“அவற்றுக்கு மிக அருகில் சென்று விடாதீர்கள். அவை பயந்து ஓடிவிடக் கூடும். பிறகு அவற்றை இந்த பெரிய பரப்பில் தேடிக் கண்டுபிடிப்பது எனக்கு கஷ்டமாகிவிடும். அவற்றின் நடமாட்டத்தை ஒழுங்கமைக்க வாய்ப்பே இல்லை,” என்கிறார் ஜெதாபாய் ரபாரி.
மேய்ச்சல் சமூகத்தவரான அவர் குறிப்பிடும் ‘அவை’ என்பது ஒட்டகங்கள். அவை உணவு தேடி நீந்திக் கொண்டிருக்கின்றன.
ஒட்டகங்கள் நீந்துகின்றனவா? உண்மையாகவா?
ஆமாம். ஜெதாபாய் சொல்லும் ’பெரிய பரப்பு’ என்பது கச் வளைகுடாவின் தெற்கு கடற்கரையோரத்தில் இருக்கும் மரைன் தேசியப் பூங்கா மற்றும் சரணாலயம் ஆகும். மேய்ச்சல் நாடோடிக் குழுக்களால் இங்கு பார்த்துக் கொள்ளப்படும் ஒட்டக மந்தைகள், அவற்றின் உணவுக்கு அவசியமான அலையாத்திகளை தேடி தீவிலிருந்து தீவுக்கு நீந்திச் செல்ல வல்லவை.
”நீண்ட நாட்களுக்கு இவை அலையாத்திகளை சாப்பிடவில்லையெனில் நோய்வாய்ப்பட்டு விடும். பலவீனமாகி இறந்து கூட போகும்,” என்கிறார் கரு மெரு ஜாட். “எனவே பூங்காவுக்குள்ளே எங்களின் ஒட்டக மந்தைகள் அலையாத்திகளை தேடிச் செல்லும்.”
மரைன் தேசியப் பூங்கா மற்றும் சரணாலயத்தில் 42 தீவுகள் இருக்கின்றன. அவற்றில் 37, பூங்காவுக்குள் வரும். மிச்ச 5 சரணாலயப்பகுதிக்குள் வரும். மொத்தப் பகுதியும் குஜராத்தின் சவுராஷ்ட்ரா பகுதியின் ஜாம்நகர் , தேவ்பூமி துவாரகா (2013ம் ஆண்டில் ஜாம்நகரிலிருந்து பிரிக்கப்பட்டது) மற்றும் மார்பி மாவட்டங்களை உள்ளடக்கியிருக்கிறது.
“பல தலைமுறைகளாக நாங்கள் இங்கு வாழ்கிறோம்,” என்கிறார் முசா ஜாட். கரு மேருவைப் போல, இவரும் தேசியப் பூங்காவுக்குள் வாழும் ஃபகிரானி ஜாட் குழுவின் உறுப்பினர்தான். அவருடையக் குழுவைப் போல இன்னொரு குழுவும் பூங்காவுக்குள் வசிக்கிறது. ஜெதாபாயின் குழு, போபா ரபாரிக் குழு. இரு குழுக்களும் ‘மல்தாரி’ எனப்படும் பாரம்பரிய மேய்ப்பர்கள் ஆவர். குஜராத்தி மொழியில் ’மல்’ என்றால் விலங்குகள் என அர்த்தம். ‘தாரி’ என்றால் உரிமையாளர் என அர்த்தம். குஜராத் முழுவதும் மல்தாரிகள் பசு, எருமை, ஒட்டகம், குதிரை, செம்மறி மற்றும் ஆடு ஆகிய விலங்குகளை வளர்க்கின்றனர்.
பூங்காவின் சுற்றுப்புறத்தில் அமைந்திருக்கும், 1,200 பேர் வசிக்கும் கிராமங்களைச் சேர்ந்த இந்த இரு குழுக்களின் உறுப்பினர்களையும் நான் சந்திக்கிறேன்.
“இந்த நிலத்தை நாங்கள் மதிக்கிறோம்,” என்கிறார் முசா ஜாட். “ஜாம்நகரின் ராஜா எங்களை வரவேற்று இங்கு வசிக்கும்படி பல்லாண்டுகளுக்கு முன் கூறினார். இவ்விடம் தேசியப் பூங்கா என அறிவிக்கப்பட்ட 1982-ம் ஆண்டுக்கும் வெகு காலத்துக்கு முன்.”
மேய்ச்சல் மையத்தை புஜ்ஜில் நடத்திக் கொண்டிருக்கும் சஹ்ஜீவன் தொண்டு நிறுவனத்தின் ரிதுஜா மித்ராவும் இந்த வாதத்தை ஆதரிக்கிறார். “பின்னாளில் ஜாம்நகர் என அறியப்பட்ட பகுதியில் நவநகர் ராஜ்ஜியத்தை உருவாக்கிய இளவரசர் ஒருவர் இரு குழுக்களையும் இப்பகுதிக்கு வரவழைத்ததாக சொல்லப்படுகிறது. அப்போதிலிருந்து அந்த மேய்ச்சல் குழுக்களின் வழித்தோன்றல்கள் இந்த நிலத்தில் வசிக்கின்றனர்.
”இப்பகுதிகளில் இருக்கும் சில கிராமங்களின் பெயர்கள் கூட, அவர்கள் நெடுங்காலமாக இங்கு வசித்து வருவதை உணர்த்தும் வகையில் இருக்கின்றன,” என்கிறார் சஹ்ஜீவனில் வன உரிமைச் சட்டத்துக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ரிதுஜா. “ஒரு கிராமத்தின் பெயர் உத்பெட் ஷம்பர். அதன் அர்த்தம் ‘ஒட்டகங்களின் தீவு’ ஆகும்.”
மேலும் நீந்தும் தன்மை பெறுமளவுக்கு பல காலமாக இங்கு ஒட்டகங்கள் வாழ்ந்து வந்திருக்க வேண்டும். சச்செக்ஸின் வளர்ச்சிக்கான கல்வி நிறுவனத்தின் ஆய்வாளரான லைல மேத்தா சொல்கையில் , “அலையாத்திகளுடன் பாரம்பரியமாக வாழ்ந்திருக்கவில்லை எனில் எப்படி ஒட்டகங்களால் நீந்த முடிந்திருக்கும்?” எனக் கேட்கிறார்.
பூங்கா மற்றும் சரணாலயப் பகுதிகளில் மட்டும் சுமாராக 1,184 ஒட்டகங்கள் மேயலாம் எனக் கூறுகிறார் ரிதுஜா. இவையாவும் 74 மல்தாரி குடும்பங்களுக்கு சொந்தமானவை.
ஜாம்நகர் 1540-ம் ஆண்டில் நவநகர் சமஸ்தானத்தின் தலைநகராக உருவாக்கப்பட்டது. 17ம் நூற்றாண்டின் ஒரு காலக்கட்டத்தில் மல்தாரிகள் இங்கு முதன்முறையாக வந்திருக்கின்றனர். அப்போதிருந்து இங்கு வசித்து வருவதாக அவர்கள் சொல்கின்றனர்.
“இந்த நிலத்தை மதிப்பதற்கான” காரணத்தை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்க முடியாது. குறிப்பாக நீங்கள் இங்கிருக்கும் நீர்வாழ் உயிரினங்களின் பல வகைகளை பார்த்துப் புரிந்த ஒரு மேய்ச்சல் நாடோடி என்றால் புரிந்து கொள்வதில் நிச்சயம் சிரமம் இருக்காது. பூங்காவில் பவளப்பாறைகளும் அலையாத்திக் காடுகளும், மண்பாங்கான கடற்கரைகளும் துண்டு சதுப்பு நிலங்களும் ஓடைகளும் பாறைகள் கொண்ட கடலோரங்களும் கடல்புற்களும் இன்னும் பலவும் இருக்கின்றன.
இந்த பல்லுயிர் பகுதியின் தனித்துவம், இந்தோ ஜெர்மன் உயிரியல் பல்லுயிர் திட்டத்தால் பிரசுரிக்கப்பட்ட 2016ம் ஆண்டின் ஆய்வில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் 100 வகைப் பாசிகளும் 70 வகை பஞ்சுரிகளும் 70 வகை கடின மற்றும் மென்மையான பவளங்களும் இருக்கின்றன. இவையன்றி 200 வகையான மீன்களும் 27 வித இறால்களும் 30 வகைகளிலான நண்டுகளும் நான்கு வகை கடல்புற்களும் கூட இருக்கின்றன.
அதோடு முடிந்துவிட வில்லை. ஆய்வு பதிவு செய்தபடி, ஒவ்வொரு கடல் ஆமை, கடல் பாலூட்டிக்கும் மூன்று வகைகளை இங்கு காண முடியும். 200 வகை மெல்லுடலிகளும் 90 வகை இரு வாலுயிர் வகைகளும் 55 வகை வயிற்றுக்காலிகளும் 78 வகை பறவைகளும் கூட இருக்கின்றன.
இங்கு ஃபகிரானி ஜாட்களும் ரபாரிகளும் பல தலைமுறைகளாக கராய் ஒட்டகங்களை மேய்த்திருக்கின்றனர். குஜராத்தி மொழியில் கராய் என்றால் ‘உப்புத்தன்மை’ என அர்த்தம். வழக்கமாக ஒட்டகங்களை நாம் தொடர்புபடுத்தக் கூடிய சூழலிலிருந்து வேறுபட்ட ஒரு சூழலில் வெற்றிகரமாக பழக்கப்படுத்தப்பட்ட தனித்துவ வகைதான் கராய் ஒட்டகங்கள். அவற்றின் உணவு பலவகை செடிகள், மூலிகைகள் ஆகியவை. முக்கியமாக அலையாத்திகள் என்கிறார் கரு மெரு ஜாட்.
நீச்சல் தெரிந்த வகையான இந்த விலங்குகளுடன், அவற்றின் உரிமை கொண்ட மல்தாரிக் குழு மேய்ப்பர்களும் செல்வார்கள். அதில் வழக்கமாக இரண்டு மைதாரி ஆண்கள் இருப்பார்கள். ஒட்டகத்துடன் சேர்ந்து அவர்கள் நீந்துவார்கள். சில நேரங்களில் அவர்களில் ஒருவர் படகில் உணவும் குடிநீரும் கொண்டு சென்று கிராமத்துக்கு திரும்புவார்கள். இன்னொரு மேய்ப்பர் விலங்குகளுடன் தீவில் தங்கி விடுவார். அங்கு அவர் ஒட்டகப் பாலைக் குடித்துக் கொள்வார்.
ஆனால் பல விஷயங்கள் மல்தாரிகளைப் பொறுத்தவரை மோசமாக மாறிக் கொண்டிருக்கிறது. “நாங்களும் எங்களின் தொழிலும் நீடிப்பது கஷ்டமாகிக் கொண்டே வருகிறது,” என்கிறார் ஜெதாபாய் ரபாரி. “எங்களின் மேய்ச்சல் நிலம் வனத்துறைக்கு கீழ் கொண்டு வரப்படுவதால் குறைந்து கொண்டே வருகிறது. முன்பெல்லாம் அலையாத்திகளுக்கு செல்ல எந்த அனுமதியும் தேவைப்படவில்லை. 1995ம் ஆண்டிலிருந்து மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டது. உப்பளங்களும் எங்களுக்கு பிரச்சினையை கொடுக்கின்றன. மேலும் இடப்பெயர்ச்சிக்கான சாத்தியுமும் இல்லை. எல்லாவற்றையும் விட இப்போது அதிகமாக மேய்க்கிறோமென்கிற குற்றச்சாட்டையும் நாங்கள் எதிர்கொண்டிருக்கிறோம். அது எப்படி சாத்தியம்?”
இப்பகுதியின் வன உரிமைகளுக்காக நெடுங்காலமாக பணியாற்றி வரும் ரிதுஜா மித்ராவும் பழங்குடிகளின் வாதத்தை ஆதரிக்கிறார். “ஒட்டகங்களின் மேய்ச்சல் பாணியை ஆராய்ந்தால், செடிகளை அவை மேலிருந்து உண்ணுவதை புரிந்து கொள்ள முடியும். இது செடிகள் மீண்டும் முளைக்க உதவும். தேசியப் பூங்காவின் தீவுகள்தான் அருகி வரும் கராய் ஒட்டகங்களுக்கு விருப்பமான இடம். அங்குதான் அவை அலையாத்திகளையும் பிறவற்றையும் உண்கின்றன.
வனத்துறை, வேறாக பிரச்சினையைப் பார்க்கிறது. அது நடத்திய சில ஆய்வுகளும் சரி, சில கல்வியாளர்களும் சரி வெளிப்படுத்துவது ஒரு விஷயத்தைதான். ஒட்டகங்கள் அளவுக்கதிகமாக மேய்கின்றன என்றே நிறுவப்படுகிறது.
2016ம் ஆண்டின் ஆய்வு சுட்டிக் காட்டுவது போல், அலையாத்திகள் அழிவதற்கு பல காரணங்கள் உண்டு. அழிவுக்கான காரணத்தை அந்த ஆய்வு தொழில்மயமாக்கல் மற்றும் பிற காரணங்களுடன் இணைக்கிறது. அந்த அழிவுக்கான காரணமாக மல்தாரிகளையும் ஒட்டகங்களையும் அது எங்கும் பழி சொல்லவில்லை.
அந்தப் பல காரணங்களும் முக்கியமானவை.
நீச்சல் தெரிந்த ஒரே வகையான கராய் ஒட்டகங்களுடன் மல்தாரிக் குழு மேய்ப்பர்களும் செல்வார்கள்
1980களிலிருந்து ஜாம்நகரும் சுற்றுப்புறங்களும் தொழில்மயமாக்கலைச் சந்தித்து வருகின்றன. “உப்பள ஆலைகள், எண்ணெய் படகுத்துறைகள் மற்றும் இப்பகுதியில் இருக்கும் பிற தொழில்மயமாக்கலால் விளைவு இருக்கிறது,” எனச் சுட்டிக் காட்டுகிறார் ரிதுஜா. “அவர்களின் பயன்பாட்டுக்காக நிலம் கொடுக்கப்பட்டதால் ஏற்படும் சிரமங்களை இவர்கள் சந்திக்கிறார்கள். ஆனால், மேய்ப்பர்களின் வாழ்வாதாரத் தொழில் என்று வரும்போது இத்துறை பாதுகாவலராக மாறி விடுகிறது. சட்டத்தின் 19 (g) பிரிவுக்கு இது எதிரானதாகும். ‘எந்தத் தொழிலையும் செய்வதற்கான உரிமை’யை அச்சட்டம் உறுதிப்படுத்துகிறது.”
பூங்காவுக்குள் மேய்ச்சல் தடை செய்யப்பட்டதிலிருந்து வனத்துறையினரால் தொடர்ந்து ஒட்டக மேய்ப்பர்கள் அவமதிப்பை சந்தித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் ஆடாம் ஜாட். “சில வருடங்களுக்கு முன், ஒட்டகங்களை இங்கே மேய்த்ததற்காக என்னை கைது செய்தனர். 20,000 ரூபாய் அபராதம் கட்டினேன்,” என்கிறார் அவர். இங்கிருக்கும் பிற மேய்ப்பர்களும் இத்தகைய அனுபவங்களை பகிர்கின்றனர்.
“ஒன்றிய அரசின் 2006ம் ஆண்டுச் சட்டத்தாலும் உதவியில்லை,” என்கிறார் ரிதுஜா மித்ரா. 2006ம் ஆண்டு வனஉரிமைச் சட்டத்தின் 3 (1) (d) பிரிவு, மேய்ச்சலுக்கும் பயன்பாட்டுக்குமான சமூக உரிமைகளையும் மேய்ச்சல் நாடோடி சமூகங்களின் குறிப்பிட்ட காலத்தைய பயன்பாட்டையும் அனுமதிக்கிறது.
”ஆனால் இந்த மல்தாரிகள், வன அலுவலர்களால் மேய்ச்சலுக்காக தொடர்ந்து தண்டனை அளிக்கப்படுகிறார்கள். 20,000லிருந்து 60,000 ரூபாய் வரை அபராதம் கட்ட வேண்டி வருகிறது,” என்கிறார் ரிதுஜா. வன உரிமைச் சட்டம் முன் வைக்கும் பிற பாதுகாப்புகள் யாவும் அமலாக்கப்படவில்லை என்றும் கூறுகிறார்.
இங்குள்ள சதுப்புப் பகுதியை தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்ந்து, வேறு யாரையும் விட நன்கு அறிந்த, மேய்ப்பர்களை ஈடுபடுத்தாமல் விரிவுபடுத்த முயற்சிப்பது பயனற்றதாகத் தெரிகிறது. "நாங்கள் இந்த நிலத்தைப் புரிந்து கொள்கிறோம். சூழலியல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்கிறோம். மேலும் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க அரசாங்கம் எடுக்கும் கொள்கைகளுக்கு நாங்கள் எதிரானவர்களும் அல்ல" என்று ஜகபாய் ரபாரி கூறுகிறார். “நாங்கள் கேட்பதெல்லாம்: கொள்கைகளை உருவாக்கும் முன் தயவுசெய்து எங்களைக் கேளுங்கள் என்றுதான். இல்லையெனில், இந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 1,200 பேரின் உயிரும், ஒட்டகங்களின் உயிரும் ஆபத்தைச் சந்திக்கும்.”.
இக்கட்டுரையாளர், சஹ்ஜீவன் ஒட்டகப் பணியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான மகேந்திர பனானி அளித்த நிபுணத்துவம் மற்றும் உதவி ஆகியவற்றுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறார்.
ரிதாயன் முகர்ஜி, மேய்ச்சல் நாடோடி சமூகங்கள் பற்றியக் கட்டுரைகளை மேய்ச்சல் மையத்தின் சுயாதீன மானியத்தில் பயணித்து எழுதுகிறார். இக்கட்டுரையின் உள்ளடக்கத்தில் எந்த அதிகாரத்தையும் அம்மையம் வெளிப்படுத்தவில்லை.
தமிழில் : ராஜசங்கீதன்