”நான் இறந்தால் கூட பரவாயில்லை, ஆனால் கட்டணம் கட்ட எங்களிடம் பணமில்லை,” என மரணமடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் ஹரிஷ்சந்திரா தவாரே அவரின் மனைவி ஜெயஸ்ரீயிடம் சொல்லி இருக்கிறார். 48 வயது பத்திரிகையாளரின் உடல்நிலை கோவிட் பாதித்து மோசமானது. வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் இருந்தார்.
அப்போதும் அவரின் கவலை உயிரை பற்றியதாக இருக்கவில்லை. மருத்துவமனையின் கட்டணத்தை பற்றிதான் கவலைப்பட்டார். “என்னுடன் சண்டை போட்டு கண்ணீர் விட்டார்,” என நினைவுகூருகிறார் 38 வயது ஜெயஸ்ரீ. “வீட்டுக்கு போக வேண்டுமென அவர் சொல்லிக் கொண்டே இருந்தார்.”
இருபது வருடங்களாக பத்திரிகையாளராக இருந்தும் கடந்த மார்ச் 2021ம் ஆண்டு கோவிட் பாதிப்பு ஏற்பட்டபோது ஒன்றும் செய்ய முடியவில்லை. கோவிட் தொற்று ஏற்படும் நிலையில் அவரிருக்க அவரின் வேலையே காரணம்.
மகாராஷ்டிராவின் ஒஸ்மனாபாத் மாவட்டத்தின் பல செய்தி நிறுவனங்களில் 2001ம் ஆண்டிலிருந்து செய்தியாளராக ஹரிஷ்சந்திரா பணிபுரிந்து வருகிறார். கடைசியாக அவர் மராத்தி நாளிதழான ராஜ்தர்மாவில் பணிபுரிந்தார். “கோவிட் 19-ன் இரண்டாம் அலையை பற்றிய செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்தார். ஊடகச் சந்திப்புகளில் கலந்து கொண்டார். பெரும்பாலான நேரங்களில் களத்திலிருந்து செய்திகள் சேகரித்தார்,” என்றார் ஜெயஸ்ரீ. “ஒவ்வொரு முறை அவர் வெளியே செல்லும்போதும் நாங்கள் கவலைப்படுவோம். அவருக்கு சர்க்கரை நோய் இருந்தது. சர்க்கரை அளவு அதிகம். ரத்தக்கொதிப்பும் இருந்தது. ஆனாலும் அவரின் வேலையை செய்தாக வேண்டும் எனக் கூறினார்.”
மார்ச் 22ம் தேதி தவாரேக்கு அறிகுறிகள் தென்படத் தொடங்கின. உடல் வலியும் காய்ச்சலும் இருந்தது “உடல்நிலை சரியாகாததால், நாங்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்,” என்கிறார் ஜெயஸ்ரீ. கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். “அங்கு நல்ல வசதிகள் இருக்கவில்லை. உடல்நிலையிலும் முன்னேற்றம் இல்லை,” என்கிறார் ஜெயஸ்ரீ. 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அவரை சேர்க்க மார்ச் 31ம் தேதி குடும்பம் முடிவெடுத்தது.
ஆறு நாள் கழித்து ஏப்ரல் 6ம் தேதி அங்கு தவாரா மரணமடைந்தார்.
மருத்துவமனை மருத்துவச் செலவாக 4 லட்சம் ரூபாய்க்கு ரசீதை கொடுத்தது. ஹரிஷ்சந்திரா மரணமடைந்தபோது அவரின் மாத வருமானம் 4000 ரூபாய். அவரின் மரணத்துக்கு பிறகு ஜெயஸ்ரீ தனது தங்க நகைகளை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்றார். “உறவினர்கள் கொஞ்சம் கடன் கொடுத்தனர். ஒஸ்மனாபாத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள் ஒரு 20000 ரூபாய் கொடுத்து உதவினர்,” என்கிறார் அவர். “குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒருவர் அவர்தான். அவரையும் இழந்துவிட்டு எப்படி கடனை கட்டப் போறோம் என தெரியவில்லை.”
ஹரிஷ்சந்திராவின் வருடாந்திர வருமானம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய். செய்தித்தாளுக்கு அவர் பிடித்துக் கொடுத்த விளம்பரங்களுக்கான 40 சதவிகித கமிஷனும் சேர்த்து அத்தொகை. பிஸ்கட்டுகள், சிப்ஸ் மற்றும் முட்டைகள் விற்கும் சிறு கடை ஒன்றை வீட்டிலிருந்து ஜெயஸ்ரீ நடத்துகிறார். “இதிலிருந்து பெரிதாக ஒன்றும் கிடைப்பதில்லை,” என்கிறார். ஒரு அழகு நிலையத்தை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் அதற்கும் கடந்த ஒன்றரை வருடங்களாக தொடரும் பெருந்தொற்றின் காரணமாக வாடிக்கையாளர்கள் வருவதில்லை.
ஒரு லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு கிடைக்கக் கூடிய மருத்துவச் செலவுகளுக்கான (2.5 லட்ச ரூபாய் வரை) மகாத்மா ஜோதிராவ் புலே ஜன் ஆரோக்யா யோஜனா என்ற மாநில அரசின் காப்பீடு பெறும் தகுதி கொண்டவர்கள்தான் நவ் பாவ்தா சமூகத்தை சேர்ந்த தவாரே குடும்பத்தினரும். மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கும் அக்காப்பீடு பொருந்தும். அத்திட்டத்தின்படி, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். மாநில அரசு அதற்கான கட்டணத்தை செலுத்தும்.
அத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஹரிஷ்சந்திராவை மருத்துவமனை, காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்ததாக சொல்கிறார் ஜெயஸ்ரீ. கோவிட் தொற்றால் அவரும் பாதிக்கப்பட்டு ஒஸ்மனாபாத் உள்ளூர் மருத்துவமனையில் மூன்று நாட்கள் சிகிச்சை பெற்றிருக்கிறார். “காப்பீடு கிடைக்கும் வரை அவருக்கு சிகிச்சையளிக்கக் கேட்டோம். ஆனால் அவரின் விண்ணப்பம் ஏற்கப்படும் முன்னரே அவர் இறந்துவிட்டார். வேண்டுமென்றே அவர்கள் தாமதப்படுத்தினார்கள் என்றே எண்ணுகிறேன்.” ஹரிஷ்சந்திரா இறந்த அன்றுதான் ஜெயஸ்ரீ சிகிச்சை முடிந்து அனுப்பப்பட்டார்.
இந்த வருடத்தின் பிப்ரவரி மாதத்தில் கோவிட் இரண்டாம் அலை தொடங்கியதிலிருந்தே களத்தில் வேலை பார்ப்போர் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் அனைவரின் பாதுகாப்பு குறித்த கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசு பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அங்கீகரிக்கவில்லையெனினும் ஒடிசா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பிகார் ஆகிய மாநிலங்கள் முன்களப்பணியாளர்கள் என அவர்களை அங்கீகரித்து தடுப்பூசி போடுவதற்கும் முன்னுரிமையும் கொடுக்கின்றன.
மகாராஷ்டிராவில் பல போராட்டங்களும் கோரிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டும் சில அமைச்சர்களே கூட குரல் கொடுத்தும் முதல்வர் உத்தவ் தாக்கரே முதன்மை பட்டியலில் பத்திரிகையாளர்களை சேர்க்கவில்லை.
மகாராஷ்டிராவின் 8000 பத்திரிகையாளர்கள் உறுப்பினர்களாக இருக்கும் மராத்தி பத்ரகார் பரிஷத் என்னும் சங்கத்தின் தலைமை அறங்காவலரான எஸ்.எம்.தேஷ்முக், “ஆகஸ்ட் 2020 தொடங்கி மே 2021 வரை 132 பத்திரிகையாளர்கள் மாநிலத்தில் இறந்திருக்கின்றனர்,” எனக் கூறுகிறார். ஆனால் அதை குறைவான எண்ணிக்கை எனக் குறிப்பிடுகின்றனர் கிராமப்புற செய்தியாளர்கள். பெரியளவில் வெளியே தெரியாத செய்தி நிறுவனங்களில் வேலை பார்த்தவர்களின் பெயர்கள் அப்பட்டியலில் இடம்பெற்றிருக்காது என்கின்றனர்.
“கிராமப்புறத்திலிருந்து சில தகவல்கள் எனக்கு கிடைக்காமல் போயிருக்கும் வாய்ப்பும் உண்டு,” என ஒப்புக் கொள்கிறார் தேஷ்முக். கிட்டத்தட்ட 6000 பத்திரிகையாளர்கள் மாநிலம் முழுவதும் கோவிட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார் அவர். “பல இடங்களில் அவர்கள் பிழைத்து வந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் இறந்து போயிருக்கின்றனர்.”
முன்களப் பணியாளராக பத்திரிகையாளர்களை அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலுப்படுத்த மே 11ம் தேதி மகாராஷ்டிராவின் 90 பத்திரிகையாளர்கள் சேர்ந்து ஓர் இணைய வழி சந்திப்பை நடத்தினர். கோவிட்-19 தற்போது சிறு டவுன்களுக்கும் கிராமங்களுக்கு பரவிக் கொண்டிருக்கும் நிலையில் கிராமங்களில் இருக்கும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமாகி இருக்கிறது. அவர்களுக்கான சுகாதாரமும் கூட தூரமாகத்தான் இருக்கிறது.
புது தில்லியின் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வின்படி , ஏப்ரல் 1, 2020லிருந்து மே 12, 2021 வரையிலான 219 மரணங்களில் 138 மரணங்கள் பெருநகரம் அல்லாத பகுதியில் நேர்ந்திருக்கின்றன.
கிராமப்புற இந்தியாவில் இருக்கும் பத்திரிகையாளர்கள் எந்தவித அங்கீகாரமுமின்றி குறைந்த ஊதியத்துக்கு கடுமையாக வேலை பார்ப்பவர்கள். அவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக சொல்கிறார் ஒஸ்மனாபாத்தை சேர்ந்த 37 வயது பத்திரிகையாளர். “பத்திரிகையாளர்களை (ஜனநாயகத்தின்) நான்காவது தூண் என்றும் கோவிட் வீரர்கள் என்றும் கொண்டாடுவார்கள். பத்திரிகைத்துறையை அத்தியாவசிய சேவை என்று கூட குறிப்பிடுகிறார்கள். ஆனால் தடுப்பூசி பெறுவதில் எங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை,” என்கிறார் மும்பையில் இருக்கும் மராத்தி தொலைக்காட்சியின் செய்தியாளரான ஜாதவ். ”விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதே எங்களின் வேலை. சரியான தகவல்களை சொல்ல வேண்டுமென்பதே எங்கள் மீது இருக்கும் எதிர்பார்ப்பு. மக்களின் பிரச்சினைகளை நாங்கள் வெளியில் கொண்டு வருகிறோம். ஆனால் எங்களின் பிரச்சினைகளை எவருமே கேட்பதில்லை,” என்கிறார்.
ஜாதவ் போன்ற பத்திரிகையாளர்களுக்கு நிலைமை இன்னும் மோசம். “மும்பையிலோ தில்லியிலோ இருந்தால் உங்களின் குரல் எடுபடும். கிராமப்புறங்களில் இருக்கும் செய்தியாளர்களை பாதுகாப்பதற்கென இந்த நேரத்தில் ஊடக நிறுவனங்கள் என்ன செய்திருக்கின்றன? எத்தனை ஆசிரியர்கள் அவர்களின் செய்தியாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கின்றனர்? அவர்களுக்கு முதன்மையாக தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமென எத்தனை பேர் பிரசாரம் செய்கின்றனர்?” எனக் கேட்கிறார் அவர். “கிராமங்களில் இருக்கும் செய்தியாளர்களுக்கு நல்ல வருமானமே கிடையாது. அவர்கள் இறந்து போனால் அவர்களின் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வது?”
கோவிட்-19 தற்போது சிறு டவுன்களுக்கும் கிராமங்களுக்கு பரவிக் கொண்டிருக்கும் நிலையில் கிராமங்களில் இருக்கும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமாகி இருக்கிறது. அவர்களுக்கான சுகாதாரமும் கூட தூரமாகத்தான் இருக்கிறது.
தவாரேவின் மகளான 18 வயது விஷாகா 12ம் வகுப்பு படிக்கிறார். மருத்துவராக விரும்புகிறார். தற்போது அதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. “கட்டணம் கட்டும் வசதி எனக்கு இல்லை,” என்னும் தாய் ஜெயஸ்ரீயை விசாகா பார்க்கிறார்.
தந்தை மரணமடைவதற்கு நான்கு நாட்கள் முன்னர் வீடியோ அழைப்பில் பேசியபோது நன்றாக அவர் பேசியதாக நினைவுகூருகிறார் விஷாகா (முகப்பு படத்தில் கண்ணாடி போட்டிருப்பவர்). “ஏப்ரல் 2ம் தேதி அவரின் பிறந்தநாள் ,” என்கிறார் அவர். “அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக அழைத்தேன். என் படிப்பில் கவனம் செலுத்துமாறு கூறினார். அவர் இல்லாத சமயத்திலும் புத்தகங்களிலிருந்து பார்வையை நான் எடுக்கக் கூடாது எனக் கூறினார். நான் அதிகம் படிக்க வேண்டுமென அவர் விரும்பினார்.”
விஷாகாவின் கல்விக்கு என்ன செய்வது என்ற கவலையோடு மருத்துவமனை கட்டணத்துக்கு வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்கிற கவலையும் ஜெயஸ்ரீக்கு சேர்ந்து கொண்டது. “கொடுத்த பணத்தை திரும்ப கேட்காத அளவுக்கு என் உறவினர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இது சிரமமான காலம். எல்லாருமே பணத்துக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர்,” என்கிறார் அவர். “கடனை திரும்ப அடைக்க வேண்டும். எப்படி என தெரியவில்லை. நான் மட்டும்தான் இருக்கிறேன்.”
குடும்பத்தை பொருளாதார நெருக்கடியில் கைவிட்டு போகாமலிருக்க சில ஒஸ்மனாபாத் செய்தியாளர்கள் களத்துக்கே செல்லாமல் இருப்பது நல்லது என நினைக்கின்றனர்.
6 மற்றும் 4 வயதுகளில் குழந்தைகள் கொண்டிருக்கும் ஜாதவ் இரண்டாம் அலை பிப்ரவரியில் ஆரம்பித்த பிறகு வெளியே செல்வதில்லை. 2020ம் ஆண்டு வந்த முதல் அலையில் களச்செய்தி சேகரிக்க சென்றதற்கு மிகப் பெரிய விலை கொடுத்திருந்தார். “என் தாய் என்னால்தான் இறந்து போனார்,” என்கிறார் அவர். “ஜூலை 11ம் தேதி கோவிட் எனக்கு உறுதியானது. அவருக்கு அதற்கு பிறகுதான் தொற்று ஏற்பட்டது. நான் குணமாகிவிட்டேன். அவர் ஆகவில்லை. இறுதிச் சடங்குக்கு கூட என்னால் போக முடியவில்லை. இப்போது நான் வெளியே செல்வதற்கு என்னிடம் தைரியம் இல்லை” என்கிறார் அவர். ஒஸ்மனாபாத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும் அவரின் தொடர்புகளிடமிருந்து காணொளிகளை பெறுகிறார். “ஏதாவது முக்கியமான நேர்காணல் அல்லது செய்தி என்றால் மட்டும்தான் நான் வெளியே போகிறேன்.”
ஆனால் 39 வயது தாதாசாகேப் பென்னுக்கு களத்திலிருந்து செய்தி தரவே பிடித்திருக்கிறது. பீட் மாவட்டத்தின் கசாரி கிராமத்தின் லகாஷா என்கிற நாளிதழில் செய்தியாளராக இருக்கிறார் அவர். கிடைக்கும் செய்திகளை வேறு வழிகளில் உறுதி செய்யக் கூட அவர் முயலுவதில்லை.
”மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள் மற்றும் பிற இடங்களுக்கு அவர் நேரடியாக சென்று களச்சூழலை செய்தியாக்கினார்,” என்கிறார் அவரின் மனைவியான 34 வயது மீனா. “கடந்த மார்ச் மாதத்தில் இரண்டாம் அலை பற்றி செய்தி சேகரிக்கையில் அவருக்கு தொற்று வந்தது,” என்கிறார்.
பன்னின் குடும்பம் அவரை கசாரியிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்த்தது. “ஆனால் அவரின் உடல்நிலை சரியாகவில்லை,” என்கிறார் மீனா. “அவருடைய ஆக்சிஜன் அளவு 80க்கு குறைந்தது. மோசமடைந்து கொண்டே இருந்தது.”
நான்கு நாட்கள் கழித்து எந்த இணை நோயும் இல்லாத பன் இறந்து போனார். “மருத்துவமனை கட்டணம் மற்றும் மருந்துகளுக்கு என ஒரு லட்சம் ரூபாய் செலவழித்தோம்,” என்கிறார் பன்னின் உறவினரான 35 வயது திலிப் கிரி. “நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி மருத்துவமனை கட்டணத்தை கட்டினோம். என்னுடைய மாமாவின் மாத வருமானம் 7000-8000 ரூபாய்தான். பெரிய அளவுக்கான சேமிப்பும் எங்களிடம் இல்லை.”
பன்னும் அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றிருக்க முடியும். பீட் போன்ற வறண்ட மாவட்டங்களில் இருக்கும் விவசாயக் குடும்பங்கள் அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும். பன்னின் குடும்பமும் விவசாயக் குடும்பம்தான். பன்னின் குடும்பத்துக்கு ஐந்து ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது.
பன் இருந்த தனியார் மருத்துவமனை அவரை அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் பட்டியலிட்டு, சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டது. “திட்டத்தின் பலன்களை நாங்கள் பெற விரும்பினால் வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினார்கள்,” என்கிறார் மீனா. “அத்தகைய சமயத்தில் நல்ல ஒரு மருத்துவமனையை தேடும்போது பணத்தை பற்றி நீங்கள் யோசிக்க மாட்டீர்கள். பாதிக்கப்பட்டவரை காப்பாற்றதான் யோசிப்பீர்கள். ஆனால் நாங்கள் பணத்தையும் காப்பாற்ற முடியவில்லை, பாதிக்கப்பட்டவரையும் காப்பாற்ற முடியவில்லை.”
மீனாவின் மகன்களான 15 வயது ருஷிகேஷ்ஷும் 14 வயது யஷ்ஷும் நிச்சயமற்ற எதிர்காலத்தை தற்போது எதிர்நோக்கி இருக்கிறார்கள். அவர்களின் தந்தை அவர்கள் படித்து மருத்துவர்களாக வேண்டுமென விரும்பினார். “அவர்கள் பத்திரிகையாளர்களாகி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்,” என்கிறார் திலிப். “அவர்களின் எதிர்காலம் தற்போது தாயின் கைகளில்தான் இருக்கிறது. விவசாயம் மட்டும்தான் அவருக்கு வருமானம் கொடுக்கக் கூடிய ஒரே வழி. சோளமும் கம்பும் மட்டும்தான் நாங்கள் விளைவிக்கிறோம். பணப்பயிரை நாங்கள் விளைவிப்பதில்லை,” என்கிறார் அவர்.
அருகருகே அமைதியாக அமர்ந்திருக்கும் பதின்வயது மகன்கள் இருவரும் நாங்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருக்கின்றனர். “அப்பாவை இழந்ததிலிருந்து வழக்கத்துக்கு மாறாக அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்,” என்கிறார் திலிப். “விளையாடிக் கொண்டும் சீண்டிக் கொண்டும் இருந்தவர்கள் அவர்கள். அப்பா போன இடத்திற்கே செல்ல விரும்புவதாக அவ்வப்போது கூறுகின்றனர்.”
தமிழில் : ராஜசங்கீதன்