நிலக்கரி சுரங்கம் நான்கைந்து வருடங்களுக்கு தொடர்ந்து இயங்கி வந்தது. 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் இந்தியா முழுவதும் தனியார் மூலமாக நடந்து வந்த நிலக்கரி சுரங்கங்களின் அனுமதியை ரத்து செய்தது. அதுவரையிலும் அவர்கள் தோண்டி எடுத்த நிலக்கரிக்கு ஒரு அபராதத்தையும் விதித்தது. கர்நாடக அரசின் மின்சார நிறுவனம் ஒப்பந்தத்தை மீண்டும் வெற்றிகரமாக பெற்றது. உச்ச நீதிமன்றம் அறிவித்த அபராதத்தை யார் கட்ட வேண்டும் என்பதில் சர்ச்சை ஏற்பட்டது. நீதிமன்றத்தில் அது தொடர்பாகவும் ஒரு வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. கர்நாடக அரசின் மின் உற்பத்தி நிறுவனத்தால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வேறு ஒரு புதிய நிறுவனத்தைக் கண்டுபிடிக்க இன்னமும் முடியாததால், பரம காசாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் செயல்படாமல் தற்போது உள்ளது. நிலக்கரி சுரங்கம் செயல்படாததால், அந்த கம்பெனிக்குச் சொந்தமாக மாறிவிட்ட எங்களுடைய நிலங்களும் செயல்படாமல் போய்விட்டன என்கிறார் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான மகா குல்கர்.நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் தீர்க்கப்படும் போது, ஒப்பந்தத்தை பெற்ற நிறுவனம் மறுபடியும் தனது வேலைகளை தொடங்கும்போது, நாங்கள் மீண்டும் இந்த இடங்களை விட்டு நகர வேண்டி வரும் என்கிறார் அவர்.
தற்போது நிறைய கிராமத்தினர், கிராமத்துக்கேத் திரும்பி வந்து விட்டார்கள். நிலக்கரி சுரங்கத்தின் வெடிப்பு சத்தங்கள், மாசு, ஆலையின் எந்நேரமும் இயங்குகின்ற சத்தம், இவையெல்லாம் சுரங்கம் செயல்படும்போது இருந்தாலும் கூட அவர்கள் அவற்றையும் மீறி கிராமத்திற்கு திரும்பி விட்டார்கள். கிராமமே தரிசு நிலமாக மாறி விட்டது. வேலை எல்லாம் போய்விட்டது. விவசாய நிலங்கள் அமைதியாக கிடக்கின்றன. நிலம் கையகப்படுத்தப்பட்ட காரணத்தினால் மக்கள் அரசின் திட்டங்கள் எதையும் அணுகி பெற முடியவில்லை. வீடுகளை மேம்படுத்த முடியாது. சாலைகளை மறுபடியும் போட மாட்டார்கள்.
நாங்கள் முன்னதாக செய்த தவறுகளுக்கான தண்டனையை அனுபவித்துக் கொண்டு கொண்டு இருக்கிறோம் என்கிறார் என்கிறார் இந்த கிராமத்தின் தற்போதைய பஞ்சாயத்து தலைவரான மாயாதாய் மகா குல்கர். “எங்களுக்கு எதுவும் கிடைக்காமல் போய்விட்டது. வயதானவர்களுக்கு வாழ்க்கை இங்கே மிகவும் கடினமாக இருக்கிறது. நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் வாழ்க்கை மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் விவசாயம் சார்ந்த தங்களுடைய வேலைகளை இழந்துவிட்டார்கள். அதற்கான நஷ்ட ஈடு, மாற்று வேலைகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார். சில விவசாயிகள் நஷ்ட ஈடாக தங்களுக்கு தரப்பட்ட பணத்திலிருந்து தூரத்து கிராமங்களில் கொஞ்சம் நிலங்களை வாங்கி போட்டார்கள். “நான் 10 ஏக்கர்களை 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற ஒரு கிராமத்தில் வாங்கிப் போட்டேன். தினமும் அங்கே போய் வருகிறேன். இதற்குப் பெயர் வளர்ச்சி அல்ல என்கிறார் அவர்.
"கிராமத்தைச் சுற்றி, சுரங்கம் தோண்டுவதற்கான நான்கு பெரிய துளைகள் போடப்பட்டுள்ளன. வறண்டு கிடக்கிற வயல்களுக்கு மத்தியில் அசிங்கமாக அவை காட்சி தருகின்றன. ரொம்ப பழைய ஒரு துளையில் மழைநீர் முழுவதும் தேங்கி கிடக்கிறது. மலை மேடுகளில் மிஷின்கள் துருப்பிடித்து கிடக்கின்றன. அந்த இயந்திரங்கள் சுரங்கம் தோண்டும் கம்பெனியால் கைவிடப்பட்டவை. கிராமத்தின் ஆன்மா செத்துவிட்டது. உயிரில்லாத உடல் ஆகி விட்டது கிராமம் என்கிறார் எண்பது வயதைக் கடந்த மகாதேவ் காம்ப்ளே. ஒரு காலத்தில் மாந்தோப்பாக வளம் கொழித்துக்கொண்டிருந்த ஒரு இடத்தில் மிஞ்சி இருக்கிற ஒற்றை மரத்தின் கீழே உட்கார்ந்து இருக்கிறார் அவர். “தற்போதைய கிராமம் அழுகிக் கொண்டிருக்கிற ஒரு உடம்பு” என்கிறார் அவர்.