“இந்திய குடியரசுத் தலைவருக்கும் உண்ண உணவு வேண்டும். உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது விஷயமல்ல. உங்களால் பணத்தை உண்ண முடியாது, உணவு வேண்டும்,” என்கிறார் சிகந்தர் குலாம் நபி ஷேக். “உங்களுக்கு யார் உணவு தருவார்?,” என அவர் கேட்கிறார்.
டோம்பிவ்லியில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார் 36 வயது ஷேக். 2018 நவம்பர் 25ஆம் தேதி அவர் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் நகர்ப்புற ஆதரவை உருவாக்கும் மனுவில் கல்யாண்-டோம்பிவ்லி இரட்டை நகர (மத்திய மும்பையின் தாதரிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர்) சகாக்களுடன் இணைந்து கொண்டார்.
ராம்நகர் ஆட்டோ நிறுத்தத்தில் உள்ள டோம்பிவ்லி (கிழக்கு) நிலையத்திற்கு வெளியே காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஓட்டுநர்கள் திரண்டனர். நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையிலான ‘விவசாயிகளுடன் தேசம்‘ எனும் பதாகையுடன் 7-8 ஆட்டோ ஓட்டுநர்கள் நண்பர்களுடன் சேர்ந்து வைத்தனர்.
மற்றவர்கள் இந்தி, ஆங்கிலம், மராத்தி மொழிகளில் மனுவின் நகல்கள் கொண்ட கையேடுகளுடன் மேசையில் அமர்ந்திருந்தனர். குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் இந்த மனுவில் விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும் பிற தொழிலாளர் குழுக்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மும்பை புறநகர் ரயில் குழுமத்தின் மையப் புள்ளியாக டோம்பிவ்லி ரயில் நிலையம் இருக்கிறது. அன்றாடம் ஆயிரக்கணக்கான பயணிகள் பரந்துவிரிந்த மும்பையின் பெருநகரப் பகுதியை கடப்பதற்காக இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். மற்ற புறநகர் ரயில் நிலையங்களைப் போலவே டோம்பிவ்லி கிழக்கு ரயில் நிலையத்திற்கு வெளியேயும் துணிகள், ஆபரணங்கள், எழுதுபொருட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. வங்கிகள், ஏடிஎம்கள், அச்சு சேவைகளும் உள்ளன. நடைபாதை வியாபாரிகள் அமர்ந்து கைப்பேசி உறைகள், பழங்கள், காய்கறிகள் போன்ற எண்ணற்ற பொருட்களை விற்பனை செய்கின்றனர். தேநீர் கடைகளும், பயிற்சி வகுப்புகளும் கூட உண்டு.
கூட்டத்தில் திரியும் மக்களின் கவனத்தை பெறுவதற்கு நீங்கள் கட்டாயம் ஏதேனும் செய்தாக வேண்டும்.
ஒலிப்பெருக்கியின் மூலம் ஷேக் மற்றும் அவரது நண்பர்கள் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து விளக்குகின்றனர். மக்கள் நின்றபடி அவற்றைக் கேட்கின்றனர். பதாகையில் சொல்வதை பரபரப்பிற்கு மத்தியிலும் நின்று படித்துவிட்டு அவர்கள் செல்கின்றனர். சிலர் மேசையில் இருக்கும் தன்னார்வலர்களிடம் கேள்விகள் கேட்டனர். பலரும் மேசைக்கு அருகில் வந்து “எங்கு கையெழுத்திட வேண்டும்?” என்கின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த லால் பவ்தா ஆட்டோ சங்கத்தில் சுமார் 1000 டோம்பிவ்லி உறுப்பினர்கள் உள்ளனர். இதன் மூலம் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்தனர். ரயில் நிலைய பிரச்சாரத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நவம்பர் 17ஆம் தேதி விவசாயிகளுக்கான தேசத்தின் டோம்பிவ்லி பிரிவு நிலையத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள திலக் சவுக் சங்க அலுவலகத்தில் உருவாக்கப்பட்டது.
“விவசாயிகளின் நெடிய அணிவகுப்பு தேசிய அரசியலில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனை நகர்ப்புறத்தினருக்கும் கொண்டு செல்வதை என் கடமையாக [என் பங்கேற்பாக], உணர்கிறேன்,” என்கிறார் வி. தேவன்.
2018 மார்ச் மாதம் நாஷிக்கிலிருந்து மும்பை வரை 180 கிலோமீட்டர் தூரத்திற்கு 40,000 விவசாயிகள் அணிவகுத்த பேரணிக்கு மும்பை, தானே நகர நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் ஆதரவளித்தனர். இது ஊக்கமளிக்கும் மைல்கல் ஆகும். கடந்த சில வாரங்களாக, ‘விவசாயிகளுடன் தேசம்‘ குழு அவுரங்காபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, நாக்பூர், புனே போன்ற பல நகரங்கள், சிறு நகரங்களில் இருந்து வருகின்றனர். டோம்பிவ்லி குழுவைப் போன்று இக்குழுக்களையும் குடியரசுத் தலைவருக்கு மனு செய்வதற்கு குடிமக்களிடம் கையெழுத்திட வலியுறுத்துகின்றன.
அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைப்புக் குழுவின் அழைப்பின் ஒரு பகுதியாக இம்முயற்சிகள் நடக்கின்றன. சுமார் 200 விவசாயிகள் குழு, பிற அமைப்புகள் இதற்கு ஆதரவளிக்கின்றன. நவம்பர் 29-30 தேதிகளில் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்துகின்றன.
டோம்பிவ்லி என்எஃப்எஃப் குழுவும் செல்வதற்கு ஆட்டோ சங்கத் தலைவர்கள் தேவன், காலு கோமஸ்கார் ஆகியோர் நண்பர்கள், சகாக்கள், சக செயற்பாட்டாளர்களை அழைத்தனர். கேரளாவின் திருச்சூர் மாவட்டம் இரிஞ்சலகுடா நகரத்தைச் சேர்ந்தவர் தேவன். அவர் 38 ஆண்டுகளாக டோம்பிவ்லியில் வசிக்கிறார். சிறிய அளவில் இயந்திரத் தொழில் செய்கிறார்.
“மகாராஷ்டிராவில் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டதை செய்தியாக நான் கண்டேன். அவரது குடும்ப உறுப்பினர்களைக் கண்டு நான் உடைந்துவிட்டேன்,” என்கிறார் உணர்ச்சிப் பொங்க தேவனின் அழைப்பை ஏற்றுள்ள ஆசிரியர் சுஜாதா கைர்நார். “விவசாயிகள் மீது நம்மால் அக்கறை செலுத்த முடியாவிட்டாலும், அவர்களின் குடும்பங்களைப் பற்றியாவது நினைத்துப் பார்க்க வேண்டும்.”
நகர்ப்புற பயணிகளுடன் அதிகளவில் உரையாடும் ஆட்டோ ஓட்டுநர்கள் விவசாயிகளுக்கான ஆதரவை நடுத்தர மக்களிடம் திரட்ட வேண்டும் என இக்கூட்டத்தில் கோமஸ்கார் பரிந்துரைத்தார். நவம்பர் 23ஆம் தேதி கோமஸ்கார் மற்றும் என்எஃப்எஃப் சிறு குழுவினர் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு ஆதரவளிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேசினார்கள். விவசாய குடும்ப பின்னணியைக் கொண்ட பல ஆட்டோ ஓட்டுநர்களும் பிரச்சாரத்தை உடனடியாக புரிந்து கொண்டனர்.
உதாரணத்திற்கு 52 வயது ஆட்டோ ஓட்டுநர் ஜலிந்தர் போயர் பேசுகையில், “நான் ஒரு விவசாயி மகன். எங்களிடம் டோம்பிவ்லி புறநகரில் இப்போதும் சிறிதளவு நிலமுள்ளது. அதில் நெல் பயிரிடுகிறோம். இன்று என் சக விவசாயி, என் 'பலி ராஜா' [புராணத்தில் வரும் விவசாய மன்னர்] அச்சுறுத்தலில் உள்ளார். தற்கொலைகளின் எண்ணிக்கையும் இரட்டிப்பாகிவிட்டது. தவறான கொள்கைகளே இதற்கு காரணம். இப்பிரச்னை குறித்து என்னிடம் வரும் ஒவ்வொரு பயணியிடமும் நான் எடுத்துரைப்பேன். முழுமனதுடன், ஆர்வத்துடன் இதைச் செய்வேன். இது என் கடமை. டோம்பிவ்லிவாசிகள் இதை ஏற்பார்கள் என்று என் மனம் அறியும்.”
நவம்பர் 25 ஞாயிறன்று, ஆட்டோ சங்கத்தினரின் என்எஃப்எஃப் குழு டோம்பிவ்லி ரயில் நிலையம் அருகே இரண்டு பெரிய ஆட்டோ நிறுத்தங்கள் முன் திரண்டனர். மனுவில் கையெழுத்திட மக்களை அவர்கள் அழைத்தனர்.
போயர் கணித்ததைப் போலவே மக்களும் ஆதரவளித்தனர். பிரச்சாரத்தின் முதல் நாளன்று, குடியரசுத் தலைவருக்கான மனுக்களில் சுமார் 1,000 பேர் கையெழுத்திட்டனர். திங்கட்கிழமையும் அதே அளவு கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டன.
கையெழுத்திட்டவர்களில் கடைக்காரரான 48 வயது தீபக் குப்தாவும் ஒருவர். “விவசாயிகள் கடனில் மூழ்கி துன்பப்படுகின்றனர். அவர்களின் கடின உழைப்பினால் தான் இங்கு அனைத்தும் நடக்கிறது,” என்ற அவர் நியான் விளக்கில் ஒளிரும் பதாகைகள், உணவகங்கள், கடைகளை சுட்டிக் காட்டுகிறார். “அவர்களின் உற்பத்திக்கு சரியான விலை கிடைக்க வேண்டும்.”
'இப்பிரச்னை குறித்து என்னுடைய பயணிகள் அனைவருக்கும் நான் எடுத்துரைப்பேன். முழு மனதுடன், ஆர்வத்துடன் இதைச் செய்வேன். இது என் கடமை. டோம்பிவ்லிவாசிகளின் மனநிலையை நான் அறிவேன்'
ரயில் நிலையத்தில் மாலை ஏற்பட்ட சலசலப்பில் 60 ஆண்டுகளாக டோம்பிவ்லி தெருக்களில் காய்கறி, பூக்கள் விற்கும் 80 வயது ஷாந்தாபாய் வக்ரியும் ஒருவர். “இந்நகர தெருக்களில் நம் தலைமுறைகள் வேலை செய்கின்றன. விவசாயிகள், தொழிலாளர்கள் அல்லது சம்பளக்காரர்கள் என யாருடனும் அரசு ஒத்துழைப்பு நல்குவதில்லை. விவசாயிகளுக்கு உதவுமாறு நான் அரசை கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்கு தண்ணீர் கொடுங்கள், விதைகள், சாகுபடி, மகசூலுக்கு உதவுங்கள். உங்கள் நல்ல குடிமக்களுக்கு நன்மை செய்யுங்கள்.”
மனுவில் கையெழுத்திட்டவர்களில் பலரும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர் ஒரு காலத்தில் விவசாயிகளாக இருந்தவர்கள். டோம்பிவ்லி ஆனந்த்பிரேம் கூட்டுறவு கடன் சங்கத்தில் வேலை செய்யும் 25 வயது தீபாலி வரேவும் அதுபோன்ற பின்னணியைக் கொண்டவர்தான். “என் குடும்பத்தினர் புனே மாவட்டம் போர்ரில் நெல் விவசாயம் செய்தனர்,” என்கிறார் அவர், “விவசாயிகளுக்கு என் முழு ஆதரவு உண்டு.”
“விவசாயிகளின் துயரங்களை நாங்கள் அறிவோம். வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் இந்த பதாகையைக் கண்டவுடன், இதுபற்றி அறிய வேண்டும் என எனக்குள் சொல்லிக் கொண்டேன்,” என்கிறார் அவரது சக ஊழியரான 21 வயது ஸ்வாதி மோர்.
“எங்கள் நிலத்தை இழந்துவிட்டோம்…” என்கிறார் டோம்பிவ்லியில் 30 ஆண்டுகளாக வசிக்கும் சமையல்காரரான சங்கிலி மாவட்டம் கிர்லோஸ்கர்வாடியைச் சேர்ந்த சீமா ராஜன் ஜோஷி. “விவசாயிகளை ஆதரிப்பதை பெருமையாக, மகிழ்ச்சியாக கருதுகிறேன். விவசாயிகளுக்கு உரிய விலையோ, கடன் நிவாரணமோ அளிக்கப்பட வேண்டும்.”
மனுதாரர்களில் ஒருவரான 28 வயது நந்திகிஷோர் அர்காடி ஜல்னா மாவட்டம் அம்பட் தாலுக்காவில் உள்ள தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் பருத்தி விவசாயம் செய்கிறார். “விவசாயிகள் படும் துன்பத்தை அவர்களே அறிவார்கள். தண்ணீர் கிடையாது. நான்கு ஆண்டுகளாக மழையில்லை. ரூ.1.5 லட்சம் கடன் உள்ளது. எவ்வித கடன் நிவாரணமும், உதவியும் கிடைப்பதில்லை.” வேலை தேடி நந்திகிஷோர் நகரில் திரிந்து கொண்டிருக்கிறார். “எனக்கு நாளை நேர்காணல் உள்ளது. ஆனால் அதுவரை எங்கு தங்குவது. இன்றிரவு மும்பை சிஎஸ்டி ரயில் நிலையத்தில் தான் உறங்க வேண்டும்,” என்கிறார் அவர்.
அவுரங்காபாத் மாவட்டம் குல்தாபாத் தாலுக்காவில் உள்ள தமங்கான் கிராமத்தைச் சேர்ந்த அஷோக் கருட் ரயில் நிலையத்தில் தகர கூரை அமைப்பதற்காக ஒப்பந்தக்காரரால் டோம்பிவ்லிக்கு அழைத்து வரப்பட்டார். அவர் தனது கிராமத்தில் உள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் சோளம், பருத்தி போன்றவற்றை உற்பத்தி செய்கிறார். இந்தாண்டு பருத்தி உற்பத்தியை இளஞ்சிவப்பு நிற புழு அழித்துவிட்டது என்கிறார் அவர். கூட்டுறவு வங்கியிடம் ரூ.70,000, தனியார் வட்டி கடைக்காரரிடம் வாங்கியது என அவருக்கு கடன் இருக்கிறது. கடந்த வாரம் முதல் அவர் ரயில் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். “விவசாயிகளுடன் டெல்லிக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால் என் குடும்பத்திற்கு பணத் தேவை இருக்கிறது. எனக்கு இன்னும் சம்பளம் வரவில்லை. நான் வேலை செய்ய வேண்டும்.”
“டோம்பிவ்லி குடிமக்களை இதில் ஈடுபடுத்தும் முதல் முயற்சியே” மனு பிரச்சாரம் என்கிறார் காலு கோமஸ்கார். “இதை மேற்கொண்டு எடுத்துச் செல்வோம். அன்றாடம் வரும் பயணிகளிடம் இம்மனுக்களை கொண்டு சேர்ப்போம். விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து பேசி நேரடியாக குடியரசுத் தலைவருக்கு கையெழுத்திட்ட மனுக்களை அனுப்பச் சொல்வோம்.”
ஆயிரம் கையெழுத்து மனுக்களை வைத்து என்ன செய்வது? “இவற்றை அஞ்சல் செய்வதே பெரிய வேலை,” என்கிறார் தேவன். “டெல்லியில் நவம்பர் 29 மற்றும் 30களில் விவசாயிகள் ஊர்வலம் நடைபெறும் போது இந்திய குடியரசுத் தலைவரைச் சந்தித்து நேரடியாக கொடுக்கலாம்.”
தமிழில்: சவிதா