“எங்கள் கிராமத்திற்கு கரோனா வைரஸ் வந்ததா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது” என்று சொல்லும் வர்தா மாவட்டத்தில் உள்ள 23 வயதாகும் பிரஃபுலா கலோகார், “ஆனால், இங்கு ஏற்கனவே பொருளாதாரம் பாதித்துவிட்டது“ என்கிறார்.
மார்ச் 25ஆம் தேதி கோவிட்-19 ஊரடங்கு தொடங்கியது முதல் அன்றாடம் தேவைப்படும் 500 லிட்டர் பால் விநியோகம் நின்றுபோனது. அர்வி தாலுக்காவில் உள்ள 520க்கும் மேற்பட்டவர்களும், பெரும்பாலான குடும்பங்களும் நந்தா கோலி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
போர் புலிகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள வார்தா மாவட்டத்தில் 40-50 கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் நந்தா கோலி சமூகத்தினர் கலப்பின ஆயர்கள். இவர்கள் காவாலிஸ் என்றும் அறியப்படுகின்றனர். அவர்கள் நாட்டு பசுவினமான காலோ வகை பசுக்களை வளர்த்து வர்தா முழுவதும் பசும்பால், தயிர், வெண்ணெய், நெய், கோவா போன்றவற்றை விற்பனை செய்கின்றனர். ஊரடங்கு தொடங்கிய 15 நாட்களுக்குள் “வர்தாவில் உள்ள நந்தா கோலி சமூகத்தினருக்கு குறைந்தது 25,000 லிட்டர் பால் விற்பனை சரிந்திருக்கும்“ என்கிறார் கலோகார்.
சேமித்து வைக்க முடியாத பால், பால் பொருட்களுக்கான தேவை திடீரென சரிந்தது, பால் பண்ணைத் துறையை பாதித்துள்ளது. வீடுகளில் பால் வாங்குவது குறைந்ததோடு ஓட்டல்கள், உணவகங்கள், இனிப்பு கடைகளும் மூடப்பட்டு இருப்பது, பால் பொருட்களின் தேவையை மேலும் சரியச் செய்துள்ளது. தேசிய பால்வள வளர்ச்சி வாரியத்தின் மானியத்தில் இயங்கும் மதர் டைரி போன்ற பெரிய பால் பண்ணைகள் கூட பால் கொள்முதலை நிறுத்திவிட்டன.
நெடிய விநியோகச் சங்கிலி கொண்ட இத்துறையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவருக்கும் அன்றாடம் ஆயிரக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கும். இந்த பொருளாதார இழப்பு நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்கிறார் கலோகார். நந்தா கோலி சமூகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர் பிரஃபுலா மட்டும் தான். வர்தாவின் பருத்தி பொருளாதாரம் பற்றி நாக்பூர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பட்டத்திற்காக அவர் ஆராய்ந்து வருகிறார்.
பால்வள துறையை நம்பி ஆயிரக்கணக்கான சிறு, குறு மாடு வளர்ப்போர், பாரம்பரியமாக கால்நடை வளர்ப்போர், நந்தா கோலிக்கள் போன்ற சமூகத்தினரும் இருக்கின்றனர். கிழக்கு மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தில் ஏற்கனவே விவசாயிகளில் பலரும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளனர். எதிர்காலமே கேள்விக்குறியானதுடன் சிலர் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.
பால் விற்பனை சரிவு என்பதையும் தாண்டி பிரச்சனை பூதாகாரமாகிவிட்டது. ”மாடுகளிடம் இருந்து பால் கறக்காவிட்டால், பால் கட்டிக் கொண்டு எதிர்காலத்தில் பால் சுரக்காமல் போய்விடும்” என்று சொல்லும் பிரஃபுல்லாவின் மாமா புஷ்பராஜ் காலோகார், “ஆனால் இவ்வளவு பாலையும் கறந்து என்ன செய்வது? சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் பால்கோவா அல்லது வெண்ணெய் கூட தயாரிக்க முடியாது”.
வாடிக்கையாளர்கள் பலரும் பால் கொள்முதலை நிறுத்திவிட்டதால், ஊரடங்கு காலத்தில் கூடுதல் பால் உற்பத்தியால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க மாநில பால் பண்ணை கூட்டமைப்பான மகானந்த் வழியாக பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய மார்ச் 30ஆம் தேதி மகாராஷ்டிர அரசின் மகா விகாஸ் அகாதி அரசு முடிவு செய்தது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்திற்கு தினமும் 10 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து பதப்படுத்தி அவற்றை பால் பவுடராக உற்பத்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மஹானந்த் வழியாக ஏப்ரல் 4ஆம் தேதி கொள்முதல் தொடங்கியது. “இந்த இடர்பாட்டைச் சமாளிக்க நாங்கள் ரூ.187 கோடி ஒதுக்கியுள்ளோம். மத்திய அரசு பங்களிப்பு செய்தால் பால் கொள்முதலை இன்னும் அதிகரிக்கலாம்” என பாரிக்கு பேட்டியளித்த மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் சுனில் கேதார் தெரிவித்தார்.
மஹானந்த் போன்று கோகுல், வாரனா போன்ற பல பெரிய கூட்டுறவு பால் பண்ணைகளும் பால் கொள்முதல் செய்வதை அதிகரித்துள்ளன. பவுடராக பதப்படுத்துவதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் மஹானந்துடன் தொடர்பில்லாத வார்தாவின் நந்தா கோலிக்கள் போன்றோருக்கு இப்போதும் சிக்கல் தான். இம்மாவட்டத்தில் மஹானந்த் செயல்படவில்லை. கூட்டுறவு பால் பண்ணைகள் அல்லது பெரிய தனியார் பால் பண்ணைகளில் நந்தா கோலிக்கள் ஒருபோதும் உறுப்பினர்களாக இருப்பதில்லை. அவர்கள் பொதுவாக சில்லறை சந்தைகளுக்குத் தான் பால் விற்பனை செய்கின்றனர். இப்போது அவையும் மூடப்பட்டுவிட்டன.
வடக்கு, மேற்கு மகாராஷ்டிராவைப் போன்று இல்லாமல் கிழக்கு மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் பால் உற்பத்தி என்பது முதன்மை பெறவில்லை. ஆனால் இப்பிராந்தியம் கால்நடை வளர்ப்போர், பால் பொருட்கள் மூலம் வாழ்வாதாரத்தை ஈட்டும் பல இடையர்களுக்கு உறைவிடமாக உள்ளது.
அவர்களில் நந்தா கோலிக்கள் நாடோடி பழங்குடியினராக பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்கள் வார்தாவின் சமவெளிகளிலும், அமராவதி மாவட்டத்தின் மேல்காட் குன்றுகளிலும் வசிக்கின்றனர். குஜராத்தின் கச் பிராந்தியத்தை பூர்விகமாக கொண்ட பர்வாட் இனத்தவர், எருமைகளை வளர்க்கும் கச்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்த கோல்கார் இனத்தவர், கிராமங்களில் கால்நடைகளை வளர்க்கும் கோவாரி இனத்தவர் ஆகியோர் விதர்பா முழுவதும் சிதறியுள்ளனர். யவத்மால் மாவட்டத்தின் உமர்கெத் தாலுக்காவில் மட்டுமே அதிகம் வசிக்கும் மதுரா லம்ஹாவினர் தடித்த காளைகளான உமர்தா பசுவினத்தை வளர்த்து வருகின்றனர்.
வாஷிம், புல்டானா, அகோலா மாவட்டங்களில் ஆடு, செம்மறிகள் வளர்க்கும் தங்கார் சமூகம், கச்சிரோலி, சந்திராபூர் மாவட்டங்களில் உள்ள குர்மார் சமூகம் ஆகியவற்றின் பண்பாடும் கர்நாடகாவின் குருபா சமூகத்தின் பண்பாடும் ஒரே மாதிரியானவை. சில கலப்பின ஆயர்கள் வனங்களில், புல்வெளிகளில் தங்களது கால்நடைகளை மேயவிட்டு வளர்க்கின்றனர்.
போர் புலிகள் சரணாலய வனங்களில் மேய்ச்சல் செய்வதற்கு 2011ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது. அறுவடைக்குப் பிறகான வயல்கள், மேய்ச்சல் நிலங்களையே,விதர்பாவின் இடையர் சமூகத்தினர் சார்ந்துள்ளனர் என்கிறார் சாஜல் குல்கர்னி. இவர் மானாவாரி விவசாய வலையமைப்பை புதுப்பித்தலில் ஆராய்ச்சி மாணவராக இருந்து விதர்பாவின் இடையர்களை நெருக்கமாக கவனித்து வருகிறார்.
ஊரடங்கு காலத்தில் கால்நடைத் தீவனங்கள் கிடைப்பதிலும், விநியோகத்திலும் தடை ஏற்பட்டுள்ளது. சில நந்தா கோலிக்கள் கால்நடைகளை மேய்ப்பதற்காக வீடுகளை விட்டு 30-40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று சிக்கியுள்ளனர். அவர்கள் வயல்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிர்களையும், புல்வெளிகளையும் கண்டறிவதற்காக ஊரடங்கிற்கு முன் சென்றவர்கள்.
ஊரடங்கால் தீவன விநியோகம் தடைபட்டுள்ளது. சிலர் தங்களது கால்நடைகளுடன் 30-40 கிலோமீட்டரில் சிக்கியுள்ளனர்
“அவர்கள் உள்ளூர் சந்தைகளிலும், தனிப்பட்ட வாடிக்கையாளர்களிடமும் பால், இறைச்சி விற்று வாழ்ந்து வருகின்றனர் என்கிறார்” குல்கர்னி. “கால்நடைத் தீவனங்கள் வாங்குவதற்கு அல்லது பால் விற்பனை செய்வதற்கு கிராமங்களுக்குள் செல்ல அவர்களுக்கு அனுமதி கிடையாது.“
கிர் பசுக்களை வளர்க்கும் பர்வாட் சமூகத்தினரும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது எங்களுக்கு கடினமான காலம் என்கிறார் தொலைப்பேசி வழியாக என்னிடம் பேசிய சமூகத் தலைவர் ராம்ஜி பாய் ஜோக்ரனா. அவர் கால்நடைகளை மேய்க்கும் புதர் காட்டை குறிப்பிட்டு, “நான் இப்போது எனது கால்நடைகளுடன் காட்டில் வசிக்கிறேன்“ என்கிறார்.
நாக்பூர் நகரிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோன்கம்ப் கிராமத்தின் வெளியே ஜோக்ரனா உள்ளிட்ட 20 பர்வாட் குடும்பத்தினர் குழுவாக தங்கியுள்ளனர். அவர்கள் ஒன்றிணைந்து தினமும் 3,500 லிட்டர் பால் கறக்கின்றனர் என்கிறார் ராம்ஜிபாய். பார்வாட் இன மக்கள் மரபாகவே சொந்தமாக நிலம் வைத்திருப்பதில்லை, வேறு வகையில் வருமானம் ஈட்டுவதில்லை. ஊரடங்கால் இவர்கள் பால் கறந்து கிராம மக்களுக்கு இலவசமாக பால் கொடுத்து வருகின்றனர். மிச்சம் இருக்கும் பாலை பசுக்கன்றுகளுக்கு ஊட்டுவது அல்லது கீழே கொட்டுவதை செய்து வருகின்றனர். “பால் பண்ணை, சில்லறை கடைகள், இனிப்பகங்கள் என யாரும் எங்களிடம் பால் கொள்முதல் செய்ய வரவில்லை“ என்கிறார் ராம்ஜிபாய்.
அவரது சமூகத்தில் முதல் நபராக சிறிதளவு நிலம் வாங்கி வீடு கட்டியுள்ளார். இவர் தனது கிராமத்திலிருந்து மதர் டைரி ஆலைக்கு பால் விநியோகமும், நாக்பூர் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனையும் செய்கிறார். “இதில் எந்த தடையும் ஏற்படவில்லை. ஆனால் இது எங்கள் விற்பனையின் சிறு பகுதி தான்“ என்கிறார் அவர்.
”தின்ஷா’ஸ், ஹல்திராம்’ஸ் போன்ற தனியார் பால் பண்ணைகளுக்கு நாங்கள் பால் விநியோகம் செய்கிறோம். [நாக்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள] டீக்கடைகள், இனிப்பு கடைகள், உணவகங்கள் போன்றவற்றிலும் சில்லறை வியாபாரமாக விநியோகம் செய்கிறோம்” என்கிறார் ராம்ஜிபாய்.
நாக்பூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 60 பர்வாட் குடும்பங்கள் உள்ளதாக சொல்கிறார் ராம்ஜிபாய். “நாங்கள் ஒன்றிணைந்து தினமும் 20,000 பசுக்கள் மூலம் 1.5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்து வந்தோம்” என்று சொல்லும் அவர் “இன்று ஒன்றுமே இல்லை” என்கிறார்.
பாலின் கொழுப்பு அளவு, ஒட்டுமொத்த தரத்தை பொறுத்து ஒரு லிட்டர் பசும்பாலில் இவர்களுக்கு ரூ. 30, ரூ. 40 வரை கிடைக்கும். இம்மக்களின் நட்டம் என்பது குறுகிய காலத்திற்கானது கிடையாது. பால் கொடுத்து வரும் பசுக்கள் பால் உற்பத்தியை நிறுத்தி உலர்ந்து போகக் கூடும். இது நீண்ட காலத்திற்கான சிக்கல் என்கிறார் அவர்.
“தீவன விநியோகமும் சுருங்கிவிட்டதால் எப்போது மீண்டும் பழைய நிலை திரும்பும் என்பது தெரியாது“ என்கிறார் ராம்ஜிபாய். தரமான பால் சுரப்பதற்கு பசும்புல் மட்டும் போதாது. பலவகை ஊட்டம் நிறைந்த தீவனங்கள், புண்ணாக்கு போன்றவையும் தேவைப்படுகிறது.
பர்வாட் சமூகத்தினர் அண்மையில் கேன் பாலை தெருக்கள், கால்வாய்களில் கொட்டும் வீடியோவை காட்டும் ராம்ஜிபாய் (வீடியோவை பாரி சரிபார்க்கவில்லை). “வெவ்வேறு கிராமங்களில் வசிக்கும் எங்கள் சமூகத்தினர் இதுபோன்ற பல வீடியோக்களை அனுப்பி வருகின்றனர்.”
பால் கொடுத்து வரும் பசுக்கள் பால் உற்பத்தியை நிறுத்தி உலர்ந்து போகக் கூடும். இது நீண்ட காலத்திற்கான சிக்கல்.
வடக்கு மகாராஷ்டிராவின் துலே மாவட்ட தோண்டைச்சா-வார்வாடி புறநகரைச் சேர்ந்த மாடு வளர்க்கும் விவசாயி ஒருவர் ஊரடங்கால் தான் சந்திக்கும் பொருளாதார நெருக்கடி குறித்து பேசுகிறார். அவரது பால் பொருள் உற்பத்தி தொழில் முற்றிலும் முடங்கிவிட்டது.
புலம்பெயரும் வழித்தடங்களில் சிரமங்களை சந்திக்கின்றனர். “இந்தாண்டு புலப்பெயரக் கூடாது என நாங்கள் முடிவு செய்துவிட்டோம்“ என்கிறார் 20 வயதான ராகுல் மஃபா ஜோக்ரனா. நாக்பூர் மாவட்டத்தின் கம்லேஷ்வர் தாலுக்காவில் அவர் தங்கிவிட்டார். நாக்பூரிலிருந்து தீவனங்கள், தண்ணீர் தேடி 60 கிலோமீட்டர் தூரம் வரை அவரது இளைய சகோதரர் கணேஷ் சென்றுள்ளார்.
கணேஷ் என்பவர் ஒரு டிராக்டர் நிறைய முட்டைகோஸ்களை நிரப்பி கொண்டுவந்துள்ளார். கிராம விவசாயிகள் தங்கள் நிலத்தில் பசுக்கள் மேய அனுமதிப்பதில்லை. மார்ச் மத்தியில் அவர் வைக்கோல் சேகரித்து வைத்திருந்தார். ஊரடங்கு தொடங்கிய சில வாரங்களில் அது தீர்ந்துவிட்டது. இப்போது ராம்தேக்கை சுற்றியுள்ள பகுதிகளில் கணேஷ் கால்நடைகளுடன் நிற்கும் இடத்திற்கு, ஒரு பால் வேன் ஓட்டுநர் கால்நடைத் தீவனங்களை சந்தையிலிருந்து கொண்டு வந்து தருகிறார்.
பர்வாட் சமூகத்தைச் சேர்ந்த 23 வயதாகும் விக்ரம் ஜோக்ரனா கால்நடைகளை மேய்க்க வெளியே வந்திருந்தார். நம்மிடம் பேசிய அவர், வடக்கு நாக்பூர் மாவட்ட கிராம மக்கள் வயல்களில் மாடுகள் மேய்க்க அனுமதிக்கவில்லை என்றார். அவர்கள் முன்பெல்லாம் அனுமதிப்பார்கள். வயல்களில் எங்கள் மாடுகள் வைக்கோல்களை மேயும் போது இடும் சாணம் அவர்கள் நிலத்திற்கு உரமாக மாறும் என்று தங்களுக்குள் இருந்த நீண்டகால, அடையாள உறவை விளக்குகிறார்.
கம்லேஷ்வரில் உள்ள தனது குடும்பத்தினரிடம் விக்ரம் அடிக்கடி தொடர்பு கொள்ள முடியாது. காரணம் அவரால் கைபேசிக்கு அடிக்கடி மின்னூட்டம் போட முடியவில்லை. “இது எங்களுக்கு கொடுமையான காலம்“ என்கிறார் அவர்.
தமிழில்: சவிதா