சூரியன் மறைந்துவிட்டது. இருள் வேகமாக பரவி வருகிறது. தங்கள் தலைகளில் விறகுக் கட்டைகள், பாத்திரங்கள், கற்கள், அரிசி ஆகியவற்றையும், மசாலா பொருட்களையும் கையிலும் எடுத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் - 50 ஆயிரம் பேர் என ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகிறார்கள் - வடகிழக்கு மும்பையில் முளுந்த் பகுதியில் பழைய சுங்கச்சாவடியை நோக்கி நடந்தார்கள். தற்போது செயல்பாடுகளின்றி இருக்கும் இந்த இடம்தான் போராட்டக்காரர்களுக்கான பிரச்சாரத் திடலாக மாறியிருந்தது.
”நாங்கள் இங்கு தங்கிக்கொள்வோம். எங்களுக்குத் தேவையான பொருட்களையெல்லாம் நாங்கள் எடுத்து வந்துள்ளோம். அடுப்பெரிக்க தேவையான விறகுகள், சமைப்பதற்கு தேவையான அரிசி என எல்லாவற்றையும் வைத்துள்ளோம்,“ என தலையில் உள்ள சுமையை சரிசெய்துகொண்டே கூறுகிறார் மனுபாய் கவாரி. “எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாங்கள் இங்கிருந்து நகரமாட்டோம்.“ மனுபாய் (60), வர்லி சமூகத்தைச் சேர்ந்தவர், பிவந்தி தாலுகாவின் திகாஷி கிராமத்தில் வசிப்பவர். அவரது கிராமத்தில் இருந்து வந்துள்ள 70 முதல் 80 கிராமத்தினருடன் பேரணிக்கு வந்துள்ளார்.
அக்டோபர் 30ம் தேதி வியாழக்கிழமை, காலை 11 மணி நேரம் முதல் வர்லி, கட்கரி, மகாதேவ் கோலி, மா தாகூர் மற்றும் பல்வேறு ஆதிவாசி சமூகங்களைச் சேர்ந்த குழுவினர், நாசிக், பால்கர் ராய்காட், தானே மற்றும் மும்பை மாவட்டங்களில் இருந்து தானே நகரில் குவிந்துவிட்டனர். அவர்கள் குழுவாக வாடகை டெம்போக்கள், பேருந்துகள், ரயில்களில் வந்தனர். மதிய நேரத்தில் ஆண்களும், பெண்களும் அணிவகுத்து அலைஅலையாக தானே நகர மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி, இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலிருந்த சாகெட் நாக்காவிலிருந்து சென்றனர். அவர்களில் வேளாண் கூலித்தொழிலாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் என பல்வேறு முறைசாரா தொழிலாளர்கள் இருந்தனர்.
“எங்கள் ஆதிவாசி மக்கள் பல தலைமுறைகளாக காடுகளில் வசித்து வருகிறோம். எங்களுக்கு (சொந்த நிலத்துக்கோ அல்லது வீட்டுக்கோ) உரிமைச் சான்றிதழ்கள் கிடையாது.. எங்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடையாது. என்னை எனது தாய் வீட்டிலேயே பெற்றெடுத்தார். அது எங்கும் பதிவாகவில்லை. எனக்கு 52 வயதாகிறது. எனது குழந்தைகள் படிப்பதற்கு சாதிச் சான்றிதழ் வேண்டும். 50 ஆண்டு வாழ்வின் ஆதாரமாக அது இருக்க வேண்டும். நான் எங்கிருந்து அதைப் பெறுவது?“ என்று பேரணியில் வந்த நளினி புஜாட் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே கலக்கத்துடன் கேட்கிறார். அவர் வர்லி சமூகத்தைச் சேர்ந்தவர். மும்பையின் வடகிழக்கு புறநகர் பகுதியான அந்தேரியின் அம்போலியிலிருந்து வந்துள்ளார்.
“வடமேற்கு மும்பையில் உள்ள கோரேகான் மகானந்த் குடியிருப்புகளில், தண்ணீர் மற்றும் மின்சார வசதி இல்லை. எங்களுக்கு சாதிச் சான்றிதழ்கள் வழங்குங்கள். எங்கள் குடியிருப்புகளையும் வளர்ச்சி திட்டத்தில் சேருங்கள். எங்களை மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்துங்கள்.“ என்கிறார் அவர். மும்பையில் 10 ஆதிவாசி குடியிருப்புகளில் இருந்து, கிட்டதட்ட 2 ஆயிரம் ஆதிவாசிகள் பேரணியில் கலந்துகொண்டனர் என ஷரம்ஜீவி சங்கதனாவின் பிரதிநிதி நளினி புஜாட் கூறுகிறார்.
மாநிலத்தில் உள்ள ஆதிவாசிகளின் நீண்ட கால பிரச்சனைகளுக்காக சங்காதனாவால் இந்த பேரணி ஒருங்கிணைக்கப்பட்டது. இம்மையத்தின் தலைமையகம் மஹாராஷ்ட்ராவின் வசையில் உள்ளது. இவர்கள் ஆதிவாசிகளின் உரிமைகள் பெற்றுத்தரும் வேலைகளை முன்னெடுத்துள்ளனர். நீண்ட காலங்களுக்கு முன்னரும் இதே சமூகங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களுக்காக தெருவில் இறங்கியுள்ளனர். ஒவ்வொரு முறையும் அரசு, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து திரும்ப அனுப்பி வைத்துவிடும். எனவே ஆதிவாசிகள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காமல் திரும்பி செல்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
மாலை 5 மணியளவில் பேரணி முளுந்த் நோக்கி திரும்பியது. போராட்டக்காரர்கள் சாகெட் நாக்காவிலிருந்து முளுந்தின் ஜாக்கட் நாக்காவிற்கு (பழைய சுங்கச்சாவடி) 5 கிலோ மீட்டர்கள் நடந்து சென்றனர். மாலையில் இருள் கவியத் துவங்கியது. அவர்கள் தங்கியிருந்த மைதானத்தில் மின்சார வசதி இல்லை. “இங்கு எங்களுக்கு மின்சார வசதி செய்து தரப்படவில்லையென்றால், நாங்கள் நெடுஞ்சாலையில் மின்கம்பங்களின் கீழே தங்குவோம்“ என்று கூறினர். அவர்களிடம் இருந்து வந்த இந்த கோரிக்கை காவல் துறையினரை உடனடி நடவடிக்கை எடுக்க வைத்தது. சிறிது நேரத்தில் அவர்களுகக்கு தற்காலிக மின்கம்பங்களையும், விளக்குகளையும் அமைத்து வெளிச்சம் ஏற்படுத்திக்கொடுத்தனர்.
ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் வந்திருந்தவர்கள் ஒவ்வொரு இடத்தை தேர்ந்தெடுத்து, அவர்கள் எடுத்து வந்திருந்த விறகு, கற்கள், பானை, பாத்திரங்கள், தானியங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வைத்து சமைக்கத் துவங்கினர். தங்களுக்கென தற்காலிகக் கூடாரங்களையும் அமைத்துக்கொண்டனர். அவர்களைச் சுற்றியிருந்த இருள் சமைக்கும் ஒளியில் மறைந்து வெளிச்சம் பரவியது. திறந்தவெளி மைதானத்தில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் அவர்கள் சமைத்துக்கொண்டிருந்தனர்.
இரவு உணவை முடித்தவுடன், மக்கள் மேளங்கள் வாசித்து, பாடல்கள் பாடினர். பலர் இரவு முழுவதும் விழித்திருந்தனர். மற்றவர்கள் பேரணியில் கலந்துகொண்டதாலும் விறகு மற்றும் கற்கள் சுமந்து வந்ததாலும் ஏற்பட்டக் களைப்பில் சிறு துணிகளை விரித்து, பைகளை தலையணை போல வைத்துக்கொண்டு தூங்கினர்.
போராட்டக்காரர்களின் ஒரு முக்கியமான கோரிக்கை, 2006ம் ஆண்டு வன உரிமைச்சட்ட த்தை செயல்படுத்த வேண்டும் என்பதாகும். அந்தச்சட்டம் இயற்றப்பட்டு 12ஆண்டுகள் கடந்தபோதும், இந்தியா முழுவதும் உள்ள ஆதிவாசி சமூகத்தினருக்கு, அவர்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்த வன நிலங்கள் மீதான எந்த உரிமையும் இதுவரை கிடைக்கவில்லை. மத்திய அரசு 2013ம் ஆண்டின் ஜனவரியில் அறிமுகப்படுத்திய நேரடி ஆதாயப் பரிமாற்ற கொள்கைக்கு முன்னர் அறிவித்த பல்வேறு நலத்திட்டங்களுக்கு, பணப்பரிமாற்றம் செய்து அனைத்து கிராமங்களிலும் இணையதள வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பது மற்றுமொரு முக்கியக் கோரிக்கையாகும். ஆதிவாசிகளுக்கான வேலைவாய்ப்புகளை வழங்கவேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர். ஆதிவாசி சமூகத்தினரின் தேவைகள் வளர்ச்சித்திட்டங்களில் சேர்க்க வேண்டும் என்று கோரினர். ஆதிவாசியினரிடையே அதிகரித்து வரும் பட்டினியை போக்குவதற்கான தீர்வுகள் காணப்படவேண்டும் என்றும் கோரினர்.
போராட்டக்காரர்கள் இரவு முழுவதும் திறந்தவெளி மைதானத்தில் முதலமைச்சர் தேவேந்திர பட்னவீசின் பதிலுக்காக காத்திருந்தனர். நள்ளிரவில் - ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கொடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் நடக்கத் தொடங்கிய 12 மணி நேரங்கள் கழித்து ஆதிவாசிக் குழுக்களின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10 பிரதிநிதிகள், முதலமைச்சரை தெற்கு மும்பையில் உள்ள அவரது அரசு இல்லத்தில் சந்தித்தனர். அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டது. முதலமைச்சர், வனத்துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்து பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒரு தொடர்பு அலுவலரையும் நியமிக்க வாக்குறுதி அளித்தார்.
அதிகாலை 3 மணிக்கு பிரதிநிதிகள், ஜக்காட் நாக்காவுக்கு திரும்பினர். அங்கு காத்திருந்த போராட்டக்காரர்கள், சந்திப்பில் கிடைத்த பலன்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். காலை 5 மணிக்கு அவர்கள் அனைவரும் தங்கள் கிராமங்களுக்கு நம்பிக்கையுடன் திரும்பிச்சென்றனர்.
இதை மராத்தியில் இருந்து சம்யுக்தா சாஸ்திரி மொழியாக்கம் செய்துள்ளார். அவருக்கு தேவையான தகவல்களை ஜ்யோதி ஷினோலினி வழங்கினார்.
தமிழில் : பிரியதர்சினி . R.