”கிராமத்து பள்ளியில் வழங்கப்படும் கல்வியின் தரம் நன்றாக இல்லை. ஆகவே என் மகள்களை வாரணாசிக்கு அழைத்து சென்றேன். அவர்களை பள்ளியில் சேர்த்த மூன்று மாதங்களிலேயே மீண்டும் எங்கள் கிராமத்துக்கு திரும்பிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுமென யார் நினைத்திருப்பார்?” என்றார் அருண் குமார் பஸ்வான். உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் 15000 ரூபாய் ஊதியத்துக்கு ஓர் உணவகத்தில் மார்ச் மாத ஊரடங்கு வரை வேலை பார்த்தார்.
மே மாத தொடக்கத்தில், குடும்பத்துக்கான உணவுக்கு சம்பாதிக்க முடியாத நிலையை எட்டியதும் வாரணாசியிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் பிகாரின் கயா மாவட்டத்திலுள்ள சொந்த ஊரான மாயாப்பூருக்கே திரும்பப் போய்விடுவது என தீர்மானித்தார் பஸ்வான். “குடும்பத்துடனும் இன்னும் பிறருடனும் அதிகாலை 3 மணிக்கு கிளம்பிவிடுவேன்,” என பஸ்வான் மே 8ம் தேதி என்னிடம் தொலைபேசியில் கூறினார். “நாங்கள் எல்லை வரை (உத்தரப்பிரதேச – பிகார்) நடந்து சென்று பின் பேருந்தில் செல்வோம். அங்கிருந்து பேருந்துகள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என சொல்கிறார்கள். நடுவே ஏதேனும் லாரி எதிர்ப்பட்டாலும் எல்லையில் இறக்கிவிடச் சொல்லி கேட்டு பார்ப்போம்.”
பஸ்வான், அவருடைய 27 வயது மனைவி சபிதாவுடனும் 8 வயது மகள் ரோலி, 6 வயது மகள் ராணி மற்றும் 3 வயது மகன் ஆயுஷ் ஆகிய மூன்று குழந்தைகளுடனும் அடுத்த நாள் காலையில் கிளம்பிவிட்டார். மாநில எல்லை தாண்டி 53 கிலோமீட்டர்களில் இருக்கும் கரம்னசா செக்போஸ்ட்டுக்கு நடந்தனர். அங்கு பிகாரின் கைமுர் மாவட்ட நிர்வாகம் அமைத்திருக்கும் சுகாதார முகாமில் உடல் வெப்பத்துக்கான பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். அதில் பிரச்சினை இல்லையென கண்டறியப்பட்டால் மட்டுமே பேருந்துக்கு அனுமதி கிடைக்கும். “நல்லவேளையாக மாநில அரசுப் பேருந்தே கிடைத்தது. அங்கிருந்து கயாவுக்கு சென்றுவிட்டோம்,” என அவர் மே 11ம் தேதி மாயாப்பூர் சேர்ந்ததும் என்னிடம் சொன்னார். அங்கிருந்து கிராமத்துக்கு செல்வதற்கான பேருந்துக்கு காத்திருந்தார்கள். கிராமத்தை அடைந்ததும் அவர்கள் தனித்திருக்கும் சிகிச்சையில் இருந்தார்கள்.
வீடு திரும்பியதில் ராணி சந்தோஷமடைந்திருக்கிறார். ஆனால் ரோலி பள்ளிச் சீருடை அணியமுடியாமல் போய்விட்டதென புகார் செய்ததாக பஸ்வான் கூறுகிறார்.
பஸ்வான் 2019ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திலிருந்து பணிபுரிந்த வாரணாசி உணவகம் முதன்முதலாக மார்ச் 22ம் தேதி ஜனதா ஊரடங்குக்காக அடைக்கப்பட்டது. பிறகு தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 25ம் தேதியிலிருந்து மீண்டும் அடைக்கப்பட்டது. கடைசி சம்பளத்தை அவர் மார்ச் மாதத்தில்தான் பெற்றார். ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் வாரத்திலிருந்து நிலைமை சிரமமானது. மாவட்ட அதிகாரிகள் கொடுத்த உணவுப் பொட்டலங்களுக்காக வாரணாசியில் அவர் ஒரு நாளைக்கு இரண்டு தடவை நீண்ட வரிசைகளில் காக்க வேண்டியிருந்தது.
மே 8ம் தேதி பஸ்வான் என்னிடம், “எங்களுக்கு கிடைத்த உணவுப் பொட்டலங்கள் இப்போது நிறுத்தப்பட்டு விட்டது. இங்கிருந்து கிளம்புவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” எனக் கூறினார்.
அருண் பஸ்வான், காமெஷ்வர் யாதவ் வீடு 250 கிமீ தொலைவில் இருக்கிறது. அமரித் மஞ்சி 2390 கிமீ தாண்டி தமிழ்நாட்டில் இருக்கிறார்
காமேஷ்வர் யாதவ்வுக்கும் அவருடைய ஊரான கயா மாவட்டத்தின் குராரு ஒன்றியத்திலுள்ள கதேரா கிராமத்துக்கு செல்ல இரண்டு நாட்கள் பிடித்தது. வாரணாசியிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சந்தாவுலி மாவட்டத்தின் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நகரில் (முன்பு முகல்சராய் என பெயர் கொண்டிருந்தது) இருக்கும் ஓர் உணவகத்தில் தலைமை சமையற்காரராக பணிபுரிந்து வந்தார்.
முதல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட ஏப்ரல் 15ம் தேதி யாதவ் கிளம்பினார். “உணவகம் மூடப்பட்ட பிறகு என்னுடைய சேமிப்பு கரைந்துவிட்டது. என் குடும்பத்துக்கும் உணவு கிடைப்பது சிரமமானது. நான் அவர்களை சீக்கிரமாக சென்றடைய வேண்டும்.” இரண்டு நாட்களில் 200 கிலோமீட்டர்களை பெரும்பாலும் நடந்தும் கொஞ்ச தூரம் லாரியிலும் கடந்து, ஏப்ரல் 17ம் தேதி கிராமத்துக்கு சென்று சேர்ந்தார் யாதவ்.
உத்தரப்பிரதேசம், மார்ச் 23ம் தேதி தன் எல்லைகளை மூடியதும் யாதவ் உணவகத்திலேயே பிற ஊழியர்களுடன் தங்கினார். முதலாளி அவர்களுக்கு உணவளித்தார். கதேராவில் அவரின் மனைவி ரேகா தேவி மற்றும் பெற்றோருடன் வசிக்கும் அவரின் குழந்தைகளான 10 வயது சந்தியா, 8 வயது சுகந்தா, 3 வயது சாகர் ஆகியோரை பற்றி கவலைப்பட்டார். “என்னுடைய குழந்தைகள் தொலைபேசி அழைப்பில் அழுவார்கள். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் அதிக நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கலாம்,” என்கிறார் யாதவ்.
ரேகா தேவியும் பெற்றோரும் கவனித்து கொள்ளும் 3 பிகா (1.9 ஏக்கர்) குடும்ப நிலத்தில் விளையும் பச்சைப்பயிறையும் கோதுமையையும் அவர் நம்பினார். ஆனால் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் பெய்த மழை பயிரை அழித்துவிட்டது. கோதுமையும் மழையால் பாதிக்கப்பட்டு, எதிர்பார்த்த 70 கிலோ விளைச்சலிலிருந்து குறைந்து 40 கிலோ மட்டுமே கிடைத்தது. அதுவும் குடும்பப் பயன்பாட்டுக்கு இல்லையென அவர் ஒதுக்கி வைத்துவிட்டார். “ஜூன் மாதத்தில் அறுவடை செய்யவிருக்கும் பச்சைப் பயிர் மீதுதான் என் நம்பிக்கை இருக்கிறது,” என்கிறார் யாதவ்.
அருண் பஸ்வானும் காமெஷ்வர் யாதவ்வும் வீட்டுக்கு போக 250 கிலோமீட்டர் தொலைவு இருக்கிறதெனில் கயா மாவட்டத்தின் அமரித் மஞ்சி என்பவர் 2380 கிலோ மீட்டர்களுக்கு அந்தப் பக்கம் தமிழ்நாட்டில் தவித்துக் கொண்டிருக்கிறார். அவரின் மாவட்டத்தை சேர்ந்த 20 புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் அவருடன் இருக்கின்றனர். தமிழ்நாட்டின் திருப்பூரிலுள்ள அவினாசியில் கூரை செய்யும் ஒரு ஆலையில் வேலை பார்க்கவென பராச்சட்டி ஒன்றியத்திலிருக்கும் துலா சக் என்கிற கிராமத்திலிருந்து 28 வயதாகும் மஞ்சி சென்றிருக்கிறார்.
அவர் அந்த ஆலையில் 8000 ரூபாய் சம்பாதிக்கிறார். அவருடன் அங்கு பிகாரிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 150 பேர் வேலை பார்க்கின்றனர். அவர்கள் அனைவரும் ஆலை முதலாளிகள் கொடுத்திருக்கும் அறைகளில் தங்கியிருந்தனர்.
மே 12ம் தேதி மஞ்சியும் ஒன்பது சக ஊழியர்களும் (முகப்பு படத்தில் இருப்பவர்கள்) வீடுகளை நோக்கிய நீண்ட நெடியப் பயணத்தை தொடங்கினார்கள். இரண்டு மூன்று கிலோமீட்டருக்குள் காவல்துறை அவர்களை நிறுத்தியது. தாக்கப்பட்டு மீண்டும் அறைகளுக்கு கொண்டு சென்று விடப்பட்டதாக சொல்கிறார்கள். “நாங்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக சொல்லி காவலர்கள் எங்களுக்கு அபராதம் விதித்தனர். எங்கள் குழுவில் இருந்த ஒருவரின் கை, காவலர்கள் தாக்கியதில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. சிகிச்சைக்கே 2000 ரூபாய் நாங்கள் செலவழிக்க வேண்டியிருந்தது,” என மஞ்சி மே 16ம் தேதி கூறினார்.
“எங்களை அடிப்பதற்கு பதில், எங்கள் ஊர்களுக்கு நாங்கள் எப்படி செல்வது என காவலர்கள் வழிகாட்டியிருக்கலாம். உள்ளூர் நிர்வாகத்திடமிருந்தும் எங்களின் ஆலை முதலாளியிடமிருந்தும் ஒரு உதவியும் கிடைக்கவில்லை,” என்கிறார் மஞ்சி. அச்சமயத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக தமிழகத்திலிருந்து பிகாருக்கு விடப்பட்ட ‘ஷ்ரமிக் சிறப்பு ரயில்’ பற்றி அவரும் மற்றவர்களும் அறிந்திருக்கவில்லை. “என்ன நடந்தாலும் நாங்கள் வீட்டுக்கு சென்றாக வேண்டும். கொரோனா வைரஸ்ஸுக்கும் வெயிலுக்கும் நாங்கள் இப்போது பயப்படவில்லை. 14 நாட்கள் ஆகும். ஆனாலும் நாங்கள் நடக்கிறோம்,” என்கிறார்.
துலா சக் கிராமத்திலேயே இருந்திருந்தால், மஞ்சியும் அவரின் மூன்று சகோதரர்களும் கோதுமையும் மைதாவும் விளைவிக்கும் அவர்களின் நிலத்தில் வேலை பார்த்திருப்பார்கள். ஆனால் 2 பிகா (1.2 ஏக்கர்) நிலத்திலிருந்து கிடைக்கும் அவருடைய பங்கு, திருப்பூரில் அவர் வாங்கும் சம்பளத்தை விடக் குறைவாக இருக்குமென்பதாலேயே வீட்டை விட்டு கிளம்பியதாக சொல்கிறார். மஞ்சி இல்லாததால், நிலத்தை அவரின் 26 வயது மனைவி கிரன் தேவி கவனித்துக் கொள்கிறார்.
ஆலை முதலாளி மே 19ம் தேதியிலிருந்து உணவுப்பொருட்கள் கொடுக்கத் தொடங்கியதால் மஞ்சி மற்றும் சக ஊழியர்களின் நிலை ஓரளவுக்கு சரியானது. கையில் 500 ரூபாய் மட்டும்தான் இருக்கிறது. சீக்கிரமே ஆலை திறந்து அதில் பணம் சம்பாதித்து ஊருக்கு பணம் அனுப்ப எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
கடேரா கிராமத்திலிருக்கும் யாதவ் மாற்றுவழிகளை யோசித்துக் கொண்டிருக்கிறார். “கிராமப்புற வேலைவாய்ப்பு (NREGA) திட்ட வேலை தொடங்கியதும் சேர முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறேன்,” என்கிறார்.
யாதவ் வாரணாசியில் பணிபுரிந்த ஃப்லேவர்ஸ் உணவகத்தின் முதலாளியான அபிஷேக் குமார் தன்னிடம் வேலை பார்த்த 16 தொழிலாளர்களும் பிகார் மற்றும் தமிழ்நாட்டில் இருக்கும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றுவிட்டதாக சொல்கிறார்.
பஸ்வானும் அவர் ஊரான மாயப்பூரில் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் (MGNREGA) கீழான வேலைகளுக்காக காத்திருக்கிறார். உள்ளூர் உணவகங்களிலும் வேலைகள் தேடுவார். அவருடைய பூர்விக நிலத்திலிருந்து கிடைக்கும் வருமானம் கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் 10 உறுப்பினர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும். அப்படி வரும் அவருடைய வருமானம் மிகவும் குறைவாக, குடும்பத்தை நடத்த போதுமானதாக இருப்பதில்லை என்கிறார் அவர்.
வாரணாசிக்கு திரும்ப செல்லக் கூடிய வாய்ப்பு வருமென அவர் நம்புகிறார். அவரும் சபிதாவும் அவர்களுடைய உடைமைகளை அங்கிருக்கும் வாடகை வீட்டில் விட்டு வந்திருக்கின்றனர். “வீட்டு உரிமையாளர் வாடகையை குறைக்க ஒப்புக் கொள்ளவில்லை. திரும்பச் சென்றாலும் வாடகைப் பணம் 2000 ரூபாயை நாங்கள் அங்கில்லாத மாதங்களுக்கும் சேர்த்து கொடுக்க வேண்டும்,” என்கிறார் அவர்.
அதுவரை சாலைப் பணிகள் மற்றும் கட்டுமான வேலைகளை அவர் செய்வார். “எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது?” என கேட்கிறார். “என் குழந்தைகளின் சாப்பாடுக்காக என்ன வேலை கிடைத்தாலும் நான் செய்ய வேண்டும்.”
தமிழில்: ராஜசங்கீதன்