“எங்களில் பணக்காரர் ராம் ஸ்வரூப், ஏனெனில், அவரிடம் மட்டும்தான் கொஞ்சம் நிலம் இருக்கிறது.” என்று உடனிருக்கும் பெண்கள் அவரை வம்புக்கு இழுத்து, சிரிக்கிறார்கள். இந்த விவசாயத் தொழிலாளர்களில் ராம் ஸ்வரூப்பை தவிர மற்ற எல்லாரும் பெண்கள். ராம் ஒரு ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர். அவரின் தந்தைக்கு இரண்டு ஏக்கர் நிலமிருந்தது, அதை ராம், அவரின் சகோதரருக்கு சரி பாதியாகச் சொத்தைப் பிரித்ததன் மூலம் அந்த மதிப்புமிகுந்த நிலத்துக்கு அவர் சொந்தக்காரர் ஆனார்.

இந்தத் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக 15௦ பேர். இவர்கள் ஹரியானாவின் பாதேஹ்பாத் மாவட்டத்தின் கிராமங்களில் இருந்து தொழிலாளர் ஒப்பந்தக்காரர் ஒருவரால் குர்கான் நகரின் எல்லைக்கு வெளியே உள்ள நிலத்திட்டம் ஒன்றில் வேலை பார்க்க அழைத்து வரப்பட்டுள்ளார்கள். அந்த நிலத்தை நோக்கி நடக்கையில் வாசிர், “இவர்கள் என்னுடைய பதேஹ்பாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அப்படித்தான் இவர்களை எனக்குத் தெரியும். இவர்களைப் போலதான் நான் இருபது வருடங்களுக்கு முன்னால் இருந்தேன். என்னுடைய கிராமமான பட்டுவில் இருந்து வேலை தேடி பெருநகரத்துக்கு வந்து சேர்ந்தேன்.” என்று அவர் சொல்கிறார். அந்த நிலத்தை அடைவதற்கு முன்பே இரு பெண் தொழிலாளர்கள் என் கண்களில் படுகிறார்கள். அவர்களைப் பார்த்ததும் அவர்களுடன் உரையாட நின்றோம். அவர்கள் எங்கே போகிறார்கள்?

“நாங்கள் கட்டிடம் கட்டும் இடத்தில் வேலை பார்க்கிறோம். செங்கல் தூக்குவது, மணல் மூட்டை சுமப்பது முதலிய வேலைகளைச் செய்வோம். என்னுடைய சொந்த ஊர் ராஜஸ்தானில் தவ்சா. இரண்டு மாதங்களாகக் குர்கானில் வேலை பார்க்கிறேன். என் குடும்பம் என் ஊரில் இருக்கிறது. மூன்று மாதங்கள் கழித்துத் தீபாவளிக்கு ஊருக்கு செல்வேன். இப்பொழுது நான் வேலைக்குப் போகவேண்டும். நேரமாகி விடும்.” என்று கட்டிடப்பணி நடக்கும் இடத்தை நோக்கி விரையும் சீதாதேவி படபடக்கிறார்.

குர்கானில் தற்போது காரோட்டியாக இருக்கும் வாசிர் எண்களைக் காட்டா கான் என்கிற மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நில மேம்படுத்தல் பணி நடைபெறும் இடத்துக்கு அழைத்துப் போகிறார். நாங்கள் அந்த இடத்தை நோக்கி பயணிக்கையில் ட்ராக்டர்கள் நெடுஞ்சாலையைக் கடக்கின்றன. அவற்றில் ஆண்கள், பெண்கள் நெருக்கிக்கொண்டு பயணிக்கிறார்கள். சில குழந்தைகளும் அந்த வண்டிகளில் கண்ணுக்குத் தென்படுகிறார்கள். வெப்பமும், புழுக்கமும் மிகுந்த காலை வேளையை எதிர்கொண்டபடி கட்டா கான் விழிக்கிறது. அந்நகரின் குறுகலான சாலைகள் ஒருமாடி, இருமாடி கட்டிடங்களால் நிரம்பி நிற்கின்றன. தூரத்தில் குர்கானின் அடுக்குமாடி கட்டிடங்கள் எழுந்து கொண்டே இருப்பதைக் காண முடிகிறது. அது சீதாதேவி போன்ற எண்ணற்ற உழைப்பாளர்களின் கடும் உழைப்பின் கனிகள்.

PHOTO • Namita Waikar

“இந்த வீடுகளின் சொந்தக்காரர்கள் உள்ளூர்க்காரர்கள். அரசின் நில மேம்பாடு, முதலீடு திட்டங்களுக்குத் தங்களின் நிலங்களை விற்றுவிட்டார்கள். தங்களுக்குக் கிடைத்த ஓரளவு பணத்தைக் கொண்டு இந்தச் சிறிய வீடுகளைக் கட்டினார்கள். இவற்றில் சிலவற்றை வெளியூர்காரர்களுக்கு வாடகைக்கு விடுகிறார்கள்.” என்கிறார் வாசிர். இந்த வீடுகளின் மேல்மாடிகளில் உள்ள அறைகள் குருவிக்கூண்டைப் போல மிகச் சிறியதாக உள்ளன. இந்த அறைகளைத் தான் வாடகைக்கு விடுகிறார்கள். இவற்றில் யார் வாழ்கிறார்கள்?

“இடம்பெயர்ந்து வரும் ராஜஸ்தான், ஹரியானாவை சேர்ந்த தொழிலாளர்கள் தான் இங்கே வாழ்கிறார்கள். எல்லாக் கசக்கிப் பிழியும் வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். கூட்டிப்பெருக்குவது, வீட்டு வேலை, கட்டிடம் கட்டும் வேலை என்று அந்தப் பணிகள் நீள்கின்றன. வீடுகளை வாடகைக்கு விடுவது உள்ளூர்காரர்களின் வருமானத்துக்கான மூலங்களில் ஒன்றாகும்.

தூரத்தில் ஒரு பெண்மணி தலையில் பெரிய புல்கட்டை லாவகமாகத் தாங்கிக் கொண்டு, தலையில் கரங்களை வைத்தபடி தள்ளாடிக்கொண்டே நடந்து வருவது தெரிகிறது. புல்கட்டு விழாமல் இருக்க மென்மையாக அதனைத் தொட்டு அவ்வப்பொழுது சரி செய்கிறார். அவரிடம் பேச நாங்கள் நிற்கிறோம். அவரின் தலையை மூடியிருக்கும் துணியின் வழியாக வெண்மை படர்ந்த முடி தொங்குகிறது. அவரின் வெண்மையான ஆடையில் வியர்வை வழிந்து நனைக்கிறது. அவர் அணிந்திருக்கும் ஆடை ஆண்கள் அணியும் பனியனை ஒத்திருக்கிறது.

கிலவ்தி குஜ்ஜார் நாங்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்துக்குப் பின்னால் இருக்கும் ஒரு இல்லத்தில் கட்டா கானில் வாழ்கிறார். “ என்னை வேலை பார்க்க வேண்டாம் என்று என்னுடைய குடும்பத்தினர் சொல்கிறார்கள். நான் குழந்தையாக இருந்த காலத்தில் இருந்து ஓயாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறேன். எப்படி இப்பொழுது திடீரென்று நிறுத்துவது? வேறென்ன எனக்குச் செய்யத் தெரியும். எங்களின் விவசாய நிலத்தை விற்றுவிட்டோம். இப்பொழுது வேலை செய்ய நிலமில்லை. காலையில் புல் அறுத்துக் கொண்டு வந்து இரண்டு மாடுகளுக்குப் போடுவேன். அவை பால் தருவதால் சந்தையில் பால் வாங்கவேண்டிய கட்டாயமில்லை.” என்கிறார் அவர்.

PHOTO • Namita Waikar
PHOTO • Namita Waikar

வாசிர் அந்தப் புல் மூட்டையைத் தூக்கி, புழுதி படிந்த சாலையை ஒட்டியிருக்கும் கற்சுவரில் வைக்கிறார். தன்னைப் படமெடுக்கச் சம்மதித்த அவர், தனக்குத் தெரியாதவர்களோடு பேச யோசிக்கிறார். வாசிர் நாங்கள் அரசு அதிகாரிகள் இல்லை என்று உறுதி தருகிறார். அப்பொழுது மனநிம்மதி அடைந்தவராக அவர் பேச ஆரம்பிக்கிறார்.

PHOTO • Namita Waikar

கொஞ்ச தூரம் தள்ளிப் போனால் நில மேம்பாட்டு பகுதி வருகிறது. அதைச் சுற்றி முள்கம்பி வேலி போடப்பட்டுள்ளது. அங்கே உள்ள நில அறிவிப்புப் பலகை MCG BLOCK-F MAINTAIN BY A.E. (HORT.) MCG – Municipal Corporation Gurgaon என்று அறிவிக்கிறது. நில மேம்பாட்டுக்கு பிறகு அந்த நிலம் மனைகளாகப் பிரிக்கப்பட்டு, விற்கப்படும். அந்த 15௦ தொழிலாளர்களும் வெவ்வேறு பகுதிகளுக்கு ஒரே வேலைக்காக அனுப்பப்படுகிறார்கள். பெண்கள் தான் பெரும்பாலும் எங்களுடன் பேசுகிறார்கள், ஆண்களில் சிலர் கவனிக்கிறார்கள், சிலர் நிற்கிறார்கள், சிலர் புகைக்கிறார்கள். “நாங்கள் நிலத்தைத் தோண்டுவோம். தேவையில்லாத புதர்களை அப்புறப்படுத்துவோம். நிலத்தைச் சமன்படுத்திச் செடிகளை நடுவோம். அதற்குப்பின் ஒரு நாளைக்கு இருமுறை அந்தச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவோம்.” என்று அக்காவாலி கிராமத்தை சேர்ந்த தர்மாபாய் தெரிவிக்கிறார்.

PHOTO • Namita Waikar

இந்தக் குழுவில் இருக்கிற ஒரே குழந்தை இரண்டு வயது கிரிஷ். அவனின் அம்மா ஒரு பதின்பருவ பெண்ணைப் போலவே தோற்றமளிக்கிறார். அந்தப் பெண்களுக்குக் கிடைக்கும் சிறிய ஓய்வு வேளையில் அவனின் சேட்டைகளில் திளைக்கிறார்கள். அவன் புகைப்படத்துக்கு அழகாகச் சிரிக்கிறான். அவனின் சிரிப்பை இடைமறிக்கும் பாப்லி பாய் எனும் அவனின் வயதாகாத பாட்டி, “நீங்கள் நாங்கள் வேலை செய்வதையும் படம்பிடிக்க வேண்டும்.” என்கிறார்.

இன்னொரு இளம்பெண் ஊரில் விட்டுவிட்ட வந்த தன்னுடைய இரு பிள்ளைகளைப் பிரிந்திருப்பது தன்னை வாட்டி வதைக்கிறது என்கிறார். “என் மாமனாரும்,. மாமியாரும் அவர்களைப் பார்த்துக் கொள்கிறார்கள்.” என்கிறார் அவர். கிராமத்தில் வேலை இல்லை என்றில்லை, என்றாலும் எல்லாருக்கும் போதுமான வேலை இல்லை. ஆகவே, சிலர் கிராமத்தில் இருந்தபடி வேலை செய்ய, சிலர் நகரத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.

PHOTO • Namita Waikar
PHOTO • Namita Waikar

லச்சோபாய் என்கிற பெண்மணி தன்னுடைய வளர்ந்த மகன்களைக் கிராமத்தில் விட்டுவிட்டு இங்கே வேலை பார்க்கிறார். “எங்களுக்கு இங்கே எதாவது வேலை கிடைக்கிறது. அவர்கள் அங்கேயும், நாங்கள் இங்கேயும் வேலை பார்க்கிறோம். வேலை இல்லை வயிற்றுப் பிழைப்பை பார்க்க முடியாது.” என்று அவர் சொல்கிறார்.

அவர்கள் தற்போது எங்கே வாழ்கிறார்கள் எனக் கேட்டோம். தாழ்வான மூங்கில் குச்சிகள் தாங்கிக்கொண்டு இருக்கும் பிளாஸ்டிக் ஷீட் கூரைகளை அவர் காட்டினார். “ஒப்பந்தக்காரர் தினமும் இருவேளை பார்சல் சாப்பாடு கொடுக்கிறார். ரொட்டி, பருப்பு, காய்கறிகள்.” என்று அவர் சொல்கிறார். அது அவர்கள் நன்றாக வேலை பார்க்க வேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம், இவர்கள் இந்த மூங்கில் கொட்டிகைகளைத் தங்களுடைய நிரந்தர வசிப்பிடமா மாற்றிவிடக் கூடாது என்பதாலும் இருக்கலாம்.

பெண்களின் மிகச்சிறிய ஓய்வு நேரம் முடிகிறது. பெண்கள் பச்சை பிளாஸ்டிக் கேன்களைக் கொண்டு வட்டவடிவ, சிமென்ட் நீர்த் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுக்கிறார்கள். அதற்கான தண்ணீர் ஜோஹோர் எனும் செயற்கை ஏரியில் இருந்து பெறப்படுகிறது. அதற்கான தண்ணீர் ஒரு ஆழ்துழாய் கிணறில் இருந்து வருகிறது. முன்பெல்லாம் அந்த ஏரி ஆடு, மாடுகள் தண்ணீர் குடிக்கவே பயன்பட்டுக் கொண்டிருந்தது.

PHOTO • Namita Waikar
PHOTO • Namita Waikar

இந்த பெண்கள், ஆண்கள் அனைவரும் பதேஹ் பாத் மாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த, நிலமற்றத் தொழிலாளிகளே ஆவர். சிலர் டோஹனா தாலுகாவின் அக்காவலி, பட்டு கிராமங்களை சேர்ந்தவர்கள். மேலும் சிலர், ரத்தியா தாலுகாவின் ஜல்லோபூர் கிராமத்தை சேர்ந்தவர்கள்.

PHOTO • Namita Waikar

அவர்கள் மும்முரமாகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, மூங்கில் பாயின் மீது பருத்திப் போர்வை போர்த்தப்பட்ட இருக்கையில் அமர்ந்து தனக்கு அருகில் இருக்கும் ஹூக்காவை புகைக்கிறார். அது பித்தளை பூச்சில் பளபளக்கிறது. அவரின் பெயர் நந்த் கிஷோர். ஹிசார் மாவட்டம், பர்பாலா தாலுகாவின் கர்காடா கிராமத்தை சேர்ந்தவர் அவர்.

இந்தப் புலம்பெயர் தொழிலாளர்கள் ராஜபுத்திரர்கள். இவர்கள் ராஜஸ்தானி மொழியின் வட்டார வழக்கான ராஜபுத்தானாவில் பேசுகிறார்கள் பிரிவினைக் காலத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பிகானிர் மாவட்டத்தை விட்டு வந்த காலத்தில் இருந்து . ஹரியானாவின் பதேஹ்பாத் மாவட்டம் அவர்களின் சொந்த ஊராக இருக்கிறது அவர்கள் இப்பொழுது ஜன்னல் இல்லாத, சமைக்க வசதியில்லாத வீடுகளில் கட்டா கானில் வாழ்கிறார்கள். நிலங்களைச் சமன்படுத்தி, அடுக்குமாடிகளை எழுப்புகிறார்கள். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டுப்பாருங்கள், “எங்களின் கிராமத்துக்கு நாங்கள் திரும்பலாம், இல்லை இங்கேயே ஏதேனும் கட்டிட வேலை, வீட்டு வேலை கிடைக்கலாம்.” தோளைக் குலுக்குகிறார்கள்.

யாருக்கும் என்னாகும் என்று உறுதியாகத் தெரியாது!

PHOTO • Namita Waikar
Namita Waikar
namita.waikar@gmail.com

नमिता वाईकर एक लेखक, अनुवादक, और पारी की मैनेजिंग एडिटर हैं. उन्होंने साल 2018 में ‘द लॉन्ग मार्च’ नामक उपन्यास भी लिखा है.

की अन्य स्टोरी नमिता वायकर
Translator : P. K. Saravanan

P. K. Saravanan is an agricultural and irrigation engineering graduate interested in translating writings into Tamil

की अन्य स्टोरी P. K. Saravanan