மே 2021-ல் மனைவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது, ராஜேந்திர பிரசாத் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது தொலைதூர கிராமத்திற்கு அருகிலுள்ள நகரத்தின் தனியார் மருத்துவமனைக்கு அவரை வேகமாகக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், அவரது முதல் விருப்பம், அருகில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே இருந்தது. ஆனால் அந்த மருத்துவமனை தேசிய எல்லைக்குள் இல்லை. நேபாளத்தில் இருந்தது.
"எல்லையின் மறுபுறத்தில் நாங்கள் சிகிச்சை பெறுவது வழக்கம்தான். கிராமத்தில் உள்ள பலர் பல ஆண்டுகளாக அதைச் செய்துள்ளோம்," என்று 37 வயதான ராஜேந்திரா விளக்குகிறார். நேபாளத்தில் உள்ள மருத்துவமனை, ராஜேந்திராவின் கிராமமான பாங்காட்டியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ள உத்தரப்பிரதேச மாவட்டங்களில் மிகப்பெரிய லக்கிம்பூர் கெரியில் பாங்காட்டி இருக்கிறது.
இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான திறந்த எல்லைக் கொள்கை, 1950-ல் அமைதி மற்றும் நட்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதிலிருந்து நடைமுறையில் உள்ளது. இந்தியா மற்றும் நேபாளத்தின் குடிமக்கள் இரு பிரதேசங்களுக்கு இடையிலும் சுதந்திரமாக செல்ல அது அனுமதித்தது. வர்த்தகத்தில் ஈடுபடவும், சொத்துக்களை வாங்கவும், வேலையில் ஈடுபடவும் ஒப்பந்தம் அனுமதிக்கிறது. பாங்காட்டியின் குடியிருப்பாளர்களுக்கு, நேபாளத்தின் திறந்த எல்லை மலிவான மற்றும் சிறந்த சுகாதாரச் சேவையை அணுக வழிவகை செய்துள்ளது.
ஆனால் கோவிட் தொற்று அவை எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.
ராஜேந்திரனின் 35 வயது மனைவியான கீதா தேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, தொற்றுநோயின் இரண்டாவது அலை இந்தியாவில் உச்சத்தில் இருந்தது. ஆனால் அவர்களால் எல்லையைத் தாண்டி மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை, ஏனெனில் நேபாளம் ஐந்து இந்திய மாநிலங்களுடன் அது கொண்டிருக்கும் 1,850 கிலோமீட்டர் எல்லையை மார்ச் 23, 2020 முதல் கோவிட் -19 பரவலுக்குப் பிறகு சீல் வைத்தது.
அதற்கு ராஜேந்திரனின் குடும்பம் பெரும் விலை கொடுத்தது.
ராஜேந்திரன் கீதாவை பாங்காட்டியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலியா நகரத்திற்கு அழைத்துச் சென்றார். "[பாலியாவிற்கு] செல்லும் பாதை பயங்கரமானது, எனவே அங்கு செல்வதற்கு அதிக நேரம் எடுக்கும்" என்று அவர் கூறுகிறார். "ஊரில் உள்ள பொது மருத்துவமனை சரியில்லை, எனவே நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது." ராஜேந்திரன் ஒரு வாகனத்தை ரூ.2000-க்கு வாடகைக்கு எடுத்தார். ஏனெனில் பாங்காட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் (PHC) கடுமையான நோயைச் சமாளிக்கும் வசதிகள் கொண்டிருக்கவில்லை.
கீதாவுக்கு இருமல் மற்றும் சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் முதலிய கோவிட் அறிகுறிகள் இருந்தாலும் டவுன் ஆஸ்பத்திரியில் அவருக்கு நோய் இல்லை என்று சோதனை முடிவு தெரிவித்தது. ஆனால் அவருக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. "அவளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் தொடர்ந்தது" என்கிறார் ராஜேந்திரன். அப்போது பாலியாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. "நான் சில சிலிண்டர்களை சொந்தமாக ஏற்பாடு செய்தேன், ஆனால் அது போதுமானதாக இல்லை. அனுமதிக்கப்பட்ட ஆறு நாட்களுக்குப் பிறகு, அவள் இறந்துவிட்டாள்.”
ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலம் கொண்ட சிறு விவசாயியான ராஜேந்திரனின் ஆண்டு வருமானம் நிலையானதாக இல்லை.ரூ. 1.5 லட்சக்கு அவரின் ஆண்டு வருமானம் மிகாது. கீதாவின் சிகிச்சைக்காக தனியாரில் அவர் வாங்கிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் உட்பட ரூ.50,000 செலவழித்தார். “எனது அரிசியை வாங்கும் வியாபாரியிடம் நான் கடன் வாங்கினேன். என்னுடைய அறுவடையை அவருக்குக் கொடுப்பேன்” என்று அவர் கூறுகிறார். "கடனுக்காக நான் வருத்தப்படவில்லை, ஆனால் அவளால் சரியான சிகிச்சையைப் பெற முடியவில்லை என்று நான் வருந்துகிறேன்" என்று இரண்டு குழந்தைகளின் தந்தை கூறுகிறார். "இப்போது என் பதின்பருவக் குழந்தைகளை நானே பார்த்துக் கொண்டிருக்கிறேன்."
கீதா இறந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. நேபாளத்தில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்குமா என்று ராஜேந்திரா இன்னும் யோசிக்கிறார். "எல்லை மூடப்பட்டபோது சிலர் [மோகனா] நதி அல்லது [துத்வா] காடு வழியாக ஊடுருவ முயன்றனர்," என்று அவர் கூறுகிறார். "ஆனால் நான் எந்த ஆபத்தான முயற்சியும் எடுக்க விரும்பவில்லை. எங்களுக்கு போதுமான நேரம் இல்லை. அதனால் நேபாளத்துக்குப் போவதைத் தவிர்த்து பாலியாவில் உள்ள மருத்துவமனையைத் தேட முடிவு செய்தேன். இது சரியான முடிவுதானா என்று தெரியவில்லை.”
பங்காடியின் 214 குடும்பங்களில் உள்ள கிட்டத்தட்ட அனைவரும் நேபாளத்தின் தங்காதி மாவட்டத்தில் உள்ள செட்டி மண்டல மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் ஜெய் பகதூர் ராணாவும் ஒருவர்., 42 வயதானவர். பங்காட்டியின் ஊர்த் தலைவர்..
சுமார் 6-7 ஆண்டுகளுக்கு முன்பு காசநோயால் பாதிக்கப்பட்டபோது ஐந்து முறை மருத்துவமனைக்குச் சென்றதாக அவர் கூறுகிறார். "சிகிச்சை சுமார் ஆறு மாதங்கள் நீடித்தது," என ராணா கூறுகிறார். “அந்தக் காலகட்டத்தில், எல்லையில் சோதனை இல்லை. நான் எந்தத் தொந்தரவும் இல்லாமல் சிகிச்சை பெற முடிந்தது.”.
ராணா தனது கிராமத்தைச் சேர்ந்த மக்கள், செட்டி மண்டல மருத்துவமனைக்குச் செல்ல விரும்புவதற்கான சில காரணங்களை விளக்குகிறார். “பாலியாவுக்குச் செல்லும் சாலை துத்வா ரிசர்வ் வழியாக செல்கிறது. இது பாதுகாப்பான பாதை அல்ல. பல காட்டு விலங்குகள் உள்ளன,” என்று அவர் கூறுகிறார். "நாங்கள் பாலியாவுக்குச் சென்றாலும், என்ன வாய்ப்புகள் இருக்கின்றன? எங்களால் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாது. கெரியில் உள்ள பொது மருத்துவமனையில் எந்த வசதியும் இல்லை. அதனுடன் ஒப்பிடுகையில், செட்டியில் உள்ள மருத்துவர்களும் வசதிகளும் சிறப்புதான்.
அவர் நேபாளத்தில் தனது அனுபவத்தை நினைவு கூர்ந்தார். "இங்குள்ள [இந்தியா] பொது மருத்துவமனைகளில், சிகிச்சை மற்றும் படுக்கை இலவசம் ஆனால் மருத்துவர்கள் எப்போதும் நீங்கள் வெளியில் [மருந்தகங்களில்] வாங்க வேண்டிய மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். நிறைய பணம் செலவாகும்” என்றார். நேபாளத்தில் அப்படி இல்லை என்கிறார் அவர். “அங்கே, மருத்துவமனையில் கிடைக்காத பட்சத்தில் மட்டுமே வெளியில் இருந்து வாங்க மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார்கள். எனது சிகிச்சைக்கு பணம் எதுவும் செலவாகவில்லை. மார்ச் 2020க்குப் பிறகு எனக்கு காசநோய் வரவில்லை என்பது எனது அதிர்ஷ்டம். நான் கெரி அல்லது லக்னோவில் [சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில்] மருத்துவமனையைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்திருக்கும். எல்லை திறக்கப்பட்ட பிறகும், அது முன்பைப் போல் இல்லை.
செப்டம்பர் 2021 கடைசி வாரத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்களை அனுமதிக்க நேபாளம் முடிவு செய்தது. இருப்பினும், புறப்பட்ட 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட் தொற்று இல்லை என்கிற பரிசோதனை அறிக்கையும், பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி சர்வதேசப் பயணிப் படிவத்தின் நகலும் சமர்ப்பிக்கப்பட வேண்டியது இப்போது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புதிய முறை பாங்காட்டியில் வசிப்பவர்களை தங்கள் சொந்த நாட்டிலேயே மருத்துவம் பார்க்க வேண்டியக் கட்டாயத்துக்கு தள்ளிவிட்டது.
"இப்போது [கௌரிபாண்டாவில்] எல்லையில் எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு ஒருவர் பதிலளிக்க வேண்டும்," என்கிறார் ராணா. " உங்கள் கிராமத்தின் பெயர், உங்கள் அடையாள அட்டை, உங்கள் வருகைக்கான காரணம் மற்றும் பலவற்றைக் கேட்கிறார்கள்," என்று அவர் கூறுகிறார். "அவர்கள் பெரும்பாலும் எங்களை அனுமதித்தாலும், காவலர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது ஒரு கிராமவாசிக்கு அச்சுறுத்தலாக இருக்கும். எனவே இப்போது பெரும்பாலான மக்கள் எல்லையைத் தாண்டி கட்டாயம் போக வேண்டியிருந்தால் மட்டுமே செல்கிறார்கள்.”
நேபாளத்தின் கைலாலி மாவட்டத்தில் உள்ள கெட்டா கண் மருத்துவமனை எல்லை தாண்டிச் செல்வதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.
ஜனவரி 2022-ல், 23 வயதான மானசரோவர், கெரி மாவட்டத்தில் உள்ள கஜாரியா என்ற தனது கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண் மருத்துவமனைக்குச் செல்வதற்காக காடு வழியாக நடந்து சென்றார். அங்குள்ள மருத்துவர்களிடம் காண்பிப்பதற்காக தனது கைக்குழந்தையை தன்னுடன் சுமந்து சென்றுள்ளார். "எங்கள் மாவட்டத்திலோ அல்லது மாநிலத்திலோ எந்த மருத்துவமனையும், கண் பராமரிப்புக்காக கெட்டாவைப் போல் சிறந்த அளவில் இல்லை," என்று அவர் கூறுகிறார். "மேலும் நான் என் மகனுடன் எந்த ஆபத்தான முயற்சியும் எடுக்க விரும்பவில்லை."
அவரது மகன் ஏப்ரல் 2021-ல் பிறந்தான். கண்களில் பிரச்சினை. அசாதாரணமாக தண்ணீர் வருகிறது. மானசரோவர் அவனுடன் எல்லையைக் கடக்கும் வரை பிரச்சினைத் தொடர்ந்தது. "அதிர்ஷ்டவசமாக, யாரும் என்னை எல்லையில் நிறுத்தவில்லை," என்று அவர் கூறுகிறார். “என் மகன் இரண்டு வாரங்களில் குணமடைந்தான். கண்ணீர் நின்றதும் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றேன். மருத்துவர் என் மகனின் தலையில் கை வைத்து, இனிமேல் கவலைப்பட வேண்டாம் என்று சொன்னார். முழு சிகிச்சைக்கும் ரூ. 500-தான் ஆனது.”
கெரியின் எல்லைக் கிராமங்களில் உள்ள மக்களில் பெரும்பான்மையானோர் தாரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உத்தரப் பிரதேசத்தில் உள்ள பழங்குடிச் சமூகம் அது. மரியாதைக்குரிய சிகிச்சையைப் போலவே மலிவு சிகிச்சையும் முக்கியமானது.
பாங்காட்டியில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கஜாரியாவில், 20 வயதான ஷிமாலி ராணா, மருத்துவமனையில் அவமானப்படுவதை உணர்ந்தார். “நீங்கள் உதவியற்றவர். உங்களை அவமானப்படுத்துபவர்தான் உங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் உங்களால் எதுவும் சொல்ல முடியாது,” என்று பாலியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது அனுபவத்தை விவரிக்கிறார்.
நவம்பர் 2021-ல் அவர் பெற்றெடுத்த மகன் நுரையீரல் பிரச்சினையுடன் பிறந்தார். "அவனால் சுவாசிக்க முடியவில்லை. உள்ளூர் ஆரம்பச் சுகாதார மையம் எங்களை பாலியாவுக்குச் செல்லும்படி கேட்டுக் கொண்டது. அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை," என்று அவர் கூறுகிறார். "நாங்கள் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம். அது ஒரு பயங்கரமான அனுபவமாக இருந்தது."
பையன் குணமடைந்த பிறகும் டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் தயக்கம் காட்டியதாக அவரது கணவரான 20 வயது ராம்குமார் கூறுகிறார். "அவர்கள் அதிக பணம் பறிக்க விரும்பினர்," என்று அவர் கூறுகிறார். “நாங்கள் சிறிய நிலம் [ஒரு ஏக்கருக்கும் குறைவாக] உள்ள ஏழை விவசாயிகள். இனி எங்களால் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டோம். அங்கிருந்த மருத்துவர் எங்களைத் திட்டி, ‘நீங்கள் ஏழையாக இருப்பது என் தவறல்ல’ என்றார். அதற்கு முன், முன்பணம் செலுத்த முடியாமல் எங்களை அவமானப்படுத்தியுள்ளனர்” என்றார்.
அவர்கள் சந்தித்த பாகுபாடு சாதாரணமானது அல்ல. நவம்பர் 2021 -ல் ஆக்ஸ்பாம் இந்தியாவால் வெளியிடப்பட்ட நோயாளிகளின் உரிமைகள் பற்றிய ஆய்வு அறிக்கையின்படி, அந்த ஆய்வுக்குப் பதிலளித்த 472 பேரில் உத்தரபிரதேசத்தின் 52.44 சதவீதம் பேர் பொருளாதார நிலையின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக உணர்ந்துள்ளனர். சுமார் 14.34 சதவீதம் பேர் தங்கள் மதம் மற்றும் 18.68 சதவீதம் பேர் சாதியின் அடிப்படைகளில் பாகுபாடு காட்டப்படுவதாக உணர்ந்திருக்கின்றனர்.
மருத்துவமனையிலிருந்து வெளியேற குடும்பத்தினர் வலியுறுத்தும் வரை, அந்த விரும்பத்தகாத அனுபவம் ஷிமாலி மற்றும் ராம்குமாருக்கு ஒரு வாரம் வரை நீடித்தது. அதற்குள் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்த அவரது உறவினர்களிடம் இருந்து 50,000 ரூபாய் ராம்குமார் கடன் வாங்கியிருந்தார். "என் பையன் டிஸ்சார்ஜ் ஆனபோது கூட மருத்துவர், 'அவனுக்கு ஏதாவது நேர்ந்தால், எங்கள் பொறுப்பு அல்ல' என்று கூறினார்."
நேபாளத்தில் மானசரோவரின் அனுபவம் அதற்கு நேர்மாறாக இருந்தது. கெட்டா கண் மருத்துவமனையிலிருந்து வெளியே வரும்போது அவர் நிம்மதியும், உறுதியும் கொண்டிருந்தார். "மருத்துவர்கள் மரியாதைக்குரியவர்கள்," என்று அவர் கூறுகிறார். “உங்களுக்கு நேபாளி புரியவில்லை என்றால், ஹிந்தியில் சரளமாக இல்லாவிட்டாலும் உங்களுடன் பேச முயற்சி செய்வார்கள். அவர்கள் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிப்பார்கள். இந்தியாவில் ஏழை மக்களை இழிவாக நடத்துகிறார்கள். அதுதான் இந்த நாட்டின் மிகப் பெரிய பிரச்சனை.”
பார்த் எம்.என். தாகூர் குடும்ப அறக்கட்டளையின் சுயாதீனப் பத்திரிகை மானியம் மூலம் பொதுச் சுகாதாரம் மற்றும் சிவில் உரிமைகள் பற்றிய செய்திகளை சேகரிக்கிறார். தாகூர் குடும்ப அறக்கட்டளை இந்த கட்டுரையின் உள்ளடக்கத்தின் மீது எந்தக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.
தமிழில் : ராஜசங்கீதன்