மெத்தைக்கு மேலே இரண்டாவது அலமாரியில் இருந்த பழைய புத்தகத்தை அவளுடைய மகள் இழுத்தாள். அப்பகுதி குழந்தைகளுக்காக பகல் நேரப் பள்ளி மற்றும் இரவு தங்குமிடம் நடத்திய பெண் ஒருவர் அவளுக்குக் கொடுத்த புத்தகம் அது. குழந்தையின் வாசிப்பு ஆர்வத்தை உணர்ந்து அவளுக்கு அந்த புத்தகத்தை கொடுத்திருந்தாள். "அம்மா, நான் உங்களுக்கு ஒரு கதை படிக்கட்டுமா?" கிழிந்த புத்தகத்தை கையில் பிடித்தபடி, ஒன்பது வயது பிங்கி தனது தாயின் அருகில் அமர்ந்தாள். அவளுடைய அம்மாவின் பதிலுக்கு காத்திருக்காமல் அவளுக்கு பிடித்த ’தி காகிதப்பை இளவரசி’ கதையை படிக்கத் துவங்கினாள்.

பிங்கி தனது வீடு என்று அழைத்த சிறிய, பெட்டி போன்ற அறையின் முழுமைக்கும், அவள் தாயுடன் படுத்திருந்த, துர்நாற்றம் வீசும், சமமில்லாத காடா மெத்தை விரிக்கப்பட்டிருந்தது. வீடு என்னும் இந்த துயரத்தை அவளுடைய இரு குழந்தைகளுக்கும் கொடுக்க சீதா மாதம் ருபாய் 6000 தரவேண்டும். அவ்விடம் அவர்களுக்கு பாதுகாப்பையும் கொடுப்பதில்லை. அரவணைப்பையும் கொடுப்பதில்லை. உண்மையில் இது தந்தி சதக் தெரு போல்தான் இருந்தது. அங்குதான் எச்.ஐ.வி பாசிட்டிவ் பெண்களை தன் வீட்டிலிருந்து வெளியேற்றிய உரிமையாளர் வசிக்கிறார். கோவிட் பெருந்தொற்றின் கொடூரமான சூழல் கூட அவளைத் தடுக்கவில்லை. சென்ற வாரம் சீதாவின் தோழி ரோஷ்னியின் முறை. முந்தைய இரவு, வாடிக்கையாளரைத் தேடி வேகமாக நடைபாதையில் அவள் சென்ற போது, எதிர்ப்புற பிளாட்பாரத்தில் ரோஷ்னி தூங்குவதை அவள் பார்த்தாள். மீண்டும் தன்னை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தாள் அவள். இளவரசனை விடுவிக்கும் முயற்சியில் காகிதப் பை இளவரசி டிராகனைத் துரத்திக் கொண்டிருந்தாள். அவளுடைய மகளின் குரல் தொடர்ந்து எங்கோ ரீங்கரித்து கொண்டே இருந்தது. இழிவான இளவரசனுடனான இறுதி சந்திப்புக்கு இன்னும் நேரம் இருந்தது. எனவே சீதா தன் மனதை மீண்டும் அலைபாய அனுமதித்தாள்.

நம்பிக்கையற்று அவள் தன் 15 வயது மகனைப் பற்றி சிந்தித்தாள். அவனைப் பற்றி கவலைப்பட்டு கழிக்கும் இரவுகளையும், அவனைத் தேடி காவல் நிலையங்களிலிருந்து ரயில் நிலையங்கள் வரை  மேற்கொண்ட பயண வழக்கங்களையும் அவள் கடந்துவிட்டாள். சொல்லாமல் கொள்ளாமல் அவன் வீட்டை விட்டு வெளியேறிய மூன்றாவது முறை இது. நீண்ட காலம் அவன் விலகி இருந்ததும் இம்முறையே. ஒரு தொலைபேசி அழைப்பும் இல்லாமல் ஒரு வாரம் கழிந்தது.  அவனது அமைதியற்ற மனதை அவள் அறிந்திருந்தாள்.  நிதர்சனம் மறுக்கும் அவன் பிடிவாதத்தையும் இந்த தெருவின்  வலையிலிருந்து வெளியேற துடிக்கும் அவனது பொறுமையற்ற இளம் மனநிலையையும்  அவளுக்கு தெரியும். 20 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ரயில் டிக்கெட்டை அலமாரியில் இருந்த பிளாஸ்டிக் பையில் சேமித்து வைத்திருந்தாள். சற்று அவள் மனம் வலித்தது. அப்போது அவளுக்கு வெறும் 12 வயதுதான்..

பிங்கியின் கதை முடிவுக்கு வந்தது…

சுதன்வா தேஷ்பாண்டே குரலில் கவிதையை கேட்கவும்

Sex workers in Kamathipura have been struggling to give their children a life of dignity. Here is a poem inspired by two stories about the realities faced by these women caught in a pandemic of misery
PHOTO • Aakanksha

காமத்திபுரா

நாலுக்கு ஆறு
சதுரங்களில்
குறுகி வருகிறது வானம்.
நீடிக்கும் சாம்பல் கொண்ட
கடுகடுக்கும்  கஜுராஹோ சுவரில்
படபடக்கின்றன சிறகற்ற உடல்கள்.
புறக்கணிக்கப்பட்ட அலமாரியில்
நைந்து போன பிளாஸ்டிக் பையில்
சுவாசமற்று தவிக்கிறது நம்பிக்கை.
விட்டுச்செல்லப்பட்ட காலத்தின்
துற்நாற்றம் ஊடுருவியது
கொஞ்சம் கொஞ்சமாக
அவளின் விலாக்கூட்டில்.
அந்நிய நகரத்தில்
மங்கலான ஒளிகொண்ட தார் தெருவில்
அவளது மகன் தும்பியை விரட்ட
கருப்பு வெள்ளை உலகில் வாழும்
அவளின் மகள்
இளஞ்சிவப்பில் கனவு காண
கரிய உருக்கு இரும்பில்
தானே தைத்த
உலர்ந்த காயங்களை
அணிந்திருந்த அவளது உடல்
இருண்ட  தனிமையான
பாக்லாண்ட் தெருவில்
ஆறுதலான வெள்ளிக் காசு ஒன்று தொடுமென
நிலவொளியில் அசைந்து
திறந்தவெளியில் காத்திருந்தது.

ஒலி : சுதன்வா தேஷ்பாண்டே ஜனா நாத்யா மஞ்ச் என்ற நாடக குழுவின் ஒரு நடிகரும் இயக்குநரும் ஆவார் . இவர் லெஃப்ட் வர்ட் ன் ஆசிரியருமாவார் .

இந்தக் கவிதையை எழுதத் தூண்டிய இரண்டு கட்டுரைகளை இங்கு படியுங்கள் : 'இங்கே பெண்களுக்கு என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும் மற்றும் மீண்டும் மீண்டும் செல்ல வேண்டிய நீண்ட பயணம்

தமிழில் : கவிதா கஜேந்திரன்

Pratishtha Pandya

प्रतिष्ठा पांड्या, पारी में बतौर वरिष्ठ संपादक कार्यरत हैं, और पारी के रचनात्मक लेखन अनुभाग का नेतृत्व करती हैं. वह पारी’भाषा टीम की सदस्य हैं और गुजराती में कहानियों का अनुवाद व संपादन करती हैं. प्रतिष्ठा गुजराती और अंग्रेज़ी भाषा की कवि भी हैं.

की अन्य स्टोरी Pratishtha Pandya
Translator : Kavitha Gajendran

Kavitha Gajendran is Chennai based activist working with AIDWA.

की अन्य स्टोरी Kavitha Gajendran