“அக்கா, நீங்க நிச்சயமா என்னோட கச்சேரி பரீட்சைக்கு உங்க குடும்பம், நண்பர்களோட வரணும்,” காளி வீரபத்ரன், சென்னையின் மிக முக்கிய நடனப் பள்ளியான கலாக்ஷேத்ராவில் தன்னுடைய கடைசிப் பரீட்சையைக் காண்பதற்காக என்னை அழைத்தபோது தொலைபேசியில் கூறியது. ஒரு இரண்டு நொடி கடந்து என்னிடம் மெதுவாக, “நான் பேசறது கரெக்ட் இங்க்லீஷா அக்கா?” என்கிறார்
நான்கு வருடங்கள் முன்பு வரை காளிக்கு ஆங்கிலம் அவ்வளவு பரிச்சயமில்லை என்பது தயக்கத்திற்குக் காரணமாக இருக்கலாம். அவருக்கு அப்பொழுது நடனமும்கூட அத்தனை பரிச்சயமில்லைதான். ஆனால் இப்பொழுது மரபார்ந்த பரதநாட்டியம் மட்டுமல்லாமல் கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் என்று தமிழ்நாட்டின் மூன்று வகையான நாட்டார் நடனங்களையும் கற்றுத் தேர்ச்சிபெற்றுள்ளார். இவ்வனைத்தையும் மிகச் சிறப்பாக பயிற்றுவிக்கும் பள்ளியிலிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார்.
சென்னைக்கு அருகிலுள்ள கோவலம் என்ற வறுமை மிகுந்த ஒரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆதி திராவிட வகுப்பினராக (தலித்) காளி தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். இப்பொழுது இருபத்தியொரு வயதாகும் காளி தன்னுடைய மிகச்சிறிய வயதில் தந்தையை இழந்தவர். “ஆறு இல்லேனா ஏழு மாசக் கொழந்தையா நான் இருந்தப்போவே அப்பா செத்துப்போயிட்டார்,” என்று உணர்ச்சிவசப்படாமல் கூறுகிறார். ஒரு கூலித்தொழிலாளிக்கான வருமானத்தில் தன் பெரும் குடும்பத்தைக் கரையேற்றவேண்டிய சுமையைச் சுமந்த தன் விதவைத் தாயாரைக் குறித்து அவர் மனம் கரைகிறது. “எனக்கு மூனு அக்கா, ரெண்டு தம்பிங்க. மூளைக் காய்ச்சல்ல ஒரு தம்பி இறந்துபோயிட்டதால அதுவரைக்கும் என் பாட்டி வீட்டுல வளந்த நான் திரும்ப அம்மா வீட்டுக்கே வந்துட்டேன்.”
அவர் அம்மாவின் வீடு இப்பொழுது இருப்பதைப் போன்ற அன்று இல்லை. சென்னையின் சிறிய மழைக்கும் ஒழுகும் வீட்டிற்கு அன்றைய அரசாங்கம் அவர்களின் தலைக்குமேல் ஒரு கூரை அமைத்துக்கொடுத்தது. தன்னுடைய இயல்பான குணத்தால் இதற்கும், தன் கனவுகளுக்கு உறுதுணை நின்ற ஒவ்வொருவருக்கும் காளி நன்றிக்கடன் பட்டிருப்பதாக நம்புகிறார்.
அத்தனை தனித்துவமானதில்லையென்றாலும் காளிக்கு நடனம்தான் கனவு. ஆனால் இரண்டு வெவ்வேறு விதமான, எண்ணையும் தண்ணீரையும் போல ஒட்டாத இருவகை நடனங்களில் தேர்ச்சி பெறவேண்டும் என்பது காளியின் விருப்பம். அதில் ஒன்று ஒரு காலத்தில் பிராமணர்களால் வெறுத்தொதுக்கப்பட்டு, (கோயில்களுக்கும் அதன் பூசாரிகளுக்கும் நேர்ந்து விடப்பட்ட தேவதாசிகளின் நடனம்) இன்று முரணாக பெரும்பாலும் அதே உயர்சாதி பிராமணர்கள் மற்றும் பணம் படைத்தவர்களால் போற்றப்படும், பாரம்பரிய நடனமான, ஒரு ஒழுங்கமைப்பைக்கொண்ட பரதநாட்டியம். மற்றொன்று, பல நூற்றாண்டுகளாக தமிழக கிராமங்களில் தோன்றி இன்றுவரை தழைத்துவரும் பல்வேறு வடிவங்களிலான நாட்டுப்புற நடனம்.
ஒரு நியதியாகவே பொதுவாக பரதநாட்டியக் கலைஞர்கள், தங்கள் தயாரிப்பு நிறுவனம் கரகமோ அல்லது காவடியோ தேவையென்று கோரினாலேயேயொழிய, நாட்டுப்புற நடனங்களில் தேர்ச்சி பெறுவதில்லை. தொழில்முறை அரங்கேற்றம் என்றில்லை, அதற்கான தீவிர பயிற்சியைக் கூட ஒரு சிலரே மேற்கொள்கின்றனர். காளியின் நடனப் பயிற்சியாளர் கண்ணன் குமார் (தமிழ்நாடு முழுவதுக்குமான ஒரேயொரு முழுநேர பயிற்சியாளர்) கூற்றுப்படி நாட்டுப்புற நடனம் என்பது அடித்தளம் அல்லது சுவர் என்றால், அதில் வரையப்படும் சித்திரம்தான், தன் முத்திரைகள் வழி கதை சொல்லும் பரதநாட்டியக்கலை என்பது. அவரது நம்பிக்கையின்படி இவை இரண்டும் ஒன்று மற்றொன்றை முழுமையாக்க முடியும். காளி ஒரு படி மேலே சென்று இரண்டையும் எவ்விதப் பிரச்சனையுமின்றி பயில்கிறார்.
உண்மையில், காளிக்கு தன் பள்ளி இறுதித்தேர்வு முடித்தவுடந்தான் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்படுகிறது. தன் குடும்ப வறுமைச் சூழலைக் கணக்கில் கொண்டால் ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பதுதான் நியாயமான முடிவாக இருந்திருக்க முடியும். ஆனால், அப்பொழுதுதான் அவருடைய அத்தை, கோவளத்திலிருந்து அதிக தொலைவிலில்லாத தென்தமிழ்நாட்டு பண்பாட்டு அருங்காட்சியகமான தக்ஷின்சித்ராவில் கிராமிய நடனங்களுக்கான இலவச பயிற்சி வழங்கப்படுவதைப்பற்றி கூறுகிறார். ஒரே நொடியில் காளியை மகிழ்ச்சி தொற்றிக்கொள்கிறது. நடன வகுப்புகளில் மிக வேகமாக முன்னேறி இரண்டே மாதங்களில் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் ஆகியவற்றில் தேர்ச்சி பெறுகிறார். இவருடைய ஆர்வத்தால் மகிழ்ச்சியடையும் பயிற்சியாளர் கண்ணன் குமார் இவருக்கு நான்காவது ஆட்டமாக தேவராட்டத்தைக் கற்றுத்தர தொடங்குகிறார். அதற்குப் பிறகுதான் நான்கு வருட பட்டயப் படிப்பிற்காக காளி கலாக்ஷேத்ராவில் சேர்கிறார்.
சில வருடங்கள் முன்புவரை காளி கலக்ஷேத்ராவின் பெயரைக்கூட கேள்விப்பட்டதில்லை. கோவளம், சுனாமி மறுபுணரமைப்பு மையத்தில் நடனமாடிய காளியின் தீவிரத்தையும் ஆர்வத்தையும் முதலில் கண்டுகொண்ட சாரா சந்திரா, காளியின் உபயதாரர், காளியிடம் கலாக்ஷேத்ராவில் முறையாக நடனம் பயிலச்சொல்கிறார். தனது தூரத்து உறவினர்கள் நடனம் போன்ற பெண்களுக்கான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று தொடர்ந்து நம்பிக்கையிழக்கவைக்க முயன்றாலும், காளி நேர்முகத் தேர்வில் வென்று நாட்டியப் பள்ளியில் அனுமதி பெறுகிறார். ஒரு கஷ்டத்தைக் கடந்தாலும் மற்றொன்று அவருக்காகக் காத்திருக்கிறது.
தமிழ்வழிக் கல்வியில் பயின்ற, பரதநாட்டியம், பாரம்பரிய இசை போன்றவற்றுடன் அதிகத் தொடர்பில்லாத காளிக்கு, கலாக்ஷேத்ரா போன்ற இடம் முதலில் பெரும் அச்சமூட்டுவதாக இருக்கிறது. அசைவ சாப்பாட்டையே உண்ணும் அவருக்கு அங்கு சுத்த சைவ சாப்பாடு மட்டுமே கிடைப்பது உடலளவில் சோர்வை ஏற்படுத்துகிறது. “நான் அப்போ குண்டா இருந்தேன்!” காளி சிரித்துக்கொண்டே தன் அடிப்பாகம் துறுத்திக்கொண்டு, கால்கள் புடைத்தபடி, கைகளைக் கோணலாக்கி எப்படி முன்பு ஆடினார் என்று செய்துகாண்பிக்கிறார். அங்கிருந்த நிறைய வெளிநாட்டவர்களைவிடவும் காளி கொஞ்சம் தேவலாம்தான், இந்தக் கலாச்சாரம் எந்தளவிற்கு அவர்களுக்கு அந்நியமோ அதே அளவிற்கு காளிக்கும் என்பதால்; ஆனாலும் அவர் ஆங்கிலத்தில் உரையாடமுடியாமல் தவிக்கிறார்.
எனவே அதற்கும் அவர் தேர்ந்தெடுப்பது நாட்டியம். வார்த்தைகளுக்கு பதில் சைகைகளைப் பயன்படுத்தி, வெளிநாட்டவர்கள் மத்தியில் தனக்கு இருக்கும் வெட்கத்தைப் போக்கி, முதல் வருட மாணவர்கள் தினத்திற்கு சில மாணவர்களுடன் சேர்ந்து ரஷ்ய மற்றும் தென் ஆப்பிரிக்க பெண்களை ஒயிலாட்டத்திற்கு ஆட வைக்கிறார். கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன் அதற்காக அவரைப் பாராட்டுகிறார். அனைத்திற்கும் மேல், வகுப்பில் முதல் மாணவராகவும் வருகிறார். அவருடைய தன்னம்பிக்கை வளர்வதுபோல் நாட்டியத்தில் அவரின் ஞானமும் வளர்கிறது.
இப்பொழுது காளியால் ஒரு ராகத்தை ஒரு நொடியில் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும். கலாஷேத்ராவின் தோற்றுனர் நாட்டியப் பேரொளி ருக்மினி தேவி அருண்டேலின் நினைவாக எழுப்பப்பட்ட ருக்மினி அரங்கத்தில் தன்னுடைய அரங்கேற்றங்களின்போது ராகங்களைக் கண்டுபிடித்து தனது நண்பர்களில் ஒருவரிடம் அது சரியா என்றும் கேட்கிறார். பெரும்பாலும் அவர் கண்டுபிடிப்பு சரியானதாகத்தான் இருக்கிறது. ஆரம்பகாலகட்டத்தில் இருந்ததுபோல் அழகின்மையுடன் இல்லாமல், அவர் ஆடும்பொழுது அவருடைய அடவுகளும் பாவனைகளும் மிகச் சிறப்பாக இருக்கின்றன.
2014 மார்ச் மாதம் இருபத்தியெட்டாம் தேதி ருக்மினி அரங்கத்தில்தான் அவருடைய முதல் கச்சேரி அரங்கேறியது. அவரையும் சேர்த்து எட்டு மாணவர்களைக்கொண்ட குழு அன்று ஒரு முழு மார்க்கத்தை (தொடர்ச்சியான நடனங்களைக் கொண்ட நிகழ்ச்சி)) முழு ஒப்பனையுடன் அரங்கேற்றியது. அவருக்கும் அவருடைய வகுப்பு மாணவர்களுக்கும் பயிற்சியளித்த ஆசிரியர் இந்து நிதீஷ் நட்டுவாங்கம் இசைத்தார். பார்வையாளர்களைப்போல் அவருக்கும் அவர் மாணவர்களை நினைத்து நிச்சயம் பெருமையாக இருந்திருக்கும்.
காளியின் அம்மா, சகோதரர் (இவர் கோவளத்தில் இட்லிகடை நடத்துகிறார்), மூன்று சகோதரிகள், அவர்களுடைய நண்பர்கள் என்று அனைவரும் கலாக்ஷேத்ராவில் அவருடைய கச்சேரிக்கு வந்திருந்தனர். ரஜினியிடம் காளியின் அற்புதமான நடனத்தைப் பாராட்டச் சென்றபொழுது உண்மையாகவே அவர், “எங்களுக்கு இந்த டேன்ஸ்லாம் புரியறதில்ல. சும்மா இங்க வெளிய உக்காந்திருக்கோம். உங்களுக்கு புடிச்சிருக்கறதுல சந்தோஷம்,” என்கிறார். அதற்குள் காளி அவர்களைக் காண அங்கு வருகிறார். ஆனால் வகுப்பு நண்பர்கள் புகைப்படம் எடுக்க அழைத்ததால் மீண்டும் உள்ளே ஓடியபொழுது கண்ணன் குமாரைக் கண்டவர் அவர் கால்களில் விழுகிறார். காளியின் வியர்வை வழியும் தோற்பட்டையைப் பிடித்து அவரைத் தூக்கி நிறுத்துகிறார் ஆசிரியர். அந்த ஆசிரியரின் கண்களில் பெருமையும் மாணவர்கள் கண்களில் மகிழ்ச்சியும் தளும்புகின்றன.
“என்னால இந்த ரெண்டு கலையையும் எப்பவும் விடமுடியாது,” தேர்வுகள் முடிந்த மகிழ்ச்சி மற்றும் ஆசுவாசத்தில் காளி கூறுகிறார். முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்த செய்தியைக் கேள்விப்பட்டு ஆனந்தமும், கலாக்ஷேத்ராவில் முதுகலைப் பட்டம் சேர்வதற்கான அனுமதி பெற்றதற்காக மகிழ்ச்சியும் கொள்கிறார். நலிந்துவரும் கிராமிய நடனங்களுக்கு தன்னால் இயன்றதை இப்பொழுது இன்னும் தீவிரமாகச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை காளிக்கு இருக்கிறது. பரதநாட்டியத்தையும் எவருக்கும் எளிமையாக அதன் அழகை உணர்ந்திடச் செய்ய எடுத்தச் செல்ல வேண்டும் என்பதும் அவர் விருப்பம். “ஒரு வகுப்புல நாட்டுப்புற நடனம்னா இன்னொன்னு பரதநாட்டியம், எனக்கு ரெண்டும் சொல்லித் தரனும். நடனப் பள்ளி வெக்கனும். பணம் சம்பாதிக்கனும். அம்மாவப் பாத்துக்கனும். நாட்டியம் ஆடனும்,” காளி என்ற இந்த இளைய நடனக் கலைஞர் தன் கனவுகளை அடுக்குகிறார்.
காணொளியைக் காண்க : காளி, ஒரு நடனக் கலைஞரும் அவரின் கனவுகளும்
/articles/kali-the-dancer-and-his-dreams/