் மாசத்துல புயல் அடிச்சி நான் பார்த்ததேயில்லை. அதிக மழை பேஞ்சு, வயல்ல தண்ணி தேங்கினா, மிளகாய்ச் செடிகள் அழுகிரும்.. இனிமே இந்தப் பிரச்சினைகளையும் விவசாயிகள் சமாளிக்கக் கத்துக்க வேணும்`.
*****
"பெண்கள்
தங்கள் தேவைக்கேற்ப கடன் வாங்கறாங்க.. படிப்பு, கல்யாணம், கொழந்தை பொறப்பு –
இதுக்கெல்லாம், கடன் இல்லன்னு நாங்க சொல்றதேயில்ல.. விவசாயக் கடனெல்லாம்
இதுக்கப்பறம்தான்."
ஜே.அடைக்கலச்
செல்வி, மிளகாய் உற்பத்தி, மகளிர் சுய உதவிக்குழுத் தலைவர், பி.முத்துவிஜயபுரம்,
ராமநாதபுரம்
`செடியப் பிச்சிருவோம்னு பயமா இருக்கா?`, எனச் சிரிக்கிறார் அடைக்கலச் செல்வி. என்னை, பக்கத்து வயலில் மிளகாய் பறிக்கும் வேலையைச் செய்யச் சொன்னார். அன்று அந்த வயலில் வேலை செய்ய கூடுதல் ஆட்கள் வேண்டியிருந்தது.. ஆனால், மிக விரைவிலேயே, என்னை மிளகாய் பறிக்க வைத்ததற்கு அவர் வருத்தப்படும் நிலை உருவானது. நான் மிளகாய் பறித்த அழகு அப்படி.
நான் முதல் செடியில் போராடிக் கொண்டிருக்கையில், அடைக்கலச் செல்வி மூன்றாவது செடிக்குப் போய் விட்டிருந்தார். மிளகாயின் தண்டு தடிமனாகவும், பறிப்பதற்குக் கடினமாகவும் இருந்தது. நான் பறிக்கும் வேகத்தில் மிளகாய்ச் செடியின் கிளைகள் ஒடிந்து விடுமோ எனப் பயமாக இருந்தது. என் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் உள்ள சாம்பார் மிளகாய் வத்தலின் தண்டு போல் எளிதாக உடையவில்லை.
நான் மிளகாய் பறிக்கும் அழகைப் பார்க்க பெண்கள் கூடிவிட்டார்கள்.. வயலின் சொந்தக்காரர் சோகமாகத் தலையை அசைக்கிறார்.. என்னை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளைச் சொல்லும் அடைக்கலச் செல்வியின் பக்கெட் நிறையத் தொடங்குகிறது. என் கையில் எட்டு மிளகாய்கள் மட்டுமே உள்ளன. `நீங்க செல்விய சென்னைக்குக் கூட்டிட்டுப் போயிருங்க..அவங்க வயல் வேல, ஆஃபீஸ் வேல எல்லாம் செய்வாங்க`, என்கிறார். என் மிளகாய் பறிப்பு வேலையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. நான் ஃபெயிலாயிட்டேன் என்பது புரிகிறது.
அடைக்கலச் செல்வியின் வீட்டில் ஒரு அலுவலகம் உள்ளது. மிளகாய் உற்பத்தியாளர் நிறுவனம், அதை உருவாக்க உதவி செய்துள்ளது. வீட்டில் ஒரு கணிணியும், நகல் செய்யும் இயந்திரமும் உள்ளது. விவசாயம் தொடர்பான ஆவணங்கள், நிலப் பத்திரங்கள், பட்டா போன்ற ஆவணங்களை நகல் செய்யும் பணியைச் செய்கிறார். `இதத் தாண்டி, ஆடு கோழின்னு பாக்கற வேலை இருக்கு.. வேறெதுவும் செய்ய எனக்கு நேரமே இருக்கறதில்ல`.
பெண்கள் சுயநிதிக் குழு ஒன்றை நிர்வாகம் செய்வதும் அடைக்கலச் செல்வியின் பொறுப்புகளில் ஒன்று. கிராமத்தில் 60 பெண்கள் உறுப்பினராக உள்ளார்கள். மொத்தம் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும் இரண்டு தலைவிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அடைக்கலச் செல்வி ஒரு குழுவின் தலைவி. குழுவின் முக்கியமான பணி, நிதியைப் பெற்று, கடன் வழங்குவதாகும். `சனங்க அநியாய வட்டிக்கு கடன் வாங்கறாங்க. ரெண்டு வட்டி, அஞ்சு வட்டின்னு.. (24 முதல் 60% வரை). ஆனா, எங்க மகளிர் மன்றத்துல ஒரு வட்டி தான் (12%). ஒரே ஆளுக்கே எல்லாக் கடனையும் குடுக்கறதில்ல.. ஆளாளுக்குப் பிரிச்சிக் குடுத்துருவோம்.. இங்க எல்லாருமே சிறு விவசாயிதானே.. எல்லாத்துக்கும் பணத் தேவை இருக்குமில்ல?`.
`பெண்கள் தங்கள் தேவைக்கேற்ப கடன் வாங்கறாங்க.. படிப்பு, கல்யாணம், கொழந்தை பொறப்பு – இதுக்கெல்லாம், கடன் இல்லன்னு நாங்க சொல்றதேயில்ல.. விவசாயக் கடனெல்லாம் இதுக்கு அப்பறம்தான்`
கடனைத் திருப்பிச் செலுத்தும் முறையில், முக்கியமான மாற்றத்தை உருவாக்கினார் அடைக்கலச் செல்வி. `முன்னாடியெல்லாம், வாங்கின கடன மாசா மாசம் திருப்பிக் குடுக்கணும்னு சொன்னாங்க. நான் சொன்னேன், நாங்கெல்லாம் விவசாயம் பண்றவுங்க.. எல்லா மாசமும் எங்ககிட்ட காசு இருக்காது.. அதனால, அறுவடை முடிஞ்சு வித்தவுடனேயே திருப்பிக் குடுக்கறம்னு. சனங்ககிட்ட எப்ப பணம் இருக்கோ அப்பக் குடுக்கட்டும்.. எல்லாத்துக்கும் பயன்படற மாதிரி இருக்கனுமில்ல?`. கள யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து மக்களுக்குமான வங்கிச் சேவையில் இது முக்கியமான பாடமாகும்.
அவர் கிராமத்தில் மகளிர் மன்றம், அவர் திருமணமாகி வருவதற்கு முன்பிருந்தே இயங்கி வந்தது. அது கிராமத்தில் பல நிகழ்வுகளை நடத்துகிறது. நான் அங்கே சென்றதற்கு அடுத்த ஞாயிறு மகளிர் தினம் கொண்டாடத் திட்டமிட்டிருந்தார்கள். `ஞாயித்துக் கெழம சர்ச் மாஸ் முடிஞ்ச உடனே, எல்லாத்துக்கும் கேக் குடுப்போம்`, எனச் சிரிக்கிறார். மகளிர் மன்ற உறுப்பினர்கள், மழை வருவதற்கான பிரார்த்தனைகளை நடத்துக்கிறார்கள். பொங்கல் வைக்கிறார்கள்..
அடைக்கலச் செல்வி மிகவும் தைரியமானவர். குடிப்பழக்கம் உள்ள ஆண்கள், மனைவியை அடிப்பவர்கள் எனப்பல ஆண்களுக்கு அறிவுரைகள் சொல்லி வழிநடத்துகிறார். பல ஆண்டுகளாக, தனி மனுஷியாக விவசாயத்தைப் பார்த்துக் கொள்வது, மோட்டார் சைக்கிளை ஒட்டிச் செல்வது எனப் பல பெண்களுக்கு முன்னோடியாக இருக்கிறார் செல்வி. `சின்னப் பொண்ணுங்க புத்திசாலியா இருக்காங்க.. பைக் ஓட்டறாங்க.. படிச்சிருக்காங்க.. ஆனா, படிச்ச படிப்புக்கு வேல எங்க கிடைக்குது?`, செல்வியின் கேள்வி அம்பு போலத் தைக்கிறது.
தற்போது, செல்வியின் கணவர் வீட்டில் இருப்பதால், அவர் வயல் வேலைகளைப் பார்த்துக் கொள்கிறார். மற்ற வேலைகளைக் கவனிக்க செல்விக்கு நேரம் கிடைக்கிறது. பருத்தி விதை வேலையைப் பார்க்கத் தொடங்குகிறார். `பத்து வருஷமா பருத்தியில இருந்தது விதைய எடுத்து வித்துட்டு வர்றேன். கிலோ 100 ரூபாய்க்கு போது. எங்க விதை நல்ல முளைக்கிறதனாலே, நிறையப் பேரு வாங்கிட்டுப் போறாங்க. போன வருஷம் மட்டும் 150 கிலோ வித்தேன்`.
மந்திரவாதி, தன் தொப்பிக்குள் இருந்து முயலை எடுப்பது போல், ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பையில் இருந்து மூன்று குட்டிப் பைகளை எடுக்கிறார் செல்வி. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தர விதைகள். அதிகம் அலட்டிக் கொள்ளாமல் அவர் செய்துவரும் பணி – தரமான பருத்தி விதைகளை உற்பத்தி செய்தல்.
மே மாத இறுதியில், அவரது மிளகாய் அறுவடை முடிந்து விட்டது. `வெல கிலோ 300 ரூபாய்ல இருந்தது 120 ரூபாய்க்கு விழுந்திருச்சி.. ஸ்டெடியா இறங்கிகிட்டே வந்திருச்சு`, என்கிறார் ஃபோனில்
என நடந்தாலும், விவசாயியின் உழைப்பின் பாரம் குறைவதில்லை. மகசூல் குறைந்தாலும், அதை அறுவடை செய்து, மூட்டை பிடித்து, சந்தை வரை எடுத்துச் சென்று விற்றே ஆக வேண்டும். அடைக்கலச்செல்வி மற்றும் அவர் தோழிகளின் உழைப்பு ஒவ்வொரு டீஸ்பூன் சாம்பாரிலும் சுவையூட்டி வருகிறது.
இராமநாதபுரம் முண்டு மிளகாய் உற்பத்தி நிறுவனத்தின் கே.சிவக்குமார் மற்றும் பி.சுகன்யா இருவரும், இக்கட்டுரையை எழுதுவதற்குப் பேருதவியாக இருந்தார்கள். கட்டுரையாளர் இருவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்
இந்த ஆய்வு, அசீம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகத்தின் 2020 ஆம் ஆண்டு ஆய்வு நிதித் திட்டத்தின் ஒரு பகுதியாக நிகழ்த்தப்பட்டது.
அட்டைப் படம்: எம். பழனி குமார்
தமிழில் : பாலசுப்ரமணியம் முத்துசாமி