மாட்டுத் தொழுவத்தின் மண் தரையில் இரு கைகளாலும் மஞ்சித் கவுர் வழித்தெடுக்கிறார். குத்த வைத்து அமர்ந்திருக்கும் 48 வயதான அவர், இன்னும் கொழகொழப்பாக இருக்கும் சாணத்தை வழித்து கையில் வைத்திருக்கும் சட்டியில் போடுகிறார். பிறகு அதை தலையில் தூக்கி வைக்கிறார். விழுந்து விடாதபடிக்கு நேர்த்தியாக தலையில் வைத்துக் கொண்டு வீட்டின் மரக் கதவுகளை தாண்டி 50 மீட்டர் தொலைவில் இருக்கும் சாணக்குவியலை நோக்கிச் செல்கிறார். நெஞ்சுயரத்துக்கு இருக்கும் குவியல், பல மாதங்களாக அவர் செலுத்திய உழைப்புக்கு சான்று.
ஏப்ரல் மாதத்தின் சுட்டெரிக்கும் மதிய வேளை அது. 30 நிமிடங்களில் எட்டுமுறை இந்த நடையை மஞ்சித் நடந்துவிட்டார். இறுதியில் சட்டியை வெறுங்கைகள் கொண்டு கழுவுகிறார். வேலை முடித்துக் கிளம்புவதற்கு முன், சிறு ஸ்டீல் தூக்கில் மாட்டுப்பாலை அரை லிட்டர், பேரக் குழந்தைக்காக நிரப்பிக் கொள்கிறார்.
காலை 7 மணி தொடங்கி அவர் வேலை பார்த்ததில் இது ஆறாவது வீடு. எல்லா வீடுகளுமே பஞ்சாபின் தம் தாரன் மாவட்டத்திலுள்ள ஹவேலியன் கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியான ஜாட் சீக்கியரின் வீடுகள்.
“மஜ்பூரி ஹை,” என்கிறார் அவர். கையறுநிலைதான் மாட்டுத் தொழுவத்தை சுத்தப்படுத்தும் வேலையை அவர் செய்ய வைத்திருக்கிறது. ஒருநாளில் எவ்வளவு சாணத்தை தலையில் சுமக்கிறார் என அவருக்கு தெரியவில்லை. ஆனால், “சுமையை தூக்கி என் தலை அதிகமாக வலிக்கிறது,” என்கிறார்.
வீடு திரும்பும் வழியில் தங்க நிற கோதுமை வயல்கள் அடிவானம் வரை நீண்டிருக்கிறது. அவை யாவும், ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் அறுவடைத் திருவிழா காலத்தில் அறுவடை செய்யப்படும். ஹவெலியனின் ஜாட் சீக்கியர்தான் கண்டிவிண்ட் ஒன்றியத்தின் பெருமளவு விவசாய நிலங்களின் உரிமையை கொண்டிருக்கின்றனர். பிரதானமாக அரிசியும் கோதுமையும் விளைவிக்கப்படுகிறது.
மஞ்சித்தின் மதிய உணவு ஆறிப்போன ஒரு சப்பாத்தியும் தேநீரும். பிறகு ஒரு மணி நேரம் ஓய்வெடுப்பார். இப்போது தண்ணீர் தாகம் எடுக்கிறது. “இந்த வெயிலில் கூட அவர்கள் குடிக்க தண்ணீர் கொடுக்க மாட்டார்கள்,” என்கிறார் மஞ்சித் அவரின் உயர்சாதி முதலாளிகளைப் பற்றி
மசாபி சீக்கியர்களின் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் மஞ்சித். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன், அவரும் அவரின் குடும்பத்தினரும் கிறித்துவ மதத்தை பின்பற்றத் தொடங்கினர். இந்துஸ்தான் டைம்ஸின் 2019ம் ஆண்டு அறிக்கை யின்படி, ஹவெலியனில் வசிக்கும் மக்கள்தொகையின் மூன்றில் ஒரு பங்கு பட்டியல் சாதியினரும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களும்தான். அவர்கள் விவசாயக் கூலியாகவோ தினக்கூலியாகவோ இருக்கின்றனர். மிச்சமுள்ள அனைவரும் ஜாட் சீக்கியர்கள்தான். ஜாட் சீக்கியர்களின் 150 ஏக்கர் விவசாய நிலங்கள் சுருள் கம்பி வேலிகளின் அப்புறத்தில் இருக்கிறது. அவற்றிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் பாகிஸ்தான் எல்லை தொடங்கி விடுவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
ஹவெலியனில் இருக்கும் தலித் பெண்கள் மாட்டுச் சாணம் சேகரிக்கின்றனர். அல்லது மாட்டுத் தொழுவங்களை சுத்தப்படுத்துகின்றனர். அல்லது ஜாட் சீக்கியர் வீடுகளில் பணிபுரிகின்றனர்.
“அரசாங்கம் ஏழை மக்களை பற்றி யோசிப்பதில்லை. அதனால்தான் நாங்கள் மாட்டுச் சாணத்தை சேகரித்து சுத்தப்படுத்தும் வேலை செய்கிறோம்,” என்கிறார் மஞ்சித்.
வேலை செய்தால் என்ன கிடைக்கும்?
”ஒவ்வொரு மாட்டுக்கும் எங்களுக்கு 37 கிலோ கோதுமை அல்லது அரிசி, பயிர்க்காலத்தைப் பொறுத்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கிடைக்கும்,” என்கிறார் மஞ்சித்.
50 விலங்குகளைக் கொண்ட ஏழு வீடுகளில் மஞ்சித் பணிபுரிகிறார். “ஒரு வீட்டில் 15 மாடுகள் இருக்கின்றன. இன்னொரு வீட்டில் ஏழு. மூன்றாவது வீட்டில் ஐந்து. நான்காம் வீட்டில் ஆறு இருக்கின்றன…” என மஞ்சித் எண்ணத் தொடங்குகிறார்.
15 மாடுகளைக் கொண்ட குடும்பத்தைத் தவிர மற்ற குடும்பங்கள் கோதுமையோ அரிசியோ சரியான அளவில் கொடுத்து விடுகின்றனர் என்னும் அவர், “அவர்கள் 370 கிலோக்களைதான் 15 மாடுகளுக்குக் கொடுக்கின்றனர்,” என்கிறார். “அவர்களிடம் வேலை செய்வதை நான் நிறுத்தவிருக்கிறேன்.”
ஏழு மாடுகள் கொண்ட வீட்டிலிருந்து பேரக்கழந்தைக்கு துணி வாங்கவும் வீட்டுச் செலவுகளுக்குமென 4,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார் மஞ்சித். அங்கு ஆறு மாதப் பணியை மே மாதத்தில் முடித்தபோது, கோதுமையில் கடன் தவணையைக் கட்டினார். கட்ட வேண்டியத் தவணைகள் ஒரு கிலோ கோதுமை விலையைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
ஏழு மாடுகளுக்கான ஊதியம் கிட்டத்தட்ட 260 கிலோக்கள்
இந்திய உணவு வாரியத்தின் இந்த வருட நிலவரப்படி ஒரு குவிண்டால் (100 கிலோ) கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2015. அதன்படி 260 கிலோ என்பது ரூ.5,240 ஆகிறது. கடனை அடைத்து முடித்து 1,240 ரூபாய் மதிப்பு கொண்ட கோதுமை மஞ்சித்திடம் மிஞ்சும்.
மேலும் ரொக்கத்தில் வட்டி கட்ட வேண்டும். “நூறு ரூபாய்க்கு 5 ரூபாய் ஒவ்வொரு மாதமும் வட்டி,” என்கிறார் அவர். அதாவது 60 சதவிகித வருடாந்திர வட்டி.
ஏப்ரல் பாதி வரை அவர் வட்டியாக 700 ரூபாய் கட்டியிருந்தார்.
ஏழு பேர் கொண்ட குடும்பத்தில் மஞ்சித் வாழ்கிறார். 50 வயதுகளில் இருக்கும் விவசாயக் கூலி கணவன், விவசாயத் தொழிலாளியாக இருக்கும் 24 வயது மகன், மருமகள், இரண்டு பேரக் குழந்தைகள், 22 மற்றும் 17 வயதில் மணமாகக் காத்திருக்கும் இரு மகள்கள் ஆகியோர் கொண்ட குடும்பம். இரு மகள்களும் ஜாட் சீக்கிய வீடுகளில் வேலை பார்க்கின்றனர். மாதத்துக்கு 500 ரூபாய் வருமானம் பெறுகின்றனர்.
இன்னொரு இடத்தில் அவர் ரூ.2,500 வட்டியில்லாக் கடன் பெற்றிருக்கிறார். மளிகை சாமான் வாங்கவும் மருத்துவத்துக்கும் குடும்பத் திருமணங்களுக்கும் பிற விழாக்களுக்கும் உயர்சாதி வீடுகளிலிருந்து வாங்கப்படும் சிறு கடன்கள் முக்கியம் என்கிறார் அவர். கால்நடைகளை வாங்குவதற்கு அல்லது பிற செலவுகளுக்குப் பெண்களுக்கு உதவும் சிறு சேமிப்புக் குழுக்களுக்கு மாதத் தவணைகளும் அதைக் கொண்டுதான் கட்ட முடியும்.
மார்ச் 2020-ல் வெளியான ‘Dalit Woman Labourers in Rural Punjab: Insight Facts’ என்கிற ஆய்வில் பாடியாலாவின் பஞ்சாபி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் பேராசிரியர் டாக்டர் கியான் சிங், கிராமப்புற பஞ்சாபின் தலித் பெண் தொழிலாளர்களில் 96.3 சதவிகிதம் பேர் கடனில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுகிறார். சராசரி கடன் அளவு ரூ.54,300. மொத்தக் கடன் தொகையின் 80.40 சதவிகிதம் நிறுவனம் சாரா இடங்களிலிருந்து வாங்கப்படும் கடன்கள்.
ஹவெலியனைச் சேர்ந்த 49 வயது தலித் பெண்ணான சுக்பிர் கவுர், பணி கொடுப்பவர்கள் பல வருடங்களாக வட்டியை மாற்றவில்லை என்றும் புதியவர்கள் மட்டும்தான் மாற்றுகிறார்கள் என்றும் கூறுகிறார்.
மஞ்சித் குடும்பத்துக்கு உறவினரான சுக்பீர் பக்கத்திலுள்ள இரண்டரை வீட்டில் கணவர் மற்றும் இரு மகன்களுடன் வசிக்கிறார். 20 வயதுகளில் இருக்கும் மகன்கள் விவசாயக் கூலியாகவோ நாளொன்றுக்கு 300 ரூபாய் ஈட்டும் தினக்கூலியாகவோ வேலை கிடைக்கும்போது பணிபுரிகின்றனர். 15 வருடங்களாக சுக்பிர் மாட்டுத்தொழுவங்களை சுத்தப்படுத்தி சாணம் சேகரிக்கும் வேலையை ஜாட் சீக்கிய வீடுகளில் செய்து வருகிறார்.
மொத்த 10 மாடுகளை கொண்ட இரு வீடுகளில் அவர் பணிபுரிகிறார். மூன்றாம் வீட்டில் வீட்டுவேலை பார்த்து மாதம் 500 ரூபாய் ஈட்டுகிறார். காலை 9 மணிக்கு முன்னமே கிளம்பும் அவருக்கு வீடு திரும்பவென நிலையான நேரம் இருப்பதில்லை. “சில நாட்கள் நான் மதியமே திரும்பி விடுவேன். சில நேரங்களில் பிற்பகல் 3 மணி ஆகும். அல்லது 6 மணி வரை கூட ஆகும்,” என்கிறார் சுக்பிர். “திரும்பிய பின் உணவு தயாரித்து மிச்ச வேலையை முடிக்க வேண்டும். படுக்க இரவு பத்து மணி ஆகிவிடும்.”
மஞ்சித்தின் நிலை, மருமகள் உதவி இருப்பதால் சற்று பரவாயில்லை என்கிறார் சுக்பிர்.
மஞ்சித்தைப் போலவே பணியிடத்தில் வாங்கிய கடன்களில் உழலுகிறார் சுக்பிர். ஐந்து வருடங்களுக்கு முன்னால், ஒரு வீட்டிலிருந்து அவர் 40,000 ரூபாய் மகளின் திருமணத்துக்காக கடன் பெற்றார். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊதியமாகக் கொடுக்கப்படும் தானியங்களில் அவரது கடன் பிடித்துக் கொள்ளப்படுவதில்லை. இன்னும் அவரின் கடன் அடைக்கப்படாமலே இருக்கிறது.
கட்ட வேண்டியத் தொகை ஒவ்வொரு ஆறு மாதமும் கணக்கிடப்படும். ஆனால் அவர் குடும்ப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல காரணங்களுக்காக அதிகமாக கடன் வாங்குவார். “இது இப்படியேதான் போகும். அதனால்தான் எங்களால் கடன் சுழலிலிருந்து வெளியேற முடியவில்லை,” என்கிறார் சுக்பிர்.
அவர் கடன் பெற்ற குடும்பம் எப்போதாவது அவரைக் கூடுதல் வேலை செய்ய உத்தரவிடும். “நாங்கள் அவர்களிடம் கடன் வாங்கியதால், மறுக்க முடியாது,” என்கிறார் சுக்பிர். “ஒரு நாள் எங்களால் வேலைக்கு செல்ல முடியவில்லை எனில், அவர்கள் எங்களை திட்டுவார்கள். கடனை திரும்பக் கட்டிவிட்டு வீட்டிலிருக்கும்படி சொல்வார்கள்.”
1985ம் ஆண்டிலிருந்து பஞ்சாபில் அடிமைத்தனத்தையும் சாதிய ஒடுக்குமுறையையும் முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் இயங்கி வரும் தலித் தஸ்தா விரோதி அந்தோலன் அமைப்பின் தலைவரும் வழக்கறிஞரும் செயற்பாட்டாளருமான ககன்தீப், இந்த வேலைகளைச் செய்யும் தலித் பெண்களுக்கு பெரியளவில் படிப்பறிவு இல்லை என்கிறார். “அவர்களுக்குக் கொடுக்கப்படும் தானியங்களிலிருந்து கடனுக்கு பிடித்துக் கொள்ளப்படும் அளவை அவர்களால் குறித்துக் கொள்ள முடிவதில்லை. எனவே அவர்கள் கடனில் மாட்டித் தவிக்கின்றனர்.”
பெண்கள் மீதான இத்தகையச் சுரண்டல் மல்வா (தெற்கு பஞ்சாப்) மற்றும் மஜா (பஞ்சாபின் எல்லைப் பகுதிகள்) பகுதிகளில் பரவலாக இருப்பதாக காகன்தீப் சொல்கிறார். “தோவாபா பகுதியில் (பீஸ் மற்றும் சட்லஜ் ஆறுகளின் இடையில் உள்ள பகுதி) சற்றுப் பரவாயில்லை. அங்கிருப்போரில் பலர் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.”
பஞ்சாபி பல்கலைக்கழகக் குழுவால் நடத்தப்பட்ட ஆய்வில் பங்கெடுத்த தலித் பெண் தொழிலாளர்களில் ஒருவருக்கும் குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 1948 பற்றி தெரியவில்லை
மாட்டுச் சாணம் சேகரிக்கும் பெண்கள் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்படி தொழிலாளர்களாக அடையாளப்படுத்த முடியாது என்கிறார் ககன்தீப். வீட்டுவேலை செய்பவர்களை உள்ளடக்கியிருக்கும் சட்டம், வீட்டுக்கு வெளியே இருக்கும் மாட்டுத் தொழுவத்தை சுத்தப்படுத்தும் தொழிலாளர்களை பட்டியலில் கொள்ளவில்லை. “ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தொழுவத்தை சுத்தப்படுத்தி மாட்டுச்சாணம் சேகரிக்கும் இந்தப் பெண்களுக்கும் மணி நேரக் கணக்கில் ஊதியம் கொடுக்கப்பட வேண்டும்,” என்கிறார் ககன்தீப்.
இந்த விஷயங்களை மகளின் மாமனார் மாமியாரிடம் சுக்பிரால் பகிர்ந்து கொள்ள முடியாது. “அவர்கள் கண்டுபிடித்து விட்டால், எங்களை வெறுத்து விடுவார்கள். ஏழைக் குடும்பத்தில் மகனைக் கட்டிக் கொடுத்து விட்டதாக நினைப்பார்கள்,” என்கிறார் அவர். அவரது மருமகன் மேஸ்திரியாக வேலை பார்க்கிறார். அவரின் குடும்பம் படித்த குடும்பம். சில நேரங்களில் தினக்கூலியாக வேலை பார்ப்பாரென்றுதான் சுக்பிர் அவர்களிடம் சொல்லியிருக்கிறார்.
மணம் முடித்து 17 வயதில் ஹவெலியனுக்கு வருவதற்கு முன் வரை மஞ்சித் எங்கும் பணிபுரியவில்லை. பொருளாதாரச் சூழல் அவர் வேலை தேட நிர்பந்தித்தது. அவரின் மகள்கள் வீட்டு வேலை செய்கின்றனர். அவர்கள் சாணம் சேகரிக்கும் வேலையை எக்காலத்திலும் செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் அவர்.
மஞ்சித்தும் சுக்பிரும் தங்களின் கணவர்கள் மதுவில் அவர்களது வருமானத்தை இழப்பதாகக் கூறுகின்றனர். “அவர்களின் 300 ரூபாய் தினக்கூலியிலிருந்து 200 ரூபாயை மதுவுக்கென செலவழிப்பார்கள். மிச்சத்தைக் கொண்டு வாழ்வது கடினம்,” என்கிறார் சுக்பிர். வேலை இல்லாதபோது பெண்களின் வருமானத்தையும் அவர்கள் எடுத்துக் கொள்வதுண்டு. “நாங்கள் அவர்களை தடுத்தால், அடிப்பார்கள். தள்ளிவிடுவார்கள். பாத்திரங்களை எங்கள் மீது தூக்கி வீசுவார்கள்,” என்கிறார் சுக்பிர்.
பஞ்சாபில் 18-49 வயதில் இருக்கும் மணமான பெண்களில் 11 சதவிகிதம் பேர் கணவரால் ஏதோவொரு வகை உடல்ரீதியான வன்முறைக்கு ஆளாகியிருக்கின்றனர் என்கிறது தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு 2019-21 (NFHS-5). தள்ளப்பட்டதாகவும் உலுக்கப்பட்டதாகவும் ஏதோவொரு பொருள் தங்கள் மீது வீசப்பட்டதாகவும் 5 சதவிகிதம் பேர் சொல்கின்றனர். 10 சதவிகிதம் பேர் கணவர் அறைந்ததாக குறிப்பிட்டிருக்கின்றனர். 3 சதவிகிதம் பேர் முஷ்டியாலோ ஏதோவொரு பொருளாலோ காயப்படும் வகையில் குத்தப்பட்டிருக்கின்றனர். அதே அளவிலானோ உதைக்கப்பட்டு, இழுக்கப்பட்டு, அடிக்கப்பட்டிருக்கின்றனர். 38 சதவிகித பெண்கள் கணவர்கள் மது அருந்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அதே பகுதியில் 15 மற்றும் 12 வயதுகளில் மகன் மற்றும் மகள் மற்றும் 60 வயதுகளில் இருக்கும் மாமனார் ஆகியோருடன் வாழும் மசாபி சீக்கிய தலித்தான 35 வயது சுக்விந்தர் கவுர், சாணம் சேகரிக்கும் வேலை செய்வாரென இளவயதில் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை என்கிறார். மகன் பிறந்த பிறகு, கணவர் விவசாயத் தொழிலாளராக வேலை பார்த்தாலும் குடும்பச் செலவுகளை சமாளிக்க அவரும் வேலைக்கு போக வேண்டுமென மாமியார் (ஐந்து வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்) கூறினார்.
திருமணம் முடிந்த ஐந்து வருடங்களில், சாணம் சேகரித்து தொழுவத்தை சுத்தப்படுத்தி உயர்சாதி வீட்டை சுத்தப்படுத்தும் வேலைகளை செய்யத் தொடங்கினார். இன்று அவர் ஐந்து வீடுகளில் பணிபுரிகிறார். இரண்டு வீடுகளில் வீட்டு வேலை செய்து 500 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். மற்ற மூன்று வீடுகளில் சாணம் சேகரிக்கும் வேலை செய்கிறார். அங்கு 31 மாடுகள் இருக்கின்றன.
தொடக்கத்தில் அவர் அதை வெறுத்தார். “அது என் தலையில் சுமையாக இருந்தது,” என 10 கிலோ சாணச் சட்டியைக் குறிப்பிடுகிறார். அதன் வாசனையைக் குறித்து சொல்கையில், “என் மூளை அந்த வாசனையை பதிவு செய்வது கூட இல்லை,” என்கிறார் அவர்.
அக்டோபர் 2021-ல் அவரது விவசாயத் தொழிலாளிக் கணவரின் உடல்நலம் மோசமானது. சிறுநீரகம் செயலிழந்து விட்டிருந்தது. அவரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அடுத்த நாள் காலை இறந்துவிட்டார். “மருத்துவ அறிக்கைகளிலிருந்து அவருக்கு எய்ட்ஸ் இருப்பதை தெரிந்து கொண்டோம்,” என்கிறார் சுக்விந்தர்.
அதற்குப் பிறகுதான் அவர் பணியிடத்திலிருந்து மருத்துவப் பரிசோதனைக்காக 5,000 ரூபாய் கடன் பெற்றார். தொடர்ந்து இறுதிச்சடங்கு மற்றும் பிறச் சடங்குகளுக்காக 10,000 ரூபாய் மற்றும் 5,000 ரூபாய் கடன்களாக வாங்கினார்.
கணவரின் மரணத்துக்கு முன் அவர் வாங்கியக் கடன் ஒன்று, நூறு ரூபாய்க்கு 10 ரூபாய் மாத வட்டி கொண்டிருந்தது. வருடத்துக்கு 120 ரூபாய். அவர் பணிபுரிந்த அதே வீட்டில் நகை திருடிவிட்டதாக அக்குடும்பம் அவரை பழி சொன்னது. “எனவே நான் வேலையை விட்டுவிட்டு, அவர்களின் கடனை அடைக்க பிறரிடம் 15,000 ரூபாய் கடன் வாங்கினேன். இறுதியில் அவர்களது வீட்டிலேயே நகையைக் கண்டுபிடித்தனர்,” என்கிறார் சுக்விந்தர்.
இன்னும் அவர் 15,000 ரூபாய் கட்ட வேண்டியிருக்கிறது.
தலித் தஸ்தான் விரோதி அந்தோலன் அமைப்பின் மாவட்டத் தலைவரான ரஞ்சித் சிங், அதிக வட்டிவிகிதம் கடன்களை பெண்கள் முழுமையாக அடைக்க முடியாத நிலையை உறுதிப்படுத்துகிறது என்கிறார். “ஒரு பெண் கடனை அடைக்க முடியாதளவுக்கு வட்டி அதிகமாக இருக்கும். இறுதியில் அவள் கொத்தடிமையாகும் நிலையை அடைவாள்,” என்கிறார் அவர். சுக்விந்தர் உதாரணமாக, 10,000 ரூபாய் கடனுக்கு மாதவட்டியாக 1,000 ரூபாய் கட்டினார்.
நாற்பத்து ஐந்து வருடங்களுக்கு முன் இந்தியா கொத்தடிமை உழைப்பு தடுப்புச் சட்ட த்தை உருவாக்கியது. சட்டத்தை மீறுவோருக்கு மூன்று வருடக் கடுங்காவல் தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி வன்கொடுமை தடுப்புச் சட்ட த்தின்படி கொத்தடிமையாக ஒரு பட்டியல்சாதியினர் வேலை பார்க்கக் கட்டாயப்படுத்தப்படுவதும் குற்றமாகும்.
ரஞ்சித்தை பொறுத்தவரை மாவட்ட நிர்வாகம் இத்தகைய நிலையை பொருட்படுத்தவில்லை.
“அவர் (கணவர்) உயிரோடு இருந்திருந்தால் குடும்பம் நடத்துவது சுலபமாக இருந்திருக்கும்,” என்கிறார் சுக்விந்தர் தன் கையறுநிலையைக் குறித்து. “எங்கள் வாழ்க்கை கடன் வாங்கி அவற்றை அடைப்பதிலேயே கழிந்துவிடுகிறது.”
தமிழில் : ராஜசங்கீதன்