மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்திலிருந்து 23 பேர் கொண்ட பழங்குடியின உழவர்கள், நவ.27 அன்று தென் தில்லி நிஜாமுதீன் தொடர்வண்டி நிலையத்தை வந்துசேர்ந்தனர். அரை மணி நேரம் நடந்து சராய் காலேகான் பகுதியில் சிறீ பாலா சாகேப்ஜி குருத்வாராவை அடைந்தனர். குருத்வாரா வளாகத்தில் பாதி முடிக்கப்படாமல் இருந்த கட்டடம், 2018 நவ.29-30 உழவர் விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்கும் அவர்களுக்காக தயார்செய்யப்பட்டு இருந்தது.
யவத்மாலிலிருந்து வந்த உழவர்களுக்கு நவ.27 காலை 10 மணியளவில் முதல் தொகுதியாக இந்த ஏற்பாடு கிட்டியது. அவர்களை வரவேற்று அன்றைய இரவு தங்கவைத்து உணவளிப்பதற்கு அகில இந்திய உழவர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களும் உழவர்களுக்கான தேசம் அமைப்பின் தன்னார்வலர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.
கோலம் பழங்குடியின உழவர்கள் இங்கு வந்துசேர்வதற்கு, மகாராஷ்டிர- ஆந்திர எல்லையில் கேலாப்பூர் வட்டம், பிம்பல்குட்டி கிராமத்திலிருந்து நந்திகிராம் விரைவுத் தொடர்வண்டியில் ஏழு மணி நேரம் பயணம்செய்து, நவ.26 மாலையில் நாக்பூரை அடைந்தனர். பின்னர் அந்த வழியே கேரளத்திலிருந்து நிஜாமுதீனுக்கு வந்த இன்னொரு தொடர்வண்டியைப் பிடித்து இங்கு வந்துசேர்ந்தனர்.
”நாடாளுமன்றத்தை முற்றுகையிடவே நாங்கள் அனைவரும் வந்திருக்கிறோம்.” என்றார், சந்திசேகர் சிதம். மகாராஷ்டிர மாநில உழவர் சபையின் யவத்மால் மாவட்டத் தலைவர், இவர். “உழவர்களின் முதன்மையான இடர்கள் என்றால் கடன் நிலுவை, கால்நடைத்தீவனம், உற்பத்திக்கான ஓரளவு நியாயமான விலை, குறைந்தபட்ச ஆதார விலை, வேலைவாய்ப்பு, உணவுப் பாதுகாப்பு ஆகியவை. இந்த நோக்கத்துக்காகத்தான் யவத்மாலிலிருந்து ஒரு குழுவாக இங்கு வந்து குழுமியிருக்கிறோம்.” என்று சந்திரசேகர் கூறினார்.
அவருடைய மாவட்டத்தில் உழவர்களை நசுக்கக்கூடிய இடர் என்றால், கடந்த 2- 3 ஆண்டுகளாக நீடித்துவரும் தொடர் வறட்சிதான் என்றும் அவர் சொன்னார். அரசாங்கம் அறிவித்த கடன் தள்ளுபடி ஒரு பகுதித் தீர்வுதான் என்கிறார். மேலும்,“ மகாராஷ்டிரத்தில் விதர்பா பகுதியில்தான் மிக அதிகமான தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன; அதில் குறிப்பாக யவத்மால் மாவட்டம்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மானாவாரிப் பயிர்செய்கையில் பாசன வசதிகளும் இல்லாமல் பெரும்பாலான உழவர்கள் தங்களைத்தாங்களே மாய்த்துக்கொள்கிறார்கள்.” எனக் கூறினார், சந்திரசேகர்.
கேலாப்பூர் வட்டத்தின் பதன்போரி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகருக்கு, அங்கு ஏறத்தாழ மூன்று ஏக்கர் தோட்டம் இருக்கிறது. ”இந்த ஆண்டு ரொம்பவும் தாமதமாகத்தான் மழை வந்தது. அதற்குள் விதைத்துவிட்டோம்;ஆனால் அது பயிராகவில்லை” என்றார் அவர். “மீண்டும் இரண்டாவது தடவையாக விதைத்தோம்; அதையடுத்து அதிக மழை பெய்து, விதையெல்லாம் தண்ணீரில் மூழ்கிவிட்டன. இப்படி மழை காலம்கடந்து வந்தால் நிலம் வறண்டுபோய், வேர்கள் முழுவதும் நீரிழப்பைச் சந்திக்கின்றன. பருத்தி காய்ந்து ஒருபயனும் இல்லாமல் ஆகிவிடுகிறது. தொடர்ச்சியான மழையின்மையால் நீர்ச்சமநிலையானது குலைந்துவிடுகிறது.” என்று அவர் விவரிக்கவும் செய்கிறார்.
யவத்மால் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களையும் வறட்சிப்பகுதிகளாக அறிவிப்பதற்குப் பதிலாக, சில வட்டங்களை மட்டுமே அறிவித்திருப்பதாகவும் அவர் கூறினார். ” மற்ற வட்டங்கள் இன்னும் வறட்சிபாதித்தவையாக அறிவிக்கப்படவில்லை; குறைந்தது அப்படியான சேதி எதுவும் எங்களுக்கு வந்துசேரவில்லை. அந்த வட்டங்களின் உழவர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது. எங்களைப் போலவே அவர்களும் துன்பப்படுகிறார்கள். அரசாங்கம் அனைத்து வட்டங்களிலும் கள நிலைமையை ஆய்வுசெய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.” என்றும் சந்திரசேகர் கூறினார்.
அவர்கள் ஊரைச் சேர்ந்த பெண் உழவர்கள் ஏன் அவர்களுடன் வரவில்லை? நாங்கள் சந்தித்த எல்லா ஆண்களுமே சொன்ன ஒரே பதில், பெண்கள் இல்லையென்றால் தோட்டத்தில் ஒன்றும் நடக்காது என்பதே! “ பெண்கள் இல்லாமல் விவசாயம் என்பதே சாத்தியமில்லை. களையெடுப்பது, பயிர்களைப் பாதுகாப்பது அவர்கள்தான். பருத்தியை அவர்களே பறிக்கிறார்கள். அடிக்கடி விதைக்கவும் செய்கிறார்கள். ஆகையால் அவர்களின்றி தோட்ட வேலை எதுவும் நடக்காது.” என்றார் சந்திரசேகர். ” எங்களின் ஒவ்வொரு பேரணியிலும் பெண்களுக்கு முதன்மைப் பங்கு உண்டு. இந்த முறை முன்னதாக மும்பையில் நடைபெற்ற பெண் உழவர்கள் பேரணிக்கு நிறைய பேர் சென்றுவிட்டனர். அவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் அவர்களையே சார்ந்திருக்கின்றன. அந்தப் பெண்கள் குடும்பத்தலைவராக இல்லாவிட்டாலும் மொத்தக் குடும்பமும் அவரையே சார்ந்திருக்கும் அளவுக்கு அவர் முக்கியமானவர். அதனால்தான் இந்த முறை பெண் உழவர்களை எங்களுடன் இணைத்துக்கொள்ளவில்லை. டெல்லிக்கு வரவும் மறுபடியும் ஊருக்குப் போகவும் முழுதாக ஆறு நாள்கள் ஆகிவிடும்.” என்று அவர் விவரித்தார்.
குருத்வாராவில் இருந்த மற்ற உழவர்களைப் போலவே, பிரபாகர் பானேவும் வறட்சியைப் பற்றிப் பேசினார். மானேகான் வட்டத்தின் கிவ்ரா மசோலா கிராமத்திலிருந்து வந்திருந்தார். அவரும் பருத்தி பயிரிட்டுவருபவர். ஓரளவுக்கு நல்ல மழை பெய்தபோதும் அந்த ஆண்டு வறட்சியானதாகிவிட்டது என்றார். ” இந்த நேரத்தில் உழவர்களுக்கு ராபி பருவப் பயிர் கிடைத்திருக்கவேண்டும். ஆனால் தோட்டங்களைப் பார்த்தாலே பயிர் முழுக்கக் காய்ந்துபோயிருப்பதைப் பார்க்கமுடியும்.” என்று சுட்டிக்காட்டினார். உழவுத் தொழிலாளராக வேலைநிலைப்பு இல்லாமை, கடன் நிவாரணம், மின்வசதிப் பற்றாக்குறை, அதிக மின்கட்டணம் ஆகியவையே தானும் மற்ற உழவர்களும் எதிர்கொள்ளும் முதன்மையாக இடர்கள் என்ற பிரபாகர், “அரசாங்கத்துக்கு இந்தப் பிரச்னைகளை எடுத்துச்சொல்லவே நாங்கள் டெல்லிக்கு வந்திருக்கிறோம்.” என்றார்.
கடைசியாக அவருக்கு எப்போது நல்ல விளைச்சல் கிடைத்தது? ” நான் எதைச் சொல்ல..? கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மோசம். திருப்தியான சாப்பாட்டைச் சாப்பிட்டு ஏப்பம்விடும் ஒரு பொழுது ஒரு விவசாயிக்கு எப்போதும் வாய்ப்பதில்லை.”
தமிழில்: இர. இரா. தமிழ்க்கனல்