32 வயதாகும், போசானி அஸ்வின் நண்பகலின் போது தனது வீட்டை விட்டு வெளியேறும் முன், 76 வயதாகும் தனது பாட்டி போசானி லக்ஷ்மி அம்மாவின் கால்களை ஆசீர்வாதங்களை பெறுவதற்காக தொட்டார். மூன்று மணி நேரம் கழித்து அவர் வீடு திரும்பிய போது, தற்காலிக மாற்றம் தான் என்றாலும், பாட்டி அவரது காலைத் தொட்டு வணங்கினார். இந்த இரண்டு பயபக்தியான செயல்களுக்கும் இடையில் ஒரு முழு சமூகத்தின் நம்பிக்கையை உள்ளடக்கிய, ஒரு நூற்றாண்டு பழமையான சடங்கு இருக்கிறது - அதுவே போதுராஜுவின் மரபு.
அஸ்வின், பயமுறுத்தும் போதுராஜுவாக வீட்டிற்கு திரும்பிய போது நடை பாதையிலும், வீடுகளிலும், பால்கனியிலும் நின்ற பக்தர்கள் மலர் தூவி அவரை வரவேற்றனர், அவரது உடல் முழுவதும் மஞ்சளும், குங்குமமும் பூசப்பட்டு இருந்தது, அவர் ஆவேசமாகவும் தனது கையில் ஒரு சட்டையையும் வைத்திருந்தார். தென் கிழக்கு ஹைதராபாத்தில் உள்ள மேக்கல் பண்டா வட்டாரத்தில் உள்ள லக்ஷ்மி நிலையத்தின் வாயிற்கதவில் நுழைந்த போது வீட்டிற்கு உள்ளே சென்று, அவரது பாட்டியை நேருக்கு நேர் பார்த்தார். பாட்டி, கண்களில் நீருடன் குனிந்து அவரது கால்களை தொட்டு வணங்கினார். பயந்து போயிருக்கும் அஸ்வினின் எட்டு வயது மகள் ஷாஸ்ரா, இன்னும் தன் தந்தையை இப்படிப் பார்க்கப் பழகவில்லை, அவள் போய் தன் தாய் கவிதாவின் பின்னால் ஒளிந்து கொண்டாள். ஷாஸ்ராவின் மூத்த சகோதரரான 10 வயதாகும் ரித்விக்கும், பயமுறுத்தும் அவதாரத்தில் இருக்கும் தனது தந்தையிடம் இருந்து விலகியே இருந்தார்.
"போதுராஜுவாக ஆன பிறகு நான் முற்றிலும் பரவச நிலையிலேயே இருக்கிறேன்", என்று அஸ்வின் கூறுகிறார். "என் உடலின் மீது எனக்கு கட்டுப்பாடு இல்லை. நான் தேவியின் விருப்பப்படியே செயல்படுகிறேன். நான் எனது சொந்த வீட்டிற்கு செல்லும் போது கூட, நான் அதை உணரவில்லை. தேவியே என்னை வழி நடத்துகிறார்", என்று கூறுகிறார்.
இப்போது கடந்த ஐந்து ஆண்டுகளாக அஸ்வின் போனாலு திருநாளன்று போதுராஜுவாக மாறுகிறார் - தெலுங்கானா மாநிலத்தில் ஆஷதா மாதத்தில் (ஜூன் - ஜூலை) நடைபெறும் வருடாந்திர திருவிழாவான போனாலு, மகான்காளி தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. திருவிழாக்கள் மேக்கல் பண்டாவில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோல்கொண்டா கோட்டையில் துவங்கி, நகரின் பல்வேறு பகுதிகளிலும் 4 ஞாயிற்றுக்கிழமைகள் கொண்டாடப்படுகிறது.
உள்ளூரில் உள்ள லால் தர்வாசா சிம்மவாகினி மகான்காளி கோவிலின் தலைமை போதுராஜுவாக அஸ்வின் இருக்கிறார். போதுராஜு (விஷ்ணுவின் அவதாரம் என்று சில குறிப்புகள் கூறுகின்றன என்று சிலர் கூறுகின்றனர்) "கிராம தேவதைகளான", சப்த கன்னிமார்களின் பாதுகாவலர், என்று அஸ்வினின் தந்தையான, 61 வயதாகும் போசானி பாபு ராவ் கூறுகிறார், இவரே 1983 ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை போதுராஜுவாக இருந்தவர். இத்தெய்வங்கள் இம்மாநிலத்தின் நாட்டுப்புறக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாவர். திருவிழாவின் மைய தெய்வமான மகான்காளி தான் சப்த கன்னிகளில் மூத்தவர் (என்று கோயில் வலைதளம் கூறுகிறது). இத்தெய்வம் நோய்களை தடுக்கிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர். "போதுராஜுவே இந்தக் கன்னிமார்களின் சகோதரர் ஆவார்", என்று பாபு கூறுகிறார். "தேவிகளை மகிழ்விக்க 2 முதல் மாலை 5 மணி நேரம் அவர் நடனமாடுகிறார்", என்று பாபு கூறுகிறார்.
மேலும் அவர், போதுராஜு "(கோவிலுக்கு) போனம் சுமந்து வரும் பெண்களையும் பாதுகாக்கிறார்", என்று கூறுகிறார். தெலுங்கில், 'போனம்' என்றால் 'உணவு' என்று பொருள், மேலும் இத்திருவிழாவின் பெயரான போனலு இந்த வார்த்தையில் இருந்து வந்ததே. இந்த பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, பெண்கள் புதிய மண் பானை அல்லது பித்தளைப் பானையில் பால் மற்றும் வெல்லத்துடன் அரிசியை சமைக்கின்றனர். அந்தப் பானையை வேப்ப இலைகள், மஞ்சள் மற்றும் குங்குமம் ஆகியவற்றால் அலங்கரிக்கின்றனர். பின்னர் பெண்கள் மற்றும் இளம் பெண்கள் அப்பானையை தங்கள் தலையில் சுமந்து கொண்டு வந்து, வளையல்கள் மற்றும் புடவைகளுடன் கோவிலிலுள்ள தேவிமார்களுக்கு படைக்கின்றனர்.
அஸ்வினைப் பொருத்தவரை போனாலுவுக்கு 15 நாட்களுக்கு முன்பே ஏற்பாடுகள் துவங்கி விடுகின்றன. அந்த நேரத்தில் அவர் அசைவ உணவு மற்றும் மது அருந்துவதில்லை, மேலும் அவர் பிரார்த்தனைகளில் மூழ்கி விடுகிறார். திருவிழாவிற்கு 8 நாட்களுக்கு முன்பே கோவில் பூசாரி, கோவிலுக்குள் வைக்கப்பட்டிருக்கும் கடத்திற்கு (தேவிகள் வடிவத்தில் அலங்கரிக்கப்பட்ட ஒரு செப்பு பானை) தொடர் பூஜைகளை துவங்கி விடுகிறார்.
போனாலு திருநாள் அன்று, கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் அஸ்வின் வீட்டிற்கு (அவரது மூதாதையர் வீட்டிற்கு சில மீட்டர்கள் தள்ளி இருக்கின்ற) சென்று அவரை கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றனர், அவர்களுடன் மேளதாள இசை குழுவும் செல்லும். பக்தர்கள் கூட்டத்திற்கு மத்தியில், அவர்கள் நடந்து செல்ல, அரைமணி நேரம் ஆகும். கோவிலில் அஸ்வின் மகான்காளி - சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் காளி, தேவியின் ஆசியை வேண்டுகிறார். பூசாரி அவரிடம் பந்தரை (மஞ்சள், குங்குமம், தேங்காய் எண்ணெய் மற்றும் மல்லிகை, ரோஜா, மற்றும் பந்துப்பூ ஆகியன தொடுத்த மலர் மாலை) வழங்குகிறார். அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரான 'பண்டாரி' இந்தப் பொருட்களை எடுத்துச் செல்கிறார். "கோவிலே எனக்கு பொருட்களை வழங்குகிறது. கோவிலில் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட ஒரே போதுராஜு நான் தான். திருவிழாவின் போது நீங்கள் மற்ற போதுராஜுக்களையும் காணலாம், ஆனால் அவர்கள் யாரும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் அதை வேடிக்கைக்காகச் செய்கின்றனர் மேலும் அவர்கள் சுயமிகளுக்கு கூட நின்று படம் எடுத்துக் கொள்கின்றனர்", என்று அஸ்வின் கூறுகிறார்.
பந்தரை பெற்ற கொண்ட பிறகு, அஸ்வின் தனது மூதாதையர்கள் வீட்டிற்கு திரும்புகிறார். அஸ்வின் குளித்துக் கொண்டிருக்கும் போது, போசானி குடும்பத்தை சேர்ந்த பெரிய ஆண்கள் அமர்ந்து பாசுவை - மஞ்சள், குங்குமம், எண்ணெய் மற்றும் தண்ணீர் கலந்த கலவையை - தயாரிக்கின்றனர். சிவப்பு நிற கால் சட்டையை மட்டுமே அணிந்து வந்த அவர், பின்னர் தனது குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மற்றும் கோயில் பிரதிநிதிகளின் உதவியுடன் தனது உடலில் பாசு கலவையை பூசிக் கொள்கிறார். போதுராஜுவாக இருந்து இறந்த உறவினர்களின் புகைப்படங்களுக்கு முன்னால் ஒரு சாட்டை மற்றும் சிறிய மணிகள் கோர்த்த இடுப்பு அங்கி ஆகியவை வைக்கப்பட்டு இருக்கிறது. இத்தனை நேரமும், வீட்டிற்கு வெளியே மேளக்காரர்கள் மேள தாளத்தை வாசித்த படி இருந்தனர். பாசு பூசப்பட்ட உடன் அறையில் இருந்த அனைவரும் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்கின்றனர். சாட்டையையும் பாசுவில் முக்கி எடுக்கின்றனர், மேலும் அதை வீட்டின் பெரியவர்கள் அஸ்வினிடம் கொடுக்கின்றனர், மேலும் அவர்களே இடுப்பு அங்கியையும் அவரது இடுப்பைச் சுற்றி கட்டி விடுகின்றனர். இப்போது தான் அவர் போதுராஜு.
"போதுராஜு வருவதற்காக பக்தர்கள் தங்கள் வீட்டின் வாசலுக்கு வெளியே காத்திருப்பார்கள்", என்று அஸ்வின் கூறுகிறார். இந்த 111 ஆண்டுகள் பழமையான பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் அவரது குடும்பத்தின் ஆறாவது தலைமுறை இவர், என்று அவரது தந்தை பாபு கூறுகிறார். இந்தக் குடும்பத்தினர், தெலுங்கானாவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று வகைப் படுத்தப்பட்ட முடிராஜ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஹைதராபாத் மாநகராட்சியில் போக்குவரத்துத்துறையில் போர்மேன் ஆக இருந்து ஓய்வு பெற்ற பாபு கூறுகிறார், 1908 ஆம் ஆண்டில் மூசி நதியில் (ஹைதராபாத் நகரம் இந்த ஆற்றின் கரையில் தான் அமைந்துள்ளது) பெருவெள்ளம் ஏற்பட்டது, காலராவும் பரவியதால் இறப்பு எண்ணிக்கை உயர்ந்தது. தண்ணீர் சார்மினாரைத் தொட்டு ஓடியது. அப்போதைய ஹைதராபாதின் நிஜாமான மிர் ஒஸ்மான் அலி கான் மற்றும் அவரது பிரதமர் மஹாராஜா கிஷென் பெர்சாத் ஆகியோர் அரிசி, தங்கம், நகைகள், வைரங்கள் மற்றும் பிற செல்வங்கள் நிறைந்த ஒரு கூடையுடன் ஆற்றின் கரைக்கு சென்று பிரசாதங்களை ஆற்றில் விட்டு விட்டு, வெள்ளத்தைத் தடுக்கும் படி தெய்வத்திடம் மன்றாடினர்", என்கிறார். தண்ணீரும் வடிந்தது மேலும் அதற்கு ஒரு வருடம் முன்னதாக 1907 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட லால் தர்வாசா கோயிலும் முக்கியத்துவம் பெற்றது, என்கிறார்.
"எங்களது மூதாதையரான, சிங்காரம் பாப்பையா 1908 ஆம் ஆண்டு கோயில் அதிகாரிகளால் முதல் போதுராஜுவாக நியமிக்கப்பட்டார்", என்று பாபு நினைவு கூர்கிறார். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரும், போசானி குடும்பம் கோயிலுடன் தொடர்புடைய இந்த மரபுகளை தொடர்கிறது.
இது எங்களது குடும்ப பாரம்பரியத்தின் ஒரு பகுதி. இதை நாங்கள் பின் தொடர்வோம் என்று அஸ்வினின் சகோதரியான, 33 வயதாகும், இல்லத்தரசியாக இருக்கும் டி. மல்லிகா ராகேஷ் கூறுகிறார். "இது தேவிக்கு செய்யப்படும் சேவை. போனாலு நடைபெறும் வாரத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எங்களது குடும்பத்தினரை வந்து சந்திக்கின்றனர். போனாலு அன்று நாங்கள் எங்கள் வீட்டிற்கு வருகை தரும் அனைவருக்கும் உணவு மற்றும் மதுபானங்களை வழங்குகிறோம்", என்று கூறுகிறார். உணவில் சாதம் மற்றும் பூரி மற்றும் ஆடுக்கறி மற்றும் கோழிக்கறி குழம்புகளும் அடங்கும்; மதுபானம் உள்ளூர் கடைகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
"போதுராஜுவின் கையால் சாட்டை அடி வாங்குவது நோய்கள் வராமல் தடுக்கிறது (என்று மக்கள் நம்புகின்றனர்). மேலும் அவரிடம் அடி வாங்குவதற்கு மக்கள் வரிசையில் நிற்கின்றனர்", என்று மல்லிகா கூறுகிறார். போதுராஜுவாக அஸ்வின் மக்களை சாட்டையால் அடிக்கிறார் அவர்கள் ஓடும் போது அவர்களை துரத்துகிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு அவரைச் சுற்றி பக்தர்கள் இருக்கும் போது, அவர் ஆடத் துவங்குகிறார். அவர் பக்தர்களின் வீடுகளுக்கு வெளியே நிற்பார், பக்தர்கள் அவரது பாதங்களைக் கழுவி, மேலும் சால்வை மற்றும் மலர் மாலைகள் சாத்துகின்றனர். அவர், அவர்களையும் சாட்டையால் அடிக்கிறார். இது பக்தர்களால் ஆசீர்வாதமாக கருதப்படுகிறது.
"போதுராஜு தங்களது குழந்தைகளையும் சாட்டையால் அடிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகின்றனர் இதனால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று நம்புகின்றனர். சிறிய குழந்தைகளை சாட்டையால் அடிப்பதில்லை, ஆனால் அவர்களின் கழுத்தில் சாட்டையை வைத்து நான் ஆசீர்வதிப்பேன்", என்று அஸ்வின் கூறுகிறார். இந்த சடங்கிற்கான அனைத்து செலவுகளையும் (ஒவ்வொரு ஆண்டும் சுமார் மூன்று லட்சம் ரூபாய்) எங்களது குடும்பமே செலுத்துகிறது. கோவில் எனக்கு 2,100 ரூபாய் தருகிறது மேலும் இரண்டரை கிராம் எடையுள்ள ஒரு மோதிரமும் தருவார்கள்", என்று கூறுகிறார்.
போதுராஜுவின் ஊர்வலம் கோவிலை சுற்றியுள்ள சிறிய சாலைகளின் வழியாகச் செல்லும் போது, பல மணி நேரம் நடனமாடி, மக்களை சாட்டையால் அடித்த பின், அஸ்வின் லால் தர்வாசா கோவிலுக்குள் நுழைகிறார். அங்கு அவருக்கு, போதுராஜு அவதாரத்தில் இருந்து அவரை வெளியே கொண்டு வருவதற்காக சாந்தி பூஜைகள் நடைபெறுகின்றன. கோயில் பூசாரி அவர் மீது தண்ணீர் ஊற்றுகிறார் மேலும் அவரது கையில் மஞ்சள் மற்றும் குங்குமம் கலந்த கலவையை கொடுக்கிறார்; அஸ்வின் வெளியே வந்து, அவற்றை கூடியிருக்கும் பக்தர்களுக்கு வழங்குகிறார்.
இதனைத் தொடர்ந்து ரங்கம் அல்லது அருள்வாக்கு கூறப்படுகிறது, தேவி மகான்காளியின் 'அருள் வந்த' பெண் ஒருவர் வாக்கு கூறுபவர் ஆகிறார் (இன்னொரு கதையில் அவரைப் பற்றிய கதைகள் தொடர்கின்றது). அவர் மக்களின் நல்வாழ்வு மற்றும் வானிலை பற்றிய கணிப்புகளைக் கூறுகிறார் மேலும் பூசாரி மற்றும் பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார்.
பின்னர் கடம் எடுக்கப்பட்டு, பக்தர்களின் ஊர்வலத்துடன் பூசாரி மற்றும் கோயில் அதிகாரிகளால் மூசி ஆற்றில் மூழ்க விடப்படுகிறது. இத்துடன் திருவிழா அதிகாரபூர்வமாக முடிந்துவிட்டது.
ஆவேசமான போதுராஜுவாக, சப்த கன்னிமார்களின் பாதுகாவலராக, சாட்டையடி மூலம் ஆசீர்வாதம் அளிப்பவராக, இருந்த அஸ்வின், அடுத்த நாள், மீண்டும் வாகன உதிரி பாகங்கள் விற்கும் வியாபாரி ஆகிறார் - அன்றாட வாழ்க்கையில், அவர் ஹைதராபாத் நகரின் பழமையான பகுதியான உப்புகுடாவில் இருக்கும் தனது குடும்பத்திற்கு சொந்தமான நன்றாக சென்று கொண்டிருக்கக் கூடிய நிறுவனத்தில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் வேலை செய்கிறார்.
"அவர் கடந்த 5 ஆண்டுகளாக போதுராஜுவாக மாறுவதை இப்போது நான் காண்கிறேன், ஆனால் அவர் வீட்டிற்குத் திரும்பி வரும் போது, அதே என் பழைய கணவராக தான் திரும்பி வருகிறார்", என்று 28 வயதாகும் அவரது மனைவி கவிதா கூறுகிறார்.
தமிழில்: சோனியா போஸ்