கிதாபுன் நிஷா ஷேக், இடிந்த சிறுகுன்றுக்கும் குப்பைகளுக்கும் நடுவில் நின்றிருந்தார். ரஃபீக் நகரில் அவரது வீட்டுக்குப் பக்கத்தில் ஓடும் நல்லாவில் இருந்து ப்ளாஸ்டிக்குகளை சேகரித்துக் கொண்டிருந்தார். அதற்குப் பக்கத்தில் இருக்கும் டியோனர் குப்பைக்கிடங்கிலிருந்து சில குப்பைகள் சிதறியிருந்தன. திறந்த கால்வாயில் கொஞ்சம் குப்பைகள் கொட்டியிருந்தன. கொக்கியுடைய ஒரு நீண்ட மரக்குச்சியை வைத்து, கருப்பான சாக்கில் இளஞ்சிவப்பு நிற பாட்டிலை அடைக்கிறார். அடுத்தமுறை உதவக்கூடும் என நினைத்து அந்த மரக்குச்சியை பத்திரப்படுத்துகிறார்.
ஒருநாளைக்கு ஏறத்தாழ ஆறு மணி நேரத்துக்கு அவர் இந்த வேலைகளைச் செய்கிறார். அவரது பழுப்பேறிய தலைடி சூரிய ஒளியில் மின்னுகிறது. 75 வயதின் முதுமையால் முகுது வளைந்திருக்கிறது. கண்ணாடி பீர் பாட்டில்களையும் ப்ளாஸ்டிக் பாட்டில்களையும் எடைக்கு விற்பதற்காக சேகரித்துக்கொண்டிருக்கிறார். ஒரு நாள் விட்டு ஒருநாள், 12 முதல் 15 கிலோ ப்ளாஸ்டிக் சேகரிக்கப்படுகிறது. கிதாபுனின் மருமகள் ஜாஹிதா அவையனைத்தையும் சாக்கில் போட்டு பாபா நகரில் அதை எடைக்கு வாங்குபவரிடம் சென்று அளிக்கிறார். அவர்களின் வீட்டிலிருந்து பாபா நகர் 15 நிமிட நடை தொலைவில் இருக்கிறது. ஒரு வாரத்துக்கு 1000 ரூபாய் வரை இதிலிருந்து அவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. “எங்கள் வயிற்றை நிரப்பிக்கொள்வதற்கு எங்களுக்கு இந்த வேலைதான் இருக்கிறது” என்கிறார் கிதாபுன். “இந்த வேலை எங்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் வேறு என்ன செய்வது?” என்கிறார்.
கிதாபுனின் குடிசைக்கு அருகில், 324 ஏக்கர் டியோனர் குப்பைக்கிடங்கு பகுதி உள்ளது. மும்பையில் இருக்கும் இத்தகைய மூன்று பெரிய இடங்களில் இதுவும் ஒன்று (முலுண்ட் மற்றும் கஞ்சூர்மார்க் ஆகியவை மற்ற இரண்டு குப்பைக்கிடங்குகள்) நகரம் உருவாக்குகிற 9500 மெட்ரிக் டன் குப்பைகளில் சுமார்
35 சதவிகிதம்
டியோனர் குப்பைக்கிடங்கில்தான் கொட்டப்படுகிறது. 2016-இல் டியோனர் பகுதி நிறைந்துவிட்டாலும், ப்ருஹன்மும்பை நகராட்சிக்கு பாம்பே உயர்நீதிமன்றத்தால் ‘கடைசி நீட்டிப்பாக’ உத்தரவிடப்பட்டு, டிசம்பர் 31, 2019 வரை பயன்படுத்திக்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரஃபீக் நகரைப்போலவே பல குடிசைப் பகுதிகளும் இந்த இடத்தைச் சுற்றி அமைந்துள்ளன. 807,720 பேர் இருக்கும் மக்கள்தொகை கொண்ட நகரத்தின் எம்-கிழக்கு வார்டில் இவையும் ஒரு பகுதியாகும். ரஃபீக் நகரின் குறுகலான சந்துகள் முழுவதும் குப்பைகள் குவிந்திருக்கும். கழிவு வாய்க்கால்கள் அடைபட்டிருக்கும். குப்பைக்கிடங்கிலிருந்து வெளிவரும் நாற்றம் தாங்க முடியாததாக இருக்கும். எல்லா இடங்களிலும் ஈக்களும் கொசுக்களும் நிறைந்திருக்கும்.
ஒரு தெருவின் ஓரத்தில் அமைந்திருக்கிறது கிதாபுனின் குடிசை. நல்லாவின் ஓரத்தில் அமைந்திருக்கிறது. 16 பேர்களைக் கொண்ட அந்தக் குடிசை 100 சதுர அடியில் இருக்கிறது. கிதாபுனின் மூன்று மகன்கள், ஜாஹிதா மற்றும் 11 பேரக்குழந்தைகளுடன் அவர் அங்கு வசிக்கிறார். “மோசமான மழைநேரங்களில், குப்பைக்கிடங்குகளிலிருந்தும் கால்வாய்களில் இருந்தும் நீர் வீட்டுக்குள் நுழைந்துவிடும்” என்கிறார் கிதாபுன். “முக்கியமான உணவுப் பொருட்களான பருப்பு, அரிசி, துணிமணிகள் அனைத்தையும் வீட்டின் மேலடுக்கில் வைப்போம். பல பொருட்கள் ஈரமாகிவிடும். தண்ணீர் வடியும்வரை அருகில் இருக்கும் வீடுகளில் தங்குவோம்” என்கிறார் கிதாபுன்.
ஒரு தெருவின் ஓரத்தில் அமைந்திருக்கிறது கிதாபுனின் குடிசை. நல்லாவின் ஓரத்தில் அமைந்திருக்கிறது. 16 பேர்களைக் கொண்ட அந்தக் குடிசை 100 சதுர அடியில் இருக்கிறது. கிதாபுனின் மூன்று மகன்கள், ஜாஹிதா மற்றும் 11 பேரக்குழந்தைகளுடன் அவர் அங்கு வசிக்கிறார். “மோசமான மழைநேரங்களில், குப்பைக்கிடங்குகளிலிருந்தும் கால்வாய்களில் இருந்தும் நீர் வீட்டுக்குள் நுழைந்துவிடும்” என்கிறார் கிதாபுன். “முக்கியமான உணவுப் பொருட்களான பருப்பு, அரிசி, துணிமணிகள் அனைத்தையும் வீட்டின் மேலடுக்கில் வைப்போம். பல பொருட்கள் ஈரமாகிவிடும். தண்ணீர் வடியும்வரை அருகில் இருக்கும் வீடுகளில் தங்குவோம்” என்கிறார் கிதாபுன்.
ரஃபீக் நகருக்கு கிதாபுனின் குடும்பம் வந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. இங்கு வருவதற்கு முன்னதாக, கிழக்கு மும்பையில் இருக்கும் சேவ்ரியில் இருந்து உத்தர பிரதேசத்தில் இருக்கும் காலிலாபாத்துக்கு இடம்பெயர்ந்தார். அதன்பிறகு மறுபடியும் சேவ்ரிக்கே வந்துவிட்டார்.
கிதாபுனின் தந்தை சேவ்ரியில் இருக்கும் தொழிற்சாலைகளில் ட்ரக்கில் பொருட்கள் ஏற்றும் உதவியாளர் வேலையைச் செய்து வந்துள்ளார். கிதாபுன் சேவ்ரி பகுதியில் நடைபாதையில் தங்கியிருக்கிறார். ”கெல்டி தி, குட்டி தி, காட்டி தி…பஸ்…[விளையாடுவேன், சுற்றி வருவேன் அவ்வளவுதான்], என்கிறார் தனது குழந்தைப்பருவத்தை விவரிக்கும் கிதாபுன், புன்னகையுடன். அவரது மூன்று மூத்த சகோதரர்களும், தாயும் அவரின் மீது அன்புடன் இருந்ததாகத் தெரிவிக்கிறார்.
25 வயதில் மும்பையை விட்டு, ஷேர் அலி ஷேக்கை மணந்துகொண்டு உத்தரப் பிரதேசத்தின் காலிலாபாத்துக்குச் சென்றிருக்கிறார். ஷேர் அலி, கிதாபுனை விட 12 வயது மூத்தவர். ட்ரக் ஓட்டுநர். “முதலில் எல்லாம் நன்றாகவே சென்றது. அதன்பிறகுதான் அவரது உண்மையான முகம் தெரிந்தது” என்று சொல்கிறார் கிதாபுன். எப்பொழுதாவது கிதாபுனுடன் பேசிய அவர், சின்ன விஷயங்களுக்கு கோபப்பட்டு கடுமையாக நடந்துகொண்டிருக்கிறார்.
மணமுடித்துச் சென்ற மூன்று வருடங்கள் கழித்து, ஷேர் ஒரு விபத்தைச் சந்தித்து அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது. கிதாபுன்னுக்கு பல விஷயங்கள் நினைவுக்கு வரவில்லை. இவர்களைப் பார்த்துக்கொள்ள முடியாமல், கிதாபுன், ஷேர் மற்றும் அவர்களின் இரண்டு சிறு குழந்தைகளையும் ஷேரின் குடும்பம் வெளியில் அனுப்பியிருக்கிறது. “மூன்றாவது குழந்தை என் கருவில் இருந்தது. எங்கும் செல்வதற்கு பணமோ, வழியோ எங்களுக்கு இல்லை” என்கிறார் கிதாபுன்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, கிதாபுன், ஷேர் மற்றும் அவர்களின் குழந்தைகள் மீண்டும் சேவ்ரியின் தெருக்களுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். தனியார் கார் ஓட்டுநர் வேலைக்குச் சேர்ந்த ஷேர், மது குடிப்பதை தினசரி பழக்கமாக மாற்றிக்கொண்டிருக்கிறார். “ஒருநாள் என்னைக் கத்தியில் குத்துவதற்கு முயற்சி செய்தார். முக்காலியை எடுத்து வீசிவிட்டு, தப்பித்துவிட்டேன்” என்று கூறிய கிதாபுன், அப்படியான வன்முறை அதிகரித்துக்கொண்டே இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். “ஒரு மாதத்துக்கு 60 ரூபாய் கொடுப்பார். அந்த பணத்தை வைத்து வீட்டைச் சமாளிக்கவேண்டும் என்று நினைப்பார். அவர் வேலைக்குச் சென்றதும், நான் பலரின் வீட்டுப் பயன்பாட்டுக்கு தண்ணீர் நிரப்பித் தருவேன். அதன்மூலமாக ஒரு வாரத்துக்கு 150 ரூபாய் கிடைத்தது. அந்தப் பணத்தை வைத்துத்தான் என் குழந்தைகளுக்கு உணவு அளித்தேன்” என்கிறார்.
20 வருடங்களுக்கு முன்பாக சுவாசப்பை கோளாறு காரணமாக ஷேர் அலி இறந்திருக்கிறார். “ஜிந்தா தா தோ அச்சா தா. மர் கயா தோ தோடே ஆன்சு கம் ஹோ கயே [இருந்தவரை நன்றாக இருந்தது… இறந்தபிறகும் கூட.. என் கண்ணீர் குறைந்திருக்கிறது]” என்று கூறினார்
கிதாபுன் அவரது ஐந்து குழந்தைகளையும், சேவ்ரி தெருக்களில் தனியொரு ஆளாய் நின்று வளர்த்திருக்கிறார். அருகில் இருக்கும் மாடி வீடுகளில் வேலை செய்து சம்பாதித்திருக்கிறார். “காலை 7 மணிக்கு வேலைக்குச் சென்றுவிட்டு, மாலை 4 மணிக்குத் திரும்ப வருவேன். 10 வயதாகும்போது, எனது மூத்த மகன் அவனது தங்கையையும், தம்பிகளையும் பார்த்துக்கொண்டான்” என்கிறார். குழந்தைகளைப் பற்றிய கவலையிலேயே இருந்த கிதாபுன், “நான் வேலைக்குச் செல்லும்போது என் குழந்தைகளுக்கு எந்த தீங்கும் வந்துவிடக்கூடாது என்று நினைத்துக்கொண்டிருப்பேன்” என்கிறார்.
ஜனவரி 1993 மதக் கலவரத்துக்குப் பிறகு, கிதாபுனின் கவலை இரண்டு மடங்காகியிருக்கிறது. ஒரு நாள் இரவு, 9 மணியளவில், கெரோசின் நனைத்த துணிகளோடும், கத்திகளுடனும் ஆண்கள் ஓடிவந்ததைப் பார்த்திருக்கிறார். ”எல்லாவற்றையும் அழித்துக்கொண்டிருந்தார்கள். என் பக்கத்து வீட்டில் இருந்தவர் சத்தமாகக் கத்தி அழுதுகொண்டிருந்தார். எனது வீட்டைப் பூட்டிக்கொண்டு என் குழந்தைகளுடன் பதுங்கிக்கொண்டேன். அப்போதுதான் கெரோசின் நெடியை உணர்ந்தேன். எங்களை எரிக்க வந்திருந்தார்கள். நாங்கள் தப்பித்து ஓடினோம்” என்கிறார்.
”என் வீட்டுக்கு என் கண்முன்னே தீவைத்தார்கள். என் குழந்தைகளுடன் நான் ஓடினேன். எங்கும் கலவரமாக இருந்தது. ஒருவரை வெட்டிக் கொன்றார்கள்” என்கிறார் பதற்றத்துடன். “அந்த இரண்டு மாதங்களும் என் வாழ்வின் நரகம். என் குழந்தைகளின் வாழ்க்கைக்காக பயந்து அங்குமிங்கும் ஓடி ஒளிந்தேன்” என்கிறார் கிதாபுன். கிதாபுன், அவருடைய சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களோடு, சேவ்ரியின் பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் தங்கியிருக்கிறார்கள். எப்போதாவது உணவுக்காகவும், பணத்துக்காகவும் வெளியில் வந்திருக்கிறார்கள்.
27 வருடங்கள் கடந்த பிறகும் கூட, அந்த கலவர சூழ்நிலையின் காட்சிகள் அவரை பயமுறுத்திக்கொண்டு இருக்கின்றன. “என் குழந்தைகளை நான் அதிகமாக வெளியில் செல்ல அனுமதித்ததில்லை” என்கிறார். “அவர்களுக்கு என்ன நடக்கும் என்னும் கவலையிலேயே இருப்போம்” என்கிறார்.
கிதாபுனின் குடும்பம் ஒரு சிறு வட்டத்துக்குள்ளேயே வாழ்கிறது. கிதாபுனின் 11 பேரக்குழந்தைகள் – 3.5 முதல் 16 வயது வரையிலான அவர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. (உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, உள்ளூர் என்.ஜி.ஓ ஒன்றிடம் கேட்டு இதை உறுதிப்படுத்திக்கொண்டேன்). “11 வயதுக் குழந்தை ஒன்றை பள்ளியில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார்கள்” என்று சொல்கிறார் ஜாஹிதா. கிதாபுனின் இரண்டாவது மகனை மணந்தவர் ஜாஹிதா. “அம்மாவும், நானும் எங்கள் குழந்தைகளை அதைப்போன்ற சூழ்நிலையில் தள்ள விரும்பவில்லை. அதனால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. நல்லாவில் (கழிவுநீர் வாய்க்கால்) வாழ்வதால், எங்கள் குழந்தைகளை மற்ற மாணவர்கள் துன்புறுத்துவார்கள். அதன் காரணமாகவும் அவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை” என்கிறார் ஜாஹிதா.
சேவ்ரியில் 6 முதல் 7 மணிநேரம் வரை ஜாஹிதா பணிபுரிகிறார். ரஃபீக் நகரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது சேவ்ரி. (ரயிலிலும், ரிக்ஷாவிலும் சேவ்ரிக்குச் செல்கிறார்) வீடுகளைத் துடைப்பது, பாத்திரங்கள் மற்றும் துணிகளைச் சுத்தம் செய்யும் வேலையைச் செய்துவருகிறார். மூன்று மகள்கள், இரண்டாவது மைத்துனரின் மூன்று வயதுக் குழந்தை, முதல் மைத்துனரின் ஏழு குழந்தைகள் என அனைவரையும் ஜாஹிதா பார்த்துக்கொள்கிறார். “அந்தக் குழந்தைகளின் தாய் ஐந்து வருடங்களுக்கு முன்பே விட்டுச் சென்றுவிட்டனர். குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளாமல் ஓடிவிட்டனர். இப்போது நான்தான் அவர்களுக்கும் அம்மா” என்கிறார்.
வீட்டுவேலை செய்துவரும் ஜாஹிதா மாதத்துக்கு 5000 ரூபாய் ஈட்டுகிறார். அவரது கணவர் அப்சல் வாகனப் பணியகம் ஒன்றில் வேலை செய்கிறார். தினமும் 150 முதல் 200 ரூபாய் அவரை அவருக்குக் கூலி கிடைக்கிறது. இரு மைத்துனர்களும் அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலைகளைச் செய்கிறார்கள். கிதாபுனின் நான்காவது மகன் வீட்டை விட்டு வெளியேறி சேவ்ரி பகுதியில் வாழ்கிறார். கிதாபுனின் மகள், மணமுடித்து அவருடைய கணவருடனும், அவரது குடும்பத்துடனும் சேவ்ரி பகுதியில் வாழ்கிறார்.
ரஃபீக் நகருக்குச் சென்றபோது, ஜாஹிதாவின் அம்மாவான 60 வயது ஜரீனா, காசநோயின் இறுதிக்கட்டத்துடன் போராடிக்கொண்டிருந்தார். ஜாஹிதாவும் இரண்டு வருடங்களாக காசநோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். குப்பைக்கிடங்கில் பணிபுரிவதும், அதன் அருகில் வாழ்வதும் மிகவும் ஆபத்தானது. எம்-கிழக்கு வார்டில் நடந்த
கணக்கெடுப்பின்படி
, சமூக அறிவியல் பிரிவு, டாட்டா நிறுவனம் அளித்திருக்கிறது அறிக்கை. அந்த அறிக்கையில், இங்கு வாழும் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்களுக்கு இதய நோய், நீரிழிவு, சுவாசக் கோளாறுகள், ரத்தக் கொதிப்பு மற்றும் காசநோய் பாதிப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
“பேட்டி ஹை வோ மேரி, பாஹு நஹி”[அவள் எனது மகள், மருமகளல்ல],” ஜாஹிதாவைப் பற்றி இப்படித் தெரிவிக்கிறார் கிதாபுன். “அவளுக்கு ஏதேனும் நடந்துவிட்டால், என்னுடைய மொத்த குடும்பமும் விழுந்துவிடும்” என்கிறார்.
கிதாபுன்னுக்கு அவரது பேரக்குழந்தைகளைக் குறித்த கனவுகள் இருக்கின்றன. டொயோனாருக்கு வெளியில் அவர்களின் வாழ்க்கை இருக்கவேண்டும் என அவர் விரும்புகிறார். “மேரே க்யா ஹே, மெயின் கச்ரே மே பைதா ஹுய் தி, கச்ரே மே ஹை மரூங்கி [நான் குப்பையில் பிறந்தேன், இந்த குப்பைக்கிடங்கிலேயே இறப்பேன்]” என்று சொல்லும் கிதாபுன், “வாழ்க்கை முழுவதும் போராடிவிட்டேன். அல்லா என்னை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும்.” என்கிறார் கிதாபுன்.
தமிழில்: குணவதி