தூத்துக்குடி டவுனில் மக்கள் தெருக்களுக்கு வேகமாக வந்து நிறைந்தனர். தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் அதே நிலைதான். ஒரு சிறுவனும் ஓடிச் சென்று அவர்களுடன் நின்று கொண்டான். சில கணங்களில் அவன் ஒரு போராட்டத்தின் அங்கமாக மாறியிருந்தான். தீவிரமான கோஷங்கள் எழுப்பினான். “அச்சூழலை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கவோ இப்போது உணரவோ வாய்ப்பில்லை,” என சொன்ன அவர், “பகத் சிங்குக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் உணர்ச்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்தியது. மக்கள் திகைப்பில் இருந்தார்கள். பலர் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தனர்,” என்றார்.
“அப்போது எனக்கு 9 வயதுதான்,” என சிரித்துக் கொண்டார்.
இன்று அவருக்கு 99 வயது (ஜூலை 15, 2020). ஆனாலும் சுதந்திரப் போராட்ட வீரராகவும் தலைமறைவுகால புரட்சிக்காரராகவும் எழுத்தாளராகவும் அறிவாளியாகவும் அவரை உருவாக்கிய நெருப்பையும் மனநிலையையும் விட்டுவிடாமல் இன்னும் தக்க வைத்திருக்கிறார். பிரிட்டிஷ்ஷின் சிறையை விட்டு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியே வந்தவர். “நீதிபதி நேரடியாக மத்தியச்சிறைக்கு வந்து எங்களை விடுதலை செய்தார். மதுரை சதி வழக்கிலிருந்து நாங்கள் விடுவிக்கப்பட்டோம். மதுரை மத்தியச்சிறையிலிருந்து வெளியே வந்ததுமே விடுதலைப் பேரணியில் கலந்து கொண்டேன்.”
நூறு வயதை அடையும் நிலையிலும் என்.சங்கரய்யா இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார். சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார். 2018ம் ஆண்டில் கூட சென்னையிலிருக்கும் குரோம்பேட்டையிலிருந்து பயணித்து மதுரையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் பட்டப்படிப்பை முடிக்க முடியாமல் போனவர்தான், பல அரசியல் பிரதிகளையும் புத்தகங்களையும் கட்டுரைகளையும் பிறகு எழுதியிருக்கிறார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்து முடிக்கும் நிலையில் இருந்தார் நரசிம்மலு சங்கரய்யா. இரண்டு வாரங்களில் நடக்கவிருந்த இறுதித்தேர்வை 1941ம் ஆண்டில் அவரால் எழுத முடியவில்லை. “கல்லூரி மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளராக இருந்தேன்.” கல்லூரி வளாகத்திலேயே கவிதைக்குழு உருவாக்குமளவு படிக்கும் மாணவராக இருந்தவர் கல்லூரியின் கால்பந்து அணியிலும் விளையாடினார். அக்காலத்தில் நடைபெற்ற பிரிட்டிஷ் ஆட்சி எதிர்ப்புப் போராட்டங்களிலும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார். “என்னுடைய கல்லூரி நாட்களில், இடதுசாரி சிந்தனை கொண்டிருந்த பலரின் நட்பு கிடைத்தது. சமூக சீர்திருத்தம் என்பது இந்தியச் சுதந்திரம் இல்லாமல் முழுமையடையாது என்பதை புரிந்துகொண்டேன்.” 17 வயதானபோது அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தார் (கட்சி தடைசெய்யப்பட்டு தலைமறைவாக இயங்கிக் கொண்டிருந்த காலம்).
மதுரை அமெரிக்கன் கல்லூரியின் அணுகுமுறை சாதகமாக இருந்ததாக நினைவுகூர்கிறார். “இயக்குநரும் சில ஆசிரியர்களும் மட்டும் அமெரிக்கர்களாக இருந்தனர். மற்ற அனைவரும் தமிழர்கள். அவர்கள் நடுநிலையாக இருக்க வேண்டிய கட்டாயம். பிரிட்டிஷ்ஷுக்கு ஆதரவாக அவர்கள் இருக்கவில்லை. மாணவர் நடவடிக்கைகள் அங்கு அனுமதிக்கப்பட்டன….” 1941ம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடியதற்காக அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் மீனாட்சி கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் கூட்டம் நடத்தப்பட்டது. “நாங்கள் துண்டுப்பிரசுரங்கள் கொடுத்துக் கொண்டிருந்தோம். எங்களின் விடுதி அறைகள் சோதிக்கப்பட்டன. துண்டுப்பிரசுரம் வைத்திருந்ததற்காக நாராயணசாமி (என் நண்பர்) கைது செய்யப்பட்டார். அவருடைய கைதையும் கண்டித்து பிறகு நாங்கள் கூட்டம் நடத்தினோம்…
”அதற்குப் பிறகு 1941ம் ஆண்டின் பிப்ரவரி 28ம் தேதி பிரிட்டிஷ்ஷார் என்னை கைது செய்தார்கள். இறுதித்தேர்வுக்கு 15 நாட்கள் மட்டுமே இருந்தன. நான் திரும்ப வரவில்லை. என்னுடைய இளங்கலை படிப்பை முடிக்கவேயில்லை.” கைது செய்யப்பட்ட தருணத்தை பல ஆண்டுகளுக்கு பிறகு சொல்கையில், “இந்திய சுதந்திரத்தில் பங்குபெற்று சிறைக்கு சென்றதில் எனக்கு பெருமையாக இருந்தது. என்னுடைய மூளைக்குள் இருந்த ஒரே எண்ணம் அதுவாகத்தான் இருந்தது” என்கிறார். வேலையென ஒன்று இல்லாமல் போய்விட்டதே என ஒரு கவலையும் இல்லை. அவரின் காலத்தில் இளைஞர்களால் எழுப்பப்பட்ட கோஷங்களில் அவருக்கு பிடித்த கோஷத்தை ஒட்டியே வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். “நாங்கள் வேலை தேடுபவர்கள் அல்ல; விடுதலையை தேடுபவர்கள்.”
”15 நாட்கள் மதுரைச் சிறையிலிருந்த பிறகு என்னை வேலூர் சிறைக்கு அனுப்பினார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பலரும் அச்சமயத்தில் அங்குதான் அடைக்கப்பட்டனர்.”
“ஒரு கூட்டத்தை ஒருங்கிணைத்ததற்காக ஏ.கே.கோபாலன் தோழர் (கேரளாவின் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்) திருச்சியில் கைது செய்யப்பட்டார். கேரளாவின் இம்பிச்சி பவா, வி.சுப்பையா, ஜீவானந்தம் முதலிய தோழர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களும் வேலூர் சிறையில்தான் இருந்தார்கள். மதராஸ் அரசாங்கம் எங்களை இரண்டு குழுக்களாக பிரிக்க திட்டமிட்டது. ஒரு குழுவுக்கு ‘சி’ வகை உணவு கொடுக்கப்படும். ‘சி’ வகை உணவு, கிரிமினல் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் உணவு. அம்முறையை எதிர்த்து 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தோம். பத்தாவது நாள் எங்களை இரு குழுக்களாக பிரித்தார்கள். நான் அப்போது மாணவனாக இருந்தேன்.”
சங்கரய்யாவின் சிறைப்பக்கம் வந்த சிறையதிகாரிக்கும் அந்த இளைஞர் மாக்சிம் கார்க்கியின் தாய் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தது ஆச்சரியமளித்தது. “உண்ணாவிரதம் தொடங்கி பத்து நாட்கள் ஆகின்றன. நீ கார்க்கியின் தாய் என இலக்கியம் படித்துக் கொண்டிருக்கிறாயா? எனக் கேட்டார்,” என கண்களில் நினைவுகள் ஒளிரக் கூறினார் சங்கரய்யா.
பிற சிறைகளில் பல பிரபலங்களும் அடைக்கப்பட்டிருந்தனர். “காமராஜர் (1954-63 வரை மதராஸ் மாகாணத்தின் முதல்வராக இருந்தவர்), பட்டாபி சித்தராமய்யா (சுதந்திரத்துக்கு பிறகு காங்கிரஸ்ஸின் தலைவரானவர்) முதலிய பலரும் வேறு பகுதிச் சிறைகளில் இருந்தனர். காங்கிரஸ்காரர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவில்லை. ‘நாங்கள் மகாத்மா காந்தியின் அறிவுரையே கேட்போம்’ என்பது அவர்களின் நிலைப்பாடு. ‘சிறைக்குள் எதுவும் கலகம் செய்யக்கூடாது’ என்பதுதான் அந்த அறிவுரை. ஒரு கட்டத்துக்கு மேல் அரசு இறங்கி வந்தது. சில சலுகைகளுக்கு ஒப்புக்கொண்டது. 19ம் நாள் எங்களின் உண்ணாவிரதத்தை முடித்தோம்.”
கருத்துவேறுபாடுகள் பல இருந்தாலும் சங்கரய்யாவை பொறுத்தவரை, “காமராஜர் கம்யூனிஸ்ட்டுகளுக்கு மிகச் சிறந்த நண்பராக இருந்தவர். மதுரையிலும் திருநெல்வேலியிலும் அவருடன் சிறையில் இருந்தவர்கள் அனைவருமே கம்யூனிஸ்ட்டுகள்தான். காமராஜரின் நெருங்கிய நண்பராக நானும் இருந்தேன். நாங்கள் நடத்தப்பட்ட விதத்தை தடுப்பதற்காக பல தடவை அவர் தலையிட்டார். ஜெர்மனிக்கும் சோவியத்துக்கும் போர் வந்தபோது சிறைக்குள் கடும் விவாதங்களும் (காங்கிரஸ்காரர்களுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையே) நிகழ்ந்தன.
“கொஞ்ச நாட்கள் கழித்து எட்டு பேர் மட்டும் ராஜமுந்திரி சிறைக்கு (தற்போது ஆந்திராவில் இருக்கிறது) மாற்றப்பட்டு தனிப்பகுதியில் இருந்த சிறையில் அடைக்கப்பட்டோம்.
“1942ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் எல்லா மாணவர்களையும் அரசு விடுதலை செய்தது. என்னை மட்டும் விடுவிக்கவில்லை. தலைமை சிறை வார்டன் வந்து ‘யார் சங்கரய்யா?’ என கேட்டார். பிறகு, என்னைத் தவிர அனைவரும் விடுதலை செய்யப்படுவதாகக் கூறினார். ஒரு மாதத்துக்கு நான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டேன். அந்த மொத்தப் பகுதியும் எனக்கு மட்டுமென இருந்தது!”
அவரும் பிறரும் என்ன குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருந்தார்கள்? “வழக்குகள் எதுவும் பதியப்படவில்லை. வெறுமனே சிறைக்காவல் மட்டும்தான். ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும், என்ன காரணத்துக்காக சிறையிலிருக்கிறீர்கள் என விளக்கி ஒரு நோட்டிஸ் அனுப்பப்படும். தேசதுரோகம், கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கைகள் என காரணங்கள் சுட்டப்பட்டிருக்கும். அதற்கான பதிலை நாங்கள் நிர்வாகக்குழுவுக்கு சமர்ப்பிப்போம். குழு அதை நிராகரிக்கும்.”
”ராஜமுந்திரியிலிருந்து விடுதலை செய்யப்பட்ட என் நண்பர்கள் கொல்கத்தாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த காமராஜரை ராஜமுந்திரி ரயில்நிலையத்தில் சந்தித்தார்கள். என்னை விடுதலை செய்யவில்லை என்பதை அறிந்ததும் மதராஸ் மாகாண தலைமைச் செயலாளருக்கு வேலூர் ஜெயிலுக்கு என்னை மாற்றக் கேட்டு கடிதம் எழுதினார். எனக்கும் கடிதம் எழுதினார். ஒரு மாதத்துக்கு பிறகு வேலூர் சிறைக்கு என்னை மாற்றினார்கள். அங்கு 200 தோழர்களுடன் இருந்தேன்.”
பல சிறைகள் சென்றதில் சங்கரய்யா ஆர்.வெங்கட்ராமனையும் சந்திக்க நேர்ந்திருக்கிறது. பிற்காலத்தில் ஜனாதிபதி பதவி வகித்தவர் ஆர்.வெங்கட்ராமன். “1943ம் ஆண்டில் சிறையில் இருந்தபோது அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார். பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பல வருடங்கள் நாங்கள் ஒன்றாக பணி செய்தோம்.”
மாணவர் இயக்கத்தில் கலந்து கொண்ட பலரும் பட்டப்படிப்பு முடித்த பிறகு முக்கியமான ஆளுமைகளாக அறியப்பட்டனர். ஒருவர் தமிழ்நாட்டின் முதல்வர் ஆனார். இன்னொருவர் நீதிபதி ஆனார். அடுத்தவர் ஐஏஎஸ் அதிகாரியாக சில காலத்துக்கு முன் வரை ஒரு முதலமைச்சருக்கு தனிச் செயலராக பணிபுரிந்தார். சங்கரய்யா மட்டும் சுதந்திரத்துக்கு பின்னும் பல சிறைகளுக்கு தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். 1947க்கு முன் அவர் கண்ட மதுரை, வேலூர், ராஜமுந்திரி, கன்னூர், சேலம், தஞ்சாவூர் சிறைகளும் அவற்றில் அடக்கம்.
1948ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டதும் மீண்டும் தலைமறைவு வாழ்க்கைக்கு சென்றார். 1950ம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஒரு வருடம் கழித்து விடுவிக்கப்பட்டார். 1962ம் ஆண்டில் இந்தோ-சீன யுத்தகாலத்தில் பல கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். அவரும் கைது செய்யப்பட்டு 7 மாதங்களுக்கு சிறையிலடைக்கப்பட்டார். மீண்டும் 1965ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் ஒடுக்கப்பட்டபோது கைது செய்யப்பட்டு 17 மாதங்கள் சிறையிலிருந்தார்.
சுதந்திரத்துக்கு பின் அவரை எதிரியாக பாவித்த பலர் மீது அவருக்கு வெறுப்பு இல்லை. அவரை பொறுத்தவரை, அவை எல்லாமும் அரசியல் சண்டைகள்தானே தவிர, தனிமனிதச் சண்டைகள் அல்ல. அவருடைய சண்டை என்பது இவ்வுலகிலிருக்கும் சுரண்டப்படுபவர்களுக்கு ஆதரவானதாகவே எப்போதும் இருந்திருக்கிறது. எந்த தனிநபர் லாபமும் கொள்ளாதது.
சுதந்திரப் போராட்ட காலத்தில் அவரை ஈர்த்த தருணங்களும் திருப்புமுனைகளும் என்ன?
”நிச்சயமாக பகத் சிங் கொல்லப்பட்ட சம்பவம் அவற்றில் ஒன்று. பிறகு 1945ம் ஆண்டு தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தின் (INA) மீதான விசாரணைகளும் 1946ம் ஆண்டு நடந்த ராயல் இந்தியக் கடற்படையின் (RIN) கலகமும்தான்.” இச்சம்பவங்கள்தாம் “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்துக்கு பெரும் உத்வேகம் கொடுத்தது.”
பல காலமாக இடதுசாரிகளுடன் இணைந்து பணியாற்றியதில் அத்தத்துவத்துடனான அவரது பிணைப்பு ஆழமானது. காலம் முழுமைக்கும் கட்சியின் முழு நேரப் பணியாளராக அவர் இருந்து கொண்டிருக்கிறார்.
“1944-ம் ஆண்டு தஞ்சாவூர் சிறையிலிருந்து விடுதலையானதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்ட செயற்குழு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். பிறகு 22 வருடங்களுக்கு தொடர்ந்து கட்சியின் மாநிலக்குழு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.”
மக்களை திரட்டுவதில் சங்கரய்யா முக்கியத்துவம் வாய்ந்தவர். 1940களில் இடதுசாரிகளின் முக்கியக் களமாக மதுரை இருந்தது. “1946ம் ஆண்டில் பி.சி.ஜோஷி (சிபிஐ பொதுச் செயலாளர்) மதுரைக்கு வந்து பங்குபெற்ற கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டனர். எங்களின் பல கூட்டங்களுக்கு பெருந்திரளாக மக்கள் கலந்துகொண்டனர்.”
வளர்ந்து கொண்டிருந்த அவர்களின் புகழ் ’மதுரை சதி’ என ஒரு வழக்கை அவர்கள் மீது பிரிட்டிஷ்ஷார் பொய்யாக புனைய காரணமாக அமைந்தது. பி.ராமமூர்த்தி (தமிழ்நாட்டின் பெயர் பற்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்) முதல் குற்றவாளியாகவும் சங்கரய்யா இரண்டாம் குற்றவாளியாகவும் பல சிபிஐ தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். பிற தொழிற்சங்கத் தலைவர்களை கொல்வதற்காக அலுவலகத்திலிருந்து சதித்திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார்கள். குற்றத்துக்கான முதல் சாட்சி வண்டி இழுப்பவர். சதித் திட்டத்தை பற்றிய உரையாடலை ஒட்டுக் கேட்டு பிறகு வேலை மெனக்கெட்டு அதிகாரிகளிடம் வந்து அவர் புகாரளித்ததாக காவல்துறை கூறியது.
2008ம் நூற்றாண்டு அஞ்சலியாக என்.ராமகிருஷ்ணன் (சங்கரய்யாவின் இளைய சகோதரர்) எழுதிய பி.ராமமூர்த்தியின் வரலாற்றில் இப்படி குறிப்பிடுகிறார்: “விசாரணையின்போது வழக்கின் முக்கிய சாட்சி போலியானது என்பதையும் சாட்சியம் அளித்தவர் திருட்டு குற்றங்களுக்காக பலமுறை சிறை சென்றவர் என்பதையும் ராமமூர்த்தி (தனக்காக வழக்கில் அவரே வாதாடினார்) நிரூபித்தார்.” வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி “1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி சிறை வளாகத்துக்கே வந்து, வழக்கில் சிறைப்படுத்தப்பட்டிருந்த அனைவரையும் விடுவித்தார். தொழிலாளர்களின் மதிப்புமிக்க தலைவர்கள் மீது பொய்வழக்கு போட்டதற்காக அரசையும் கடுமையாக விமர்சித்தார்.”
இத்தகைய கடந்தகால சம்பவங்களின் விந்தையான மீட்டுருவாக்கங்கள் சமீப காலத்திலும் நடந்திருக்கின்றன. நம் காலத்தில் சிறைக்கே சென்று விடுவித்த சிறப்பு நீதிபதி, நிரபராதியை விடுவிக்கவில்லை என்பதும் அரசை விமர்சிக்கவில்லை என்பது மட்டும்தான் வித்தியாசங்கள்.
1948ம் ஆண்டில் சிபிஐ கட்சி தடை செய்யப்பட்டபோது ராமமூர்த்தியும் பிறரும் மீண்டும் சுதந்திர இந்தியாவில் சிறையிலடைக்கப்பட்டார்கள். தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த சமயம். இடதுசாரிகளுக்கு கிடைத்த புகழ் சென்னை மாகாண ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சிக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.
”மத்தியச்சிறைக் காவலதிகாரியின் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார் ராமமூர்த்தி. மதராஸ் சட்டப்பேரவைக்கான தேர்தலில் 1952ம் ஆண்டு வடக்கு மதுரை தொகுதியிலிருந்து அவர் போட்டியிட்டார். அவருக்கான பிரசாரத்துக்கு நான்தான் பொறுப்பு. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிதம்பரம் பாரதியும் நீதிக்கட்சியின் பி.டி.ராஜனும் எதிர்த்து போட்டியிட்டனர். ராமமூர்த்தி பெரும் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டபோது அவர் சிறையிலிருந்தார். பாரதி இரண்டாம் இடத்தை பிடித்தார். ராஜன் வைப்புத்தொகை இழந்தார். வெற்றி அறிவிப்பு கூட்டத்தில் 3 லட்சம் பேர் கலந்துகொண்டனர்.” சுதந்திரத்துக்கு பின்னான தமிழ்நாட்டு சட்டப்பேரவையின் முதல் எதிர்கட்சித் தலைவராக ராமமூர்த்தி ஆனார்.
1964ம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்தபோது, சங்கரய்யா புதிதாக உருவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்தார். “1964ல் சிபிஐயின் தேசிய கவுன்சிலிலிருந்து வெளியேறிய 32 உறுப்பினர்களில் நானும் வி.எஸ்.அச்சுதானந்தனும் மட்டும்தான் இன்றும் உயிருடன் இருக்கிறோம்.” பிறகு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பின்பு தலைவராகவும் சங்கரய்யா பதவி வகித்தார். இன்றளவும் இந்தியாவின் மிகப்பெரிய விவசாயச் சங்கமாக ஒன்றரை கோடி உறுப்பினர்களோடு இருப்பது அச்சங்கம்தான். மேலும் அவர் தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக ஏழு வருடங்களும் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக இருபது வருடங்களுக்கு மேலாகவும் இருந்திருக்கிறார்.
”தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழை முதன்முதலாக கொண்டு வந்ததும் நாங்கள்தான். 1952ம் ஆண்டில், சட்டப்பேரவையில் தமிழ் பேச அனுமதி கிடையாது. ஆங்கிலம் மட்டும்தான் பேச முடியும். தமிழிலும் பேசலாம் என்கிற நிலை 6,7 வருடங்களுக்கு பின்னர்தான் வந்தது. ஆனால் (எங்களின் சட்டமன்ற உறுப்பினர்களான) ஜீவானந்தமும் ராமமூர்த்தியும் அதற்கும் முன்னரே தமிழில்தான் பேசினார்கள்,” என்கிறார் பெருமையுடன்.
உழைக்கும் வர்க்க மக்களுக்கும் விவசாய மக்களுக்கும் சங்கரய்யா அர்ப்பணித்த உழைப்பு ஒப்பில்லாதது. கம்யூனிஸ்ட்டுகள் “தேர்தல் அரசியலுக்கு சரியான விடைகளை கண்டுபிடிப்பார்கள்” என்றும் பெருமளவில் மக்கள் இயக்கங்களை கட்டுவார்கள் என்றும் அவர் நம்புகிறார். நேர்காணல் தொடங்கி ஒன்றரை மணி நேரம் கடந்து விட்டது. பேசத் தொடங்குகையில் கொண்டிருந்த அதே உத்வேகத்தோடும் சக்தியோடும் 99 வயதான அம்மனிதர் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார். பகத் சிங் கொல்லப்பட்டதை எதிர்த்து தெருவிறங்கி போராடச் சென்ற 9 வயது சிறுவனுக்கு இருந்த மனோதிடமும் துடிப்பும் அப்படியே அவரிடம் இருக்கிறது.
குறிப்பு: இக்கட்டுரை உருவாக்கத்தில் மதிப்புவாய்ந்த பங்களிப்பு செய்த கவிதா முரளிதரனுக்கு என் நன்றிகள்.
தமிழில்: ராஜசங்கீதன்